நான்கரையடி உயரப் புயல் "பூலான் தேவி"
"""""""""""""""""""""""""""""""""'
1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 14, பேமய்( BEHMAI) என்ற மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஊர்.
டாக்கூர் என்ற ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாக வாழும் சிற்றூர்.
ஊரே கூடி சிறப்பாக நடந்துகொண்டிருந்தது ஒரு திருமணம்.
திடீரென்று துப்பாக்கி வெடிச்சத்தங்கள் நாலாபுறமும் கேட்க அங்கே புயலென நுழைந்தாள் "பூலான் தேவி".
மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
பலர் வீடுகளுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டனர்.
சிலர் தப்பிக்க முயன்று முடியாமல் பிடிபட்டனர்.
அந்த சிற்றூர் ஆயுதமுனையில் சுற்றிவளைக்கப் பட்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டுக்கதவையும் உடைத்துக்கொண்டு ஆயுதம் தாங்கியவர்கள் தேடுதல் நடத்தினர்.
நன்கு அலசித் தேடியும் அவர்கள் தேடிவந்த 'சிறி ராம்' மற்றும் அவன் தம்பி 'லாலா ராம்' கிடைக்கவில்லை.
கிடைத்த தகவல் தவறா அல்லது தப்பிவிட்டார்களா புரியவில்லை.
பூலான் தேவி வெறுப்பில் தலையைப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
அவளுக்கு அந்த நாள் நினைவு வந்தது.
அப்படியே அந்தக் காட்சி கண் முன் விரிந்தது.
பிடித்து வந்து மூன்று நாட்கள் சோறு தண்ணியில்லாமல் அடைத்துவைத்து சிறிராமும் அவன் ஆட்களும் வரைமுறையே இல்லாமல் கற்பழித்தும் வெறியடங்காமல் நான்கரை அடி உயரப் பூலான் தேவியை இதே ஊர்நடுவில் இருக்கும் கிணற்றுக்குக் கொண்டுவந்து உடைகளை உறுவி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து தண்ணீர் இறைக்கச் சொன்னார்கள்.
ஊரே வேடிக்கை பார்க்க கூனிகுறுகி நடக்கக்கூடத் தெம்பில்லாத அந்தப் பெண் கிணற்றடிக்குச் சென்று தண்ணீர் இரைக்க ஆரம்பித்தாள்.
ஓடிவந்து ஆத்திரத்துடன் முடியைப் பிடித்து உலுக்கி இழுத்துக் கொண்டுபோய் வேடிக்கை பார்த்தவர்கள் முன் நிறுத்தி
"இவள்தான் கீழ்சாதி 'மல்லா'க்கள் தேவியாக வணங்கும் 'பூலான்'.
சம்பல் பகுதியின் அரசி.
நன்றாகப் பாருங்கள் இவள் என்னைக் கெட்டவார்த்தையில் திட்டுமளவுக்கு துணிந்துவிட்டவள்.
நன்றாகப் பாருங்கள்"
சிறிராம் சொன்ன வார்த்தைகள் இப்போதும் எழுத்து மாறாமல் காதுக்குள் எதிரொலித்தன.
சிறிராம் தப்பிவிட்டதால் அவள் ஆத்திரம் வேடிக்கை பார்த்த டாக்கூர்கள் மேல் திரும்பியது.
"ஒரு ஆண்பிள்ளை விடாமல் இழுத்து வாருங்கள்" உத்தரவிட்டாள்.
அவளது ஆட்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்களை விடுத்து அந்த சிற்றூரின் ஆண்கள் 22 பேரை இழுத்துவந்து பூலான் தேவி முன்னே நிறுத்தினார்கள்.
"சிறிராம் அவன் தம்பி லாலாராம் எங்கே?" அவள் கேட்டாள்.
யாரிடமும் பதிலில்லை.
"இதே இடம்தானே?! என்னை சீரழித்து அசிங்கப்படுத்திய கிணற்றடி இதுதானே?!
நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றீர்களே நினைவில்லை?"
கேட்டுக்கொண்டே ஆத்திரம் தீர அடித்தாள்.
"ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத நீங்கள் இந்த உலகில் வாழத் தேவையில்லை.
உங்கள் சாவு டாக்கூர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
சுட்டுத்தள்ளுங்கள் இவர்களை" உத்தரவிட்டாள்.
ஒரு சுவரின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவர்களை நோக்கி தோட்டாக்கள் சீறிப்பாய்ந்தன.
சுவரில் மோதி குருதிவெள்ளத்தில் சரிந்தனர் அந்த 22 டாக்கூர் சாதியினரும்.
அதன் பிறகு 'பூலான் தேவி' என்ற பெயர் ஆட்சியாளர்கள் தூக்கத்தைக் கெடுத்தது.
தனிப்படை அமைக்கப்பட்டு மாந்தவேட்டை ஆரம்பமானது.
இரண்டு வருடமாகியும் அவர்களால் பூலான் தேவியை பிடிக்கமுடியவில்லை.
பிறகு அவள் சரணடைந்து சிறைசென்று விடுதலையாகி அரசியலில் நுழைந்து பதவிபெற்று பல வருடங்கள் கழித்து இந்த பேமய் கொலைக்காகப் பழிவாங்கும் விதமாக உயர்சாதியினரால் சுட்டுக்கொல்லப்பட்டாள்.
No comments:
Post a Comment