Friday 27 November 2015

யானைகள் பிளிறன

யானைகள் பிளிறன..

காட்டில் கிடைத்த சிறுவன்
மாந்தரை விட யானைகளே பழக்கம்
அரசன் விருப்பத்துக்கு இணங்க
கரிய பெரிய தோழர்களோடு புறப்பட்டான்
கொள்ளையர் சூழ்ந்த
காவிரிப்பூம்பட்டினக்
கடல்பரப்பை மீட்க
நீரில் நீந்தமால் மிதந்து துதிக்கையை வெளிநீட்டி
நீர்மூழ்கிக் கப்பல்களாகி
கடம்பக் கொள்ளையர்
கப்பலை முறியடித்து...

யானைகள் பிளிறின..

எம்மன்னனுக்காக போர்புரிந்தானோ அவனையே நோக்கி
எதிர்திசையில் திரும்பின களிறுகள்
கரிகாலன் யானைகளா?!
கேள்விப்பட்டதுமே
ஓடிப்போனான்
உறையூர் மன்னன்
பணியாத படைகளை
புழுதித் தரையில் அடித்துவிட்டு
கொள்ளை மீட்டுத் தெருவில்
கொட்டிக்கிடந்த பொற்குவியலை
காலால் மிதித்தபடி பலநூறு யானைகளுடன்
உறையூரில் நுழைந்தவனாம் உரிமையோடு எடுத்து
தன்கையால் மகுடத்தை
தனக்கே சூடிக்கொண்டவனாம்
தம் தலைவன் கரிகாலனை வாழ்த்தி……

யானைகள் பிளிறின..

கூட்டணி அமைத்த பனிரென்டு மன்னர்கள்
கூடிநின்ற வெண்ணியில் நடந்தது உலகப்போர் கரியயானைகள் செங்குருதியில்
குளியல்போட்டு நிறம் மாறின
கேடடைந்து தோற்றனர் எதிரிகள்
கரிகாலன் பெயர்கேட்ட நாடுகள்
காலடியில் சரணடைந்தன
பனிமலையாம் இமயம் வரை சென்றான்
பணிந்த நாடுகள் அவந்தி வச்சிரம் மகதம் எனப் பற்பல
வெண்பனியிமயம் குறுக்கிட்டதோ
வெகுண்டு பார்த்த…

யானைகள் பிளிறின..

இவளை மட்டும் அடக்காமல் விடுவேனா
இமைகொட்டாமல் காவிரியைப் பார்த்து
நாடியை வருடினான் கரிகாலன்
நானிலம் போற்றும் கல்லணை நிலைநிறுத்தி
தங்கமண்ணெல்லாம் பொன்விளைய
தமிழகம் ஆனதே வல்லரசாக
காவிரிப்பூம்பட்டினத்தின்
காவல்கப்பல்களே பத்தாயிரமாம்
துதிக்கையால் எண்ணிப்பார்த்த...

யானைகள் பிளிறின..

ஏ மரணமே! கணக்கின்றி
உயிர்குடித்தானே
உன் தொழிலை தான்செய்தானே
இவனைக் கொண்டுசென்றாயே
இனி உன்வேலை அதிகமானதே
கவிபாடினான் வஞ்சப்புகழ்ச்சிக்
கருஞ்குழல் ஆதன்
கரிகாலன் மரணத்தை
தலைவன்தானே மறைந்தான்
தரணியில் அவன்பெயர் என்றும் மறையாதே
கரிகாலன் கதைசொல்லும் பக்கங்கள்
குருதியள்ளித் தெளிக்கும் படிப்பவன் முகத்தில்
அதற்கு வகைசெய்த
அடங்காக் கரிகாலனின்
அழகுப் புலிக்கொடி தாங்கிய...

யா...னைகள் பிளிறின.

No comments:

Post a Comment