Friday 27 November 2015

போற்றிப் பாடடி பொண்ணே! யாரைத்தான் போற்றுவாள் அவள்?!

போற்றிப் பாடடி பொண்ணே!
யாரைத்தான் போற்றுவாள் அவள்?!

6 மாதம் முன்பு என் மாமன்மகன்-உயிர்த் தோழன் துபாய்க்கு வேலைகிடைத்து (பஞ்சம் பிழைக்க எல்லா தமிழனையும் போல) ஓடிப்போனான்.
அவன் ஒருவனை வழியனுப்ப பத்துபேர் அவன் ஊரான செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு வண்டியில்(OMNI) போனோம்.
போகும்போது பாடல்களை ஒலிக்கவிட்டோம்.
காலை பத்துமணியானாலே குடிக்காவிட்டால் கைகால் நடுங்கும் பரம்பரைக் குடிகாரர்கள் சுதியேத்தியபடி வந்தனர்.
நானோ அந்த வளமான பெரிய பகுதி(பயணநேரமே நான்குமணிநேரம்) தமிழ்நாட்டின் கையைவிட்டு பிடுங்கப்பட்டதை கூறிப் புலம்பியபடி வந்தேன்.

ஒலிக்கவிட்ட பாடல்களில் சிலவை சிலருக்கு பிடிக்கவில்லை,
சிலவை பலருக்கு பிடிக்கவில்லை.
ஆளாளுக்கு தமது நினைவட்டையை(Memory card) கழற்றிக் கொடுத்து போடச்சொன்னார்கள்.
அப்போது திடீரென்று "போற்றிப் பாடடி பொண்ணே" பாட்டு வந்தது.

அந்த பாட்டுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எல்லாரும் ரசித்து கேட்டனர்.
பாடல் முடிந்ததும் நான் "இங்கே யார் தேவர்?" என்று கேட்டேன்.
"யாருமில்லையே; எல்லாரும் நம் சொந்தக்காரர்கள்தான்" என்று பதில் வந்தது.
பாடல் வைத்திருந்தவரை "ஏன் இந்தப்பாடலை வைத்துள்ளீர்கள்?" என்று நான் கேட்கவில்லை.
காரணம் எனக்கே தெரியும்.
இந்தப் பாடல் எல்லாத் தமிழருக்கும் பிடிக்கும்.
இதன் இசை காரணம் என்றால், இதே போல நல்ல இசையோடு அமைந்த மற்ற பாடல்கள் ஏற்படுத்தாத ஒரு மெய்சிலிர்ப்பை இந்தப்பாடல் ஏற்படுத்துகிறது.
சக தமிழனான தேவரைப் போற்றுவதால் இருக்கலாம் அல்லது சாதிப்பாசத்தை வலியுறுத்துவதால் மறைமுகமாக நம் அனைவருக்குள்ளும் ஒழிந்திருக்கும் சாதிப்பாசம் காரணமாக இருக்கலாம்.
இல்லை அந்த பாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்காது என்பவர்கள் அப்பாடலை ஒருமுறை கேட்டுப் பார்க்கவும்.

"காட்டுமிராண்டிக் கூட்டத்துல நானும்தாங்கய்யா ஒருத்தன்"
என்று கமல் பேசும் வசனத்தை யாரும் நினைவு வைக்கவில்லை.
ஆனால் இந்தப் 'போற்றிப் பாடடி' பாட்டு மட்டும் தேவர் சாதியனரின் தேசியகீதமாக மாறிவிட்டது.

பாடலுக்கு இசையமைத்தவர் ஒரு பறையர்,
கதாநாயகன் ஒரு தமிழ்ப் பார்ப்பான், இயக்குனர் ஒரு மலையாளி
இவர்கள் பெரும்பான்மை மக்களின் பெருமையை (பாடல்கள், வசனங்களால்) கூறுவதன் மூலம் வசூலையும்,
அவர்களின் முட்டாள்த்தனமான வெறியை(திரைக்கதை, வசனங்களால்) கூறுவதன் மூலம் அந்த சாதியாருக்கு அறிவுரையையும் வழங்க முயன்றனர்.

அந்தப் படத்தில் கதாநாயகன் முதல் மக்களைக் கொல்ல குண்டுவைப்பவன் வரை தேவர்.
அதாவது என்னதான் படித்தவனாக இருந்தாலும் குருதிவெறி பிடித்த ஒரு கூட்டத்திற்கு மத்தியில் வன்முறையை கையிலெடுப்பதைத் தவிர்க்க இயலாது என்று கூற முயன்றது அந்த படம்,
ஆனால் அது முடியாமல் போனது.
கலவரங்களுக்கு வழிவகுத்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே தேவர் பெரும்பான்மை கொண்ட மலையடிக்குறிச்சி ஊரில் 'கோமதியம்மாள் தொழிற்கல்லூரி(polytechnic)" ஒன்று உண்டு.
பெயரைச் சொன்னாலே காறித் துப்புவார்கள்.
எங்கள் உறவினர்களில் ஒரு மொன்னாநாய் தரகுக்கூலிக்கு(commision) ஆசைப்பட்டு அங்கே என் தம்பியை சேர்த்துவிட்டது.
நாங்களும் ISO சான்று பெற்றுள்ளதே என்று ஏமாந்து சேர்த்துவிட்டோம்.

என் தம்பி அங்கே அனுபவித்த கொடுமைகளுக்கு அளவே கிடையாது.
பல ஊர்களில் இருந்து வந்துபடிக்கும் தேவர் சாதியினர் அங்கே செய்த கொடூரச் செயல்களை என் தம்பி கூறுவதை இங்கே பதிவு செய்கிறேன்;
"நா அங்க போன புதுசுல ஒரு டீக்கடைல தண்ணி கேட்டு குடிச்சேன்.
அப்போ அங்கே இருந்த பெரியவர் "நீ தேவமாருதானே"னு கேட்டாரு.
நா இல்லனு என் சாதியச் சொன்னேன்.
அவரு 'எஸ்.சி' இல்லன்னதும் ஒண்ணும் சொல்லல.
அந்த ஊருக்குள்ள போனேன் அங்க ஆரம்பத்துலயே தேவர் படம் வரஞ்சு சாதிக் கொடி பறக்குற கம்பத்த சுத்தி அந்த ஊர் பயலுவோ நிப்பானுவோ
பைல இருக்கத புடுங்கிருவானுவோ சாரத்த(கைலி) எறக்கி கட்ட சொல்லுவானுவோ சாதி என்னனு கேட்டுட்டுதான் ஊருக்குள்ள விடுவானுவோ,
'எஸ்சி'னா அடிதான்.
எங்க ஆஸ்டல்ல தங்கியிருக்க எஸ்சி பயலுவோல காரணமே இல்லாம போய் அடிப்பானுவோ, 
அவனுவ ரெக்காடு நோட்ட நாங்கதான் எழுதணும்,
எடுபிடி வேல செய்யணும்,
இத்தனைக்கும் அவனுவ வீட்டுல குடிக்க கஞ்சி இருக்காது,
ஒரு பத்து பதினஞ்சு எஸ்சி பயலுவ ஒண்ணா சேந்து ஒருதடவ ஒரு தேவமார் பயல அடிச்சானுக.
அதுக்கு அவனுவ ஊருலேர்ந்து ஒரு அம்பது பேரு அருவாவோட ராத்திரி ஆஸ்டல்ல பூந்து தூங்கிகிட்டுருந்த எல்லாரையும் எழுப்பி "நீ என்ன சாதில? " னு கேட்டு கேட்டு அடிச்சானுவோ,
நாங்க ரூம்ல பூந்து கதவ அடச்சிக்கிட்டோம் வெளிய அந்த கதவ அருவாவால கொத்துகொத்துனு கொத்தி "வெளில வாங்கல பொட்டக்கூ***வனுவளா"னு கத்தி கதவ ஒடைக்க பாத்தானுவ,
நாங்க உள்ள ஒரு மூணுபயலுவோ
ஈரக்கொல நடுங்கிட்டுண்ணே,
கொஞ்சநேரம் கழிஞ்சு வெளிய வந்து பாத்தா தேவமார் இல்லாத பயலுவளுக்கு செம அடி,
தேவமார்ல எந்த தேவமாருனு சொல்லத் தெரியாதவனுக்கு அடி,
மாடில படுத்திருந்த ரெண்டு எஸ்சி பயலுவோல தூக்கி கீழ போட்ட்டானுவ,
அவனுகள ஆஸ்பத்ரில சேக்கக்கூட அங்க வசதியில்ல,
மறுநாள் போலீசு வந்துது,
ஆனா நாங்க எல்லாரும் ஊருக்கு வந்துட்டோம்,
அடிச்ச அந்த 15எஸ்சி பயலுவளும் முன்னாடியே தப்பிச்சுட்டானுவ,
கெழவனா இருந்தாலும் எஸ்சி னா பேரச்சொல்லிதான் கூப்டுவானுவோ,
இவனுவோ சின்னப் பயலுவட்டயும் எஸ்சிட்டயும்தான் வீரத்த காட்டுவானுவோ, 
என் பெட்டிய என் கண்ணுமுன்னாலயே ஒடச்சு என் சட்டயையும் செல்போனையும் எடுத்துட்டு போனானுவ
நா எனக்கு பழக்கமான கோணார் பையன்ட்ட போய் சொன்னேன்,
அவன் அந்தப் பயலுவள கூப்டு அடிச்சான்,
சட்ட கெடைக்கல ஆனா செல்ல திருப்பி குடுத்துட்டானுவோ,
இவனுவோ எதுக்குனாலும் சங்கரங்கோயிலுக்குதான் போயாவணும்,
இங்க பெரிய சண்டியன் அங்க கோணார்ல சின்னப்பையன்கிட்ட அடிவாங்கிட்டு வருவான்,
மத்தபடி மக்கள் எல்லாரும் அப்பாவி,
எனக்கு சாயங்காலத்துக்கு மேல காலேஜுக்கு பஸ் கெடயாது 2கி.மீ நடக்கணும்,
அப்ப அங்க கரும்புக்காட்டுல வேலசெஞ்சிட்டு கரும்பு தின்னுட்டே போறவங்க யாருன்னே தெரியலனாலும் கூப்ட்டு எனக்கு கரும்பு தருவாங்க,
பஸ் ஸ்டாண்டுல கூட நின்னவங்க யாருன்னே தெரியாத எனக்கும் சேத்து எடம்பிடிச்சு தருவாங்க,
இந்த அப்பாவி மக்கள் மனசுல யாரு ஜாதிவெறிய ஏத்துனதுனு தெரியல"
என்றான் என் உடன்பிறந்தவன்.

அவனும் படித்து வெளியே வந்தபோது அவன் வகுப்பில் தேறியவர்கள்(all pass) வெறும் மூன்றே பேர்.
என் தம்பியும் முரடனாகிவிட்டான்.
"மறப்பயல்வளோட சேந்து மரியாத இல்லாம பேச ஆரம்பிச்சிட்டான்"
என்று என் அப்பாவே சொல்கிறார்.
எனது உயிர்நண்பர்களிலும் என் தம்பியின் உயிர்நண்பர்களிலும் தேவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவது உண்டு,
என் மாமாமகனை துபாய்க்கு கூட்டிச் செல்பவரும் தேவர்தான்.

நான் முகநூலுக்கு வந்தபிறகு சிலர் என்னை தேவர் சாதி பக்கங்களில் இணைத்தனர்(அதற்கு சுபாஷ் சந்திர போஸ் பெயர் வேறு).
அவர்களிடம் கருத்து ரீதியாக சண்டைபோடுவது வழக்கமாகிப்போனது,
அதன் பதிவுகள் தேவர் சாதியினர் மூவேந்தர் என்றும் வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த குற்றப்பரம்பரை சட்டம் மூலம் தேவர்களுக்கு நடந்த கொடுமைகளையும் முத்துராமலிங்கனார் பற்றியும் என்று அறிவுப் பூர்வமாக இருக்கும்.
அங்கே சில வெறிநாய்களை வைத்துள்ளனர்,
அவர்கள் வேலை என்னவென்றால் பதிவுக்கு எவன் எதிர்ப்பு தெரிவிக்கிறானோ அவன் சாதியைக் கேட்டு அதன்பிறகு அவனை வம்புக்கு இழுத்து அசிங்கமாகத் திட்டி தேவர் வீரத்தை நிறுவுவது.
நான் அவனிடம் கேட்டேன் 'நீ உன் தங்கையை கோடிசுவரனான ஒரு தேவரிடம் போய் நாம் ஒரேசாதி என்று சொல்லி கட்டிவைக்கமுடியுமா என்று கேட்டேன்' நான் சாதியைச் சொல்லாததாலும் எனது கேள்வியாலும் அவன் தடுமாறிவிட்டான்.

சில தலித்திய நண்பர்களும் கிடைத்தனர்.
அவர்கள் சாதிவெறியில் எல்லாருக்கும் அப்பன்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.
தேவர்மலர் என்று ஒரு சாணித்தாள் புத்தகம் (ஆனால், பத்து ரூபாய்) நான் என் சித்தி வீட்டுக்கு அருப்புக்கோட்டை போகும் வழியில் வாங்கினேன்.
அதிலாவது உருப்படியாக எதுவும் இருந்ததா?!
சமத்துவத்தைப் பற்றி பெயருக்கு கூட இல்லை.
அதே குற்றப் பரம்பரை, அதே முத்துராமலிங்கனார், அதே பெருங்காமநல்லூர் மாயக்காள், அதே சாதியுணர்வு.
அதே போல விருதுநகர் பக்கம் பாலச்சந்திரன் சுடப்பட்ட படத்தைப் போட்டு அருகில் விரலை நீட்டி கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தும்படி ஒருவரின் படம், ஆத்திரம் பொங்கிவந்தது.
அந்த நபரின் பெயர் நினைவில்லை.
இதற்கு 'கருணாஸ்' முத்துராமலிங்கனார் படத்தைப் போட்டு அதில் 'தேசியத் தலைவர்' என்று போட்டு முக்குலத்தோர் 'புலி'ப்படை என்று வெளியிட்ட சுவரொட்டியே பரவாயில்லை.

நானும் என் சித்திமகனும் எங்கள் ஊருக்கு வந்தபோது வழியில் 'தேவர் குருபூஜை' என்ற பெயரில் வழியை மறித்து வெள்ளையும் சொள்ளையுமாகக் காலிப்பயல்கள் வண்டிகள் மீது ஏறி போட்ட ஆட்டம் இருக்கிறதே முத்துராமலிங்கனார் பார்த்தால் கண்ணீர் விட்டிருப்பார்.
வருடந்தோறும் இந்தக் குருபூசையின் போது குருதி சிந்துவது ஏன்?!

நான் கேட்கிறேன் *தேவர் குருபூசைக்கு வருபவரெல்லாம் முத்துராமலிங்கனாரைப் பற்றி அறிந்துதான் வருகின்றனரா*

எம் தமிழினத்தின் பெருமகனார் அவர் செய்தவைகள் எதாவது அங்கே சொல்லப்படுகிறதா?!
முத்துராமலிங்கனார் மதுரை அங்கயற்கண்ணி(மீனாட்சி) கோவிலில் தாழ்த்தப்பட்டவர் நுழைய எடுத்த முயற்சிகளோ,
வேலைசெய்யும் பெண்களுக்கு கருவுண்டான காலத்தில் சம்பளத்தோடு விடுமுறையும் வாங்கித் தந்ததையோ,
சிட்டவண்ணான்குளத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர்கூட வீடுகளில் முத்துராமலிங்கனார் படம் வைத்திருக்கும் காரணத்தையோ,
சேதுபதி மன்னரை எதிர்த்து நின்ற காமராசரை மிரட்டிய நாடார்களை அடக்கிய அவரது ஆற்றலையோ,
தமது 110ஏக்கர் நிலத்தை பங்கிட்டு அவர் அளித்ததையோ இன்னும் பல சாதனைகளையோ குருபூஜையில் யாராவது பேசுகிறார்களா?!

*முத்துராமலிங்கனாரைத் தேவர் என்று அழைத்து அழைத்தே அவர் உருவத்தைக் கண்டாலே மற்றவர் முகம் சுழிக்கும் அளவுக்கு ஏன் ஆக்கிவிட்டீர்கள்?!*

குருபூசை வேண்டும் என்று அவர் கேட்டாரா?!
தட்டிக்கேட்க திரும்பிவரவாபோகிறார் என்ற துணிச்சலா?

தவிர கிறித்தவராக மாறிய தேவர்களையோ இசுலாமியராக மாறிய தேவர்களையோ யாரும் கண்டுகொள்வதில்லை,
தூக்குக்குடி மாவட்டத்தில் கேம்பலாபாத் என்ற சிற்றூர் உள்ளது,
இங்கே வாழும் இசுலாமியர் அனைவரும் குற்றப்பரம்பரை காலத்தில் மதம்மாறிய தேவர்கள்(கள்ளர்) ஆவர்.
இதே போல பல இடங்களில் இசுலாமியராகவும் கிறித்துவராகவும் மாறிய தேவர்கள் தனித்துவிடப்பட்டுள்ளனர்.

இறுதியாக ஒன்று தேவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகளாகத்தான் உள்ளனர்.
சில நிலவளம் கொண்ட தேவர்கள் ஏழைத் தேவர்களை அடியாட்கள் போலவும் வேட்டைநாய்கள் போலவும் பயன்படுத்துகின்றனர்.

தலைவர்களில் இருவிதம் முதலாவது பிரச்சனையைக் கூறி மக்களை தம் பின்னால் திரட்டுபவன்,
இரண்டாவது உணர்ச்சியைத் தூண்டி தன் கீழே மக்களைத் திரட்டுபவன்.
இவ்விரண்டில் தேவர்மக்களே நீங்கள் யார்பின்னால் செல்லவேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

அறிவுக்கு எதிராகப் போராடிவிடலாம் ஆனால் உணர்ச்சிகளுக்கு எதிராகப் போராடுவது கடினம் என்பார்கள்.
இருந்தாலும் தமிழினம் அழிவை சந்தித்துவரும் இந்தக்காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு சிறுமுயற்சி அவ்வளவுதான்.

No comments:

Post a Comment