Friday 27 November 2015

சென்னிமலை - சிவன்மலை - சின்னமலை

சென்னிமலை - சிவன்மலை - சின்னமலை
=============================================
மூட்டை மூட்டையாகப் பணம்,  நகை, பொற்காசுகள் இன்னும் பல செல்வங்கள் ஒரு குதிரைப்படை காவலுடன் மைசூர் மன்னன் ஐதர் அலிக்கு கொண்டு செல்லப்பட,
'சங்ககிரி'யை நோக்கி சென்ற பாதையில் 'காங்கயம்' அருகே சென்றுகொண்டிருந்தது.
'சாலி சாகிப்' என்பவரது தலைமையில் கொங்குபகுதியில் வரிவசூலாகப் பெறப்பட்ட செல்வங்களை 'மீரா சாகிப்' என்ற மைசூர் அரசின் திவான் மூலம் தலைநகரான சீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச்சேரவேண்டிய பொன்னும் பொருளும் கொள்ளையர்கள் நடமாட்டமுள்ள அந்த வழியில் சென்று கொண்டிருந்தது.
திடீரென நாலாபுறமும் குதிரைக் காலடிச் சத்தம் 'தடதட'வென வெகு அருகில் கேட்க குதிரைப்படைவீரர்கள் உடைவாளை உருவிக்கொண்டனர்.

புழுதியைக் கிளப்பியபடி புயலென வந்து வழிமறித்தான் ஒரு இளைஞன்.
அவனோடு வந்தக் குதிரைவீரர்களும் அந்தக் கூட்டத்தைச் சூழ்ந்துகொண்டனர்.

சாலி சாகிப் வெளியேவந்தார்.
அந்தக் கட்டுடல் இளைஞனை பார்க்கும்போதே பெரிய வீரனென்பதை யூகித்துவிட்டார்.
"யார் நீங்கள் புதியவர்கள்?
இந்தச் செல்வங்களெல்லாம் எங்கே செல்கின்றன?
யாருக்கு உரியவை?"
என்று கேட்டான்.
சாலி சாகிப் பொறுமையாக விபரத்தைச் சொன்னார்.
பிறகு தாங்கள் யாரென்று அந்த இளைஞனை வினவினார்.
"நான் இந்தப்பகுதி கொள்ளையர்களை அடக்க நியமிக்கப்பட்டிருக்கிறேன்"
என்று மட்டும் கூறிவிட்டு சிறிது நேரம் யோசித்தவன்
"ஆமாம், மைசூர் மன்னனுக்கு எங்கள் மக்கள் ஏன் வரிகொடுக்கவேண்டும்?
அந்நியன் ஆள நாங்கள் என்ன அடிமைகளா?
ஆயிரம் வருடங்களாக மூவேந்தர்களால் ஆளப்பட்ட இந்த மண்ணில் எங்களை நீங்கள் போரில் தோற்கடித்தும் ஆட்சியை நிறுவவில்லை,
பிறகேன் வரிவசூல் செய்கிறீர்கள்?
கன்னடவர் அடக்கியாளும் அளவுக்கு தமிழர்கள் என்னக் கோழைகளா?
மரியாதையாக இந்தப் பொருட்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்.
உங்கள் மன்னன் ஐதர் அலியை முடிந்தால் போரில் எங்களை வென்றுவிட்டு வரிவசூல் செய்யச் சொல்லுங்கள்"
என்று கூறினான்.

சுற்றி நின்ற வீரர்களைப் பார்த்த சாலிசாகிப் போரிடுவதில் பலனில்லை என்பதை உணர்ந்துகொண்டு செல்வங்களை அந்த இளைஞனிடம் ஒப்படைத்தார்.
பிறகு"என் மன்னனிடம் நான் என்ன சொல்வேன்.
நீங்கள் யாரென்றாவது சொல்லுங்கள்" என்று கேட்டார்.

அவன் தன் இருகைகளையும் இரு எதிர்திசையிலிருந்த மலைகளைச் சுட்டிக்காட்டி
"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பிடுங்கிக்கொண்டது என்று சொல் போ"
என்று கூறினான்.

இந்தச் செய்தி மைசூர் மன்னன் 'ஐதர் அலி'க்கும் அவர் மகன் 'திப்பு சுல்தானுக்கும்' அப்படியே அறிவிக்கப்பட்டது.
அவர்களும் அந்த இளைஞனைப் பிடித்துவர ஒரு படையை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த இளைஞனும் படைதிரட்டிக்கொண்டிருந்தான்.

'சின்னமலை' என்ற இளைஞன் மன்னனை எதிர்த்து போருக்கு அழைக்கிறான் என்ற செய்தி மைசூர் அரசு மக்களிடம் காட்டுத்தீ போலப் பரவிவிட்டது.
ஐதர் அலிக்கோ தன்னை 'சின்னமலை' என்று கூறிய17 வயது இளைஞன் கொங்கு அரசபரம்பரையைச் சேர்ந்த 'தீர்த்தகிரி' என்ற பெயருடைய புகழ்பெற்ற மாவீரன் என்பதும் தம்மிடமிருந்து பறித்த செல்வத்தை மீண்டும் மக்களிடம் அளித்துவிட்டான் என்பதும் தன்னுடன் வீரர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு பயிற்சி அளித்து சிறிய படைபோல் வைத்திருப்பதிருப்பவன் என்பதும் பிறகுதான் தெரியவந்தது.

இது நடந்தது 1772ஆம் ஆண்டு.
மைசூர் படையும் சின்னமலையின் தனிப்படையும் நொய்யலாற்றின் கரையில் சந்தித்தன.
அந்தப் பெரிய மைசூர்படையை தமது நண்பர்கள், உடன்பிறந்தோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு அமைத்த சிறிய படையின் மூலம் தோற்கடித்துவிட்டான்  அந்த இளைஞன்.
அதன்பிறகு கொங்குபகுதி முழுவதும் அவன் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.

காலம் காலமாக தெலுங்கு நாயக்கர், கன்னட முகமதியர், ஆங்கிலேயர் என பலரின் பிடிக்குள் பல துண்டுகளாக உடைந்து கிடந்த தமிழ்மக்கள் தம்மை மீட்க மண்ணின் மைந்தன் வந்ததை எண்ணி அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.
அவனுக்கு சின்னமலை என்ற பெயருடன் தீரன் என்கிற பட்டமும் கிடைத்துவிட 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்படலானான்.

No comments:

Post a Comment