Showing posts with label தீரன் சின்னமலை. Show all posts
Showing posts with label தீரன் சின்னமலை. Show all posts

Tuesday, 2 August 2016

பச்சைத் தமிழன் 'தீரன் சின்னமலை'

வீரம் வீரம் என்கிறார்களே அதற்கான அசல் அடையாளமாக திகழ்ந்த தமிழகத்து வீரன் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று.

காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர் ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும் , தானியமும் வசூலித்து கொண்டு போன பொழுது அதை பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் .

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார்.

தீர்த்தகிரி என்பதே இவரின் உண்மையான பெயர் இந்த சம்பவத்துக்கு பிறகே சின்னமலை என்பது அவரின் பெயரானது .

வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றார் .
தனது படைகளை திரட்டி வந்து சின்னமலையில் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் போரிட்டார் .
வெற்றி தீரன் சின்னமலை பக்கமே !
மீண்டும் படை திரட்டி வரலாம் என மைசூர் போனால் அங்கே திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்திருந்தார் .
மனிதர் தீரன் சின்னமலையை நோக்கி நேசக்கரம் நீட்டினார்.

கொங்குப் பகுதியில் பழைகோட்டை பாளையத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது.
நடுவில் ஒரு பாளைய வீரன் நமக்கு சவாலாக இருப்பதா என பொங்கினார்கள் .
ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது.

1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் தீர்த்தகிரியின் படைகள் மாளவல்லி என்ற இடத்தில் ஆங்கிலேயப்படையுடன் மோதியது.
திப்பு வீர மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது.
வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான்.
அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான்

தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு அனுப்பியது.
வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து கேப்டன் மக்கீஸ் கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை.

ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது.
இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது.
மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது.
மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை.

ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன்.

இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர் .
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது .
அந்தக் கோட்டையில்தான் வெடிமருந்து, துப்பாக்கிகளை சின்னமலையே தயாரித்தார்.
கடைசிக் கட்டத்தில் பீரங்கிகளும் தயாரித்தார்.

பழனிமலைத் தொடரில் கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும்.
நல்லப்பன் விலை போனான்.
சாப்பிட மட்டும் அவர் வீட்டுக்கு வரும் சின்னமலையை கைது செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் அவன் வீட்டுக்கு கீழே சுரங்கம் அமைக்க ஒத்துக்கொண்டான்.

சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள்.
சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார்.

பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பன் அனுப்பிய ஓலைச்சுருளை இவர் ஆங்கிலேயர் பிடிக்க வந்த பொழுது நெருப்பில் இட்டு எரித்த பொழுது ஒரு பகுதி சிக்கி வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க ,
”என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன் !”
என்றார் .
அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை.
வீரர்கள் மற்றும் துரோகிகளால் நிரம்பிக்கிடக்கிறது வரலாறு .

தீரன் சின்னமலையை நினைவு கூர்வோம்!!!

நன்றி: பூ.கொ.சரவணன்
--------------------------------
கன்னடவர் தமிழரை ஆள்வதா என்று வெகுண்டெழுந்த தமிழன்தான் தீரன் சின்னமலை.
ஆங்கிலேயரை ஒழிக்கத்தான் திப்பு சுல்தானுடன் கூட்டுசேர்ந்தாரே ஒழிய
கன்னடவருக்கு அடிபணிந்துவிடவில்லை.

தமிழில் புலமைபெற்ற
தமிழ்ப் புலவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த பச்சைத் தமிழன் தீரன்  சின்னமலையை
சாதி வட்டத்திற்குள் அடைக்கவேண்டாம்.

அவர் போராடியது இனத்திற்காகவே ஒழிய சாதிக்காக இல்லை.

Friday, 27 November 2015

சென்னிமலை - சிவன்மலை - சின்னமலை

சென்னிமலை - சிவன்மலை - சின்னமலை
=============================================
மூட்டை மூட்டையாகப் பணம்,  நகை, பொற்காசுகள் இன்னும் பல செல்வங்கள் ஒரு குதிரைப்படை காவலுடன் மைசூர் மன்னன் ஐதர் அலிக்கு கொண்டு செல்லப்பட,
'சங்ககிரி'யை நோக்கி சென்ற பாதையில் 'காங்கயம்' அருகே சென்றுகொண்டிருந்தது.
'சாலி சாகிப்' என்பவரது தலைமையில் கொங்குபகுதியில் வரிவசூலாகப் பெறப்பட்ட செல்வங்களை 'மீரா சாகிப்' என்ற மைசூர் அரசின் திவான் மூலம் தலைநகரான சீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச்சேரவேண்டிய பொன்னும் பொருளும் கொள்ளையர்கள் நடமாட்டமுள்ள அந்த வழியில் சென்று கொண்டிருந்தது.
திடீரென நாலாபுறமும் குதிரைக் காலடிச் சத்தம் 'தடதட'வென வெகு அருகில் கேட்க குதிரைப்படைவீரர்கள் உடைவாளை உருவிக்கொண்டனர்.

புழுதியைக் கிளப்பியபடி புயலென வந்து வழிமறித்தான் ஒரு இளைஞன்.
அவனோடு வந்தக் குதிரைவீரர்களும் அந்தக் கூட்டத்தைச் சூழ்ந்துகொண்டனர்.

சாலி சாகிப் வெளியேவந்தார்.
அந்தக் கட்டுடல் இளைஞனை பார்க்கும்போதே பெரிய வீரனென்பதை யூகித்துவிட்டார்.
"யார் நீங்கள் புதியவர்கள்?
இந்தச் செல்வங்களெல்லாம் எங்கே செல்கின்றன?
யாருக்கு உரியவை?"
என்று கேட்டான்.
சாலி சாகிப் பொறுமையாக விபரத்தைச் சொன்னார்.
பிறகு தாங்கள் யாரென்று அந்த இளைஞனை வினவினார்.
"நான் இந்தப்பகுதி கொள்ளையர்களை அடக்க நியமிக்கப்பட்டிருக்கிறேன்"
என்று மட்டும் கூறிவிட்டு சிறிது நேரம் யோசித்தவன்
"ஆமாம், மைசூர் மன்னனுக்கு எங்கள் மக்கள் ஏன் வரிகொடுக்கவேண்டும்?
அந்நியன் ஆள நாங்கள் என்ன அடிமைகளா?
ஆயிரம் வருடங்களாக மூவேந்தர்களால் ஆளப்பட்ட இந்த மண்ணில் எங்களை நீங்கள் போரில் தோற்கடித்தும் ஆட்சியை நிறுவவில்லை,
பிறகேன் வரிவசூல் செய்கிறீர்கள்?
கன்னடவர் அடக்கியாளும் அளவுக்கு தமிழர்கள் என்னக் கோழைகளா?
மரியாதையாக இந்தப் பொருட்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்.
உங்கள் மன்னன் ஐதர் அலியை முடிந்தால் போரில் எங்களை வென்றுவிட்டு வரிவசூல் செய்யச் சொல்லுங்கள்"
என்று கூறினான்.

சுற்றி நின்ற வீரர்களைப் பார்த்த சாலிசாகிப் போரிடுவதில் பலனில்லை என்பதை உணர்ந்துகொண்டு செல்வங்களை அந்த இளைஞனிடம் ஒப்படைத்தார்.
பிறகு"என் மன்னனிடம் நான் என்ன சொல்வேன்.
நீங்கள் யாரென்றாவது சொல்லுங்கள்" என்று கேட்டார்.

அவன் தன் இருகைகளையும் இரு எதிர்திசையிலிருந்த மலைகளைச் சுட்டிக்காட்டி
"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பிடுங்கிக்கொண்டது என்று சொல் போ"
என்று கூறினான்.

இந்தச் செய்தி மைசூர் மன்னன் 'ஐதர் அலி'க்கும் அவர் மகன் 'திப்பு சுல்தானுக்கும்' அப்படியே அறிவிக்கப்பட்டது.
அவர்களும் அந்த இளைஞனைப் பிடித்துவர ஒரு படையை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த இளைஞனும் படைதிரட்டிக்கொண்டிருந்தான்.

'சின்னமலை' என்ற இளைஞன் மன்னனை எதிர்த்து போருக்கு அழைக்கிறான் என்ற செய்தி மைசூர் அரசு மக்களிடம் காட்டுத்தீ போலப் பரவிவிட்டது.
ஐதர் அலிக்கோ தன்னை 'சின்னமலை' என்று கூறிய17 வயது இளைஞன் கொங்கு அரசபரம்பரையைச் சேர்ந்த 'தீர்த்தகிரி' என்ற பெயருடைய புகழ்பெற்ற மாவீரன் என்பதும் தம்மிடமிருந்து பறித்த செல்வத்தை மீண்டும் மக்களிடம் அளித்துவிட்டான் என்பதும் தன்னுடன் வீரர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு பயிற்சி அளித்து சிறிய படைபோல் வைத்திருப்பதிருப்பவன் என்பதும் பிறகுதான் தெரியவந்தது.

இது நடந்தது 1772ஆம் ஆண்டு.
மைசூர் படையும் சின்னமலையின் தனிப்படையும் நொய்யலாற்றின் கரையில் சந்தித்தன.
அந்தப் பெரிய மைசூர்படையை தமது நண்பர்கள், உடன்பிறந்தோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு அமைத்த சிறிய படையின் மூலம் தோற்கடித்துவிட்டான்  அந்த இளைஞன்.
அதன்பிறகு கொங்குபகுதி முழுவதும் அவன் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.

காலம் காலமாக தெலுங்கு நாயக்கர், கன்னட முகமதியர், ஆங்கிலேயர் என பலரின் பிடிக்குள் பல துண்டுகளாக உடைந்து கிடந்த தமிழ்மக்கள் தம்மை மீட்க மண்ணின் மைந்தன் வந்ததை எண்ணி அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.
அவனுக்கு சின்னமலை என்ற பெயருடன் தீரன் என்கிற பட்டமும் கிடைத்துவிட 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்படலானான்.