Showing posts with label நாஞ்சில். Show all posts
Showing posts with label நாஞ்சில். Show all posts

Friday, 12 May 2017

பழங்காலத் தமிழகம் நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2

பழங்காலத் தமிழகம்
நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2
(எளிமையான வரைபடம்)

இடமிருந்து வலமாக வரிவரியாகப் படிப்பது போல

கொங்காண நாடு
பாழி (மல்லி நாடு)
கடம்ப நாடு
இருங்கோ நாடு (அருவா நாடு)
வெளிமா நாடு
வொளிமா நாடு
இடைச்சுரம்
பாயல நாடு
நல்லமலை
வெள்ளிமலை
கனிமலை
வேளாவி நாடு (வேங்கி)

பாயல் (சேர பாயல் மலை)
மேகுட்டுவம் (குட்டுவ நாடு)
குடநாடு
எருமையூர்
விச்சிகோ நாடு
குதிரைமலை
புங்கிநாடு
வேங்கட நாடு
புல்லி நாடு

சேரர்
தோட்டிமலை
தகடூர் (அதிகன் நாடு)
வாணர் நாடு
ஒய்மான் நாடு
ஆமூர் (முக்காவல் நாடு)
முழம்புல நாடு

பறம்புமலை
ஆழுந்தூர்
மிலாடு (முள்ளூர் நாடு)
கொல்லிமலை நாடு
பழுவூர்
தோன்றிமலை
புண்நாடு
தொண்டை நாடு
முதியமலை
நடுநாடு
கண்கெழு நாடு

கரூவூர் நாடு
பாண்டிய நாடு
காணப்பேரெழில்
(எவ்வியின்) நீடூர் மிழலை
யாழ் நாடு
மணிபல்லவம்
நாகர்நாடு

மலை நாடு
கோடைமலை
பொதிகை (ஆய் நாடு)
கறநாடு
காந்தள்
நாஞ்சில் நாடு
இயக்கர்கண்
ஈழம்
வேட்டரைய நாடு

சிங்க ஈழம்
கோனார்மலை நாடு

(ஆங்கிலத்தில் இருந்து எடுத்ததாலும் தெளிவின்மையாலும் சில தவறுகள் இருக்கலாம்)

நன்றி: Senthil Kumaras

Monday, 10 April 2017

தமிழுக்காகக் களமிறங்கிய சுந்தரனார்

தமிழுக்காகக் களமிறங்கிய சுந்தரனார்

"எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"

இவைதான் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்ட வரிகள்.

அதாவது பல்வேறு உயிரினங்களையும் உலகங்களையும் படைத்த பரம்பொருள் போல

கன்னடத்தையும் தெலுங்கையும் மலையாளத்தையும் துளுவையும் படைத்துவிட்டு ஆரியம் போல வழக்கொழிந்து போகாமல் நிலைத்திருக்கும் தமிழை வாழ்த்துகிறார் சுந்தரனார்.

சமஸ்கிருதத்தையும் திராவிடத்தையும் விட தமிழை உயர்ந்ததாக கடவுளாக உயர்த்திக் கூறும் இவ்வரிகள் ஏன் நீக்கப்பட்டன?

தமிழன் தமிழகத்தை ஆளவில்லை,
ஆள்பவனெல்லாம் வந்தேறி,
அதனால் நீக்கப்பட்டன.

யார் இந்த சுந்தரனார்?

இதோ அறிந்துகொள்ள முற்படுவோம்.

ஆழப்புழை துறைமுகமாகவும் வணிகத்தலமாகவும் வளர்ந்த 1790கள்.

களக்காட்டிலிருந்து ஆழப்புழாவிற்கு தொழில் காரணமாகக் குடிபெயர்ந்த வெள்ளாள குடும்பத்தில் பிறந்து சைவதீட்சை பெற்றவர்தான் பெ.சுந்தரம்.

ஆழப்புழையில் இருந்த தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை நடத்தினர்.
அதிலும் சைவத்தைப் பின்பற்றியவர்கள் பல தலைமுறைகளாக தமிழை மறக்காமல் போற்றி பாதுகாத்து வந்தனர்.
பெ.சுந்தரனார் அங்கே பிறந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.

மலையாளச் சூழலில் பிறந்திருந்தாலும் இவர் இளவயதிலேயே தமிழ் மீது பற்று கொண்டவராக இருந்தார்.
தமிழ் மண்ணில் பிறக்காமல் மலையாள மண்ணில் பிறந்துவிட்டோமே என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கவேண்டும்.

அதனால் மனோன்மணியம் நாடகத் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் தமிழையே கடவுளாக்கி தமிழ்த் தெய்வ வணக்கத்தோடு துவங்குகிறார்.
அதில் "அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்" என்று தன்னைக் கூறிக்கொள்கிறார்.

ஆழப்புழாவில் தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வி முடித்து பிறகு ஆங்கில வழி கல்வியும் பெற்றுள்ளார்.
பிறகு திருவனந்தபுரத்தில் மன்னர் கட்டிய மகாராஜா கல்லூரியில் வரலாறும் தத்துவமும் படித்துள்ளார்.

இவர் படித்த மலையாள சூழலில் தமிழுக்கு இருந்த இடம் குறைவு.
ஆனாலும் இவர் எப்படி இவ்வளவு ஆழமாகத் தமிழ் கற்றார் என்பது இன்றுவரை தெரியவில்லை.

பிறகு திருநெல்வேலி வந்து ம.தி.தா இந்துப் பள்ளியில் தலைமைப் பொறுப்பில் 1877-1878 வரை இருந்திருக்கிறார்.

இந்நேரத்தில் மகாராஜா கல்லூரியில் ராபர்ட் ஹார்வி என்ற தத்துவ  பேராசிரியர் இங்கிலாந்து திரும்பியதால் திருவனந்தபுரத்திற்கே மீண்டும் திரும்பி தான் படித்த அதே கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணிசெய்யத் தொடங்கிறார்.

திருவனந்தபுரம் தமிழர்களை இணைத்து சைவக் கழகம் ஒன்றை நிறுவியிருக்கிறார்.
அதுவே தமிழ் அறிஞர்கள் கூடும் இடமாகவும் இருந்தது.
இவர்கள் பல மூலைகளியில் இருந்த தமிழ் அறிஞர்களுடன் கடிதத் தொடர்புடன் இருந்தனர்.

திருவிதாங்கூர் மன்னர்கள் ஆதரவைப் பெற்று தமிழை வளர்க்க பல முயற்சிகள் செய்துள்ளார்.

மகாராஜா கல்லூரியில் உ.வே.சா அவர்களுக்கு வேலை வாங்கித்தர முயற்சித்தார்.
உ.வே.சா மறுத்துவிட்டார்.
மறைமலையடிகளை திருவனந்தபுரத்திற்கு அழைத்து ஒரு பள்ளியில் தமிழாசிரியர்  வேலை வாங்கித் தந்துள்ளார்.
மறைமலையடிகளும் சில மாதங்கள் பணி செய்தார்.
கிறித்துவ காப்பியமான இரட்சணிய யாத்ரிகம் எழுதிய எச்.எ.கிருட்ணபிள்ளைக்கும் திருவனந்தபுரம் கல்லூரியில் வேலை வாங்கி தந்துள்ளார்.

சுந்தரனார் காலத்தில் நாடகத்தமிழ் பெரும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது.
நாடக படைப்புகள் அத்தனையும் அழிந்துபோய் இருந்தன.

மராட்டியரான கோவிந்தசாமி ராவ் இயற்றிய புஷ்பவல்லி,
சமரச சன்மார்க்க சபையைச் சேர்ந்த சங்கரதாஸ் எழுதிய நாற்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள்,
காசிவிஸ்வநாத முதலியார் தாசில்தார் மற்றும் டம்பாச்சாரி போன்ற தெலுங்கு கலப்புடைய நாடகங்கள் என
தமிழகத்தில் நடந்த நாடகங்கள் சமஸ்கிருத, தெலுங்கு, ஆங்கில கலப்புடன் இருந்தன.
மேலைநாட்டு பாணியில் இருந்தன.
சில நாடகங்கள் தமிழில் இருந்தாலும் புரிந்துகொள்ள எளிமையாக இல்லை.

(அன்றைய நாடகத்துறையில் கதாநாயகனாக வலம் வந்தவர் திருவனந்தபுரம் தமிழரான டி.கே.சண்முகம்)

சுந்தரனார் யாருமே கவனம் செலுத்தாத நாடகத் தமிழை மீட்க முடிவுசெய்தார்.
தன் தமிழறிவையெல்லாம் கொட்டி ஒரு நாடகம் எழுதினார்.
அதுதான் மனோன்மணியம்.

இதற்காக அவர் லிட்டன் பிரபு எழுதிய நாடகங்களை திருவிதாங்கூர் அரசரிடம் கூறி வரவழைத்து படித்திருக்கிறார்.
அதில் The secret way என்ற கதை மிகவும் பிடித்துப்போனது.
அந்த கதையின் மூலக்கருவை எடுத்துக்கொண்டு அதை தமிழ் சூழலுக்கு மாற்றி கதை உருவாக்கினார்.
1891 ல் நாடகத்தை சென்னை வந்து ரிப்பன் பிரஸ் மூலம் அச்சேற்றி வெளியிட்டார்.
(இந்த மூல அச்சு திருவிதாங்கூர் அரசால் அழிக்கப்பட்டு விட்டது)

மனோன்மணியம் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
அது எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் செழுமையான மொழிநடையிலும் இருந்தது.
மிகவும் புகழ்பெற்றது.

திருக்குறள் பரவலாகாத அக்காலத்திலேயே 26 இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டப்பட்டு எழுதப்பட்டிருந்தது.

அதனால் மனோன்மணியம் சுந்தரனார் என்றே இன்று பெ.சுந்தரம்பிள்ளை அறியப்படுகிறார்.

இரண்டே ஆண்டுகளில் மனோன்மணியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம்பிடித்தது.

ஆனால் மேடையேறவில்லை.
சுந்தரனார் காலத்திற்குப் பிறகு சண்முகசுந்தர முதலியார் அதனை மேடையேற்றினார்.

1942 ல் மனோன்மணியம் திரைப்படமாகவும் வெளிவந்தது.

மனோன்மணியம் சேரநாடும் (கேரளா) பாண்டிய நாடும் (தென் தமிழகம்) நாஞ்சில்நாட்டுக்காக (கன்னியாகுமரி) மோதிக்கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னன் சேர மன்னனை தன் மகளுக்கு மணமுடிக்க விரும்புகிறான்.
அமைச்சரைத் தூதனுப்புகிறான்.
அமைச்சருக்கு தன் மகனே பாண்டியனுக்கு மருமகனாகவேண்டும் என்ற விருப்பம்.
எனவே சேர மன்னனை சந்திந்து பேசும்போது பாண்டியருக்கு சொந்தமான நாஞ்சில்நாட்டை சேரன் வைத்திருப்பதாக கூறு இருவருக்கும் இடையில் சண்டைமூட்டுகிறான்.

இதனால் போர் வெடிக்கிறது.
சேரன் போரில் வெல்கிறான்.
அமைச்சர் தன் மகனுக்கு இளவரசியை திருமணம் செய்ய போட்ட திட்டம் பாண்டிய மன்னனின் குருவால் தடுக்கப்பட்டு இறுதியில் சேரனை பாண்டிய இளவரசி மணக்கிறாள்.
கதை முடிகிறது.

இதுவே கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைய 1950களில் திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தின் பழைய அரசியல் வடிவம்.

சுந்தரனார் என்னதான் மலையாள மன்னர்களுடன் இணக்கமாக இருந்தாலும்
தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மலையாளிகளிடம் இருக்கிறதே என்கிற வருத்தம் அவருக்கு இருந்துள்ளது.

கதை எழுதுவதற்கு முன்
பல்வேறு கோவில்களுக்கும் சென்று கல்வெட்டு ஆராய்ச்சி செய்துள்ளார்.
தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி கோட்டை (கரைக்கோட்டை) அருகே ஒரு கல்வெட்டைக் கண்டெடுத்தார்.
( கல்வெட்டு எழுத்துகளை படித்தறியும் அளவுக்கு அவருக்கு அகன்ற அறிவு இருந்தது என்பது இன்னொரு வியப்பு)

இந்த கல்வெட்டு 17 வரிகளைக் கொண்டது.
விழிஞ்ஞத்தில் இருந்து புறப்பட்டு வந்த சேரப்படையெடுப்பை கரைக்கோட்டையில் எதிர்த்து போராடி  வீரமரணம் அடைந்த இரணகீர்த்திக்கு மாறஞ்சடையன் என்ற பாண்டியமன்னன் நட்ட நடுகல் ஆகும்.
இதன் காலம் கி.பி.792.
கன்னியாகுமரி வரலாற்றில் இது ஒரு முக்கியமான சான்று ஆகும்.

சுந்தரனாருக்கு முன் கேரள வரலாற்றை எழுதிய மலையாளிகள் கொக்கசந்தேசம், கேரள மகாத்மியம், கேரளோப்பத்தி ஆகிய நூல்களைப் பின்பற்றி பரசுராமன் மழு எறிந்து உருவான நாடு என்ற புராணத்தையே பாடினர்.

சுந்தரனார் நாஞ்சில் நாட்டு மன்னர்கள் வரலாற்றை ஆராய்ந்து "திருவிதாங்கூர் பண்டைய வரலாறு" என்ற நூலை எழுதி
சங்ககாலத்தில் சேரர்களும்,
9ம் நூற்றாண்டு வரை ஆய்மன்னர்களும்,
அதன்பிறகு சோழரும் பாண்டியரும்
அதன்பிறகு வேணாட்டு அரசரும் ஆண்டதாக வரலாற்று ரீதியான நூலை எழுதினார்.

இதன் கடைசி கட்டுரையான "miscellaneous Travancore Inscriptions" 18 கல்வெட்டுகளை விவரிக்கிறது.

இதில் 14 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் (9 வட்டெழுத்து வடிவம்).
3 ஆங்கிலத்தில் உள்ளன.
1 மலையாளக் கல்வெட்டும் உள்ளது.

திருஞானசம்பந்தரின் காலத்தை 'The age of Thirugnana sambandha a question of south indian archaeology' என்ற கட்டுரையில் சரியாக கணித்து சொன்னவர் சுந்தரனாரே.

பல வரலாற்று மாந்தர்களில் காலத்தை சரியாகக் கணித்து சொல்லி தமிழ் வரலாறு ஓரளவு தெளிவடைய உதவியாக இருந்துள்ளார்.

சம்பந்தர் கூன்பாண்டியனின் காலத்தவர் என்று ஏற்கும் சுந்தரனார்,
அவனது மனைவி கரிகால் சோழனின் தங்கை மங்கையர்க்கரசி என்பதை மறுக்கிறார்.
அதேபோல கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமாறனும் ஒருவரே என்பதையும் மறுக்கிறார்.

சம்பந்தர் கோச்செங்கண் சோழனையும் அவன் கும்பகோணத்திற்கு அருகே வைகல் எனுமிடத்தில் கட்டிய சிவன்கோவிலையும் பாடியுள்ளார்.

கி.பி.642 ல் இரண்டாம் புலிகேசியை வென்ற சிறுதொண்டர் வேண்டிக்கொண்டதால் சம்பந்தர் செங்கோட்டான்குடி பதிகத்தைப் பாடினார்.
இதற்கு கி.பி 640-649 ஐச் சேர்ந்த கல்வெட்டுச் சான்று உள்ளது.

இதையெல்லாம் வைத்து சம்பந்தரின் காலம் 7ம் நூற்றாண்டு என்று நிறுவினார்.

இதை உறுதிபடுத்த ஆதிசங்கரர் சம்பந்தரை த்ரமில (திராவிட) சிசு என்று கூறுவதை மேற்கோள் காட்டினார்.

கொல்லம் என்ற மலையாள ஆண்டுக்கணக்கு பற்றிய ஆராய்ச்சி கட்டுரையில்
கொல்லம் ஆண்டு முன்பே தென்தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிறுவியுள்ளார்.
அதில் சேரமான் இசுலாமுக்கு மாறியதும் கற்பனைக் கதை என்கிறார்.

சுந்தரனார் பத்துப்பாட்டையும் ஆய்வு செய்து 'The tamilian antiquary' என்ற கட்டுரை எழுதியுள்ளார்.
இதில் நக்கீரர் காலத்தை ஆய்வு செய்து நெடுநெல்வாடை எழுதிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டு மூத்தவர் என்று விளக்குகிறார்.
திருமுருகாற்றுப்படை, நெடுநெல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அதேபோல The date of Nambi andar nambi என்ற கட்டுரையில் பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி முதலாம் இராஜராஜன் காலத்தவர் என்பதை விளக்குகிறார்.
"தத்தா நமரே காண்" என்ற வாசகத்தைச் சான்றாக்குகிறார்.

இராமாயணத்தில் சாதி பற்றி ஆய்வு செய்தார்.
ஆனால் அவர் காலத்தில் அது வெளிவரவில்லை.
அவரது குறிப்புகளை பெற்றுக்கொண்ட வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் "இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.

கவிதைகளும் பல எழுதியுள்ளார்.
ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை, கணபதி ஆச்சாரியருக்கு எழுதிய மடல் போன்றவை குறிப்பிடத்தகுந்தன.

1855 ல் பிறந்து 1897 வரை 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சுந்தரனாரது பணி மறக்கவியலாதது.

சுந்தரனார் காங்கிரசில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக பேசியதால் ஆங்கில அடிவருடியான திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிரானார்.
சுந்தரனார் பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் திருவாங்கூர் போலீஸ் பறித்துக்கொண்டு போய் அழித்துவிட்டனர்.

தமிழக அரசால் இவரது படைப்பு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டு திருநெல்வேலி பல்கலைக்கழகத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவரது பாடலில்  ஆரியத்தையும் திராவிடத்தை விட தமிழை உயர்த்திச் சொல்லும் வரிகள் நீக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுவது நாம் இவருக்குச் செய்யும் கொடுமை ஆகும்.

திருவனந்தமபுரம் அருங்காட்சியகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் அவரது தெளிவான உருவப்படத்தை (எண்ணெய் ஓவியம்) மீட்டெடுத்து,
அதனை அமையவிருக்கும் தமிழர்நாட்டு தேசிய அஞ்சல்தலையாக வெளியிடவேண்டும்.
அலுவலகங்களில் பயன்படுத்தவேண்டும்.
அன்னாரது பெயரில் நாடகத்தமிழுக்கான விருது வழங்கப்படவேண்டும்.

நாடகத் தமிழிலும் தமிழ்வரலாற்று ஆராய்ச்சியிலும் மொழியாய்விலும் முக்கிய பங்காற்றி தமிழ்த்தாய்க்கு தக்க காலத்தில் தக்க பணிவிடையைச் செய்த அப்பெருமகனாரைப் போற்றுவோம்.

தகவல்களுக்கு நன்றி:
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் (சிறுநூல்)
- அ.கா.பெருமாள்

(26.10.2016 அன்று முகநூலிலிட்டது)

Wednesday, 5 April 2017

குருதியில் நனைந்த குமரி -16

குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.

வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"

"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"

உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்

"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"

"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"

" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"

"இப்போதுமா அது நடக்கிறது?"

"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.

அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"

"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"

"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"

"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.

இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.

தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.

நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.

இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"

"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"

"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"

"பிள்ளை என்றால் தமிழரா?"

"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"

"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"

"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"

"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"

"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"

"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"

"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி

மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.

"வணக்கம் ஜவஹர் அவர்களே!"

" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"

"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"

"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"

"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"

"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி  என்றுமல்லவா கூறினார்?!"

"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?

நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?

நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"

"சரி ஐயா! நல்லது"

அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
  நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.

(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)