Showing posts with label சுந்தரனார். Show all posts
Showing posts with label சுந்தரனார். Show all posts

Tuesday, 11 April 2017

குருதியில் நனைந்த குமரி -17

குருதியில் நனைந்த குமரி -17
---------------------------------------------
நாள்: 28.08.1954
நேரம்: நண்பகல்
இடம்: தேரூர்

காங்கிரஸ் குழு நேரில் பார்வையிட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு பலரும் வலியுறுத்தியபடி வரலாற்று தகவல்களைக் கேட்டறிய நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் தேரூருக்குச் சென்றனர்.

அங்கே தமிழ்க்கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளரான கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.

வாசலில் அவரது வளர்ப்புப்பிள்ளையும் மருமகனுமான சிவதாணுப்பிள்ளை நின்றிருந்தார்.
காங்கிரஸ் குழுவினர் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். 

78 வயதான கவிமணியார் அப்போது மரணப்படுக்கையில் இருந்தார்.

"மாமா தற்போது பேசும் நிலையில் இல்லை.
இந்த இறுக்கமான சூழலில் மாமாவுக்கு தேவையான மருந்துகளும் உணவும் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எழுப்புகிறேன், கண்விழிக்கிறாரா பார்க்கலாம்"

அனைவரும் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.

"மாமா! மாமா! உங்களைப்பார்க்க தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வந்திருக்கிறார்கள்."

கவிமணி கண்விழித்தார்.

"யார்?! தமிழ்நாட்டிலிருந்தா?!
என்றால் குமரிநாடு இன்னமும் தமிழ்நாட்டுடன் இணையவில்லையா?"

கரையாளர் "அதற்காகத்தான் ஐயா வந்திருக்கிறோம்.
கவலை வேண்டாம்.
காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் உதவி தேவை.
உங்களுக்குத் தெரிந்த சரித்திர தகவல்களைக் கூறுங்கள்"

கவிமணி "இங்கே சரித்திரம் என்றாலே அது நமது சரித்திரம்தானே ஐயா,
இந்த நாடு முழுவதுமே தமிழருக்குச் சொந்தம்.
மூழ்கிய குமரிநாடு முதல் இமயமலை வரை நமது மண்.
இந்த திருவிதாங்கூர் உட்பட மலையாள நாடு முழுவதுமே சேரநாடு.
சேரர் தமிழர்தான்.
மூவேந்தரில் ஒரு வேந்தன் அழிந்து போனானே?!
திருவிதாங்கூர் என்ற பெயர் அதங்கோடு என்ற தமிழ்ப்பெயர்தான்.
அதங்கோடு, திருவதங்கோடு ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டது.
தமிழ்ச்சங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசான் பிறந்த இடமிது.
போனது போகட்டும் இன்று தமிழ்பேசும் பகுதியையாவது ஒன்றிணைத்து தமிழ்ராஜ்ஜியம் அமையுங்கள்."

கரையாளர் "ஐயா, சேரநாடு மலையாள நாடாக ஆனது எப்படி?"

கவிமணி "நில அமைப்பு முதல் காரணம்.
இன்றைய தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.
இங்கே பேசப்படும் தமிழ் சிறிது வேறுமாதிரியாக ஆனது.
அதுவே மலைகளை ஆளும் மலையாளத் தமிழ்.
ஆனாலும் மலைகளுக்கு நடுவே இரு நாட்டையும் இணைக்கும் வழிகள் உள்ளன.
தெற்கே ஆரல்வாய் மொழி கணவாய்,
அதற்கு கொஞ்சம் வடக்கே சிறிய கணவாயான செங்கோட்டை கணவாய்,
வடக்கே பெரியதாக பாலக்காடு கணவாய்.
இன்று இந்த கணவாய்களுக்கு அருகே இருக்கும் நாங்கள்தான் தமிழ்த் தொடர்புடன் இருக்கிறோம்.
தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம் பீருமேடு தொழிலாளர்கள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவர்கள்.
அவர்களும் தமிழ் அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் மலையாளிகள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது காரணம் நம்பூதிரிகள்.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாது.
அவர்கள் கடல் வழி வந்ததாகவும் கங்கைக் கரையிலிருந்து வந்ததாகவும் கூறுவர்.
இவர்கள் வேதங்களை வைதீக முறையில் செய்யும் புதியதொரு இந்துமதப் பிரிவைக் கொண்டுவந்தனர்.
யாகம் வளர்ப்பது, சோதிடம் பார்ப்பது, தீட்டுக்கழிப்பது, செய்வினை வைப்பது, என மூடநம்பிக்கையை வளர்த்து ஏதோ தங்களிடம் அதிசய சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்தனர்.
நாளடைவில் செல்வாக்கு அதிகரித்தது.
அவர்கள் மணிப்பளவம் அல்லது மணிப்பிரவாகம் என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
அதாவது 'தாயை வணங்கி' என்பதை 'மாதாவை நமஸ்கரித்து' என்று 'சமஸ்கிருதத்தைத் தமிழ்நடையில் எழுதும்' ஒரு செயற்கையான மொழியை உருவாக்கினர்.
  மன்னர்களையும் பூசை செய்துதரவாதகச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாகி மணிபிரவாகத்தை ஆட்சிமொழி ஆக்கினர்.
மன்னனுக்கு அடுத்த நிலையில் இடம்பிடித்தனர்.
மன்னர்கள் மூலம் உழைக்கும் சாதியினரை கீழ்சாதியாகவும் தீண்டத்தகாதோராகவும் ஆக்கினர்.
மன்னனின் படைத்தளபதிகளாக இருந்த தமிழரல்லாத வடுக வம்சாவழிகளான நாயர் வீட்டுப் பெண்களை தனக்கு உரிய பொருள் என்று கட்டுப்பாடு விதித்து அவர்களுடன் கலந்து கலந்து அவர்களைக் கலப்பினம் ஆக்கிவிட்டனர்.
இப்படியாக மேல்தட்டு வர்க்கம் மணிப்பிரவாக மயமானது.
நாளடைவில் அது நடுத்தட்டுக்கும் பரவியது.
ஆனால் அடித்தட்டில் இருந்த தமிழர்களுடன் இனக்கலப்பு நடக்கவில்லை.
மொழி மட்டும் கலந்தது
மணிப்பிரவாகமும் மலையாளத் தமிழும் கலந்து இன்றைய மலையாள மொழி உருவானது.
பழைய தமிழ் வட்டெழுத்துக்களை நகலெடுத்து தனியான புதிய எழுத்துமுறையை நம்பூதிரிகள் உருவாக்கினர்.
தமிழ் வார்த்தையின் கொச்சையான உச்சரிப்பையே மலையாள வார்த்தை என சேர்த்துக்கொண்டனர்.
அதாவது ஆமை என்பதை ஆம என்று உச்சரிப்போம் இதை மலையாளத்தில் ஆம என்ற வார்த்தையாக ஆக்கிக்கொண்டனர்.
இன்றும் இது பாதி தமிழ்.
தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்குத் தமிழும் அப்படியே புரியும்.
ஐக்கிய கேரளம் அமைந்ததும் முதல் வேலையாக மலையாளத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி அதற்கு இணையான சமஸ்கிருத சொற்களை புகுத்தி புதிய பாடத்திட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்"

கரையாளர் "என்றால் பிராமணரெல்லாம் சுத்த மலையாளிகளா?"

கவிமணி " இல்லை.
சோழர் காலத்தில் இங்கே வந்த தமிழ்நாட்டு பிராமணரான தமிழ் ஐயர்கள் இன்றும் தமிழையே பேசுகிறார்கள்.
தமிழராகவே இருக்கிறார்கள்.
தமிழ் ஐயர்கள் பாலக்காடு, கொடுங்காளூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அக்ரகாரம் அமைத்து வாழ்கிறார்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு வைத்துள்ளனர்.
இவர்கள் நம்பூதிரிகளைப் போல தாந்திரீக முறையை பின்பற்றாமல் தமிழ் ஆகம முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கோவில்களும் தனித்தனிதான்.
பிராமணர்கள் செய்துவரும் கொடுமைகளில் இவர்களுக்கு 1% கூட பங்கு கிடையாது.
மன்னர்களின் திவான்களாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டோர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனர்கள்.
அந்த வகையில் அரசுக்கு உடந்தையாக இருந்ததாகக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் வேளாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் எனலாம்.

தமிழ் ஐயர்களை இன்றும் தமிழர்களாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பட்டர் என்றே அழைக்கிறார்கள்.
தமிழையர்கள் அமைத்துள்ள 'சமூகங்கள்' அவ்வப்பகுதி தமிழர்களை ஒன்றிணைத்து ஆகம அடிப்படையில் கோவில் ஒன்று கட்டி அந்தப் பகுதி நிலங்களை ஒன்றாக்கி கோயில் மூலம் நிர்வகிக்கும் குத்தகை உரிமையை வைத்துள்ளன.
மலையாளிகள் தனக்கான அரசு அமைந்ததும் முதலில் அதில்தான் கைவைப்பார்கள்.
தமிழையர்கள் கையில் இருக்கும் நிலம் பறிபோனால் தமிழர்கள் ஒருங்கிணைப்பும் பொருளாதாரமும் பறிபோகும்"

கரையாளர் "என்றால் நிலத்தின் விளைச்சலை சுரண்டும் நம்பூதிரிகளுக்கும் ஐயர்களுக்கும் என்ன வேறுபாடு?"

கவிமணி " நம்பூதிரிகளைப் போல நிலத்தில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் முறை கிடையாது இது.
குத்தகை உரிமை மட்டும்தான்.
இது நமது மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திய முறை ஆகும்.
ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகள் இங்கே வந்து சிறிது வலுப்பெற்றதும் சேர மன்னர் ஆதரவுடன் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சாலை எனுமிடத்தில் ஒரு கல்விக்கூடம் கட்டி அதில் தமிழ்ப்பாணர்களை அழைத்து வந்து போர்ப்பயிற்சி சொல்லிக்கொடுத்தனர்.
சேரர்களுக்கு உதவிப்படையாக இருக்கும் என்று மன்னனிடம் கூறினாலும் உண்மையில் சேரர்களை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கத்தான் அந்தப்படை.
ஆனால் அதற்குள் ராசராசன் சேரநாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்தும், விழிஞ்சம் துறைமுகம் வழியே கப்பல்களை உள்ளே நுழைத்தும் இருமுனைத் தாக்குதல் நடந்தது.
வென்றதும் காந்தளூர் சாலையை இடித்து தரைமட்டமாக்கி அது இருந்த அடையாளமே இல்லாமல் செய்துவிட்டான்.
போர்ப்பயிற்சி பெற்ற மாணவர்களை தனது படையில் சேர்த்துக்கொண்டான்.
நம்பூதிரிகள் கொண்டுவந்த தாந்திரீக முறையை ஒழித்து மீண்டும் ஆகம முறையை நடைமுறைப்படுத்தினான்.
தனது கல்வெட்டுகளில் 'காந்தளூர்சாலை கலமறுத்தருளி' என்றே அவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.
இது பற்றி நான் 32 ஆண்டுகள் முன்பே ஆராய்ந்து எழுதியுள்ளேன்."

கரையாளர் "பிராமணரில் தமிழர் உள்ளது போல தாழ்த்தப்பட்டோரிலும் மலையாளிகள் உண்டா?"

கவிமணி "இல்லை. ஆனால் ஈழவர், புலையர், தீயர் என தாழ்த்தப்பட்டோர் இந்த உண்மையை மறந்துவிட்டனர், தங்களை மலையாளிகளாகவே கருதுகின்றனர்.
இன்று மலையாளிகளில் மூன்று பெரும்பான்மைக் குழுக்கள் சிரியன் கிறித்தவர், நாயர்.
அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சனை இருக்கும் ஆனால் தமிழருக்கு எதிராக ஒன்றாகிவிடுவார்கள்.
உடனே நம்பூதிரியிடம் போய் ஆலோசனை கேட்டு அதுபடி நடப்பார்கள்"

கரையாளர் "உயர்சாதியானரில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் சிலர் மலையாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்"

கவிமணி "சிலர் இருக்கிறார்கள்.
பூணூல் போட்ட நாடார்களும் கூட அந்த வகையில் உண்டு.
நான் வெள்ளாளன்தான்.
குமரி மீட்புக்காக முதலில் விடுதலை அமைப்பு நிறுவிய அப்பாவுப்பிள்ளை வேளாளர்தான்.
நேசமணியின் கட்சியை நிறுவிய பி.எஸ்.மணி வெள்ளாளர்தான்.
இவ்வளவு ஏன்?!
நாஞ்சில் நாட்டுக்காக சேரநாடும் பாண்டியநாடும் மோதிக்கொள்ளும் என்று முன்பே கணித்து அதை மனோன்மணீயம் என்ற காவியமாகத் தீட்டிய சுந்தரம்பிள்ளை வெள்ளாளர்தான்.
அவர் கண்டெடுத்த கல்வெட்டு இன்றும் ஒரு முக்கிய சான்று.
அதுவே பாண்டிய நாட்டின் பகுதியான நாஞ்சில்நாட்டின் மீது சேரநாடு படையெடுத்தபோது காத்துநின்று வீரமரணம் அடைந்த வீரனின் கதையைக் கூறுகிறது.
அதாவது மலையாளிகள் சேரர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் நாஞ்சில் நாடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறிச்சென்றுள்ளார்.
இது போல தொடக்ககால திருவனந்தபுரம் அரசர்கள் பாண்டிய வம்சமான வேணாட்டு அரசர்கள் என்பதையும் அவர்கள் காலத்தையும் சான்றுடன் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் மன்னருக்கு நெருக்கமானவர்.
நானும் அவரைப்போல திருவனந்தபுரத்தில் ஆசிரியராக இருந்தவன்தான்.
அவரைப்பற்றி ஆய்வும் செய்துள்ளேன்"

கரையாளர் " என்றால் திருவனந்தபுரம் வரைதான் மலையாளநாடு என்றால் இப்போது திருவனந்தபுரத்தில் தமிழர்கள் எத்தனை சதவீதம்"

கவிமணி " திருவனந்தபுரம் நகரில் 70% வரை இன்று தமிழர்கள்.
மலையாளிகள் தொடர்ந்து அந்நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியேறி வருகின்றனர்.
அந்நகரின் உணவுப் பொருட்கள் வணிகம் வேளாளர்கள் கையிலும்
மளிகை மற்றும் துறைமுகப் பொருட்கள் வணிகம் நாடார்கள் கையிலும் உள்ளது.
திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகள் கடைவீதிகள் என எல்லாமே தமிழர்கையில்தான் உள்ளது.
அந்நகர் மலையாளிகள் கைக்குப் போனாலும் முழுதும் மலையாள மயமாக குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

செங்கோட்டையிலிருத்து கடலுக்கு நேராக ஒரு கோடு கிழித்து அதற்கு தெற்கே உள்ளதை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்.
அதற்கு மூழ்கிய குமரிக்கண்டம் நினைவாக பெயர்வைக்கவேண்டும்.
நமது குமரிநாடு மூழ்கிவிட்டது.
அதன் எஞ்சிய அடையாளம் cape comarin என்று ஆங்கிலேயர் அழைக்கும் குமரி முனையும் அங்கே இருக்கும் குமரியம்மன் கோவிலும்தான்"

கரையாளர் "இங்கே நம்பூதிரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பை மூடமுடியாத அளவுக்கு சாதிக்கொடுமை நடந்ததாக அறிகிறோம்.
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?"

கவிமணி "நம்பூதிரி சொன்னால் தமிழன் மானங்கெட்டுப்போய் அப்படியே செய்வானா?
இன்றும் பழங்குடிகளிடம் மாரை மூடும் வழக்கம் கிடையாது.
தமிழர்களிடமும் மார்பை மூடும் வழக்கம் முன்பு கிடையாது.
இதை கோவில் சிலைகளில் நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பழக்கம் இங்கே மற்ற பகுதிகளை விட அதிககாலம் தொடர்ந்தது.
அதைத்தான் நம்பூதிரி சட்டமாக்கினான்"

கரையாளர் "தங்களது பிரச்சனைகள் தமிழகத்துடன் இணைந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?"

கவிமணி "கட்டாயம் சரியாகிவிடும்.
நாங்கள் தாய்நிலத்துடன் இணைவது எங்களின் பிரச்சனைகளால் அல்ல.
தமிழ்ப் பற்றினால்தான்.
இந்த பற்றுக்கு மதிப்பிருந்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும்"

கரையாளர் "சரி ஐயா, நேருவிடம் இது பற்றி எடுத்துச்சொல்கிறேன்"

கவிமணி "காந்தி இருந்த வரை நேரு மருமகள் போல இருந்தார்.
இப்போது பதவிக்கு வந்தவுடன் மாமியார் போல நடந்துகொள்கிறார்.
அவர் தயவை எதிர்பார்க்காமல் தமிழர்கள் போராடவேண்டும்.
தெலுங்கர்களை இந்த விசயத்தில் நாம் பின்பற்றவேண்டும்.
தென்குமரியும் வடவேங்கடமும் போய்விட்டாலும்
குறைந்தபட்சம் குமரி முனையிலிருந்து வேங்கடமலையான திருப்பதி வரையாவது நம் நாடு ஒரு சிற்றரசாகவேணும் இந்தியாவில் இருக்கவேண்டும்.
நான் உயிருடன் இருக்கப்போகும் காலம் குறைவு.
என் காலத்தில் இது நடக்கவேண்டும்.
என் கடைசி ஆசை இது"
என்று கூறிவிட்டு கண்ணை மூடினார் கவிமணி.
மூடிய கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.
"தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நாடு ஒத்து உலகில்
சந்தமும் வாழ வரம் தா"
பாடி முடித்ததும் அப்படியே அயர்ந்துவிட்டார்.
---------------------
தொடரும்

Monday, 10 April 2017

தமிழுக்காகக் களமிறங்கிய சுந்தரனார்

தமிழுக்காகக் களமிறங்கிய சுந்தரனார்

"எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"

இவைதான் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்ட வரிகள்.

அதாவது பல்வேறு உயிரினங்களையும் உலகங்களையும் படைத்த பரம்பொருள் போல

கன்னடத்தையும் தெலுங்கையும் மலையாளத்தையும் துளுவையும் படைத்துவிட்டு ஆரியம் போல வழக்கொழிந்து போகாமல் நிலைத்திருக்கும் தமிழை வாழ்த்துகிறார் சுந்தரனார்.

சமஸ்கிருதத்தையும் திராவிடத்தையும் விட தமிழை உயர்ந்ததாக கடவுளாக உயர்த்திக் கூறும் இவ்வரிகள் ஏன் நீக்கப்பட்டன?

தமிழன் தமிழகத்தை ஆளவில்லை,
ஆள்பவனெல்லாம் வந்தேறி,
அதனால் நீக்கப்பட்டன.

யார் இந்த சுந்தரனார்?

இதோ அறிந்துகொள்ள முற்படுவோம்.

ஆழப்புழை துறைமுகமாகவும் வணிகத்தலமாகவும் வளர்ந்த 1790கள்.

களக்காட்டிலிருந்து ஆழப்புழாவிற்கு தொழில் காரணமாகக் குடிபெயர்ந்த வெள்ளாள குடும்பத்தில் பிறந்து சைவதீட்சை பெற்றவர்தான் பெ.சுந்தரம்.

ஆழப்புழையில் இருந்த தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை நடத்தினர்.
அதிலும் சைவத்தைப் பின்பற்றியவர்கள் பல தலைமுறைகளாக தமிழை மறக்காமல் போற்றி பாதுகாத்து வந்தனர்.
பெ.சுந்தரனார் அங்கே பிறந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.

மலையாளச் சூழலில் பிறந்திருந்தாலும் இவர் இளவயதிலேயே தமிழ் மீது பற்று கொண்டவராக இருந்தார்.
தமிழ் மண்ணில் பிறக்காமல் மலையாள மண்ணில் பிறந்துவிட்டோமே என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கவேண்டும்.

அதனால் மனோன்மணியம் நாடகத் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் தமிழையே கடவுளாக்கி தமிழ்த் தெய்வ வணக்கத்தோடு துவங்குகிறார்.
அதில் "அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்" என்று தன்னைக் கூறிக்கொள்கிறார்.

ஆழப்புழாவில் தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வி முடித்து பிறகு ஆங்கில வழி கல்வியும் பெற்றுள்ளார்.
பிறகு திருவனந்தபுரத்தில் மன்னர் கட்டிய மகாராஜா கல்லூரியில் வரலாறும் தத்துவமும் படித்துள்ளார்.

இவர் படித்த மலையாள சூழலில் தமிழுக்கு இருந்த இடம் குறைவு.
ஆனாலும் இவர் எப்படி இவ்வளவு ஆழமாகத் தமிழ் கற்றார் என்பது இன்றுவரை தெரியவில்லை.

பிறகு திருநெல்வேலி வந்து ம.தி.தா இந்துப் பள்ளியில் தலைமைப் பொறுப்பில் 1877-1878 வரை இருந்திருக்கிறார்.

இந்நேரத்தில் மகாராஜா கல்லூரியில் ராபர்ட் ஹார்வி என்ற தத்துவ  பேராசிரியர் இங்கிலாந்து திரும்பியதால் திருவனந்தபுரத்திற்கே மீண்டும் திரும்பி தான் படித்த அதே கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணிசெய்யத் தொடங்கிறார்.

திருவனந்தபுரம் தமிழர்களை இணைத்து சைவக் கழகம் ஒன்றை நிறுவியிருக்கிறார்.
அதுவே தமிழ் அறிஞர்கள் கூடும் இடமாகவும் இருந்தது.
இவர்கள் பல மூலைகளியில் இருந்த தமிழ் அறிஞர்களுடன் கடிதத் தொடர்புடன் இருந்தனர்.

திருவிதாங்கூர் மன்னர்கள் ஆதரவைப் பெற்று தமிழை வளர்க்க பல முயற்சிகள் செய்துள்ளார்.

மகாராஜா கல்லூரியில் உ.வே.சா அவர்களுக்கு வேலை வாங்கித்தர முயற்சித்தார்.
உ.வே.சா மறுத்துவிட்டார்.
மறைமலையடிகளை திருவனந்தபுரத்திற்கு அழைத்து ஒரு பள்ளியில் தமிழாசிரியர்  வேலை வாங்கித் தந்துள்ளார்.
மறைமலையடிகளும் சில மாதங்கள் பணி செய்தார்.
கிறித்துவ காப்பியமான இரட்சணிய யாத்ரிகம் எழுதிய எச்.எ.கிருட்ணபிள்ளைக்கும் திருவனந்தபுரம் கல்லூரியில் வேலை வாங்கி தந்துள்ளார்.

சுந்தரனார் காலத்தில் நாடகத்தமிழ் பெரும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது.
நாடக படைப்புகள் அத்தனையும் அழிந்துபோய் இருந்தன.

மராட்டியரான கோவிந்தசாமி ராவ் இயற்றிய புஷ்பவல்லி,
சமரச சன்மார்க்க சபையைச் சேர்ந்த சங்கரதாஸ் எழுதிய நாற்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள்,
காசிவிஸ்வநாத முதலியார் தாசில்தார் மற்றும் டம்பாச்சாரி போன்ற தெலுங்கு கலப்புடைய நாடகங்கள் என
தமிழகத்தில் நடந்த நாடகங்கள் சமஸ்கிருத, தெலுங்கு, ஆங்கில கலப்புடன் இருந்தன.
மேலைநாட்டு பாணியில் இருந்தன.
சில நாடகங்கள் தமிழில் இருந்தாலும் புரிந்துகொள்ள எளிமையாக இல்லை.

(அன்றைய நாடகத்துறையில் கதாநாயகனாக வலம் வந்தவர் திருவனந்தபுரம் தமிழரான டி.கே.சண்முகம்)

சுந்தரனார் யாருமே கவனம் செலுத்தாத நாடகத் தமிழை மீட்க முடிவுசெய்தார்.
தன் தமிழறிவையெல்லாம் கொட்டி ஒரு நாடகம் எழுதினார்.
அதுதான் மனோன்மணியம்.

இதற்காக அவர் லிட்டன் பிரபு எழுதிய நாடகங்களை திருவிதாங்கூர் அரசரிடம் கூறி வரவழைத்து படித்திருக்கிறார்.
அதில் The secret way என்ற கதை மிகவும் பிடித்துப்போனது.
அந்த கதையின் மூலக்கருவை எடுத்துக்கொண்டு அதை தமிழ் சூழலுக்கு மாற்றி கதை உருவாக்கினார்.
1891 ல் நாடகத்தை சென்னை வந்து ரிப்பன் பிரஸ் மூலம் அச்சேற்றி வெளியிட்டார்.
(இந்த மூல அச்சு திருவிதாங்கூர் அரசால் அழிக்கப்பட்டு விட்டது)

மனோன்மணியம் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
அது எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் செழுமையான மொழிநடையிலும் இருந்தது.
மிகவும் புகழ்பெற்றது.

திருக்குறள் பரவலாகாத அக்காலத்திலேயே 26 இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டப்பட்டு எழுதப்பட்டிருந்தது.

அதனால் மனோன்மணியம் சுந்தரனார் என்றே இன்று பெ.சுந்தரம்பிள்ளை அறியப்படுகிறார்.

இரண்டே ஆண்டுகளில் மனோன்மணியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம்பிடித்தது.

ஆனால் மேடையேறவில்லை.
சுந்தரனார் காலத்திற்குப் பிறகு சண்முகசுந்தர முதலியார் அதனை மேடையேற்றினார்.

1942 ல் மனோன்மணியம் திரைப்படமாகவும் வெளிவந்தது.

மனோன்மணியம் சேரநாடும் (கேரளா) பாண்டிய நாடும் (தென் தமிழகம்) நாஞ்சில்நாட்டுக்காக (கன்னியாகுமரி) மோதிக்கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னன் சேர மன்னனை தன் மகளுக்கு மணமுடிக்க விரும்புகிறான்.
அமைச்சரைத் தூதனுப்புகிறான்.
அமைச்சருக்கு தன் மகனே பாண்டியனுக்கு மருமகனாகவேண்டும் என்ற விருப்பம்.
எனவே சேர மன்னனை சந்திந்து பேசும்போது பாண்டியருக்கு சொந்தமான நாஞ்சில்நாட்டை சேரன் வைத்திருப்பதாக கூறு இருவருக்கும் இடையில் சண்டைமூட்டுகிறான்.

இதனால் போர் வெடிக்கிறது.
சேரன் போரில் வெல்கிறான்.
அமைச்சர் தன் மகனுக்கு இளவரசியை திருமணம் செய்ய போட்ட திட்டம் பாண்டிய மன்னனின் குருவால் தடுக்கப்பட்டு இறுதியில் சேரனை பாண்டிய இளவரசி மணக்கிறாள்.
கதை முடிகிறது.

இதுவே கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைய 1950களில் திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தின் பழைய அரசியல் வடிவம்.

சுந்தரனார் என்னதான் மலையாள மன்னர்களுடன் இணக்கமாக இருந்தாலும்
தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மலையாளிகளிடம் இருக்கிறதே என்கிற வருத்தம் அவருக்கு இருந்துள்ளது.

கதை எழுதுவதற்கு முன்
பல்வேறு கோவில்களுக்கும் சென்று கல்வெட்டு ஆராய்ச்சி செய்துள்ளார்.
தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி கோட்டை (கரைக்கோட்டை) அருகே ஒரு கல்வெட்டைக் கண்டெடுத்தார்.
( கல்வெட்டு எழுத்துகளை படித்தறியும் அளவுக்கு அவருக்கு அகன்ற அறிவு இருந்தது என்பது இன்னொரு வியப்பு)

இந்த கல்வெட்டு 17 வரிகளைக் கொண்டது.
விழிஞ்ஞத்தில் இருந்து புறப்பட்டு வந்த சேரப்படையெடுப்பை கரைக்கோட்டையில் எதிர்த்து போராடி  வீரமரணம் அடைந்த இரணகீர்த்திக்கு மாறஞ்சடையன் என்ற பாண்டியமன்னன் நட்ட நடுகல் ஆகும்.
இதன் காலம் கி.பி.792.
கன்னியாகுமரி வரலாற்றில் இது ஒரு முக்கியமான சான்று ஆகும்.

சுந்தரனாருக்கு முன் கேரள வரலாற்றை எழுதிய மலையாளிகள் கொக்கசந்தேசம், கேரள மகாத்மியம், கேரளோப்பத்தி ஆகிய நூல்களைப் பின்பற்றி பரசுராமன் மழு எறிந்து உருவான நாடு என்ற புராணத்தையே பாடினர்.

சுந்தரனார் நாஞ்சில் நாட்டு மன்னர்கள் வரலாற்றை ஆராய்ந்து "திருவிதாங்கூர் பண்டைய வரலாறு" என்ற நூலை எழுதி
சங்ககாலத்தில் சேரர்களும்,
9ம் நூற்றாண்டு வரை ஆய்மன்னர்களும்,
அதன்பிறகு சோழரும் பாண்டியரும்
அதன்பிறகு வேணாட்டு அரசரும் ஆண்டதாக வரலாற்று ரீதியான நூலை எழுதினார்.

இதன் கடைசி கட்டுரையான "miscellaneous Travancore Inscriptions" 18 கல்வெட்டுகளை விவரிக்கிறது.

இதில் 14 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் (9 வட்டெழுத்து வடிவம்).
3 ஆங்கிலத்தில் உள்ளன.
1 மலையாளக் கல்வெட்டும் உள்ளது.

திருஞானசம்பந்தரின் காலத்தை 'The age of Thirugnana sambandha a question of south indian archaeology' என்ற கட்டுரையில் சரியாக கணித்து சொன்னவர் சுந்தரனாரே.

பல வரலாற்று மாந்தர்களில் காலத்தை சரியாகக் கணித்து சொல்லி தமிழ் வரலாறு ஓரளவு தெளிவடைய உதவியாக இருந்துள்ளார்.

சம்பந்தர் கூன்பாண்டியனின் காலத்தவர் என்று ஏற்கும் சுந்தரனார்,
அவனது மனைவி கரிகால் சோழனின் தங்கை மங்கையர்க்கரசி என்பதை மறுக்கிறார்.
அதேபோல கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமாறனும் ஒருவரே என்பதையும் மறுக்கிறார்.

சம்பந்தர் கோச்செங்கண் சோழனையும் அவன் கும்பகோணத்திற்கு அருகே வைகல் எனுமிடத்தில் கட்டிய சிவன்கோவிலையும் பாடியுள்ளார்.

கி.பி.642 ல் இரண்டாம் புலிகேசியை வென்ற சிறுதொண்டர் வேண்டிக்கொண்டதால் சம்பந்தர் செங்கோட்டான்குடி பதிகத்தைப் பாடினார்.
இதற்கு கி.பி 640-649 ஐச் சேர்ந்த கல்வெட்டுச் சான்று உள்ளது.

இதையெல்லாம் வைத்து சம்பந்தரின் காலம் 7ம் நூற்றாண்டு என்று நிறுவினார்.

இதை உறுதிபடுத்த ஆதிசங்கரர் சம்பந்தரை த்ரமில (திராவிட) சிசு என்று கூறுவதை மேற்கோள் காட்டினார்.

கொல்லம் என்ற மலையாள ஆண்டுக்கணக்கு பற்றிய ஆராய்ச்சி கட்டுரையில்
கொல்லம் ஆண்டு முன்பே தென்தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிறுவியுள்ளார்.
அதில் சேரமான் இசுலாமுக்கு மாறியதும் கற்பனைக் கதை என்கிறார்.

சுந்தரனார் பத்துப்பாட்டையும் ஆய்வு செய்து 'The tamilian antiquary' என்ற கட்டுரை எழுதியுள்ளார்.
இதில் நக்கீரர் காலத்தை ஆய்வு செய்து நெடுநெல்வாடை எழுதிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டு மூத்தவர் என்று விளக்குகிறார்.
திருமுருகாற்றுப்படை, நெடுநெல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அதேபோல The date of Nambi andar nambi என்ற கட்டுரையில் பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி முதலாம் இராஜராஜன் காலத்தவர் என்பதை விளக்குகிறார்.
"தத்தா நமரே காண்" என்ற வாசகத்தைச் சான்றாக்குகிறார்.

இராமாயணத்தில் சாதி பற்றி ஆய்வு செய்தார்.
ஆனால் அவர் காலத்தில் அது வெளிவரவில்லை.
அவரது குறிப்புகளை பெற்றுக்கொண்ட வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் "இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.

கவிதைகளும் பல எழுதியுள்ளார்.
ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை, கணபதி ஆச்சாரியருக்கு எழுதிய மடல் போன்றவை குறிப்பிடத்தகுந்தன.

1855 ல் பிறந்து 1897 வரை 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சுந்தரனாரது பணி மறக்கவியலாதது.

சுந்தரனார் காங்கிரசில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக பேசியதால் ஆங்கில அடிவருடியான திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிரானார்.
சுந்தரனார் பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் திருவாங்கூர் போலீஸ் பறித்துக்கொண்டு போய் அழித்துவிட்டனர்.

தமிழக அரசால் இவரது படைப்பு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டு திருநெல்வேலி பல்கலைக்கழகத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவரது பாடலில்  ஆரியத்தையும் திராவிடத்தை விட தமிழை உயர்த்திச் சொல்லும் வரிகள் நீக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுவது நாம் இவருக்குச் செய்யும் கொடுமை ஆகும்.

திருவனந்தமபுரம் அருங்காட்சியகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் அவரது தெளிவான உருவப்படத்தை (எண்ணெய் ஓவியம்) மீட்டெடுத்து,
அதனை அமையவிருக்கும் தமிழர்நாட்டு தேசிய அஞ்சல்தலையாக வெளியிடவேண்டும்.
அலுவலகங்களில் பயன்படுத்தவேண்டும்.
அன்னாரது பெயரில் நாடகத்தமிழுக்கான விருது வழங்கப்படவேண்டும்.

நாடகத் தமிழிலும் தமிழ்வரலாற்று ஆராய்ச்சியிலும் மொழியாய்விலும் முக்கிய பங்காற்றி தமிழ்த்தாய்க்கு தக்க காலத்தில் தக்க பணிவிடையைச் செய்த அப்பெருமகனாரைப் போற்றுவோம்.

தகவல்களுக்கு நன்றி:
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் (சிறுநூல்)
- அ.கா.பெருமாள்

(26.10.2016 அன்று முகநூலிலிட்டது)