குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.
வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"
"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"
உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்
"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"
"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"
" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"
"இப்போதுமா அது நடக்கிறது?"
"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.
அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"
"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"
"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"
"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.
இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.
தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.
நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.
இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"
"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"
"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"
"பிள்ளை என்றால் தமிழரா?"
"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"
"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"
"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"
"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"
"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"
"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"
"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி
மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.
"வணக்கம் ஜவஹர் அவர்களே!"
" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"
"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"
"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"
"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"
"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி என்றுமல்லவா கூறினார்?!"
"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?
நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?
நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"
"சரி ஐயா! நல்லது"
அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.
(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)
Wednesday, 5 April 2017
குருதியில் நனைந்த குமரி -16
Labels:
அப்துல் ரசாக்,
ஆதி பேரொளி,
கன்னியாகுமரி,
குமரி,
குமரி முனை,
தமிழ்நாடு,
திருவிதாங்கூர்,
தொடர்,
நம்பூதிரி,
நாஞ்சில்,
நேசமணி,
நேரு,
மண்மீட்பு,
மலையாளி,
மார்ஷல்,
வரைபடம்,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா முக நூலில் தங்கள் படைப்பையெல்லாம் பதிவிட்டால் தமிழ் மக்களை எளிதில் சென்றடையும் அல்லவா நெஞ்சை பிளக்க செய்யும் தங்கள் உண்மை தகவல்களுக்கு முகநூலே மிக சிறந்தது , இணைய தளத்துடன் மோகா நூலையும் தொடங்குங்கள் ஐயா .
ReplyDelete