Friday 21 April 2017

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

சோழன் கோச்செங்கணான் சேரமன்னனான கணைக்கால் இரும்பொறையுடன் போர்செய்து தோற்றுவிடுகிறான்.

பிறகு குணவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்படுகிறான்.

அப்போது குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தராததால் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி உண்ணாமல் பட்டினி கிடந்து இறந்தான் என்று கூறப்படுகிறது.

இதற்கு வலுவில்லாத ஒரு சான்று உள்ளது.
அது புறநானூறு 9 வது பாடலுக்கான அடிக்குறிப்பு ஆகும்.

(அடிக்குறிப்பு என்பது அப்பாடல் பற்றிய ஒரு செய்தி,
அது அப்பாடல் எங்கே பாடப்பட்டது, யாருக்காக பாடப்பட்டது,
எதற்காகப் பாடப்பட்டது,
யார் பாடியது போன்ற செய்தியாக இருக்கலாம்)

'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்ற அந்த அடிக்குறிப்பு புலவர் அப்பாட்டை பாடிய புலவர் எழுதியதாகவோ அல்லது அதை ஆராய்ந்த மொழிபெயர்த்த யாரும் எழுதியதாகவோ இருக்கலாம்.
அதனால் இதை வலுவான சான்றாக எடுத்துக்கொள்ள இயலாது.

உண்மை என்னவென்றால் பொய்கையார் எனும் புலவர் சேரமான் கணைக்கால் இரும்பொறையை புகழ்ந்து பாடி அதற்குப் பரிசாக சோழன் செங்கணான் விடுதலையைக் கேட்டார்.
சேரனும் சோழனை விடுதலை செய்துவிட்டான்.

இதற்கு பல சான்றுகள் உள்ளன.

'சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று'
என்று களவழி நாற்பதுக்கு உரையெழுதிய ஆசிரியர் தனது உரையை முடிக்கிறார்.

இதுவும் வலுவான சான்று கிடையாது.

தமிழ் நாவகர் சரிதையில் ஒரு செய்யுள் புறநானுற்றுப் பாடலை (74) எடுத்தாளுகிறது.
அதில் அப்பாட்டின் அடிக்குறிப்பும் சேர்த்து அதில் உள்ளது.

'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு'
என்பதுதான் அது.

இதுவும் வலுவான சான்றில்லை.

அதே தமிழ் நாவலர் சரிதையின் செய்யுளுக்கான அடிக்குறிப்பு
'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்'
என்று உள்ளது.
இதுவும் வலுவான சான்றில்லை.

ஆனால்,

ஒட்டக்கூத்தர் தனது மூன்று உலாக்களிலும் சேரன் சோழனை விடுவித்ததைக் குறிப்பிடுகிறார்.

"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)

"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)

"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)

இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,

"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.

நன்றி:
டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் முதல் ஆய்வுத்தொடர்.
'செந்தமிழ்ச்செல்வி' (1982 நவம்பர் - 1983 மே )

ஆகவே அதிகமான சான்றுகள் எதை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றனவோ அதுவே உண்மை.

ஆக சோழன் சிறையில் அவமதிக்கப்படவில்லை.

  இது மூவேந்தர் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டனர்.
சிறைபிடித்தவனை அவமதித்து சாகடித்தனர் என்ற எண்ணத்தை விதைக்க ஒரு அடிக்குறிப்பை பெரியதாக்கி தமிழ்ப் பகைவரால் புனையப்பட்ட சூழ்ச்சிக் கதை.

No comments:

Post a Comment