Showing posts with label சேரன். Show all posts
Showing posts with label சேரன். Show all posts

Saturday, 16 December 2017

சேரன் அண்ணனுக்கு நன்றி

சேரன் அண்ணனுக்கு நன்றி

குழித்துறை மீனவர் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது,
இருந்தாலும் இதை எழுதாமல் விடமுடியவில்லை.

இயக்குநரும் திரைத்துறையில் தமிழர்களின் குரலுமான  சேரன் அவர்களின் பேட்டியை இப்போதுதான் பார்க்க முடிந்தது.

தலைமையைக் கைப்பற்றியிருக்கும் விசாலை எதிர்த்து துணிச்சலான அவரது நடவடிக்கை காலத்தால் தமிழர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

அதன் தொடர்பாக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் தெரிவித்த  வெளிப்படையான கருத்துகள் அவரது இனப்பாசத்தை காட்டுவதாக அமைந்தது.

அவர் தெரிவித்த கருத்துகள் கீழ்க்கண்டவாறு,

விசால் ஒரு தெலுங்கர்.

அவர் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் எதையும் செய்யவில்லை.

அவர் தமிழர்களை ஆள நினைக்கக்கூடாது.

அவரினத்து மக்கள் ஆர்.கே.நகரில் உள்ளனர்.
அதற்குத்தக்க தொகை பேசி வாங்கவே அவர் தேர்தலில் குதித்தார்.

நாம்தமிழர் போன்ற திட்ட வரைவு விசால் உட்பட யாரிடமும் இல்லை.

(07.12.2017)

Thursday, 6 July 2017

மோடி இஸ்ரேலுக்கு அளித்த தமிழ் செப்பேடு


பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேல் பிரதமருக்கு அளித்த 9 -10நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வட்டெழுத்து செப்பேடு, சேர அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் வணிகம் செய்ய வந்த யூதர்களுக்கு அளித்தது.
(மோடி அவரை இந்திய அரசர் என்று மழுப்பினார்)

தகவல்: Karthikeyan Rathinavelu .

Friday, 21 April 2017

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

சோழன் கோச்செங்கணான் சேரமன்னனான கணைக்கால் இரும்பொறையுடன் போர்செய்து தோற்றுவிடுகிறான்.

பிறகு குணவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்படுகிறான்.

அப்போது குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தராததால் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி உண்ணாமல் பட்டினி கிடந்து இறந்தான் என்று கூறப்படுகிறது.

இதற்கு வலுவில்லாத ஒரு சான்று உள்ளது.
அது புறநானூறு 9 வது பாடலுக்கான அடிக்குறிப்பு ஆகும்.

(அடிக்குறிப்பு என்பது அப்பாடல் பற்றிய ஒரு செய்தி,
அது அப்பாடல் எங்கே பாடப்பட்டது, யாருக்காக பாடப்பட்டது,
எதற்காகப் பாடப்பட்டது,
யார் பாடியது போன்ற செய்தியாக இருக்கலாம்)

'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்ற அந்த அடிக்குறிப்பு புலவர் அப்பாட்டை பாடிய புலவர் எழுதியதாகவோ அல்லது அதை ஆராய்ந்த மொழிபெயர்த்த யாரும் எழுதியதாகவோ இருக்கலாம்.
அதனால் இதை வலுவான சான்றாக எடுத்துக்கொள்ள இயலாது.

உண்மை என்னவென்றால் பொய்கையார் எனும் புலவர் சேரமான் கணைக்கால் இரும்பொறையை புகழ்ந்து பாடி அதற்குப் பரிசாக சோழன் செங்கணான் விடுதலையைக் கேட்டார்.
சேரனும் சோழனை விடுதலை செய்துவிட்டான்.

இதற்கு பல சான்றுகள் உள்ளன.

'சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று'
என்று களவழி நாற்பதுக்கு உரையெழுதிய ஆசிரியர் தனது உரையை முடிக்கிறார்.

இதுவும் வலுவான சான்று கிடையாது.

தமிழ் நாவகர் சரிதையில் ஒரு செய்யுள் புறநானுற்றுப் பாடலை (74) எடுத்தாளுகிறது.
அதில் அப்பாட்டின் அடிக்குறிப்பும் சேர்த்து அதில் உள்ளது.

'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு'
என்பதுதான் அது.

இதுவும் வலுவான சான்றில்லை.

அதே தமிழ் நாவலர் சரிதையின் செய்யுளுக்கான அடிக்குறிப்பு
'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்'
என்று உள்ளது.
இதுவும் வலுவான சான்றில்லை.

ஆனால்,

ஒட்டக்கூத்தர் தனது மூன்று உலாக்களிலும் சேரன் சோழனை விடுவித்ததைக் குறிப்பிடுகிறார்.

"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)

"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)

"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)

இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,

"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.

நன்றி:
டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் முதல் ஆய்வுத்தொடர்.
'செந்தமிழ்ச்செல்வி' (1982 நவம்பர் - 1983 மே )

ஆகவே அதிகமான சான்றுகள் எதை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றனவோ அதுவே உண்மை.

ஆக சோழன் சிறையில் அவமதிக்கப்படவில்லை.

  இது மூவேந்தர் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டனர்.
சிறைபிடித்தவனை அவமதித்து சாகடித்தனர் என்ற எண்ணத்தை விதைக்க ஒரு அடிக்குறிப்பை பெரியதாக்கி தமிழ்ப் பகைவரால் புனையப்பட்ட சூழ்ச்சிக் கதை.

Friday, 6 January 2017

பாண்டவர் பாண்டியரே! கௌரவர் குறவரே!

காந்தாரி அம்மன் யார்?

காந்தாரி அம்மன் யார் என அறியவேண்டின்,
நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும்.
மகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும்.

அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குறவர்களுக்கும்,
அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும்.

காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர்.

தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம்.

அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார்.
அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார்.
அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார்.
இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை,
பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார்.

அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது.
அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி,
யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.
கருத்தினன் --> கிருத்தினன் --> கிருட்டினன் --> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது.
மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே!
துரியோதனன் என்பது "துர்+ஓதனன்" என்றிருந்து மருவியது.
துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள்.

இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.
இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன்.
இங்கு திரு என்பது அடைமொழி.
திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே.
வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல.
திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே!
திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே!
இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை "காந்தம்" போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி.
அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி.
அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது.

இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது.
அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது.
மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.
இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.

காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி.
அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி --> சங்குனி --> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது.
சம் என்றால் "அனைத்தையும்" அல்லது "ஒட்டுக்க" அல்லது "கூட்டாக" என்று பொருள்.
ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே!

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும்.
ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது.
அவள் பெண்ணல்ல.
ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள்.
அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி --> த்ரௌபதி --> திரௌபதி) திரௌபதி ஆனாள்.
அதாவது குரவர், கௌரவர் ஆனது போல.

திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு.
அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே!
அவளே மீனாட்சியும் ஆகும்.
அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது.
சகுனிக்கும் கோயில் உள்ளது.
இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.
அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.

அதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது.
யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும்.

காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே!

ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே!
"ஆதி நற்புரம்" என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது.
"ஆதிச்ச நல்லூரும்", "ஆதி நற்புரமும்" ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

"குரவர் சேர் தரை" தான் குருஷேத்திரம் ஆனது.
சேர் + தரை --> சேர் + த்ர --> சேர்த்ர --> ஷேத்ர --> ஷேத்ரம்.
மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம்.
குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் --> குரஷேத்ரம் --> குருஷேத்ரம் ஆனது.
ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே!
அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி.
குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது.
குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை.
தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.

-முனைவர் வே.பாண்டியன்,
தமிழர் உலகம்.

21 நவம்பர் 2015, 12:39 PM ·

தாமிரபரணி ஆற்றங்கரையில் பாரதப்போர் நடைபெற்றது என்பதற்கு நம் முன்னோன் பெருஞ்சோற்று உதயன் சேரலாதனின் வரலாற்றுக் குறிப்பே ஆதாரம்.
ஆதித்த நல்லூரில் இன்னும் பாண்டவர் சமாதி, கௌரவர் சமாதி என்றுள்ளது...
மகாவம்சத்தில் பாண்டியரை பாண்டு என்றே அழைக்கின்றனர்...

M Raj Kumar அவர்களின் பதிவு

Wednesday, 5 October 2016

இசுலாமியரில் தமிழரைக் கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

இசுலாமியரில் தமிழரைக் கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

வடயிந்திய இசுலாமியர் 500 ஆண்டுகளாக இசுலாமியர் என்றால் தமிழ் இசுலாமியர் 1000 ஆண்டுகளாக இசுலாமியர்கள்.
ஆனாலும் அவர்கள் இன அடையாளத்தை இழக்கவில்லை.

**அவர்களின் பெயர் அரபியில் இருந்தாலும் ஏறக்குறைய தமிழ் வடிவத்துடன் எளிமையாக இருக்கும்.
மைதீன், சம்சுதீன், முகமது, அப்துல், அமீர், அலி, முகைதீன், இரஹீம், உசேன், உமர், ரகுமான், காதர், மீரான், இப்ரான், அகமது, மசூது, அப்துல்லா, இதயத்துல்லா, செய்யது, சலீம், ஆயிஷா, பானு, பேகம், சாயிரா, சாந்தினி, ஆமீனா, பாத்திமா, கமீலா, யாஸ்மீன்.

(இப்பெயர்களுக்கும் இசுலாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவை சாதாரண அரபிப்பெயர்கள்.
இசுலாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வழங்கிவரும் சொற்கள் இவை.
இசுலாம் இந்தமொழியில்தான் பெயர் வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இல்லை.
இதை இசுலாமியர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது என் கோரிக்கை.)

** "நான் ஒரு இசுலாமியன்" என்று வெளியே காட்டிக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள்.
அதாவது மீசையில்லாமல் தாடி வைப்பது,
குல்லா அணிவது,
நீளமான சட்டையும் முழங்காலுக்கு மேல் கால்சட்டையும் அணிவது,
துண்டை முக்கோண வடிவில் தோளில் போடுவது,
கைகுலுக்கும்போது இரண்டு கை சேர்த்து குலுக்குவது,
கைவிரல்களைச் சேர்த்து முகத்திற்கு நேராக விசிறி வணக்கம் சொல்வது
போன்றவற்றை விரும்பமாட்டார்கள்.

**அதே போல அராபிய உச்சரிப்பு வராது.
அஸ்ஸலாமு அலைக்கும்
மற்றும் வஅலைக்கும் அஸ்லாம் என்பதை 'சலாமலேக்கும்' என்பார்கள்.
sheikh என்பது (ச்)சேக்கு என்பார்கள்.

**பள்ளி, தொழுகை, பெருநாள், நோன்பு, பிறை, இறைவன் போன்ற தமிழ் சொற்களையே பயன்படுத்துவார்கள்.
இசுலாத்தின் கடுமையான சட்டங்களை பலவற்றைப் பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது.

**தமிழ் இசுலாமியப் பெண்கள் பர்தா (புர்கா) போடுவதும் தற்போதுதான் அதிகரித்துள்ளது.
ஆனால் இன்றும் முகத்தை மூடுவது கிடையாது.
மற்றபடி அவர்கள் சேலைதான் கட்டியிருப்பார்கள்.
(இசுலாம் நாகரீகமாக உறுப்புகள் வெளித்தெரியாதவாறு உடையணியத்தான் கூறுகிறது.
புர்கா அணிவது கட்டாயம் இல்லை)

**நகைகளும் தமிழ்ப் பாணியிலானதாக இருக்கும்.
பொட்டு இல்லாததை வைத்துதான் அடையாளம் காணவேண்டும்.

**மற்ற இன இசுலாமியரை விட தமிழ் இசுலாமியப் பெண்கள் படித்தவர்களாக இருப்பார்கள்.

**தமிழ் இசுலாமியர் தமிழ்ப் பற்றும் இனப்பற்றும் உள்ளவர்கள்,
பிற இனத்து இசுலாமியருடன் அவர்கள் ஒட்டுவதில்லை.
எங்கே சென்றாலும் தமிழரோடு தமிழராகத்தான் சேர்ந்திருப்பார்கள்.
பிற மதத் தமிழரோடு மிகவும் இணக்கமாக இருப்பார்கள்.

**சித்தி-பெரியம்மா மகளைத் திருமணம் செய்வது
பெரியப்பா-சித்தப்பா மகளைத் திருமணம் செய்வது மிகவும் குறைவு.

**பெண்களின் பிறப்புறுப்பின் முக்கிய பாகத்தை அகற்றும் பழக்கம் அறவே கிடையாது.

**ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள்.

**இசுலாமியரின் மனநிலை எவ்வாறு எவ்வாறு என்றால்,
அவர்கள் தமிழ் இனத்தில் ஒரு (சாதி) சமூகம்.
அவ்வளவுதான்.
தாங்கள் தனிமதம் என்றோ உலக இசுலாமியர்கள் தம் சொந்தங்கள் என்றோ எண்ணுவதில்லை.
பிற சாதிகளை மாமன், மச்சான், சித்தப்பா, பங்காளி என உறவுமுறை சொல்லி அழைப்பார்கள்.
(ஆசாரிகளை சித்தப்பா என்று அழைப்பார்கள்,
இதுபோல வேறு சமூகங்களை எவ்வாறு அழைப்பார்கள் என்று தெரிந்தவர்கள் கருத்திடவும்)

**இசுலாமியர் ஆகும் முன் அவர்களின் தமிழ்ச்சாதி அடையாளம்

*இலுப்பைக்குடி (லெப்பைக்குடிகாடு)  இசுலாமியர் பெரும்பாலும் முத்தரையர் சாதியினர்.

*பள்ளப்பட்டி இசுலாமியர் பெரும்பாலும் கொங்கு கவுண்டர் சாதியினர்.

*கூத்தாநல்லூர் இசுலாமியர் பெரும்பாலும் பள்ளர் சாதியினர்.

*தென்காசி இசுலாமியர் பெரும்பாலும் நாடார் சாதியினர்.

*சங்கராபுரம் இசுலாமியர் பெரும்பாலும் துளுவ வேளாளர் சாதியினர்.

*கூடலூர் இசுலாமியர் பெரும்பாலும் பிள்ளைமார் சாதியினர்.

*கோயம்புத்தூர் இசுலாமியர் பெரும்பாலும் பள்ளர் சாதியினர்.

*கிருஷ்ணகிரி இசுலாமியர் பெரும்பாலும் பறையர் சாதியினர்.

*கீழக்கரை இசுலாமியர் பெரும்பாலும் கள்ளர் மற்றும் பள்ளர் சாதியினர்

*காயல்பட்டினம் இசுலாமியர் பெரும்பாலும் பரதவர் மற்றும் நாடார் சாதியினர்.

மேலே நான் கூறியவை என் அனுபவத்தில் உணர்ந்தவை.
சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேலும் நான் ஒரு இறைமறுப்பாளன்.
எனக்கு இசுலாம் உட்பட எந்த மதமும் பிடிக்காது.
ஆனால் தமிழ் இசுலாமியரைப் பிடிக்கும்.

ஏனென்றால் ஒரு இனத்தின் ஒருபங்கு மக்களை அவர்களின் கடவுளையும் மொழியையும் பழக்கவழக்கத்தையும் தோற்றத்தையும் நம்பிக்கைகளையும் மாற்றி அவர்களை தமது இனத்தின் மத்தியிலேயே அந்நியராக்குவது இனப்படுகொலையே ஆகும்.

ஆனால் இந்த அடையாள மாற்ற இனப்படுகொலை தமிழ்மண்ணில் எடுபடவில்லை.

மாறிய அடையாளத்தோடு ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கலாம்.
ஆனாலும் ஒரே அடையாளத்தோடு இருப்பது இன்னமும் சிறந்தது.

எனவே தமிழர்கள் இன்று பின்பற்றும் பல்வேறு மதங்களை தூக்கி எறிந்துவிட்டு தமது ஆதிகால மதமான இயற்கையை வணங்கும் நெறியை மதமாக பின்பற்றவேண்டும் என்பது என் விருப்பம்.

படம்: சேரமன்னன் கட்டிய 1400 ஆண்டுகள் பழமையான சேரமான் பள்ளிவாசல்.
(இந்திய துணைக்கண்டத்திலேயே பழமையானது)

Thursday, 31 March 2016

சேரனையும் புகழ்வோம்

சேரனையும் புகழ்வோம்

சேரன் கருவூரில் இருந்தான். சோழன் அவனைப் பார்க்க யானைமீதமர்ந்து வந்தான்.
அவன் படையெடுத்துதான் வந்துள்ளான் என்று நினைத்து சேரனின் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.
இதனால் சோழனின் யானைக்கு மதம்பிடித்துவிட்டது.

இதை புலவரும் சேரனும் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலவரிடம் இவன் யார் என்று சேரன் கேட்கிறான்.
புலவர் சோழனின் புகழை எடுத்துக்கூறி அவனைக் காப்பாற்றுமாறு பாடினார்.
(எப்பிடி பாத்தாலும் நம்ம பயடா இவன்)

உடனே சேரன் போய் யானையை அடக்கி சோழனைக் காப்பாற்றினான்.

சேரனின் பெயர்: சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

சோழனின் பெயர்: முடித்தலை கோப்பெருநற்கிள்ளி

புலவரின் பெயர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பாடல்: புறநானூறு 13

"இவன்யார்" என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

”இவன் யார்” என்று கேட்கிறாயா?
இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான்.
அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்
பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது.
அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.
இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள்.
இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும்,
நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன்.
இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக.

நன்றி: https:// ta.m.wikipedia. org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை
நன்றி: தமிழ் வளர்ப்போம் (முகநூல்)