Sunday, 23 April 2017

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு!

தேனி மாவட்டம், கம்பமெட்டில் கடந்த சில மாதங்களாகவே கேரள அதிகாரிகள் தமிழக எல்லையோரத்தைச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக வனப்பகுதிக்குள் கேரளாவின் கலால் மற்றும் ஆயத்தீர்வு துறையினர் கம்பமெட்டு எல்லையைக் கடந்து அத்துமீறி நுழைந்து சோதனைச் சாவடி அமைத்தனர்.

அதைத் தடுக்க முயன்ற தமிழக சோதனைச் சாவடி பணியாளர்களை, கேரள போலீஸார் தள்ளிவிட்டுக் கண்டபடி தாக்கியுள்ளனர்.
இதனால் பிரச்னை ஏற்பட்டது.

மேலும், தமிழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் கேரள அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

பின்னர், இருமாநில அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப்பின்னர், இரண்டு மாநிலத்தவர்களின் முன்னிலையில் சர்வே பணிகள் மும்மரமாக நடந்தன.

சோதனைச் சாவடி தமிழக எல்லைப் பகுதியில் இருப்பது இறுதியில் உறுதியானது.
இதனால், கேரள அதிகாரிகள் அமைதி காத்தனர்.
இதனால் கேரள சோதனைச் சாவடி தமிழக பகுதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு, கேரள ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், தமிழக எல்லைப்பகுதியில் கொடிக்கம்பம் நட்டு கட்சிக்கொடி ஏற்றினர்.
இதனையறிந்த வனத்துறை ஊழியர்கள் கொடிக்கம்பம் ஊன்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்சிக்காரர்களுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், இப்பிரச்னை குறித்து தமிழக வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நேற்று மாலை உத்தமபாளையம் டிஎஸ்பி அண்ணாமலை தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் தமிழக எல்லைப்பகுதியில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆளுங்கட்சியினர் சிலர் கோஷம் எழுப்பினர்.
மேலும் தமிழக காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், கேரள காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் எல்லைப் பகுதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த தமிழக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது கேரள ஆளுங்கட்சியினர் மற்றும் கேரள காவல்துறையினர், தமிழக பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசி தாக்க முயற்சிசெய்தனர்.
இதனால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

நன்றி: மின்னம்பலம் இணையம்

No comments:

Post a Comment