Sunday 9 July 2017

கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்

கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்

இந்துத்துவ சார்புடைய ஒரு கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி
----------------------
அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
June 27, 2017
- ஆர். கோபிநாத்

மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் முதலாம் பராந்தகன் என்னும் சோழ மன்னன் காலத்தவன்.
இவன் காலம் பொ.பி. 10 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி பொ.பி.920 வரை ஆண்டதாக சொல்கிறார்கள்.
இவன் கல்வெட்டுகள் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.
இன்றைக்கிருந்து 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
(ஊர்மக்கள் சின்னக்கோவில் என்று அழைப்பர்)
அந்த கல்வெட்டு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
படம் தெளிவாக இல்லாததால் அதை நானே இங்கு தருகிறேன்.

முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்.
பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.

அரையன் அணுக்கர் என்பவர் அரசனின் மெய்க்காவல் படை வீரர்கள் அதாவது அந்தரங்க காவலர்கள்.
அரசனோடு அரண்மனை உட்பட அவன் போகும் இடம் அனைத்திலும் இருந்து அவனை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள்.
இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பவன் இந்த பூவன் பறையன்.
இவன் தன் பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதை தானமாக கோயிலுக்கு அளித்து, அதை கல்லில் வெட்டிக்கொள்ளும் உரிமையும் பெற்றுள்ளான்.
ஆக பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்..

தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.
வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்.

இப்படி இருந்தவர்கள் தான் ஏதோ ஒரு கால மாற்றத்தில் சமூகத்தில் தாழ்வு நிலையை சந்தித்துள்ளனர்.  தமிழகத்தின் மற்றொரு முக்கிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக பள்ளர்களைக் குறித்தும் இதே போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் காண்பிக்க முடியும்.
-------------------

'தமிழ் ஹிந்து' இணையத்தில் உள்ள இக்கட்டுரை மேற்கொண்டு இசுலாமிய ஆட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் குற்றம் சாட்டுகிறது.
  எனவே பறையர் தொடர்பாக நமக்குத் தேவையான பகுதியை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

கட்டுரையில் 'ஏதோ ஒரு கால மாற்றத்தில்' என்று மழுப்புவது தெலுங்கர் ஆட்சி காலத்தில் நடந்த மாற்றத்தைத்தான் (அவர்கள் ஹிந்து என்பதால்!)

// பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்//

அதாவது கி.பி.1000 வரை நல்லநிலையில் பறையர்கள் இருந்தனர்.
கிபி.1070 ல் இராசேந்திர சோழனின் மகள்வழிப் பேரனான சாளுக்கிய இளவரசன் சோழர் அரியணையைக் கைப்பற்றினான்.
அதாவது பாதி கன்னடன்.
அநாபய சாளுக்கியன் என்ற பெயரை குலோத்துங்க சோழன் என்று மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான்.

இதன்பிறகு தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கியது.
பாண்டியரும், சேரரும், பல சிற்றரசர்களும் கலகம் செய்யத் தொடங்கினர்.
கன்னட தெலுங்கு அரசர்களும் தமிழகத்தில் நுழைந்தனர்.
இருநூறு ஆண்டுகள் அதாவது கி.பி 1280 வரை இந்த குழப்பநிலை நீடித்தது.

அதன்பிறகு பாண்டியர் பேரரசு அத்தனை வேற்றினத்தவரையும் அகற்றிவிட்டு தமிழகம் மற்றும் ஈழம் வரை பரவினாலும் அது 100 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை.
பாண்டிய வாரிசுரிமைப் போர்களால் அது வலுவிழந்தது.
இந்த நேரத்தில் கி.பி.1330 ல் மங்கோலிய- துருக்கிய வம்சாவழி டெல்லி சுல்தான்களால் வட தமிழகம் கைப்பற்றப்பட்டது.
அதன்பிறகு தெலுங்கு அரசர்கள் நுழைந்தனர்.
வடதமிழகம் வேற்றின ஆட்சியிலே இருந்து பிறகு மீளவேயில்லை.

// தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்//

கிபி 1350 பிறகு தென் தமிழகத்தில் பரவியது விஜயநகர பேரரசு.
தெற்கே பாண்டியர்கள் தெலுங்கருக்கு அடங்கிய சிற்றரசுகளாக இருந்ததால் ஓரளவு தமிழர்கள் நிலை இருந்தது.
பாண்டியர் புகழ் மங்கி நலிவடைந்து கிபி 1600களில் பாண்டியர் அரசு மறைந்தது.
அதனால் 17ம் நூற்றாண்டில் தெற்கேயும் பறையர்கள் தெற்கேயும் வீழ்ந்தனர்.

சங்ககாலத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
ஆனால் மிக மோசமான அளவில் இருந்ததில்லை.
தமிழர் ஆட்சியில் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்ததேயில்லை.

தமிழகத்தில் வேற்றின அரசுகளே சாதிய ஏற்றத்தாழ்வுக்கு அடித்தளமிட்டன.

முதலில் விஜயநகரப் பேரரசு அதன் பிறகு ஆங்கிலேயர் என நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி முழுக்க சுரண்டப்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதன்பிறகு ஆங்கிலேயரும் நிலவுடைமை சமூகத்தை மேலும் வளர்த்துவிட்டு மக்களை ஒடுக்கி சுரண்டலை இன்னும் தீவிரமாக செய்தனர்.

தற்போது ஹிந்திய அரசு இன்னும் கொடூரமாக தனது அரசாங்க கட்டமைப்பின் மூலம் விவசாயத்தை இல்லாதொழித்து மண்ணுக்கு அடியிலுள்ள வளங்களையும் சுரண்டி விற்கத் தொடங்கிவிட்டது.

No comments:

Post a Comment