Wednesday, 30 December 2015

குருதியில் நனைந்த குமரி -7

குருதியில் நனைந்த குமரி -7

ஆகஸ்ட் 11, 1954
இரவு 8:30மணி
நாகர்கோவில்

நேசமணி வீட்டில் தமிழ் தலைவர்களான
இராமசாமி(பிள்ளை),
சைமன்,
அப்துல் ரசாக்,
தாணுலிங்கம்(நாடார்),
பொன்னப்பன்(நாடார்),
ராஜா(பிள்ளை)
ஆகியோர் அமர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

"தலைமைச் செயலகத்தை மலையாள காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டுவிட்டது"

"தொலைபேசி இணைப்பு அனைத்தையும் துண்டித்துவிட்டார்கள்"

"ஊர்வலம் நல்லபடியாக நடந்ததா எதுவும் எதுவும் தெரியவில்லை"

கதவு படாரென திறந்துகொண்டு பதறியபடி உள்ளே நுழைந்தார் குஞ்சன்(நாடார்)

"என்னாச்சு குஞ்சு?"

"ஐயா மார்த்தாண்டத்திலும் புதுக்கடையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தி பல அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டனர்"

"என்ன?!" தன் மார்பில் குண்டு பாய்ந்ததுபோல நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் நேசமணி.
அப்படியே சரிந்து இருக்கையில் அமர்ந்தார்.

மற்ற தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

"எத்தனை பேர் இறந்தார்கள்?"

"தெரியவில்லை, குறைந்தது 30பேர் இறந்திருப்பதாக கேள்விப்படுகிறேன்"

"இந்த பட்டம் தாணுப்பிள்ளை மீண்டும் தமிழர்களை குருதி சிந்தவைத்துவிட்டான்.
போனமுறை 2பேரைத்தான் காவு வாங்கினான் இப்போது 30பேர்.
இந்த நாள் கருப்புநாளாகிவிட்டது"

"பிணங்களைக்கூட அள்ளிக்கொண்டு போய்விட்டனர்.
எத்தனைபேரை கொன்றோம் என்று அவர்களே அறிவிப்பார்கள், அதுதான் கணக்கு"

"போராட்டத்தைக் கைவிட்டுவிடலாமா?"

"கைவிடுவதா? நமக்கு மட்டும் துப்பாக்கி வெடிக்கத் தெரியாதா?
களரி படித்த தமிழ்-இளைஞர்களைத் திரட்டி துப்பாக்கி பயிற்சி அளிக்கவேண்டியதுதான்"

"ஆமாம் அதுதான் சரி, மலையாளிகளா நாமா பார்த்துவிடுவோம்"

"வேண்டாம் தமிழகத்திடம் உதவிகேட்போம். அப்போதும் பணியவில்லை என்றால் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய தென்பாண்டி நாட்டு இளைஞர்களை அழைத்துவந்து காவல்நிலையங்களைக் கைப்பற்றுவோம்"

"மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்.
அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால் தென்னிந்தியாவின் தமிழ்பகுதிகளைத் தனிநாடாக்கும் நடவடிக்கையில் இறங்குவோம்"

கொதித்துப்போய் பேசிக்கொண்டிருந்த அந்த தலைவர்களை நேசமணி அமைதிப்படுத்தினார்.

"குஞ்சு வேறெதுவும் தகவல் உண்டா?"

"துப்பாக்கிச் சூடு நடந்த இடமே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கண்ணில் படுவோரையெல்லாம் கைது செய்கிறார்கள்.
பார்வையிட நான் அனுப்பிய தொண்டர்கள் திரும்பி வரவே இல்லை"

"நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
இனிதான் நாம் பதறாமல் இருக்கவேண்டும்.
ஆயுதம் தாங்கி போராட நாம் தனிநாடு கேட்கவில்லை.
இழப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அது எந்த வழியில் போராடினாலும் சரி.
இந்த இழப்பை நான் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் தெரிவிக்கவேண்டும்.
அதன்பிறகும் நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் கூறவே வேண்டாம். நம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தாமாகத் தூக்குவார்கள்"

"எங்கே ஐயா, தமிழகத்திலிருந்து நமக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லையே"

"இருக்கட்டுமே, தமிழகம் நாம் இல்லாமல் இயங்கிவிடும்.
நாம் தமிழகத்தை விடுத்து இயங்கமுடியாது.
அது தாய்நிலம் நாம் அதன் சிறுதுண்டு.
நம் பி.எஸ்.மணியையே எடுத்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் நடக்கும் எல்லா அரசியல் கூட்டத்திலும் அழையா விருந்தாளியாக சென்று குமரி தமிழகத்துடன் இணைவதன் அவசியத்தைப் பற்றி நான்கு வார்த்தையாவது பேசிவிட்டு வருகிறார்.
அவர் என்ன முட்டாளா?
தமிழக மக்கள் அப்பாவிகள்.
தமிழக மக்களுடன் நாம் சற்று வேறுபட்டுவிட்டோம்.
இதோ நிற்கிறாரே குஞ்சன்.
இவருக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது.
இவர் பேசும் தமிழ்கூட மலையாளத்தைப்போலதான் இருக்கும்.
அதற்காக இவர் தமிழன் இல்லையென்று ஆகிவிடுமா?
நூறாண்டுகள் முன்புகூட உயர்சாதி தமிழர்கள் உயர்சாதி மலையாளிகளைத்தான் ஆதரித்தார்கள்.
அவர்களை ஏற்கனவே தெலுங்கரும் கன்னடரும் ஏய்க்கப் பார்க்கின்றனர்.
தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவோர் தமிழ்பேசும் வேற்றினத்தவர்கள்தான்.
மொழி வேறு இனம் வேறு அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இது தமிழகத்தின் பாமர மக்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
மலையாளிகளும் தமிழக அப்பாவி மக்களைச் ஏய்க்க நாம் அனுமதிக்ககூடாது.
தமிழகம் நமக்கு உதவாவிட்டாலும் நாம் அவர்களோடு இணைவதுதான் முறை. "

"ஐயா இந்த பகுதிகளை காப்பது முழுக்க நமது பொறுப்பு மட்டும்தானா?
ஒருவேளை நாம் காக்கமுடியாவிட்டால் என்ன நடக்கும்?"

"மலையாளிகளிடமிருந்து தமிழகப் பகுதிகளைக் காக்கவேண்டிய தலையாய பொறுப்பு நமக்குதான் உள்ளது.
இது வளமான பகுதி.
திருவனந்தபுரம் நகரத்தையும்
முல்லைப்பெரியாறையும்
குமரி முனையையும்
கோவை நீலகிரி பகுதிகளையும்
மூணாறு தேயிலைத் தோட்டங்களையும்
பாலக்காடு கணவாயையும்
மலையாளிகள் கைக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும்.
இது மலையாளிகள் கைக்குப் போனால் இதன் பலனை அனுபவிப்பதோடு நில்லாமல்
தேர்தலுக்கு தேர்தல் தமிழகத்தை நோண்டி இனவெறியைத் தூண்டி  அதை வாக்குகளாக மாற்றுவார்கள்.
மலையாள அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி வரும்போது இந்த பிரச்சனைகளை கிளப்பி மக்களை திசைதிருப்புவார்கள்.
இவ்வளவு ஏன் இப்பகுதியைத் தக்கவைக்க வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் கொச்சியை விடுத்து தென்கோடியில் இருக்கும் திருவனந்தபுரத்தையே தலைநகராக மாற்றினாலும் மாற்றுவார்கள்"

"இப்போது நாம் என்ன செய்வது ஐயா?"

"தற்போதைக்கு போராட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் தலைமறைவாக தயாராக இருங்கள்.
பட்டத்தின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்து அதன்படி முடிவெடுப்போம்"

தலைவர்கள் கலைந்து சென்றனர்.

அன்று இரவே குஞ்சன்(நாடார்) வீட்டுக் கதவை தட்டாமல் நேரடியாக இடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தது காவல்துறை.
அவர் குடும்பத்தினர் முன்பே கால்முட்டி இரண்டையும் உடைத்து அவரை தூக்கிக்கொண்டு சென்றது.

(தொடரும்)
_____________________________
குருதியில் நனைந்த குமரி -6
https://m.facebook.com/photo.php?fbid=643665792403744&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment