Sunday 27 December 2015

குருதியில் நனைந்த குமரி -5

குருதியில் நனைந்த குமரி -5

1954 ஆகஸ்ட் 9.

நேசமணி உள்ளிட்ட முக்கிய தி.த.நா.க தலைவர்கள் 2நாட்கள் முன்பாக திடீரென்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனாலும் செய்தி காட்டுத்தீ போல பரவி அவர்களை வரவேற்க வழிநெடுக மக்கள் குவிந்துவிட்டனர்.
மக்களின் பாராட்டுமழையில் நனைந்துகொண்டே வீடுபோய் சேர இரவானது.

அதே நாள் தி.த.நா.கட்சியின் தலைவர் இராமசாமி(பிள்ளை) கவலையோடு அமர்ந்திருந்தார்.

அவர் கையில் நேரு எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.
தி.த.நா.க ஏற்பாடு செய்த அத்தனை நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் கைவிடுமாறு எழுதியிருந்தது.

"எல்லாம் இந்த டெல்லியை ஆட்டிப்படைக்கும் மலையாள கூட்டத்தின் வேலையாகத்தான் இருக்கும். இல்லையென்றால் நேருவே நேரடியாக அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கடிதங்கள் எழுதுவாரா?"

மறுநாள் காலை 151 என்ற எண்ணை தொலைபேசியில் சுழற்றினார்.
அதுதான் நேசமணியின் எண்.

"ஐயா உங்கள் விடுதலையின்போது செய்ய திட்டமிட்டிருந்த நிகழ்வுகளை எப்படி செய்வது?
மக்களுக்கு அறிவித்தாயிற்றே?!"

"நிகழ்வுகள் நடத்ததான் வேண்டும். நேரில் வாருங்கள் இது பற்றி விரிவாக பேசலாம்"

கிளம்பி நேசமணி வீட்டுக்குப் போனார்.
அங்கே அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் வந்து அமர்ந்தார்.

"ஐயா! யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?
அவரை நேரில் வரவும் சொன்னீர்களே?!"

"அதுவா நமது 'உயிரன்பன்' அழைத்திருந்தார்.
நாளைய கூட்டத்திற்கு அவர் வரவுள்ளார்"

"யார்? கம்யூனிஸ்ட் ஜீவா அவர்களா?"

"ஆமாம். அவரேதான். அவர்தான் தமிழில் உயிரன்பன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுவிட்டார்"

"ஐயா வந்தவிடயத்தைக் கூறிவிடுகிறேன் நேரு நமது போராட்டங்களை கைவிடச்சொல்லி இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்"

நேசமணி அதிர்ச்சியடைவார் என்று எதிர்பார்த்தார்.
அவரோ இதைத்தான் எதிர்பார்த்தவர் போல புன்னகை செய்தார்.

கடிதங்களை வாங்கி படித்தார்.

"மாநில புனரமைப்பு குழு வரும்வரை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறார்.
அதுவரை தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்"

"அதுதானே ஐயா புரியவில்லை.
நாம் அவரிடம் எந்த நடவிடிக்கையும் வேண்டவில்லையே?!"

"நாளை ஏதோ பெரிதாக நடக்கவுள்ளது.
அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இருக்காது.
இதைத்தான் உணர்த்துகிறது அவர் கடிதம்.
மலையாளிகள் தங்களால் முடியவில்லை என்று நேருவை இழுக்கிறார்கள்.
அவர் பின்னால் ஒளிந்துகொண்டால் மட்டும் நாம் விட்டுவிடுவோமா?
திட்டமிட்டபடி நிகழ்வுகளை நடத்துங்கள்.
நடப்பது நடக்கட்டும்"

"ஐயா பொறுமையாக முடிவெடுங்கள். அவர் நினைத்தால் நம்மை அப்படியே கேரளாவோடு இணைத்துவிட முடியும்.
அவர் கையில் அதிகாரம் உள்ளது.
நேரு கோபத்திற்கு ஆளாகவேண்டுமா என்று யோசித்து முடிவெடுங்கள்"

"அதற்காக மக்கள் எழுச்சியை ஆறப்போடுவதா?!
நேரு என்ன நேரு?! காமராசரே சொன்னாலும் நான் மக்கள் எழுச்சியை பயன்படுத்தாமல் விடப்போவதில்லை.
நாம் இலக்கை நெருங்கிவிட்டோம்.
இனி துணிந்து செயல்படவேண்டியதுதான்"
_________________________

1954 ஆகஸ்ட் 11

திட்டமிட்ட படி ஜீவானந்தத்துடன் நாகர்கோவிலில் நேசமணி தலைமையிலான முதல் ஊர்வலம் பேரெழுச்சியுடன் தொடங்கியது.
பொதுவுடைமைக் கட்சி எம்.எல்.ஏ ஜீவானந்தம் முன்னே நடக்க கூட்டம் பின் தொடர்ந்தது.
நேருவுக்கு பதிலளிக்கும் வகையில் நேசமணியின் பேச்சு அமைந்தது.
"நாங்கள் தனிநாடு கேட்கவில்லை.
தமிழகத்தோடு இணைவதைத்தான் கோருகிறோம்.
இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.
நாம் கோழைகளாக இருக்கக்கூடாது.
விடுதலை வீரர்களாக இருக்கவேண்டும்.
இது நாட்டுக்கான போராட்டம்"

ஜீவானந்தம் கையை உயர்த்தி "ஐக்கிய தமிழகம்..." என்று கூற

மக்கள் "அமைத்தே தீருவோம்" என்று முழங்கினர்.

பெரும் கரவொலியுடன் நிறைவடைந்தது.
_____________________________
காவலர் ஒருவர் அருகிலிருந்த தலைமைக் காவலரிடம் மலையாளத்தில் கேட்டார்.

"சுட்டுப் பொசுக்கிவிடலாமா?"

"இங்கே வேண்டாம். மேலிடம் மறுத்துள்ளது.
தமிழகத் தலைவர் வேறு வந்திருக்கிறார்.
இன்னும் இரண்டு கூட்டங்கள் இருக்கின்றன.
அங்கே வைத்துக்கொள்வோம் கச்சேரியை"

(தொடரும்)
-------------
குருதியில் நனைந்த குமரி -4
https://m.facebook.com/story.php?story_fbid=642139169223073&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.642139169223073%3Atl_objid.642139169223073%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1451635199%3A-2074443726823932652#footer_action_list

No comments:

Post a Comment