Friday, 27 July 2018

சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?

இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை 'திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…..

இது உண்மைதானா என்று அறியவேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…

அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் 'திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன.

அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்) எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை.
  ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன.
அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது.

அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன), அதிலுள்ள ஊர், பிறகு கிராமம், பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன்( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது), இயற்கைப் பெயர், பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள்தான்.
அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்.
இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.

அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)....

1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று”
என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது.
அதாவது,
'ராஜேந்திரசிம்ம' என்ற வளநாட்டின்
'தனியூரில்' உள்ள
'வீரநாராயண சதுர்வேதி மங்கலம்' என்னும் ஊரைச் சேர்ந்த
'இறையானரை சூர் மதிசூதன்' என்ற இயற்பெயரையும்
'யக்ஞப் பிரியப் பட்டன்' எனும் பட்டப்பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்களின் பெயர்கள் உள்ளன.

அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…

இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே!
இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்?

இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே?!

திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி

No comments:

Post a Comment