சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும்
பார்ப்பனர்களுக்கு இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாக சிலர் என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
மேலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோழர்கள் இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
அவர்களுக்கான பதில்….
இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாயின் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக ஆக்கி தானமாக வழங்கினான்.
அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர், கணி, காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்களும் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில்' இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில் உள்ளது.
எடுத்துக்காட்டாக….
“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”
“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”
“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”
“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”
“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”
“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”
என்றவாறு கூறப்பட்டுள்ளது….
மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்.
யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை.
பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு.
அவற்றின் உரிமையாளர் அரசு தான்.
மேற்கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.
முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும்,
இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும்,
மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்.
நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது.
அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்.
“....யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்”
என்று கூறுகிறது.
ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் :--
”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி”
சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்.
- பதிப்புத்துறை: துரை காமராசர் பல்கலைக்கழகம்.
நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
படம்: கரந்தை செப்பேடுகள் தொகுதியில் மூவேந்தர் சின்னங்களுடன் கூடிய அரசேந்திர சோழனின் முத்திரை
No comments:
Post a Comment