ஊருடன் சேர்ந்ததே சேரி
இன்று 'சேரி' என்ற சொல்லின் பொருள் மாறுபட்டிருக்கலாம்.
ஆனால் அச்சொல்லின் உண்மையான பொருள் புதிதாக உருவாகி நகரத்துடன் சேர்ந்த புறநகர் என்பதே!
அதாவது இன்று extention என்று கூறுகிறோமே அதுபோல.
நகரங்கள் காலப்போக்கில் விரிவடைந்து அருகில் உள்ள எல்லைப் பகுதிகளை தனக்குள் இழுத்துக் கொள்வது வழக்கம்.
அப்படி நகரமயமாக்கல் (urbanization) நடந்த பகுதிதான் சேரி.
இது நகருக்கு வெளியே இருந்ததால் வயல்வெளி, புறவழிச் சாலை, காவல் கூடம், சுங்கச்சாவடி, சரக்கு கிட்டங்கி, உணவகம் ஆகியன இங்கே இருந்திருக்கும்.
அதனால் இது தொடர்பான பணி செய்யும் மக்கள் அதாவது விவசாயிகள், வணிகர்கள், கூலித் தொழிலாளிகள், காவல் காப்போர் ஆகியோர் இங்கே குடியிருப்பர்.
ஏதோ உழைக்கும் மக்களை நகரத்துக்கு வெளியே ஒதுக்கிவைத்தது போல இதனைத் திரித்து எழுதி தமிழ்ச் சமூகமே சாதிய ஏற்றத்தாழ்வு கொண்டது என்று பழி சுமத்துகின்றனர் வந்தேறிகள்.
சிலர் "ஊரும் சேரியும் ஒன்றாகவில்லை" என்று கத்துகின்றனர்.
இப்போது உண்மை என்னவென்று பார்ப்போம்.
ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றவாளிகளின் தம்பி பரமேஷ்வரன்.
இவன் வாழ்ந்த இடம் "பார்ப்பன சேரி" ஆகும்.
இவனது நிலத்தை அரசு கையகப்படுத்தி ஒருவரிடம் கொடுத்து அவர் வேறொருவருக்கு விற்றபோது பொறித்த கல்வெட்டில் இந்த செய்தி உள்ளது.
[உடையார்குடி கல்வெட்டு]
அதாவது பூசை செய்யும் உயர்நிலை மக்களும் சேரியில் வாழ்ந்துள்ளனர்.
இது போலவே கம்மாளச்சேரி, பறைச்சேரி, இடைச்சேரி ஆகியனவும் இருந்துள்ளன.
(பார்ப்பனருக்கு தானம் தரப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள் பகுதியளவு வரிச்சலுகையும்
பறைச்சேரியும் கம்மாளச்சேரியும் முழு வரிவிலக்கு பெற்றிருந்தன என்பதை இராசேந்திர சோழனின்
கரந்தை செப்பேடுகள் மூலம் அறிகிறோம்)
[கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி - சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்]
சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சான்று உள்ளது.
அதில் "புறஞ்சேரி" எனுமிடத்தை 'புரிநூல் மார்பர் உறைபதி' என்று குறிப்பிடுகிறது.
அதாவது பூணூல் போட்டவர்கள் வாழ்ந்த இடம்.
யார் அந்த பூணூல் போட்டவர்கள்?
பார்ப்பனர் மற்றும் பாணர்
[சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை]
போகப்போக சேரி என்பது குடியிருப்பு என்ற பொருளும் பெற்றது.
பாப்பனச்சேரி, பாப்பச்சேரி போன்ற பல ஊர்கள் இன்றும்கூட உண்டு.
பாண்டிச்சேரி / புதுச்சேரி கூட சேரிதான்.
இன்றும் நாகைப்பட்டிணம் அருகே "பார்ப்பனச் சேரி" என்ற ஊர் உண்டு.
தஞ்சை பெருவுடையார் கோவில் சுவரை ஒட்டியவாறு வடமேற்கில் இருந்த பகுதி "தளிச்சேரி" ஆகும்.
கோவிலை ஒட்டியேகூட சேரி இருந்துள்ளது.
தஞ்சை நகரில் முக்கியமான தெருவான சூரசிகாமணிப் பெருந்தெருவில்
கணித நூலோர் (ஆசிரியர்கள்),
வள்ளுவர்கள் (சோதிடர்),
குயவர்கள் (பானை செய்வோர்),
வண்ணத்தார் (ஓவியர் அல்லது துணிக்கு சாயம் போடுவோர்),
ஈரங்கொல்லிகள் (துணி துவைப்போர்),
நாவிதர்கள் (முடி திருத்துவோர்)
என அனைத்து தரப்பினரும் வாழ்ந்த ஆதாரம் உள்ளது.
[தஞ்சாவூர் - முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன்]
சோழர் காலத்தில் தீண்டாமை இருந்தது என்று கூறுவோர் 'தீண்டார் இந்த குளத்தைப் பயன்படுத்தக்கூடாது' என்று கூறும் கல்வெட்டை ஆதாரமாகக் காட்டுவார்.
இந்த தீண்டார் யாரென்றால் நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை செய்யும் மருத்துவர்.
அக்காலத்தில் அரசாங்கமே நடத்திய மருத்துவமனைகள் இருந்தன.
இதனை சோழ அரசகுடும்ப பெண்கள் நிர்வகித்து வந்தனர்.
அதில் மருத்துவராக இருந்தோர் இன்றைய நாவிதர் அல்லது அம்பட்டர் குடியினர்.
இன்றும் சாதிச்சான்றிதழில் மருத்துவர் என்று போடுவது நாவிதர்கள் வழக்கம்.
இந்த மருத்துவ சமுதாயமே 50 ஆண்டுகள் முன்புவரை மருத்துவம் பார்த்து வந்தனர்.
பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி இந்த சமுதாயப் பெண்களே.
இவர்களில் தீண்டுவான், தீண்டான் என இரு பிரிவுகள் உள்ளன.
அதாவது நோயாளிகளைத் தொட்டு மருத்துவம் செய்வோர் தீண்டுவார்.
தொற்றுநோய்கள் உள்ளிட்ட மோசமான நோய்களை (நோயாளியைத்) தொடாமலே சிகிச்சை அளிப்போர் தீண்டார்.
(தீண்டார் வேறு தீண்டப்படாதோர் வேறு.
தீண்டப்படாதோர் நோயாளிகள் மட்டுமே)
தீண்டா மருத்துவர் கோவில் குளத்தைப் பயன்படுத்த (கோயிலை அல்ல) தடை கூறும் கல்வெட்டே அது.
தீண்டாச்சேரி என்பது மருத்துவமனைப் பகுதியாக இருக்கவேண்டும்.
[தீண்டாச்சேரி அரசியல் - தென்காசி பாலசுப்பிரமணியன்]
இலக்கியங்களில் இழிசினர் பற்றி ஏற்கனவே விரிவான ஒரு பதிவு இட்டுள்ளேன்.
[இழிநல், இழிசினர், இழிபிறப்பினர் - வேட்டொலி]
வரலாற்றை வார்த்தைகளை திரித்து கதைபுனைந்து நம்மை நாமே தாழ்வாக நினைக்கவைத்து ஏமாற்றி வரும் வந்தேறிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
புதிய கோணம் சிறப்பான பார்வை
ReplyDelete