சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்
கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் அவர்கள் தமது சுயசரிதையில் இரண்டு பள்ளர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
வ.உ.சி அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வேதநாயகம் என்கிற பள்ளரை ஆங்கிலேயர் வழக்கு போட்டு அலைக்கழித்தபோது அவருக்காக வாதாடி வழக்குகள் அனைத்தில் இருந்தும் விடுவித்தார்.
[முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;
அனைத்தினும் திருப்பினேன்]
(இதில் 'அடிமையாக இருக்கும் அறிவினைக் கொண்டவர்' என்று பொருள் கொண்டால் அடுத்த வரியில் 'மேம்படு பள்ளர்' என்பதுடன் பொருந்தாது.
'அடிமை வேலை செய்தாலும் அறிவார்ந்தவர்' என்று பொருள் கொள்க)
அதேபோல வ.உ.சி அவர்கள் சிவ பக்தியில் சிறந்த 'தேசிகன்' என்ற பள்ளர் குடிச் சிறுவனை தனது வீட்டில் வளர்த்து வந்தார்.
பார்வையற்ற அச்சிறுவனுக்கு வ.உ.சி ஐயாவின் மனைவி கைகளால் உணவூட்டி பராமரித்துள்ளார்.
ஆனால் அவரது சுற்றத்தார் அச்சிறுவனை சாதிய ரீதியில் தாழ்த்திப் பேசியுள்ளனர். இதனால் அச்சிறுவன் தன்னை கைவிடுமாறு வேண்டியுள்ளார்.
பிள்ளை அவர்கள் தம் மனைவியிடம் இது பற்றி ஆலோசித்துள்ளார்.
[சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
அவளிடத் துரைத்திட அடுக்களை சென்றேன்]
(இதில் அச்சிறுவனைக் 'கிழவோன்' என்று உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்)
அவர் மனைவியோ சாதி ஏற்றத்தாழ்வு கற்பனை தானே அன்றி உண்மை அல்ல என்றும் அதிலும் துறவி போன்ற இச்சிறுவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்றும் சுற்றத்தார் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு தொடர்ந்து பணிவிடை செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
[எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்]
'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்திலும் இக்காட்சிகள் வரும்.
ஐயா அவர்களை முழுமையாக அறிந்துகொள்வது நம் கடமை!
No comments:
Post a Comment