Friday 8 December 2023

வடக்கில் ஒரு தமிழன்

வடக்கில் ஒரு தமிழன் 

 அது ஒரு பெரிய ஆலை! அங்கே ஒரே நேரத்தில் ஒரு குஜராத்தியனும் ஒரு தமிழனும் வேலையில் சேர்ந்தனர். அந்த தமிழன் இரண்டு ஆண்டுகள் கழித்து வேறொரு நிறுவனத்தில் நிரந்தரமான  வேலை கிடைத்து போய்விட்டான். போகும்போது அந்த குஜராத்தி தோழனுக்கு தனக்கு தெரிந்த சில தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு போனான். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழித்து அதே இடத்திற்கு தமிழன் வந்தான். குஜராத்தியன் அங்கேயே நிரந்தரமாகி பொறுப்பில் இருந்தான். இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். அங்கே ஒரு பிரச்சனை ஒரு பீகாரி வடிவில் வந்திருந்தது. அந்த திறமையான தந்திரமான பீகாரி அனைவரையும் பின்னுக்குத் தள்ளி இப்போது குஜராத்தியை விழுங்கும் இடத்திற்கு வந்துவிட்டான். 
அந்த ஆலை ஒரு நிமிடம் நின்றாலும் பல லட்சம் நஷ்டம் ஆகும் அளவுக்கு பரபரப்பாக இயங்கும் இடம்.  தினம் தினம் கத்தி மேல் நடப்பது போல இருக்கும். பத்து ஆண்டு அனுபவம் இருந்தாலும் ஆறுமாத பயிற்சிக்குப் பின்தான் ஆலையை 8 மணிநேரம் நிர்வகிக்கும் அந்த பணியைக் கையாள முடியும்.
இம்மூவரின் வேலை என்பது நிர்வாகத்தின் திட்டப்படி ஒப்பந்த தொழிலாளர்களை வேலைவாங்குவது.
 குஜராத்தி நல்ல திறமையானவன் ஆனால் பணிந்து நடக்கத் தெரியாதவன். நிர்வாகம் தொழிலாளர் இண்டையும் சமமாக பார்ப்பவன். பீகாரி நிர்வாகத்தை கடவுளாகவும் தொழிலாளரை புழுக்களாகவும் எண்ணுபவன். தமிழன் இதற்கு நேர்மாறு. தொழிலாளரை மேலாகவும் நிர்வாகத்தை கீழாகவும் எண்ணுபவன். இதனால் தமிழன் தலைமையில் அத்தியாவசிய வேலைகள் மட்டும் நடக்கும். குஜராத்தி அத்தியாவசிய வேலைகளை முடித்து மேற்கொண்டு சில பணிகளை முடித்துவிடுவான். பீகாரி பேய் போல வேலை வாங்குவான். நாய் போல தானும் வேலை செய்வான். இப்படி ஒரு கொடூர கொத்தடிமையைத் தான் நிர்வாகம் தேடிக்கொண்டு இருந்தது. அதனால் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டது. 
 குஜராத்தியன் தமிழனை எச்சரித்தான். சுருக்கமாகச் சொன்னால் 'இங்கே தொழிலாளியை எவ்வளவு வேலை வாங்குகிறோம்' என்பதை விட 'எவ்வளவு கசக்கி பிழிகிறோம்' என்பதுதான் முக்கியம். அந்த தமிழனுக்கு வந்த முதல்நாளே இது புரிந்துவிட்டது. இருந்தும் அவன் தொழிலாளர்களைக் கனிவுடன் நடத்தினான். தான் வழங்கும் பணிச்சுமையே மிக அதிகம் என்பது அவன் கருத்து. தினமும் செத்துப் பிழைக்கும் தொழிலாளிகள் அவன் பணிநேரத்தில் சற்று மூச்சுவாங்க முடிந்தது. நிர்வாகம் அவன் மேல் தீமழை பொழிய பாட்டாளிகள் பாச மழை பொழிந்தனர். சரிக்கு சரி அமர்ந்து உண்ணும் தமிழனுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டுவந்து அளித்தனர். தமிழன் ஒரு வேலையைச் சொல்லக் கூட வேண்டாம் மனதில் நினைத்தால் போதும் அந்த வேலை நடந்துவிடும். சில மாதங்கள் கழித்து பீகாரிக்கு நெருக்கமான ஒரு சொந்தக்கார பையன் அங்கே தொழிலாளியாக வந்தான். பீகாரியைப் போல இவனும் வசதி படைத்தவன்தான். சும்மா கொஞ்ச நாள் சுற்றுலா மாதிரி வேலைக்கு வந்தான். இவன் பீகாரியின் கையாள் என்று அனைவரும் சொன்னார்கள். அவன் தமிழன் தலைமையின் கீழும் வேலை செய்தான். தமிழன் எந்த பாகுபாடும் காட்டாமல் அவனுக்கு தொழில் கற்றுக் கொடுத்தான். ஒருநாள் அந்த பீகாரியின் கையாள் தான் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போகவுள்ளதாக தமிழனிடம் கூறினான். இப்படியாக ஒரு ஆண்டு கழிந்தது. தன் மூன்று ஆண்டு உழைப்பினாலும் தந்திரத்தாலும் குஜராத்திக்கும் தமிழனுக்கும் பல ஆப்புகள் வைத்து நிர்வாகத்தின் பார்வையில் பீகாரி உயர்ந்து நின்றான். நிர்வாகம் தமிழனைக் கண்டாலே எரிச்சல் அடைந்தது. குஜராத்தி தமிழனிடம் பீகாரிக்கு பதவி உயர்வு கிடைக்கப் போவதாகவும் அவன் மேலே வந்துவிட்டால் நம்மையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற யாருமில்லை என்றும் கூறினான். தமிழன் சிரித்தான். "இது ஒன்றும் சினிமா இல்லை! நீ ஒன்றும் ஹீரோ இல்லை! கடைசி நேரத்தில் ஜெயித்துவிட்டு சிரிப்பதற்கு" என்று குஜராத்தி கோபப்பட்டான். குஜராத்தி சொன்னபடி நடந்தது. பீகாரி பதவி உயர்ந்தான். தமிழன் சம்பளம் அதிகரிக்கப் படாத காரணத்தால் ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்பினான். இனம், மதம், ஜாதி, பிறப்பிடம் என பல்வேறு பின்னணியில் இருந்து வந்த அந்த தொழிலாளர்கள் அன்று கலங்கி நின்றனர். அந்த தமிழனை விரும்பாத தொழிலாளிகள் கூட அப்போது அவனுக்காக வருந்தினர். வழியனுப்ப வந்த குஜராத்தியன் தன் சொற்படி நடக்காமைக்கு தமிழனைக் கடிந்து கொண்டாலும் கனத்த இதயத்துடன் விடை கொடுத்தான். அப்போது தமிழன் "கூடிய விரைவில் நீ எனக்கு அழைப்பாய். நான் திரும்ப வருவேன்" என்றான்.
 வேறு வேலை தேடிப் பார்த்து கிடைக்கா விட்டால் இதே சம்பளத்திற்கு நிர்வாகத்திடம் கெஞ்சி மீண்டும் வருவானாக இருக்கும் என்று குசராத்தி நினைத்துக் கொண்டான்.
 ஒரு வாரம் கழிந்தது. தரமான பளபளப்பான மேலாளர் உடையில் பீகாரி ரத்த காட்டேரி போல வலம் வந்தான். வெந்நீர் போன்று இருக்கும் தேநீர் கூட இனி கிடையாது என்று உத்தரவிட்டான். திறமை, பணம், அதிகாரம் என எல்லாம் வாய்த்த அவனை யாரும் எதிர்க்கத் துணியவில்லை. தன் உறவினன் என்றும் பாராமல் தனது கையாளிடமும் கடுமையாக நடந்துகொண்டான். அந்த பையனுக்கு தமிழன் நினைவு வந்தது. தொழிலாளர்கள் பீகாரி மேல் உச்சகட்ட கோபத்தில் இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அன்று ஆலையை நிறுத்தி பராமரிப்பு வேலை நடக்கும் நாள். ஆலையின் கழிவுகளை பெரிய குழியில் இருந்து இயந்திரத்தின் மூலம் அள்ளி வண்டியில் ஏற்றி அனுப்பும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பீகாரியும் அவனது உறவினனும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். தினமும் பலரிடம் வாக்குவாதம் நடத்துவது பீகாரிக்கு வழக்கம். தொழிலாளர்களால் சாக்குபோக்கு சொல்லி சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்து மேலதிகாரியைக் கடுப்பாக்க முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது. அனைவரும் இது வழக்கம்தானே என்று எண்ணி அசட்டையாக இருந்தபோது அந்த பையன் பீகாரியை கன்னத்தில் அறைந்து வயிற்றில் மிதித்து அந்த கழிவுக் குழிக்குள் தள்ளிவிட்டான். இடுப்பளவு கழிவுநீரில் எண்ணெய், கிரீஸ், தூசி, மண் என முழுவதுமாக நனைந்து எழுந்து நின்ற பீகாரியைப் பார்த்து சுற்றி நின்ற அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரித்தனர். அவனைத் தூக்கவோ மாற்று உடை கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை. கடைசியில் மேலே வந்து துணிக்கு போடும் சோப்பு கடன் வாங்கி கழிவறையில் அரையும் குறையுமாகக் குளித்து பணிப் பேருந்தில் 'வேலை செய்யும் நேரத்தில் உடுத்தும்' அழுக்கான தொழிலாளர் சீருடையில் கிரீஸ் துர்நாற்றத்துடன் வீடு திரும்பிய பீகாரி வாழ்நாள் முழுவதும் அந்த நாளை மறந்திருக்க மாட்டான். அவனது உறவினன் நிர்வாகத்திடம் "போங்கடா நீங்களும் உங்க வேலையும்" என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான். மறுநாள் பீகாரி சோர்ந்த நிலையில் வந்தான். தொழிலாளர்கள் கைகொட்டி சிரித்தனர். அவன் மனைவி, அவன் சொந்த பந்தம், சொந்த ஊர் என எல்லாருக்கும் இந்த விடயம் தெரிந்துவிட்டது. நிர்வாகம் எவ்வளவோ தேற்றியும் அவன் ராஜினாமா செய்துவிட்டு தொங்கிய தலையுடன் வெளியேறினான். நிர்வாகத்தால் தகுதியான ஆளில்லாமல் சமாளிக்க முடியாது. தமிழனை திரும்ப அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் இறங்கிப் போய் பேச மனமில்லாமல் குஜராத்தியனை வைத்து அழைத்தனர். குஜராத்தி தமிழனை அழைத்தான். அவன் பேசிவிட்டு நிர்வாகத்தை இணைத்து பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று நிமிட அலைபேசிப் பேச்சு முடிந்தது.  மறுநாள் பதவி உயர்வுடன் சம்பள அதிகரிப்புடன் பளபளக்கும் மேலாளர் உடையில் வந்து இருக்கையில் அமர்ந்தான் தமிழன். பீகாரி மூன்று ஆண்டுகள் முக்கி முக்கி செத்து செத்து அடைந்த அனைத்தையும் மூன்று நிமிடங்களில் அடைந்தான் அந்த தமிழன். தொழிலாளர்கள் மகிழ்ந்தனர். மேலாளர்களுக்கு மட்டுமே செல்லும் தேநீர் வண்டி அன்று முதல் தொழிலாளர் களுக்காக நின்றது. 

No comments:

Post a Comment