இசக்கி தாத்தா
அது தொல்லைபேசிகள் இல்லாத காலம்.
மாரியம்மாளும் உலகம்மாளும் அக்கா தங்கைகள்.
அக்கா மாரியம்மாள் ஆலங்குளத்திலும் தங்கை உலகம்மாள் கோவில்குளத்திலும் வாழ்க்கைப்பட்டு இருந்தனர்.
மாரியம்மாளுக்கு நான்கு குழந்தைகள் உலகம்மாளுக்கு குழந்தைகள் இல்லை.
இருவரது இருப்பிடமும் 8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
பகலில் ஓரிரு பேருந்துகள் உண்டு.
உலகம்மாள் மாரியம்மாள் வீட்டுக்கு அடிக்கடி போய் இரண்டொரு நாட்கள் இருந்து விட்டு வருவது வழக்கம்.
பேருந்து இருந்தால் பேருந்திலும் பேருந்து இல்லை என்றால் கால்நடையாகவும் போய் வருவாள்.
ஒரு நாள் மாலை உலகம்மாள் கால்நடையாக கிளம்பினாள் வயல்வெளிகள் வழியாகவும் ஆற்றங்கரை ஓரமாகவும் மண்பாதை உண்டு அன்று உலகம்மாள் பாதி தூரம் வந்த போது மழை பொழிந்து பயணத்தை தடை செய்தது.
ஒரு சிறிய கோவிலில் மழைக்கு ஒதுங்கி விட்டாள்.
மழை நின்று கிளம்பும்பொழுது இருட்டிவிட்டது.
ஆற்றங்கரை மேட்டில் சுற்றிலும் புதர்கள் வழியே செல்லும் மண் பாதையில் ஆள் நடமாட்டம் இல்லை.
அவள் பயத்துடன் வேகவேகமாக சென்று கொண்டிருந்தாள்.
அன்று தேய்பிறை நிலா வெளிச்சமும் மிகக் குறைவு.
பாதி வழியில் கவனித்தால் அவள் வழி மாறி வந்துவிட்டாள்.
பாதை இரண்டாகப் பிரியும் இரண்டு இடங்கள் அடுத்தடுத்து ஒரே போல இருக்கும்.
இருட்டில் தவறான பாதையில் வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள்.
அவளை பயம் தொற்றிக் கொண்டது.
புதர் நடுவே ஒரு சிறிய இசக்கியம்மன் கோவில் உண்டு.
அங்கே தீ வெளிச்சம் தெரிந்தது.
அதன் அருகே சென்றாள். அங்கே நிமிர்ந்த நெஞ்சுடன் 60, 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பெரிய தடியுடன் நெருப்பு மூட்டி அதனருகே நின்று கொண்டிருந்தார்.
உடலில் போர்த்திய கருப்பு போர்வை, நெற்றியில் பெரிய பட்டை, நரைத்த முறுக்கு மீசை, பெரிய தோல் செருப்பு.
இவளை கண்டதும் வெளியே வந்து "என்ன தாயி?! இந்நேரம் இந்த பக்கம்?!" என்று கேட்டார்.
உலகம்மாள் "மழைல வழிதவறி வந்துட்டேன்! ஆலங்குளத்துக்கு எப்படி போகணும்?!" என்று கேட்டாள்.
அந்த முதியவர் தடியை எடுத்துக்கொண்டு தோல் செருப்பு சத்தத்துடன் கம்பீரமாக நடந்து வந்தார்.
சிறிது தூரம் அந்த பெண் வந்த வழியிலேயே கூட்டிவந்து குறுக்காக செல்லும் ஒரு ஒற்றையடி பாதையை காண்பித்தார்.
"இந்த வழியா போ தாயி! கொஞ்ச தொலவுல நீ தவறவிட்ட பாதைய பிடிச்சிரலாம்" என்று சொன்னார்.
உலகம்மாள் சரி என்று கூறிவிட்டு அந்தப் பாதையில் நடந்து ஆலங்குளம் பாதையைப் பிடித்தாள்.
அப்போது வேகமாக காற்றடித்தது நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது.
அவளை பயம் தொற்றிக் கொண்டது.
அவள் திரும்பி பார்த்தாள்.
ஆனால் அங்கே அவள் வந்த ஒற்றையடிப் பாதை இல்லை.
அங்கிருந்து எட்டிப் பார்த்தாள்.
கோவில் இருந்த இடத்தில் புதர்களுக்கு மேலே நெருப்பு வெளிச்சம் தெரியவில்லை.
அவள் பயத்துடன் விறுவிறுவென நடந்து அக்கா மாரியம்மாள் வீட்டை அடைந்தாள்.
நடந்த அனைத்தையும் கூறினாள்.
தன் குலதெய்வமான சுடலைமாடன் தான் நேரில் வந்து உதவியதாக அவள் கூறினாள்.
அதற்கு மாரியம்மாள் "அவரு இசக்கி தாத்தா! அந்த கோவில்ல தங்கி இருக்காரு! பகல்ல பூசாரியா இருப்பாரு! பக்கத்துல இருக்க தோப்புகளுக்கு அவர்தான் காவலாளி!" என்று கூறினாள்.
ஓரிரு மாதங்கள் கழித்து உலகம்மாள் இசக்கி தாத்தாவை சந்தையில் வைத்து பார்த்தாள்.
அவரிடம் போய் "தாத்தா நல்லா இருக்கீங்களா?! நல்லவேள அன்னைக்கு நீங்க என்ன கடவுளா வந்து காப்பாத்துனீங்க?! வீட்டுக்கு வாங்களேன் ஒரு வாய் சாப்டுட்டு போலாம்" என்று கூப்பிட்டாள்.
அந்த தாத்தா கண்களை சுருக்கி பார்த்துவிட்டு "யாரு தாயி நீ?! ஆள் அடையாளம் தெரியலையே?! வேற யாரோனு என்கிட்ட பேசிட்டு இருக்க" என்று சொல்லிவிட்டு புலம்பியபடி போய்விட்டார்.
அன்று பார்த்தபோது இந்த முதியவர் கம்பீரமாக இருந்தார். தற்போது பார்க்கும் போது அப்படி இல்லையே என்று நினைத்தாள்.
சில நாட்கள் கழித்து உலகம்மாள் மாரியம்மாளிடம் இதை கூறினாள். அதற்கு மாரியம்மா அவளிடம் "அதுவா இசக்கி தாத்தா வயசாயி போனதால எதுவும் நெனவு இருக்காது! காலையில் நடந்ததை சாயங்காலம் மறந்துடுவாரு! பகலைல அடங்கி ஒடுங்கி இருப்பாரு! பொழுது சாஞ்சதும் கோயில்ல நடை சாத்தி சாமி கும்புட்டுட்டு திர்நீறு பூசிக்கிடுவாரு! உடனே சாமி அவர் உடம்புக்குள்ள வந்துடும்! ஒடம்ப உலுக்கிக்கிட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறைப்பா ஆயிடுவாரு!" என்று கூறினாள்.
சில நாட்கள் கழித்து உலகம்மாள் மாரியம்மாள் வீட்டுக்கு வந்திருந்த போது மாலை நேரத்தில் இசக்கி தாத்தா இறந்து விட்டதாக தகவல் சொன்னார்கள்.
மாரியம்மாள் உலகம்மாளை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு தான் இழவு வீட்டுக்கு கிளம்பினாள். உலகம்மாளும் வீட்டிற்கு வந்து விட்டாள்.
மறுநாள் காலை இசக்கி தாத்தா இறுதி சடங்கில் கலந்துகொள்ள அவள் நினைத்திருந்தாள் ஆனால் அவளது கணவன் தொழில் விசயமாக ஊருக்குக் கிளம்பியதால் அவளால் போக முடியவில்லை.
அன்று மாலையே மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்று உலகம்மாளை வரச் சொல்லி தகவல் வந்தது.
உலகம்மாள் உடனே கிளம்பி கால்நடையாக சென்றாள். அப்பொழுதும் மழை பெய்தது. சிறிது நேரம் ஒதுங்கி நின்றவள் இருட்டத் தொடங்கியதும் நனைந்துகொண்டே ஆலங்குளம் நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள்.
அப்போது பாதை இரண்டாகப் பிரியும் இடத்தில் இசக்கி தாத்தா நனைந்துகொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.
அதை பார்த்த உலகம்மாள் பயத்தில் வெலவெலத்துப் போய் விட்டாள்.
இசக்கி தாத்தா அவளை அழைத்து "என்ன தாயி?! இருட்டிப் போச்சு இப்போ எங்க போற?! என்று கேட்டார்.
"ஆலங்குளம் போறேன்! எல்லாம் இந்த மழையால வந்தது" என்று நடுங்கியபடி கூறினாள்.
"சரி தாயி போ !" என்று கூறி இசக்கி தாத்தா அவளுக்கு காவலாக பின்தொடர்ந்து ஆலங்குளம் எல்லை வரை வந்து விட்டுவிட்டுப் போனார்.
இதையும் மாரியம்மாளிடம் உலகம்மாள் கூறினாள். அதற்கு மாரியம்மாள் "இசக்கி தாத்தா எறந்த சேதி கேட்டு எல்லாரும் போனமா.. அப்ப உள்ள கட்டில்ல செத்து கிடந்த அவரு காணாம போய்ட்டாரு னு அவங்க வீட்ல சொன்னாங்க! எல்லாரும் தேடினாங்க கடைசில கோவில்ல எப்பவும் போல இருந்தார்" என்று கூறினாள்.
சில நாட்கள் கழித்து உண்மை வெளிவந்தது.
இசக்கி தாத்தா சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது மூத்த மகனும் மருமகளும் திட்டமிட்டு அவருக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்தனர்.
அதைக் குடித்துவிட்டு படுத்த இசக்கி தாத்தா அசைவில்லாமல் படுத்திருந்தார்.
அவர் எப்படியும் இறந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஊருக்குள் கூறிவிட்டனர்.
ஆனால் அவர் இறக்காமல் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
எனவே அவர்கள் தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.
ஆனால் தாத்தா அவர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டின் பின்பக்கமாக ஓடி வாய்க்கால் பக்கம் போய்விட்டார்.
அங்கே சேரும் சகதியுமான வாய்க்கால் தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு வயிறு அமுங்கும்படி குப்புறப் படுத்து தொண்டையில் கைவிட்டு வயிற்றில் இருந்த எல்லாவற்றையும் வாந்தி எடுத்துவிட்டு தனக்குத் தெரிந்த விஷமுறிப்பு மூலிகைகளை வாயில் பறித்து போட்டுக் கொண்டு கோவிலுக்கு ஓடிவந்து படுத்துவிட்டார்.
அப்படியே நடந்தவற்றையும் மறந்து விட்டார்.
அவர் வாய்க்கால் பக்கம் வந்தபோது பார்த்த ஒரு சிறுவன் மூலம் பிற்பாடு அனைவருக்கும் உண்மை தெரிந்தது.
No comments:
Post a Comment