Saturday 8 July 2023

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

 நந்தனார் பற்றிய முதல் குறிப்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது.
 அதில் ‘செம்மையே! திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று மட்டும் வருகிறது.
 அதாவது சிவ பக்தி உள்ளவர்களுக்கு நான் அடிபணிகிறேன் என்று பல சிவ பக்தர்களைக் குறிப்பிடும்போது 'நாளைப் போவார்' என்று அறியப்பட்ட ஒரு சிவ பக்தரைக் குறிக்கிறார்.
 இதில் அவர் இயற்பெயரோ ஊரோ சாதியோ செயல்களோ எதுவுமே குறிக்கப்படவில்லை.

 அதன் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பத்தாம் நூற்றாண்டில் 'நம்பியாண்டார் நம்பி' மேற்கண்ட குறிப்பை தம் கற்பனையால் கொஞ்சம் விரித்து எழுதுகிறார்.

 'நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே'
 எனது பார்வையில் இதன் பொருள்,
"தில்லை நடராஜர் அருள் பெற்ற நாளைப் போவான் என்பவன், வெளியே இருந்த தொண்டன், தன் அசுத்தம் நீங்கி, தில்லை அந்தணர்களும் வணங்கும் முனிவன் ஆனான்" என்கிறார். இவருடைய ஊர் ஆதனூர் என்றும் குறிக்கிறார்.  

  இதில் வரும் புன்புலை என்கிற சொல்லே எல்லா குழப்பத்திற்கும் காரணம்.
 புன் மற்றும் புலை இரண்டுமே அசுத்தமான எனும் பொருளும் தரும். எனவே 'புன்புலை போய்'  என்பதன் பொருள்  'பாவ அசுத்தம் நீங்கி' என்று என்று நான் கொள்கிறேன். ஒருவர் அசுத்தமானவர் என்கிற எண்ணம் பார்த்தவுடன் வருகிறது என்றால் அது தொழுநோய் போன்ற நோயாளிகள் மீதுதான் வரும். அத்தகையோரை 'செய்த பாவத்தின் பலன்' என்று மக்கள் தூற்றுவது உண்டு. எனவே நோய்த் தொற்று கொண்ட ஒருவர் சிவனைச் சரண்டைந்து கோவிலுக்குள் போகாமல் வெளியே இருந்து வணங்கி வந்துள்ளார் என்று கொள்ளலாம். அவர் காண்போரிடம் நம்பிக்கையுடன் தான் குணம் பெற்று கோவிலுக்குள் 'நாளைப் போவேன்' என்று நெடுங்காலம் கூறியதால் அவருக்கு 'நாளைப் போவார்' சாமி என்று பெயர் வந்திருக்கலாம். அவர் நாள்தோறும் தில்லை அந்தணர் ஓதுவதைக் கேட்டு மனப்பாடம் செய்து தானும் வெளியே ஓதியிருக்கலாம். திடீரென்று அந்த நோய் நீங்கப் பெற்று நன்கு ஓதும் திறத்தால் தில்லை அந்தணரை விட உயரிய அடியார் நிலையை அடைந்துள்ளார். 
 எனது பார்வையில் 'நம்பியாண்டார் நம்பி' கூறவந்த கருத்து இதுவே! 
 இதுவும் அவருடைய ஊகமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்க வேண்டும்.


 மேலும் இந்த புலை எனும் சொல் புலையரைக் குறிக்காது.  ஏனென்றால் புலையர் பற்றி இழிவாக தமிழ் இலக்கியத்தில் இல்லை. உயர்வாகவே குறிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்களும் செய்துள்ளனர்.

 நம்பியாண்டார் நம்பி காலத்திற்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பனிரெண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் மேற்கண்டவற்றை தம் கற்பனையால் மேலும் விரிவாக்குகிறார்.

 'நாளைப் போவார்' சேக்கிழாரால் 'நந்தன்' என்று பெயர்பெறுகிறார். இதில் "புன்புலை" என்ற சொல் சேக்கிழாரால் தவறாகப் பொருள் உணரப்பட்டு அவர் புலையர் என்று எழுதுகிறார் (சங்க காலத்தில் புலை, புலையர் இரண்டும் வெவ்வேறு பொருள் வழங்கி வந்துள்ளது. வள்ளுவர் கூட புலை வினைஞர் என்றுதான் கூளியுள்ளார்). 
 தான் புலையர் என்பதால் கோவிலுக்குள் வரத் தயங்கிய நந்தனாரின் கனவில் இறைவன் தோன்றி தீயில் இறங்கி உடலைத் துறந்து தன்னை அடையச் சொன்னதாகவும் அதேபோல தில்லை அந்தணர் கனவிலும் சொன்னதாகவும் அவ்வாறே நந்தன் வந்து தீயில் இறங்கி அந்தண வடிவெடுத்து இறைவனை அடைந்ததாகவும்  எழுதுகிறார். 

 அதாவது உண்மையான திருநாளைப் போவாருக்கும் சேக்கிழார் உருவாக்கிய நந்தனுக்கும் குறைந்தது 350 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது.

புலையர் கீழ்ச்சாதி என்று கூறவரும் அதே சேக்கிழார் புலையர் பற்றி கூறுவதில் கூட இழிவாக எதுவும் இல்லை. 
அன்றைய புலைப்பாடி எப்படி இருந்தது என்று சேக்கிழார் கூறுகிறார்,
 ஊருக்கு வெளியே வயல்வெளிகள் அருகே திறந்தவெளி நிலம்,
 சமூக ஒற்றுமையுடன் வாழ்கின்ற உழும் தொழில் செய்யும் உழவர்கள்,
 வைக்கோல் கூரை வேயப் பெற்ற சிறிய குடிசைகள்,
 அவற்றின் மீது சுரைக்காய் கொடிகள், 
வாசல் முன்பு கிழித்து காயத் தொங்கவிடப்பட்ட தோல் பட்டைகள், 
குஞ்சுகளுடன் மேயும் கோழிகள், 
நாய்களின் குட்டிகளைக் கவர்ந்து விளையாடும் இரும்பு சலங்கை அணிந்த சிறுவர்கள், 
உழத்தியர் (பெண் உழவர்கள்) தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், 
வஞ்சி மர நிழலடியில் புதைக்கப்பட்ட பானைகளில் கோழிகள் முட்டையுடன் அடைகாத்தல், 
தோல் வார்கள் கட்டிய பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், 
வங்குள்ள தென்னை மரங்கள் அவற்றினுள் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், 
இரவில் காவல் காக்கும் சாமக் கடைஞர்கள் அவர்களைக் கூவி அழைக்கும் சேவல்கள்,
 காஞ்சிமரத்தின் நிழலில் நெல் குத்தியபடி புலை மகளிரின் பாடுதல்,
(விசேச நாட்களில்) அருவிக் கரை சென்று நெற்கதிர்களையும் குவளை மலர்களையும் கூந்தலிற் செருகிய புலைச்சிகள் பறையொலிக்கு ஏற்ப கள்ளுண்டு ஆடுதல், (சங்க காலத்தில் இருந்து பெண்கள் கள் குடித்ததும் விற்றதும் சர்வ சாதாரணம்).

 இப்படியான புலைப்பாடியில் காவல் காக்கும் கடைஞர் இருந்த பகுதியில் நந்தன் வாழ்கிறார்.  இவருக்கு அரசு ஒதுக்கிய புன்செய் நிலம் இருந்தது (பறைத்துடவை - அதாவது பறையடித்து ஏலம் விட்டு கொடுக்கப்படும் நிலம்) அதன் உணவு உரிமை அதாவது குத்தகைக்கு விட்டு (இன்று பணம் பெறுவது போல அன்று) விளைச்சலில் ஒரு பகுதி பெறுவது அவருக்குக் கிடைத்தது. இவர் வெட்டிய மாடுகளில் இருந்து கிடைக்கும் தோல், நரம்புகள் மற்றும் பசு வயிற்றில் கிடைக்கும் ஒரு வகை வாசனைத் திரவியம் போன்றவற்றை கோவிலுக்குக் கொடையளித்து வந்துள்ளார். 
 நந்தன் விவசாயம் செய்தாரா?! அல்லது புலைப்பாடியில் கடைஞர் பகுதியில் இருந்ததால் பயிர் காவல் புரிந்தாரா? அல்லது மாடு வெட்டும் தொழில் செய்தாரா என்பது தெரியவில்லை. 
 மேற்கண்ட எதுவும் இழிவானதாகவும் தெரியவில்லை.

  நந்தன் தன் பிறப்பு தாழ்ந்தது என்று எதன் காரணமாக எண்ணினார் என்பது விளக்கப்படவில்லை. உயிர்க் கொலையும் சைவ மதத்தில் கண்டிக்கப்பட வில்லை. சேக்கிழாரே சிவன் சிவனடியார் வேடத்தில் வந்து கன்றுக் கறி கேட்டதாக எழுதியுள்ளார். 

 சேக்கிழாருக்கு 800 ஆண்டுகள் கழித்து கோபாலகிருஷ்ண பாரதியார் கி.பி.1850 களில் நந்தன் சரித்திரம் எழுதுகிறார். இதில் நந்தன் ஒரு பிராமண ஜமீன்தாரிடம் வதை படுவதாக எழுதுகிறார்.  அதன் பிறகு அயோத்தி தாசர் தனது பௌத்த கற்பனைகளைக் கலந்து எழுதுகிறார். நந்தன் சிற்றரசன் என்றும் அவர் பௌத்தர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரசர் நுழையும் சிறப்பு வாசல் தான் தற்போது நந்தன் வாசல் என்றும் எழுதுகிறார்.  அதன் பிறகு திராவிட எழுத்தாளர்கள் நந்தனை சிதம்பரம் தீட்சிதர்கள் எரித்து கொன்றுவிட்டதாக எழுதினர்.
 பிறகு 1942 இல் நந்தன் ஒரு தீண்டத்தகாத பறையன் என்று உருவகித்து திரைப்படம் ஒன்றும் வந்தது. 

 இப்படி ஆளாளுக்கு 'நாளைப் போவார்' மீது தமது கற்பனைகளைத் திணித்துள்ளனர்.

 எவருடைய கற்பனையிலோ உதித்து இறந்த நந்தனின் கொலைப் பழியை இன்று வரை உயிருடன் இருக்கும் தீட்சிதர்கள் சுமக்கிறார்கள்.

 சீதை தீக்குளித்து உயிருடன் வந்தாள் என்றும் கண்ணகி ஆணைப்படி தீ மதுரையை எரித்தது என்றும் நாம் புராணம் படித்திருக்கிறோம்.
  அது போல ஒரு கற்பனை கதைதான் நந்தன் தீயில் விழுந்து ஆதி அந்தணரான பிரம்மன் உருவில் எழுந்து சிவனை அடைந்தார் என்பதும்.

 

No comments:

Post a Comment