Wednesday 15 July 2015

இமயமலையில் தமிழர் சுவடுகள்

இமயமலையில் தமிழர் சுவடுகள்

/\ /\ /\ /\ /\ /\ /\ /\ /\ /\ /\ /\ /\

இமய மலையில் Chola pass (சோழ அல்லது சோல கணவாய்) என்ற இடம் இன்றும் உள்ளது.

அதன் அருகிலேயே Tiger hill என்ற இடமும் உள்ளது.

கரிகாலன் இமயம் வரை படையெடுத்து வென்ற காலம் கி.மு.44 முதல் கி.மு.27 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் நடந்திருக்கவேண்டும் என்பது திரு.ராசமாணிக்கனாரின் கணிப்பு

சரி. சங்ககால நூல்கள் என்ன சொல்கின்றன?

சிலப்பதிகாரத்தில் கரிகாலன் இமயம் வரை சென்றவன்,
இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன்,
வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது.

“பகைவிலக் கியதிப்
பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்” .

கலிங்கத்துப் பரணியில் இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதி உள்ளது. அதில்,

“செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிம
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த
பொழுதே.”

கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதைக் கூறுகிறது.

12ம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85ல் 

"இலங்குவோர் கரிகால்பெருவளத்தோன் வன்திரள் புலி
இமயமால் வரைமேல் வைக்க வெகுவோன்"

என்றும்,
அதே நூலில் எறிபர்த்தர் கதையில்

"பொன்மலைப் புலிவென்று ஓங்கப்
புதுமலை இடித்துப் போற்றும்
அறநெறி வழியோட
அயல் வழி அடைத்த சோழன்"

என்றும் கரிகாலன் இமயமலையில் வெற்றிக்கொடி நாட்டியதைக் கூறுகிறார்.

மேற்கண்டவற்றில் இருந்து கரிகாலன் தமிழகம் முழுவதையும் வென்று கடற்கரையை ஒட்டியவாறு தற்போதைய ஆந்திர, ஒரிசா, மேற்குவங்க மாநிலங்களை வென்று (அப்போது அங்கே அவந்தி, வச்சிரம் ஆகிய நாடுகள் இருந்துள்ளன) கங்கையைத்  தாண்டி சிக்கிம் வழியே முன்னேறி எவரெஸ்ட் அடிவாரத்தில் கணவாய் தோண்டி இமயமலையைக் கடந்து சென்று போர்புரிய முயன்றதாகத் தெரிகிறது.

கரிகாலன் தோண்டிய கணவாய் சோழ கணவாய் என்றும்
அவன் புலிக்கொடி நாட்டிய இடம் புலிக்குன்று என்றும் அழைக்கப்படுவதாகக் கொள்ளலாம்.
ஆனால், இதற்கு இன்னும்  சான்றுகள் தேவை.

இதேபோல சேரன் செங்குட்டுவன் கனகன், விசயன் ஆகிய மன்னர்களை வென்று இமயம் வரை சென்று கல் எடுத்துவந்து அதை தோற்ற மன்னர்கள் தலையில் சுமத்தி தமிரகம் கொண்டுவந்து கண்ணகிக்கு நடுகல் நட்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம்வரை எல்லையைக்(வரம்பு) கொண்டவனாகக் கூறப்படுகிறான்.

இன்று உலகின் உயரமான இடமான எவரெஸ்ட் சிகரம் அந்த பகுதி மக்களால் கடல் அன்னை (சாகர்மாதா) என்று அழைக்கப்படுகிறது.

தொடக்கத்தில் இந்தியத் துணைக்கண்டம் ஆசியாவில் இல்லை. அது ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்து ஆசியாவை நோக்கி நகர்ந்து மோதியது.
இதனால் இரு கண்டங்களும் முட்டிக்கொண்ட இடம் நெருக்கிக்கொண்டு மேலே எழும்பியது.
அப்படி உருவானதுதான் இமயமலை.
இமயமலையில் கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகள் பல கிடைத்துள்ளன.
இமயமலையை விட பழமையானது விந்தியமலை.
அதைவிடவும் பழமையானது பொதிகைமலை.

குமரிக் கண்டம் மூழ்கிய போது அதை ஈடுகட்டும் விதமாகப் பாண்டிய மன்னன்.கங்கையையும் இமயத்தையும் எடுத்துக்கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்
வாழி (சிலம்பு. 11-17-22)

அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவருமே இமயத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர்.

தற்போதும் இமயமலையில் வாழும் கவரிமா பற்றி சங்கநூல்கள் கூறுகின்றன.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
-குறள் 969.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்…
-புறநானூறு.

பதிற்றுப்பத்திலும் கவரிமா பற்றிய குறிப்புகள் உள்ளன.

நரதந்தைப் புல் தின்று வாழும் நீண்ட சடைமுடி கொண்டது கவரி,  மயிர் நீக்கப்பட்டால் இறந்துவிடுமாம்.
இது மான் கிடையாது yak எனப்படும் மாடு.
இது ஒருவகைப் புல்லைத்தான் தின்னும். கடும் குளிரில் வாழும் இவ்விலங்கு முடி உதிர்ந்தாலோ அல்லது வெட்டப்பட்டாலோ குளிர்தாங்காமல் இறந்துவிடும்.

ஆக இமயமே தமிழர்களின் எல்லை. இன்றைய இந்தியாவை விடப் பெரிய குமரிக்கண்டத்தை நம்மிடமிருந்து இயற்கை பறித்துக்கொண்டது.
நாம் மேலும் சுருங்கி சுருங்கி இன்று உள்ளங்கை அளவு நிலத்தில் அதுவும் மாற்றான் ஆட்சியில் ஒட்டுக் குடித்தனம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.
இருக்கும் நிலத்தையாவது மீட்போம்.

(( எவரெஸ்ட் சிகரத்தில் 'தமிழ் வாழ்க'
http://a2zallrounder.blogspot.in/2013/10/blog-post.html?m=1
1997ல் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த எம்.மகேந்திரன் மற்றும் என்.மோகனதாஸ்
http://en.m.wikipedia.org/wiki/M._Magendran

https://m.facebook.com/notes/aathi-prakash-savetamilpeople/குமரி-என்றால்-கோள்களின்-குறும்பு-மகாதேவன்/379162408854085/?refid=21  ))

No comments:

Post a Comment