Wednesday 15 July 2015

பொங்கலும் இறைமறுப்பும்

பொங்கலும் இறைமறுப்பும்

ஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞு

பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?
கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கக் கொண்டாடுகிறோம்.

பழங்காலத் தமிழனுக்குத் தெரிந்திருந்தது கதிரவனின் உண்மையான நிறம் சிவப்பு என்று.
அதனால் அது சிவம் என்று அழைக்கப்பட்டது.
பின்பு அது சிவன் என்ற ஆண் கடவுளாகத் திரிக்கப்பட்டது.
பிறகு அது ஆதிநாதர் என்ற சடைமுடியுடன் புலித்தோல் உடுத்தி 10,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு தலைவனுடன் திரிக்கப்பட்டு சிவபெருமான் ஆக்கப்பட்டது.
அதன்பிறகு பல்வேறு கட்டுக்கதைகள் புராணங்களாக எழுதப்பட்டு தமிழர் வணங்கிவந்த சித்தர்களுக்கு அக்கதைகளில் பல்வேறு பாத்திரங்கள் அளிக்கப்பட்டு சைவ மதமானது.
பிறகு ஆங்கிலேயர் சூட்டிய பெயரான ஹிந்து என்ற பெயர்கொண்ட மதத்துடன் திரிக்கப்பட்டுவிட்டது.

வணங்குதல், கும்பிடுதல் என்பன மரியாதையைத் தெரிவிப்பது என்றே பொருள்படுவன ஆகும்.
வழிபடுவது என்பது வழிநடப்பது என்றே பொருள்படும்.
மதம் என்பது மதித்தல் என்றவாறே பொருள்படும்.

நமச்சிவாயம் என்றால் நம்+அச்சு+இவ்+ஆயம்.
நம்மை அச்செடுத்தது போன்றதே நமது சுற்றம்.
என்று பொருள்வரும்.
இவை அனைத்துமை இறையை வலியுறுத்துவதில்லை.

தமிழர் எதை வழிபட்டனர்?
எதனை மதித்துப் போற்றினர்?

தமிழினம் ஒரு அறிவார்ந்த இனம்.
இயற்கையை பாதுகாப்பதையும் முன்னோர்களை நினைவுகொள்வதையும் வலியுறுத்துவதே அவ்வினத்தின் இறையியல்.

"மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்"
என்று குறுந்தொகை கூறுகிறது.
மரத்தைக் கடவுளாகப் பார்த்த இனம் நம் தமிழினம்.

தமிழகத்தின் திருத்தலங்கள் அனைத்தும் மரவழிபாட்டுத் தலங்களே ஆகும்.

சிதம்பரம்(தில்லையம்பலம்)=தில்லைமரம்.
காஞ்சி=மாமரம்.
கீழைப்பழுவூர்=புள்ளமங்கை.
திருவிடைமருதூர்=மருதமரம்.
திருவானைக்கா=நாவல்மரம்.
குற்றாலம்=ஆலமரம்.
திருநெல்வேலி(வேணுவனம்)=மூங்கில்(வேணு).
திருவொற்றியூர்=மகிழமரம்.
திருமயிலை=புன்னை.
மதுரை(கடம்பவனம்)=கடம்பம
தமிழ்மண்ணில் ஒவ்வொரு ஊரும் கல்,பாறை,பூ,மரம்,குளம்,ஆறு,ஏரி என்ற பதங்களைச் சேர்த்தே வழங்கப்படுகின்றன.
(நூல்:நெல்லையப்பர் கோவில், பக்57)

"மரம் சா மருந்தும் கொள்ளார்"
என்கிறார் கணியன் பூங்குன்றனார் (நற்றிணை -226)
ஒரு மரத்தை அழித்து உயிர்வாழ்வதை பாவமாகக் கருதினர் அன்றைய தமிழர்.

மரம் என்பது என்ன?
கழிவுகளை தன் உடல்வழியே செலுத்தி உணவாக மாற்றுவது.

மானிடன் என்பவன் உணவை உடல்வழியே செலுத்தி கழிவாக மாற்றும் விலங்கு.

ஒரு மாந்தன் ஒருநாளில் மூன்றுவேளை உண்டு வெளியேற்றும் கழிவின் அளவு ஒருநாளில் ஒருமரம் உருவாக்கும் உணவை விட பலமடங்கு அதிகம்.
தவிர மரங்களை அழிப்பதன் மூலம் மானிட இனம் அழிவைநோக்கி விரைவாக செல்கிறது.

பொங்கல் அன்று கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, உப்பு, மற்ற காய்கறிகளைப் படையல்வைத்து புது அரிசியை  வாசலில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து நன்றி தெரிவிப்பது இயற்கையை காப்பதை வலியுறுத்தாமல் வேறு எதை வலியுறுத்துகிறது?

தமிழர்கள் மரம் மட்டுமன்றி விலங்குகளையும் பாதுகாப்பதை அறிந்திருந்தனர்.
மாட்டுப்பொங்கல் வலியுறுத்துவது அதைத்தான்.
காடுகளைப் பாதுகாக்கும் புலிகளையும் கடலைப் பாதுகாக்கும் வேட்டைமீனையும் அவர்கள் பெருமைப்படுத்த அரச சின்னங்களாக வைத்திருந்தனர்.

"புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே"
-என்கிறார் உலோச்சனார், நற்றிணை - 11.(நெய்தல்).
இப்பாடல் தேர்செலுத்தி வரும் தலைவன் மணலில் ஊர்ந்துசெல்லும் வண்டுகள் மேல் சக்கரங்கள் ஏறிவிடாதபடி கவனமாக செலுத்தச்செய்ததைக் கூறுகிறது.
நண்டுகளைக் கூட நேசித்தனர்.

இன்று தமிழினம் தம் முன்னோர் காட்டியவழியில் செல்லாது அழிவுப்பாதையில் பயணித்துவருகிறது.
தமிழர்களின் திருநாளான பொங்கலின் முதல்நாள் ஒட்டுமொத்த இயற்கையின் ஒற்றை அடையாளமாக கதிரவனை வணங்கி
அதன்பிறகு விலங்குகளின் ஒற்றை அடையாளமாக மாடுகளை வணங்கி
அதற்குப் பிறகுதான் காணும்பொங்கலில் உடன்வாழும் சொந்தங்களைச் சென்றுபார்க்கின்றனர்.
ஆக இயற்கைக்கு முதலிடம், விலங்கினத்திற்கு இரண்டாவது இடம், அதற்பிறகே மாந்தர்கள்.

பொங்கல் என்பது இல்லாத ஒரு கடவுளை வணங்குவது இல்லை.
அது இறைமறுப்பிற்கும் முற்போக்காகத் திகழும் கருத்தியல்.
அதாவது இயற்கையையும் விலங்குகளையும் மாந்தரையும் போற்றிப்பாதுகாக்கும் கருத்தியல்.

எனவே இதை மதம்தாண்டி தமிழர் அனைவரும் கொண்டாடுவதே முறை.

(இசுலாமியரும் கொண்டாடும் பொங்கல்
https://m.facebook.com/photo.php?fbid=406803462756646&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 ) .

No comments:

Post a Comment