Monday 13 July 2015

சாதி?

ஒரு பரம ரகசியத்தை வெளியிடப்போகிறேன்.

நான் பிறந்த சாதி எது தெரியுமா?

இதை ஏன் சொல்லவேண்டியுள்ளது என்றால்,
ஒருவர் பிறப்பால் தமிழரா என்பதை அறிய அவரது சாதியைக் கேட்பதைத் தவிர வேறுவழியில்லை.

திராவிட இயக்கங்கள் இதற்காகத்தான் சாதியை ஒழிக்கவேண்டும் என்கின்றன.

ஆனால், தமிழியம் சாதியை ஒழிக்கத்தான் போகிறது.
அதுவரை சாதிய அடையாளத்தை வெளியிடுவது தவறில்லை.

பார்ப்பதற்கு கொஞ்சம் சிவப்பாக இருக்கிறேன்.
(தனித்தமிழ்க் குடியரசை முன்னிறுத்தி)தனித்தமிழ் ஈழத்தை எதிர்க்கிறேன்.
பார்ப்பனர் தமிழரே என்று கூறுகிறேன்.
இதனால் என்னை தமிழனல்லாதவன் என்று சில கத்துக்குட்டிகள் ஐயப்படுகிறார்கள்.

நான் பிறந்த சாதியின் பெயர் 'சேனைத்தலைவர்' என்பது.

பெயர் அட்டகாசமாக இருந்தாலும் மற்ற தமிழர்களைப்போல இவர்களும் சீரிழந்துபோய்விட்டனர்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து நடுப்பகுதிவரை உட்பகுதியில் (பாண்டிநாடு) வாழும் தமிழ்க்குலத்தோரான இவர்கள்
முருகனின் படைத்தலைவரான வீரபாகுவின் வழிவந்தவர்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
மறவருக்கும் செங்குந்த முதலியாருக்கும் நெருக்கமான தொடர்புடையவர்களாக இவர்கள் வாழ்விடப் பரவலை வைத்து கூறலாம்.

போர்வீரர்களாகவும், (வெற்றிலை) வணிகர்களாகவும், (உழுதல் அல்லாத) வேளாண்மை செய்பவராகவும் இருந்துள்ளனர் என்று தெரிகிறது.

சேனையர், மூப்பனார், இலைவாணியர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.
முதலியார், செட்டியார், பிள்ளை போன்ற பெயர்களை தம் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்கின்றனர்.

மேலும் இவர்கள் (ஹிந்துமதம் விழுங்கிய) முருகனை வழிபடும் கௌமாரம் மதத்தை பின்பற்றியவர்கள்.
(பல சாதியாரும் கௌமாரத்தை பின்பற்றினர்.
தலைமுறை தலைமுறையாக முருகன் தொடர்பான பெயர்களை தன்பிள்ளைகளுக்கு வைத்துக்கொண்டேவரும் தமிழ்க்குடும்பத்தார் இம்மதத்தினர் என்று அடையாளம் காணலாம்.
ஏற்கனவே முருகனை வழிபட்டுவந்த தமிழர்களை ஆதிசங்கரர் கௌமாரம் என்ற தனிமதமாக ஆக்கினாராம்).

நல்லவேளை நான் இந்த சாதியில் பிறந்தேன்.
இதுவே பெரும்பான்மை சாதியில் பிறந்திருந்தால் நான் தமிழ்தேசியத்தை ஏற்றிருந்தாலும் சாதியம் என்னை கவ்விக்கொண்டிருக்கும்.
நல்லவேளையாக இந்த சிறுபான்மைக் குலத்தில் பிறந்தேன்.

எனக்கு என்னை மிகவும்
பிடிக்கும்
ஏனென்றால் நான் தமிழன்.

எனக்கு என் குடும்பத்தாரை மிகவும் பிடிக்கும்
ஏனென்றால் அவர்கள் தமிழினம்.

எனக்கு நான் பிறந்த சாதியைப் மிகவும் பிடிக்கும்
ஏனென்றால் அவர்கள் தமிழினத்தின் ஒரு பிரிவினர்.

எந்த ஒரு தமிழனும் நானே.
எந்த ஒரு தமிழ்க் குடும்பமும் என் குடும்பமே.
எந்தவொரு தமிழ்க் குலமும் என் சாதியே.

என் தமிழ் இனத்தில்
இந்த சேனைத்தலைவர் சாதி உட்பட
எல்லா சாதிகளையும் ஒழித்து
எல்லா மதங்களையும் ஒழித்து
மற்ற எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்து
என் இனத்தின்  எந்த இரு குடும்பங்களும் தமக்குள் திருமணமத் தொடர்பு  செய்துகொள்ளும் வகையில் ஒரே சமுதாயமாக மாற்றுவது என் கடமையாகும்.

No comments:

Post a Comment