Wednesday 15 July 2015

தமிழக வட எல்லை

தமிழக வட எல்லை

வஎவஎவஎவஎவஎவஎவ

1948ல் மண்மீட்பைக் கருத்தில் கொண்டு வெளிவந்த மா.இராசமாணிக்கனாரின் " தமிழ் நாட்டு வட எல்லை" என்ற நூலிருந்து முக்கியமானவைகளை இங்கே தருகிறேன்.

தெலுங்கு பெயர் (தமிழ்)

ஆத்மகூர் (ஆத்தக்கூர்)
சென்னூரு (செருவனூர்)
கூடூர்சிவன்கோயில் (அழகநாதர் கோவில், கூடூர்)
கூடூர் (குமுலூர்)
கிருட்ணபட்ணம் (கொல்லந்துறை)
மடமன்னூரு (மடுவனூர்)
மல்லம் (திருவான்பூர்)
ரெட்டிபாளையம் (பவத்திரி)
ரட்டமல (இரட்டைமலை)
நேலடூரு (சிறுமணம்பூண்டி)
வல்லூரு (வல்லூர்)
ஸ்ரீகாலஹஸ்தி (திருக்காளத்தி)
சித்தூர் (சிற்றூர்)

இந்நூலானது சங்ககாலப் புலவர்கள் முதல் 17ம் நூற்றாண்டுப் புலர்வர்கள் வரை பாடிஞ்சென்றுள்ள (அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம்) செய்யுள்களைக் கொண்டு வேங்கடமும் வடபெண்ணையும் தமிழக வட எல்லைகள் என்று மெய்பிக்கிறது.
மேலும் நெல்லூர், தென் சித்தூர் ஆகிய ஜில்லாக்களின் கல்வெட்டு சான்றுகள் மூலம் அப்பகுதிகள் தமிழருக்குச் சொந்தம் என்று மெய்பிக்கிறது.
திருவேங்கடம் திருக்காளத்தி ஆகியவற்றை தமிழ் மாகாணத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது..

1630களில் படிக்காசுப்புலவர் தொண்டைமண்டலம் 24கோட்டங்களை உடையது என்று பாடியுள்ளார்.
இதுதான் ஆந்திராவின் தெற்குப்பகுதி தமிழரின் தொண்டைநாடே என்பதற்கான கடைசிச்சான்று.
இக்காலத்திற்குப் பிறகு ஐரோப்பியர் வருகையாலும் மராத்தியர் சிற்றரரசர்கள் ஆட்சியும், இசுலாமிய சிற்றரரசுகள், பாளையங்களும் என தமிழக வரலாறு குழப்பமான நிலையை அடைந்தது.
ஆங்கிலேயர் முழுதாக கைப்பற்றியபிறகு அகழ்வாராய்ச்சிகள் நடக்கலாயின.

விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகளும் தமிழில் உள்ளன.
சித்தூரில் மொகிலி(587of1907), பூதலபட்டு(53-56of 1907), காணிப்பாக்கம்(57-60of1907),
கட்டமச்சி(61of1908),   தேனேபல்லி(64of1908),
சத்ரவாத(387-391of1912),சேனூர்(398-4 of1912) முல்லந்தரம்(396of1912) ஆகிய இடங்களில் அத்தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

கி.பி1490களில் விஜயநகர ஆட்சியின்கீழ் ஆண்ட நரசிங்கர் என்ற சாளுவ சிற்றரசன் திருப்பதியைச் சுற்றி பல திருப்பணிகள் செய்தான்.
இவன் பொறித்த கல்வெட்டுகளில் தெருக்கள், ஊர்கள், மண்டபங்கள், ஏரிகள், வருவாய்வரி, பொறுப்பாளர்கள் ஆகிய அனைத்து பெயர்களும் தூயத்தமிழேயே உள்ளன.
(Thirumalai ins vol2, 4,16,17,18,21,23,25)
1500களுக்குப் பிறகு தமிழகத்தில் அரசு வேலைகளில் தெலுங்கு கன்னடவர்கள் குடியேறத்தொடங்கினர்.

சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு சுருங்கிய தமிழ் நிலம் பாண்டியர் எழுச்சியில் மீண்டும் கைப்பற்றப்பட்டது.
கிபி13ம் நூற். ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மூன்றாம் ராசேந்திரனை வென்றான் கன்னட ஹொய்சளர்களையும் தெலுங்கு சோழனையும் வென்றான் இலங்கையையும் கைப்பற்றினான், இவன் வீராபிசேகம் செய்து தன் வெற்றியைக் கொண்டாடியது நெல்லூரில்(!).
திருமலை (தற்போது திருமாலா) அடியில் நம்மாழ்வார் கோவில் இவன்காலத்தில் கட்டப்பட்டது.

கி.பி.9ம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு சித்தூர் ஜில்லாவின் மல்லம்(திருவான்பூர்) என்ற இடத்தில் கிடைத்துள்ளது.(nellore ins. Vol 1, p430)

மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி12ம் நூற்றாண்டு) கல்வெட்டுகள் நெல்லூர், ரெட்டிபாளையம், கடப்பை ஜில்லாவின் பொத்தப்பி ஆகிய இடங்களில் கிடைக்கிறது (Nellore ins, gudur 86; 601&602 of 1907; 435of 1911)
இவனுடைய காலத்தில் பவணந்தி முனிவர் வட எல்லை வேங்கடம் என்றே குறிக்கிறார்.

ஆதித்த சோழன் கி.பி.907ல் காளத்திக்கு அருகே தொண்டைமானாடு எனும் இடத்தில் நடந்த போரில் உயிரிழந்தான்.
இதன்பிறகு இராசராச சோழன் புலிநாடு,பாகிநாடு (சித்தூர், நெல்லூர்) ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றினான்.
அதன்பிறகு இராசேந்திர சோழன் அதற்கும் வடக்கே மகேந்திரமலையில் வெற்றித்தூண் நாட்டினான்.
திருப்பதியை அடுத்த திருச்சானூரில் அலர்மேல்மங்கைபுரக் கோவிலில் (இளங்கோவில் என்று அப்போது அழைக்கப்பட்டது) திருமங்கையாழ்வாருக்கு நாட்பூசை செய்தனர் என்று மூன்றாம் இராஜராஜசோழனின் 19ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு கூறுகிறது (262 of 1904; திருச்சானூர் யோகிமல்லபுரம் கல்வெட்டு;
259-275 of 1904 எல்லாம் தமிழ்க் கல்வெட்டுகளே)

நெல்லூரில் கிடைத்துள்ள 11ம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் பத்தைபாடு கிராமம், சிரமன கிராமம், மஹிமலூர் முறையே ஆத்மகூர் கல்வெட்டு 18,26,38 ஆகியவை தமிழிலேயே உள்ளன.
இதுபோக கூடூர் தாலுகாவில் அழகநாதர் கோவிலில் பல தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. (Nellore ins. gudur, no 4-18).
வேங்கடகிரி தாலுகா சாபலபள்ளி கிராமத்திலும் பல தமிழ்க் கல்வெட்டுகள் உள.

சித்தூரில் புங்கனூர், லத்திகம், மினிகி, மூகைவாடி, யாட்டவாகிலி, ஆகிய இடங்களில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.(540-574 of 1907)

கி.பி.765களில் திருமங்கையாழ்வார் வேங்கடத்தைப்பற்றி மட்டுமே 40நாற்பது செய்யுள்கள் பாடியுள்ளார்.
கி.பி.7ம் நூற்றாண்டுவரை காளத்தீசுவரனின் அம்மன் பெயர் ஞானப்பூங்கோதை என்பதாகும்.
நாவுக்கரசர் பாடிய திருக்காரிகரை என்பது காரியாறு ஓடும் பகுதி தற்போது காலேறு என்று தெலுங்காகிவிட்டது.
இக்காலத்தில் தமிழ்ப்பகுதி சுருங்கி வேங்கடம் காளத்திக்கு உட்பட்டுவிட்டதாக சேக்கிழார் பாடியதன் மூலம் அறிகிறோம்.
பிறகு சோழர் எழுச்சிக்குப் பிறகு வடக்கே போர் தொடங்கியது.

கி.பி.640ல் வந்த சீனப்பயணி ஹியூன்-ஸங் அமராவதி ஆற்றிலிருந்து 167கல் தென்மேற்கே சோழநாடு இருந்ததைக் குறித்துள்ளார். இதுவே இன்றைய கடப்பை ஜில்லாவில் கர்நூல் ஆகும்.
கடப்பா ஜில்லாவில் (ரேநாண்டு)சோழர் கல்வெட்டுகள் பலவும் ஒரு செப்புப்பட்டயமும் கிடைத்துள்ளன.(Rangachari cuddapah ins. 309,318,350,405,409,435, 453,455.,550,560)
இந்த ரேநாண்டு சோழர்கள் கரிகாலனின் மரபினர் என்று தமது பட்டயங்கள் (கிபி7ம் நூற்.) கூறிக்கொள்கின்றனர்.
இன்றும் வடபெண்ணைக்கு வடக்கே உள்ள ஆறு மண்ணாறு என்ற தமிழ்ப்பெயர் கொண்டுள்ளது.
கடப்பையில் அதபூர்,நந்தவலூர், நிரந்தனூர், பொத்தப்பி முதலிய இடங்களில் இருக்கும் கோவில்களில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன (A.R.E. 1908 no= 570-616; 1912 no=434,435;  1914 no=238-241).
கோவில் கடவுளர் பெயர்களும் பாபநாசமுடைய நாயனார், குலோத்துங்கசோழ விண்ணகர், சொக்கப்பெருமாள் என்பன.

கி.பி.300களில் தமிழகத்தின் மீது படையெடுத்த சமுத்ரகுப்தன் காஞ்சியை விஷ்ணுகோபன் என்ற பல்லவன் குறித்துள்ள கல்வெட்டு அல்லஹாபாத்தில் உள்ளது.
கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி வடபெண்ணையிலிருந்து விரிந்து வடக்கே கிருஷ்ணா ஆறுவரையும் தெற்கே தஞ்சாவூரைத் தாண்டி புதுக்கோட்டைவரையும் பரவியது.
இங்கே பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருத மற்றும் தமிழில் வெளியிட்ட பட்டயங்களும் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.
பல்லவர் ஆண்ட பகுதியின் பெயர்கள் தமிழிலேயே வழங்கப்பட்டுள்ளன.
கிபி300-900 பல்லவர் ஆட்சியில் ஆழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், வேங்கடத்தையும் நாயன்மார்கள் (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்) திருக்காளத்தி (காளஹஸ்தி)யையும்  அழகுத் தமிழில் பாடியுள்ளனர்.

சங்ககாலப் புலவர்களில் பனம்பாரனார், இளங்கோவடிகள்,  காக்கைப்பாடினியார், மாமூலனார், கல்லாடனார், மதுரைக் கணக்காயர், நக்கீரனார், கண்ணனார், நன்னாகனார், கள்ளில்-ஆத்திரையனார், சிகண்டியார் மாங்குடி மருதனார் போன்றோர் வேங்கடம் வட எல்லையென்று குறித்துள்ளனர்.
அசோகன் காலத்தில் அவனுடைய எல்லையானது வடபெண்ணை வரையே பரவியிருந்தது. மௌரிய அரசு தமிழகத்தில் மட்டும் பரவவில்லை.
சிறுகாக்கைப் பாடினியம், சிலப்பதிகாரம் போன்ற கி.பி நூல்களும் இதையே குறிக்கின்றன..

தொண்டைநாடு என்பது வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி, காடாக இருந்த இப்பகுதி கரிகாலனால் திருத்தியமைக்கப்பட்டு நாடானது. வேற்காடு,ஆர்க்காடு, ஆலங்காடு ஆகிய பெயர்கள் அங்கே இன்றும் வழங்கப்படுவது இதற்கு சான்று.
இத் தொண்டை நாட்டின் வட பகுதியை தொண்டைமான்-திரையன் என்பவன் பவத்திரி (தற்போது ரெட்டிபாளையம்(!?)) என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.
தென்பகுதியை தொண்டைமான்-இளந்திரையன் (பெரும்பாணாற்றுப்படையில் குறிக்கப்படுபவன், தமிழ்ப்புலவன்) காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.
அதியமான் ஔவையை தூதனுப்பிய தொண்டைமானின் தலைநகரும் காஞ்சியே.
(இராசராசசோழனின் கல்வெட்டு உள்ள சிவன்கோவில் அமைந்துள்ள) நாராயணபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட வேறு ஒரு தொண்டைமான் திருப்பதி கோவிலைக் கட்டினான் என்று அக்கோவில் தளவரலாறு கூறுகிறது.
இன்றும் காளத்திக்கு அருகில் தொண்டைமான்னாடு (தொண்டைமானாற்றூர்) என்ற ஊர் இருக்கிறது.

( மேலும் பல சான்றுகளுடன் 'தமிழ்நாட்டு வட எல்லை' மின்னூல்
http://www.openreadingroom.com/?cat=125 .
இன்றைய ஆந்திரத் தமிழரின் நிலை அறிய

தாய் தமிழகத்துடன் இணைய 64 கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம்-youtube  )

No comments:

Post a Comment