Saturday 25 July 2015

ஏட்டுச் சுரைக்காய் பொதுவுடைமை

ஏட்டுச் சுரைக்காய் 'பொதுவுடைமை'
=================

அன்னா லூயிஸ் ஸ்ராங்க் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் மாவோ ஆண்ட சீனா பற்றி கூறியது:

'கடந்தகாலப் புரட்சிகள் அனைத்தும் காலப்போக்கில் பின்னடைந்து அவை சாதித்ததில் பெரும்பகுதி கொள்ளையடிக்கப்பட்டதை சீனமக்கள் கவனத்தில்கொண்டுள்ளனர்; பிரிட்டனில் கிராம்வெல் முதலாவது சார்லசு மன்னனின் தலையைக்கொய்தான், மன்னர்குலம் மடிந்ததுபோல் காணப்பட்டது, ஆனால் 20ஆண்டுகளில் இரண்டாம் சார்லசு எதிர்ப்புரட்சிப்படையின் அவசியமின்றி அரியணை ஏறினான்; பல பிரபுத்துவ மனோபாவங்கள் இன்றும் பிரிட்டனில் நிலைத்திருக்கின்றன; பிரான்சில் நிகழ்ந்த புரட்சி பல ஏற்றத்தாழ்வுகளின் பின் நெப்போலியன் அரசுக்கு வழிவிட்டது; அமெரிக்க மக்களின் கைகளில் ஆட்சியை வைப்பதாகக்கூறிய தேன்மொழிகளை, 'மக்கட்கூட்டத்தின் ஆட்சிக்கெதிரான தடைகளும் சமநிலைகளும்' நிறுவிய அரசியல் சட்டவழமையானது விரைவில் வெற்றிகொண்டது; அமெரிக்க உள்நாட்டுப்போர் நீக்ரோ மக்களை விடுதலை செய்து அரசில் ஒருபங்கும் கொடுத்தது; ஆனால் 10ஆண்டுகளில் அவர்கள் புதியவடிவில் அடிமைப்படுத்தப்பட்டனர்".

இவர் கூறியது போலவே உலகில் நடந்த அத்தனை புரட்சிகளையும் போல 4கோடி மக்கள் உயிரை ஈந்து மாவோவின் சீனப் புரட்சி சாதித்ததையும் அவருக்குப் பிறகு வந்த டெங் கொள்ளையடித்து முதலாளித்துவ நாடாக்கிவிட்டான்;

இன்று தமிழினப்படுகொலையின் பங்காளியான சீனா, எலும்பை மக்கச்செய்யும் அமிலங்களை இலங்கைக்கு அனுப்பி இனப்படுகொலையை மறைக்க உதவியிருக்கிறது;
லெனினும் ஸ்டாலினும் 2கோடி மக்களின் உயிரையீந்து இரசியப்புரட்சியில் சாதித்ததை அவருக்குப் பிறகுவந்த குருஷ்சேவால் கொள்ளையடிக்கப்பட்டு மெல்ல ஏகாதிபத்திய நாடாகி இன்று தமிழ்மண்ணில் கூடங்குளம் அணுவுலையாக நிற்கிறது;

பொதுவுடைமைவாதிகள் என்னவோ தொழிலாளர் திரண்டு புரட்சி நடத்திவிட்டால் அதன்பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதுபோல் பாடம் நடத்துவார்கள்;
கியூபா வெற்றிநடை போடுகிறதே என்பவர்கள் அங்கே இருக்கும் தலைவனைக் கவனியுங்கள்; அவர் இருக்கும்வரைதான் அது வீறுநடை போடும்;

இன்று தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, விடுமுறை, மருத்துவம் எல்லாம் கிடைக்க பொதுவுடைமையே காரணம் என்பவர்கள் சிந்தியுங்கள்;
முதலில் உழைக்கும் அத்தனைபேருக்கும் அவை கிடைக்கவில்லை என்பதோடு உலகில் தொழிலாளர்கள் நடத்திய நீண்டநெடிய போராட்டங்களை பொதுவுடைமையாளர்கள் சொந்தம் கொண்டாடவும் முடியாது;

என்று பிரமீடு கட்டும் தொழிலாளர்கள் தரமான உணவுக்காக வேலைநிறுத்தம் செய்தனரோ அன்றே வர்க்கப்போராட்டம் தொடங்கிவிட்டது;

காரல்மார்க்சு எழுதித்தான் தொழிலாளர்கள் போராட தொடங்கியதாக கொள்ளவியலாது;

பொதுவுடைமை ஒரு அருமையான கொள்கை; ஏட்டைப் புரட்டினால் எல்லாமே அருமையான கொள்கைகள்தான்; ஆனால், நடைமுறை என்பது வேறல்லவா?!

தமிழகத்தில் இருக்கும் பொதுவுடைமையாளர்களைப் பற்றி கூறவும் வேண்டுமா?!
சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பையோ, வியட்நாமிடம் சீனா மண்ணைக்கவ்வியதையோ,இரசியாவின் செசன்யா ஆக்கிரமிப்பையோ, சோவியத் ஆப்கானிஸ்தானில் மண்ணைக் கவ்வியதையோ, ஹங்கேரியின் தொழிலாளர் கிளர்ச்சியை சோவியத் படைவலிமையால் நசுக்கியதையோ, அதிகாரப் பகிர்வு இல்லாததால் சோவியத் உடைந்துபோனதையோ எங்கும் கூறமாட்டார்கள்;

அமெரிக்கா செய்தால் முதலாளித்துவம், இரசியா செய்தால் அது பொதுவுடைமை;
பொதுவுடைமைக் கொள்கைகளின் கனவில் மிதக்கும் கம்யூனிஸ்டு தமிழர்களே கண்களைத் திறந்து நடைமுறையைக் கவனியுங்கள்;

பொதுவுடைமை என்பது முதலாளி வர்க்கத்தாலோ ஏகாதிபத்திய நாடுகளாலோ மிகவும் பாதிக்கப்பட்ட நாட்டுமக்களுக்காக உருவானது;
நமக்கும் அதேபோன்ற பாதிப்பு இருந்தாலும் அதைவிட தலையாயப் பிரச்சனையாக இனப்பிரச்சனை முதன்மையாக உள்ளது;

மக்கள் எந்த விதத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனரோ அதை எதிர்த்துப் போராட அவர்களைத் திரளச்செய்வதே புரட்சி;

நம்மை சுற்றியுள்ள அடக்குமுறைகளைக் கூர்ந்துநோக்குங்கள் அவை பெரும்பாலும் இனரீதியானவை;
பொதுவுடைமை ஒருநாளும் நமக்கு சரிவராது;

சீனாவின் கரும்பு விவசாயிகளுக்கு கூலியுயர்வு கேட்டு ஆசியாவின் முதல் பொதுவுடைமையாளர் சிங்காரவேலர் தலைமையில் தமிழகத்தில் போராடினோமே அதனால் என்னத்தைக் கண்டோம்;

தோழர் ஜீவானந்தம் தவிர்த்து நமது தாய்நிலம் 1956ல் மொழிவாரி மாநிலங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டபோது எந்த பொதுவுடைமைக் கட்சி குரல்கொடுத்தது;

ஈழத்தில் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கோ ஈழப்படுகொலைக்குப் பிறகான தமிழரின்விடிவுக்கோ எந்த கம்யூனிஸ்டு நாடு குரல்கொடுக்கிறது?
பொதுவுடைமை நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவாக அரணாக காத்துநிற்பது ஏன்?

ஆகவே தமிழர்களே இனவெழுச்சி ஒன்றுதான் நமக்கான விடிவை நல்கும்;

ஸ்டாலின் கூறுகிறார் 'ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஒடுக்கும் மக்களின் தொழிலாளர் வர்க்கம் குரல்கொடுக்காத போது பிரிவினையைப் பொதுவுடைமை ஆதரிக்கும்'.

இது அவரது தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம்; 
ஸ்டாலின் சாயம்வெளுத்து சோவியத் யூனியன் சிதறிவிட்ட நிலையில் இன்று அவர்களை மறந்துவிட்டு நமது  தனித்தன்மையான பிரச்சனைகளை  அதற்கான தனித்தன்மையோடு அணுகுவதே சரி; 

10,000ஆண்டுகள் பண்பாட்டுப் பழைமை கொண்ட நம் தமிழினத்திற்கு உண்மையான பொதுவுடைமை என்பது இனரீதியான அடக்குமுறைக்கு இனரீதியாகக் கிளர்ந்தெழுந்து வல்லாதிக்கத்தை தோற்கடித்து ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதே ஆகும்.

No comments:

Post a Comment