Wednesday 15 July 2015

மூன்றாம் தலைவர் ஆட்சி

மூன்றாம் தலைவர் ஆட்சி

ழழழழழழழழழழழழழழழழழழழழ

ஒரு தேர்ந்த நாடக ஆசிரியன் தானே ஒரு நாடகம் எழுதி அதில் தானே கதாநாயகனாக நடித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் எமது மூன்றாம் தலைவரின் வாழ்க்கை இருந்தது.

தனது வாழ்க்கையின் தொடக்கத்தையும் அவர் தாமே எழுதினார்.
தனது வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தையும் தானே தீட்டினார்.
தனது எதிரிகளை தானே உருவாக்கினார்.
தன்னிடம் தானே தோற்றார்.
தன் முடிவையும் தானே எழுதினார்.
அந்த நாடக ஆசிரியன் தன் நாடகக் கதாபாத்திரங்களை கட்டுப்படுத்தலாம். அந்த நாடகத்தைப் பார்ப்பவர்களையும் என்றென்றைக்கும் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?,
அப்படித்தான் எமது தலைவர் தனது வாழ்க்கைக்குப் பிறகான நிகழ்வுகளை கட்டுப்படுத்துகிறார்.

மற்ற உலகத்தலைவர்கள் போலன்றி எம் தலைவர் சீமானாவே வாழ்ந்தார்.
அவர் பட்டினி கிடந்ததில்லை, எந்த சுகத்தையும் குறைத்துக்கொள்ளவில்லை, மேடை போட்டுக் கெஞ்சவில்லை, புத்தகங்கள் எழுதவில்லை, சிறையில் வாடவில்லை, யாரிடமும் ஆதரவு கேட்டதில்லை, யாருக்கும் ஒரு நன்மையும் செய்ததில்லை.

அவர் அழிவுக்கென்றே பிறந்தார், எதையும் ஆக்கவில்லை.
ஆனாலும் அவர் ஒப்பாரும் மிக்காரும் எவருமிலாத் தலைவனாக உருவெடுத்தார்.

எம் தலைவர் கூறுவார் "நன்றியுள்ள நாய்கள் பட்டினி கிடக்கலாம். ஆனால், திருட்டுப் பூனைகள் பட்டினி கிடப்பதில்லை".

அழிப்பவனான எமது மூன்றாம் தலைவர் அழியவேண்டியவர்களை அழித்தார்.
கொள்ளைக்காரர்களைக் கொள்ளையடித்தார்.
கொலைகாரர்களைக் கொலை செய்தார்.
சட்டத்திற்குப் புறம்பானவற்றைக் கடத்தினார். ஆனால், மனதிற்குப் புறம்பானவைகளை அல்ல.
பெரும்பொருள் ஈட்டினார்.
ஆயுதங்ளைக் குவித்தார்.
படையொன்றை நிறுவினார்.
தன் காலடியில் ஒரு பேரரசைக் கட்டியாண்டார்.

அவர் நினைத்திருந்தால் தமது படையை விரிவுபடுத்தி உலகையே ஒரு குடையில் ஆண்டிருக்கக்கூட முடியும்.
ஆனால், எம் தலைவர்.தனக்கான ஒரு எல்லையை வகுத்து அதற்குள்ளேயே நின்றுகொண்டார்.

"நாளை சாகத் தயார் என்றால் இன்று நீ உலகை ஆளலாம்" என்பது அவரது அறைகூவல்.
எவருக்கும் அடங்காமல் வாழநினைப்பவர் எல்லாம் அவர்பின்னே திரண்டார்கள்.
அவரது படை தன்னைத்தானே கட்டியெழுப்பியது.
அங்கே எல்லோரும் தளபதிகள் யாருக்குக்கீழேயும் யாரும் இல்லை.
மூன்றாம் தலைவர் படையானது எத்தனை பெரிய படையையும் விரல்சொடுக்கில் வீழ்த்தியது.
அவரது படைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
புகைக்கலாம், குடிக்கலாம், ஒழுக்கம் தவறி நடக்கலாம், கொலை செய்யலாம்.
ஆனால்,
தன் மனதின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது.
தனியறையில் தனியாக புகைக்கலாம் குடிக்கலாம்.
ஒழுக்கம் தவறலாம் ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது, வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பவருடன் ஒழுக்கம் தவறக்கூடாது.
சொல்லப்போனால் அவரது படை அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததேயில்லை.
ஆனால், அவர் நினைத்ததை செய்துகொண்டிருந்தது.
அவர் தமது படையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், அவர்களின் மூளையையும் இதயத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அவர் எப்போதுமே எது நடைமுறையில் ஆகுமோ அதைத்தான் செய்தார்.
முதலில் அவரைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஆதரித்தார்கள் தலைவர் கொஞ்சம் வளர்ந்தார்.
பிறகு அவரது சாதிக்காரர்களை அவரை ஆதரித்தார்கள் இன்னும் வளர்ந்தார்.
பிறகு அவரது வட்டாரம் ஆதரித்தது, பிறகு அவரது மதத்தினர் அவரை ஆதரித்தனர், அதன்பிறகு அவரது இனம் அவரை ஆதரித்தது. அவர் பேருரு எடுத்தார்.
ஆனால் இந்த எல்லையில் அவர் நின்றுகொண்டார்.
தனக்கான கொள்கை ஒன்றை உருவாக்கினார்.
"உன் முதல் அடையாளம் நீ ஒரு மாந்தன் என்பது, அதன்பிறகு உனது அடையாளம் உன் இனம், அதன்பிறகு ஒன்றுமில்லை".

இதன்பிறகுதான் அவருக்கான எதிர்ப்புகள் வரத்தொடங்கின.
மதத்திற்காக உயிரையே அர்ப்பணித்தவர்கள் திரண்டார்கள்.
சாதிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் திரண்டார்கள்.
வர்க்கத்தை உயர்த்துவோம் என்று இருந்தவர்கள் திரண்டார்கள்.
பிற இனத்தவர்கள் இனவேறுபாடின்றித் திரண்டார்கள்.
தலைவர் தனியாக நின்றார்.
தன் இனவுணர்வாளர்களையும் அவர் ஒதுங்கச்சொல்லிவிட்டு தானே ஒற்றை ஆளாக நாற்புறமும் சூழ்ந்திருந்த எதிரிகளுடன் நேரடியாக மோதினார்.

எவரைவிடவும் இரக்கத்திற்குரியவராக எம் தலைவரின் எதிரிகளைக் கூறலாம்.
ஏனென்றால் எம் தலைவரின் ஒரு பலவீனத்தைக்கூட அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.
அவர்கள் தலையெடுக்கும் முன்பே தலையிழந்தார்கள்.
அவர் வைரம் போல எல்லாப் பக்கமும் வலிமைபொருந்தியவராக இருந்தார்.
யார் எத்தனை வேகமாக மோதினார்களோ அத்தனைத் துண்டுகளாக சிதறினார்கள்.

சட்டம் அவருக்கு வளைந்துகொடுத்தது, சராசரி மக்களை அடக்கியே பழகியவர்கள் அவரை எழுந்து வணங்கினார்கள்.
கொள்ளைக்காரர்கள் அவரைத் தன் போலெண்ணி நேசக்கரம் நீட்டினார்கள்.
அதிகார ஆற்றல் பெரிய பேரம்  ஒன்றோடு காத்துக்கொண்டிருந்தது.
ஆனால், அவர் விலைபோகவில்லை.
அவர் சொல்லுவார் "இருட்டுக்கு அஞ்சாமல் இருக்க நீ பேயாக மாறவேண்டும்".
ஆனால், அவர் மற்ற பேய்களுடன் கைகோர்க்கவில்லை.

பெருவலிமை பெற்றவராதலால் அவரது கட்டுப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே வந்துவிட்டது.
பொறுமையிழந்த அதிகாரக் கடவுளர்கள் படை அனுப்பினார்கள், தோற்பதற்கென்றே வந்ததுபோல அது தோற்றது.
பல்வேறு திட்டங்கள் தீட்டப்பெற்றன.
பிரித்தாளும் தந்திரம் அவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்டது.
மதவெறியர்களையும் அவர்பின்னால் இருந்த மக்களையும் அந்த மதத்தின் இளைஞர்களை வைத்தே ஒழித்துகட்டினார்.சாதிவெறியர்களையும் அவர்களுக்கு ஆதரவான மக்களையும் அச்சாதி இளைஞர்களை வைத்தே ஒழித்துகட்டினார்.
மற்ற இனவெறியர்களையும் அவர்பின் நிற்பவர்களையும் ஒட்டுக்குழு உருவாக்கி அழித்தார்.
அழித்தார் என்பது முக்கியமல்ல.
அதை ஆவணப்படுத்தியதும் அம்மக்களுக்கு இணவுணர்வு தாண்டாத தலைமைகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவர் வல்லாதிக்கங்களை உட்கார்ந்த இடத்திலிருந்து அடித்தார்.

எதை அவர் செய்துவிடக்கூடாது என்று அவரிடம் வல்லாதிக்கங்கள் அடக்கி வாசித்தனவோ அதையும் அவர் செய்தார்.
ஆளவே பிறந்தவரான எம் மூன்றாம் தலைவர் ஆட்சிபீடத்தை தமக்கே உரிய ஒன்றைப்போல எடுத்துக்கொண்டார்.
அதிர்ச்சியடைந்த வல்லாதிக்கங்கள் உலகையே திரட்டிவந்து போரிட்டு தோற்றுப்போனதால் மேலும் அதிர்ச்சியடைந்தன.
எதிர்க்க எதிர்க்க அவரது வலிமை கூடிக்கொண்டே போனது.
போரிடப் போரிட அவரது எல்லை விரிந்துகொண்டே போனது.
இனிமுடியாது என்று அவர்கள் குறுகிய காலத்திலேயே ஒப்புக்கொண்டு விலகினர்.

அவரது ஆட்சிப்பகுதியை இரும்புத்திரை ஒன்று மூடியது.
இருண்டகாலம் தொடங்கியது.
தலைவர் தனது அழிவுவேலையைத் தடையின்றி செய்யத்தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் அங்கே நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
அதன்பிறகு ஆங்காங்கே எதிர்ப்புப் படைகள் முளைத்தன.
உலகளாவிய படையையே தோற்கடித்த எம் தலைவர் நேற்று முளைத்த காளான்களிடம் தோற்றுபின்வாங்குவதாகச் செய்திகள் வெளியாயின.
எதிர்படைக்கு வெளியிலிருந்து அத்தனை சலுகைகளும் அள்ளிவீசப்பட்டன.
இரண்டே ஆண்டுகளில் எதிர்படை வென்றது.
அந்த படையை நேர்மையான படை என்றும் விடுதலைப் படையென்றும் உலகநாடுகள் தேடிவந்து அங்கீகரித்தன.

ஆம். எம் தலைவரேதான் அந்தப்படையை உருவாக்கினார்.
எம் தலைவரேதான் அதை நேர்மையானதாக படைத்தார்.
எம் தலைவரேதான் அதனிடம் தோற்றார்.
எம் தலைவரேதான் தம் அழிவுப் பட்டியலை அவர்களிடம் கொடுத்து தன்னை கொடுங்கோலனாக அறிவிக்கச்சொன்னார்.
எம் தலைவரேதான் தமது உண்மையான கொள்கைகளை அவர்களிடம் அளித்து நிறைவேற்றச் சொன்னார்.

விடுதலைப் படை ஆட்சியைப் பிடித்த பிறகும் அவர் பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.
பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால், தலைமறைவாகவெல்லாம் இருக்கவில்லை.
மூன்றாம் தலைவரை தண்டிக்க எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதும் தனிநாடு தருவதாகச் சொன்னபோதும் விடுதலைப் படை மூன்றாம் தலைவரை எதுவும் செய்யவில்லை.
இதுதான் மேற்சொன்னவற்றிற்கெல்லாம் சான்று.
விடுதலைப் படையின் தலைவரான நான்காம் தலைவர் ஆட்சியிருக்கையில் அமர்ந்திருந்தாரேயொழிய ஆளவில்லை.
அமைதியாக சாகும்வரை ஆண்டது எமது மூன்றாம் தலைவர்.
ஒரு புரட்சியை செய்துமுடிக்க அழிப்பதும் நடக்கவேண்டும்.
ஆக்கலும் நடக்கவேண்டும்.
எம் மூன்றாம் தலைவர் அழிக்கும் பங்கை நிறைவேற்றினார்.
தாம் உருவாக்கிய படை மூலம் அதைத் தொடரவும் செய்யகொண்டிருப்பார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்காம் தலைவர் மூன்றாம் தலைவரைக் கமுக்கமாகச் சந்திப்பார்.
யார் யார் தமக்கு இடைஞ்சல் என்ற பட்டியலை அளிப்பார்.
அதை அளிக்குமுன்னரே மூன்றாம் தலைவர் கணக்குப்போட்டு அவர்களுக்காக ஆள்வைத்திருப்பார்.
பட்டியலைப் பார்த்ததும் ஒரே வாரத்தில் அவர்கள் கதை முடிந்திருக்கும்.
உலகளாவிய தலைவர்கள் படுகொலை நடக்கிறதென்றால் அச்சமயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அறியலாம்.

அவர் தன்னை நியாயப்படுவதும் இல்லை.தாம் செய்தவற்றிற்கான பழியைத் தாமே அவர் ஏற்றுக்கொண்டார்.
எந்த வடிவத்தில் தன் மக்களுக்கு கொடுமை நடந்தாலும் அதை அப்படியே செய்தவர்களுக்கு அவர் திருப்பியளிச் சொன்னார்.

தன் செயல்பாடுகளில் மக்களை அதில் இணைக்கவில்லை.
எம் தலைவர் நினைத்திருந்தால் இராணுவ ஆட்சி நடத்தி சர்வாதிகாரியாக வீற்றிருந்திருக்கலாம்.
எவரும் தடுத்திருக்கமுடியாது.
ஆனால், அவர் மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டி அதன்மூலம் மக்களைக் களங்கப்படுத்தவில்லை.
மக்கள் மீதிருந்த அன்பை அவர் வெளிக்காட்டவும் இல்லை.

மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு புலி.
அது இரக்கமில்லாததுதான், கொடூரமானதுதான், அழிக்கவே பிறந்ததுதான்.
ஆனால், அது இல்லாவிட்டால் காட்டிற்குப் பாதுகாப்பு இல்லை.

அழிக்கும் ஆற்றலுக்கானத் தேவை இருக்கும்வரை வரலாற்றில் எம் தலைவருக்கான இடம் இருக்கும்.

"உன்னை நீயே ஆளவைத்தவன் நானே"
-மூன்றாம் தலைவர்.

No comments:

Post a Comment