கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)
மார்சல் நேசமணி தலைமையில் நடந்த மண்மீட்பு போராட்டத்தில் அன்று டி.வி.ஆர் தலைமையில் இயங்கிய தினமலர் நாளிதழ் தமிழர்களுக்கு பல்வேறு தடைகளையும் மீறி முழு ஆதரவை வழங்கியது.
1954 இல் தினமலர் வெளியிட்ட வரைபடம் மற்றும் கட்டுரைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
---------------
ஐக்கிய கேரளமும் ஐக்கிய தமிழகமும் - 1
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரை திருவிதாங்கூரில் மலையாளிகளும், தமிழர்களும் அண்ணன், தம்பி முறையில் சகோதரர் களாக வாழ்ந்து வந்தார்கள். எந்தவித இன வேறுபாடுகளும் கிளம்பியதே இல்லை. தென்திருவிதாங்கூரிலுள்ள தமிழர்களில் சிலர் ஒரு காலத்தில், தங்கள் பள்ளிக்கூடங்களில் மலையாளம்தான் போதிக்கப்பட வேண்டும், அப்படியானால்தான் ராஜ்ஜிய நிர்வாகப் பதவிகளில் கூடுதல் பங்கு கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு உயர்தரப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப் பண்டிதர் இருந்தால், நான்கு மலையாளப் பண்டிதர்கள் இருப்பார்கள்.
விளவங்கோடு, நெய்யாற்றங்கரை மக்களில் இன்று கூட அநேகருக்கு மலையாளம்தான் தெரியும்.
அவர்களில் சிலர் மலையாள நடையுடை பாவனைகளையே அனுஷ்டித்தும் வந்தார்கள்.
பெண்கள்கூட தங்கள் தமிழ் மரபுச் சேலைகளைக் கைவிட்டுவிட்டு, வெள்ளை ‘முண்டு’ அணிந்து பெருமை கொண்டாடினர்கள்.
இன்னும் ஒருபடி போனால் மாவேலிக்கரை, மூணாறு, தொடுபுழை, வைக்கம் முதலான இடங்களில் வசிக்கும் பெருவாரியான தமிழர்கள், நடையுடை பாவனைகளில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் மலையாளிகளாகவே காட்சியளித்து வந்தார்கள்.
ஆனால், கல்யாணம் போன்ற சடங்குகளில் மட்டும் தமிழ் மரபைக் கடைப்பிடித்து வந்தார்கள்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
இரும்பு உள்ளம் படைத்த நமது ஒப்பற்ற தலைவர் வல்லபாய் படேல், திருவிதாங்கூரையும், கொச்சியையும் ஒன்றாக இணைத்தார்.
இந்த இரு சுதேச ராஜ்ஜியங்களும் அப்படியே இருந்தால், பிற்காலத்தில் அவை மூலம் நாட்டிற்கு ஏதாவது கேடுகள் சம்பவிக்கலாம் என்பதும் இணைப்பிற்கு ஒரு காரணமாகும்.
அது மட்டுமல்ல, கிரமமாக சுதேச ராஜ்ஜியங்களை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நெடுநாளைய கனவு.
அக்கனவுதான் வல்லபாயை அவ்வாறு செய்யத் துண்டியது.
இந்த இரண்டு இராஜ்ஜியங்களும் சேர்ந்த பிறகும் தமிழர் - மலையாளி உறவு பாதிக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
இன்று திரு - கொச்சியில் இருக்கும் 90 லட்சம் ஜனத்தொகையில் தமிழர் 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறார்கள்.
இந்தக் கணக்கிற்கு, ‘சென்சஸ் ’ ஆதாரம் கிடையாது.
ஏனெனில் மலையாளம் பேசும் தமிழர்களை எல்லாம் மலையாளிகளாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.
தோவாளை, அகஸ் தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஏழு தாலுகாக்களிலும் முழுக்க முழுக்கத் தமிழர்களே இருக்கிறார்கள்.
நெய்யாற்றங்கரையில் நூற்றுக்கு அறுபது தமிழர்கள்.
சித்தூரிலும் அப்படியே.
இதுதவிர நெடுமங்காடு, பத்மனாபபுரம் தொடங்கி மலையிலுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் முக்காலே மூணு வீசம் பேர் தமிழர்கள். திருவனந்தபுரத்தில் பாதிப்பேர் தமிழர்கள்.
மற்றும் கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கொச்சி முதலான நகரங்களிலும், நிறையத் தமிழர்கள் குடியிருந்து வருகிறார்கள்.
சிறு சிறு ஊர்களிலும் தமிழர்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் சரியாகக் கணக்கு எடுத்துப் பார்ப்பதாக இருந்தால், இந்நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் தமிழர்கள் என்பது புலனாகும்.
15 இலட்சம் தமிழர்கள் என்று சொல்வது நமக்கே நம்முடைய கணக்கு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழர் கணக்கு இவ்வாறு இருக்கிறது என்பதை மனத்தில் கொள்வோம்.
மக்களாட்சி ஏற்பட்டதிலிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் கவனிப் போம்.
முதலாவதாகப் பட்டம் தாணுப்பிள்ளை மந்திரி சபை அமைத்தார்.
அதில் ஒரு நாயர், ஈழவர் (சி.கேசவன்), ஒரு கிறிஸ் துவர் (டி.எம்.வர்கீஸ் ) ஆகிய மூவரும் மந்திரிசபையில் அங்கம் வகித்தார்கள்.
தமிழருக்குப் பிரதிநிதியாகப் பி.எஸ் . நடராஜபிள்ளையை எடுத்தார்கள்.
ஆனால், அவருக்கு அன்று ஒரு தினம் மட்டுமே மந்திரியாக இருக்க முடிந்தது.
பின் வெவ்வேறு பதவிகளைக் கொடுத்தார்களே தவிர, மந்திரி பதவி கொடுக்கவில்லை.
இந்த இடத்தை நேயர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
பட்டத்தின் சகாக்களுக்குப் பி.எஸ் .நடராஜபிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு தமிழனை எடுத்தால் என்ன?
அப்படியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் ஜாதி வாரியில்தான் மந்திரிகள் வந்தார்களே ஒழிய, காங்கிரசின் அடிப்படை இலட்சியங் களுக்கு ஒப்ப மந்திரிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஒரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
அல்லது இரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
இல்லை, திரு - கொச்சி அரசியலில் அப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத பேதமற்ற ஆட்சியை ஸ்தாபிக்க முடியவில்லை.
ஜாதி வாரியாகத்தான் எடுக்க முடிந்தது.
அப்படியானால், நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை உள்ள தமிழனுக்கு இடம் ஏன் கொடுக்கவில்லை?
மலையாளிகளை விட, பழைய காங்கிரசில் தமிழனே கணக்கரிய தியாகங்களைத் திருவிதாங்கூரில் புரிந்திருக்கிறான் என்பது வெள்ளிடைமலை.
அப்படிப்பட்ட தமிழர்களை அலட்சியம் செய்வது, மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்தில் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் அடியாகும்.
அந்த முதல் அடி விவேகமுள்ள தமிழர்களை எவ்வளவு தூரத்திற்குப் புண்படுத்தி இருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை.
அதற்குப் பின் உள்ள அரசியல் சூழ்நிலைகளையும், சம்பவங்களையும் நாளைய தலையங்கத்தில் தொடர்ந்து ஆராய்வோமாக.
(ஜூலை 23, 1954 ‘தினமலர்’ தலையங்கம்).
--------------------------
ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 2
மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்திலேயே பட்டம் மந்திரி சபையினர் தமிழர்களுக்குத் தந்த, ‘முதல் அடியை’ நேற்று விளக்கியிருந்தோம்.
அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களைப் பார்ப்போம்.
பட்டம் மந்திரி சபை குடைசாய்ந்ததும், டி.கே.நாராயணப்பிள்ளை அதிகாரத்திற்கு வந்தார்.
அவரது மந்திரி சபையிலும் தமிழனைக் கவனிக்கவில்லை.
அடுத்தபடியாக, சி.கேசவன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
அவரது பதவிக் காலத்திலும் பழைய சொக்கன் சொக்கனே. இந்த மூன்று மந்திரி சபைகளிலும் தமிழர்களது நியாயமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன.
சட்டசபைத் தலைமைப் பதவி என்ற இரண்டாம் வகுப்பு மார்க்கம் கூட தமிழருக்குக் கொடுக்கப்படவில்லை.
அதற்கெல்லாம் கூடத் தமிழர்கள் தங்கள் பிறப்புரிமையை வற்புறுத்தாமல் வாய்பேசாப் பிராணிகளாகவே இருந்தார்கள்.
இரண்டாவது பொதுத் தேர்தல் வந்தது.
திருவிதாங்கூர் தமிழ் நாட்டுக் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானங்கள் கிடைத்தன.
அப்பொழுதும் அவர்கள் கவனிக்கப்படவில்லை.
இதற்கிடையில் காங்கிரசாருக்குள்ளே சண்டை வந்தது.
காங்கிரஸ் மந்திரி சபையே திவாலாகி விடும் என்று பயப்படும்படியான நிலை ஏற்பட்டது.
அதைத் தவிர்க்க, வேண்டாவெறுப்புடன் தமிழர்களின் பிரதிநிதியாக, ஏ.சிதம்பரநாத நாடாரை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார்கள்.
பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது. அத்தேர்தலில் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானம் கிடைத்தது.
கம்யூனிஸ்டுகள் கை வெகுவாகத் தாழ்ந்தது.
உடனே காங்கிரசில் உள்ள மலையாளிகளின் மனம் மாற ஆரம்பித்து விட்டது.
சிதம்பரநாதன் அவசியம் இல்லாமலேயே காங்கிரசின் சொந்த பலத்தால், ‘அடியந்திரம்’ நடத்தி விடலாம் என்று மலையாளிகள் நம்பினர்.
எனவே, மற்றொரு தேர்தல் நடத்தவேண்டும்.
தேர்தல் நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டிக்கவேண்டும் என்பதற்காகக் காங்கிரசார் தங்களுக்குள்ளேயே ஒரு சண்டையைக் கிளப்பிக்கொண்டனர்.
தி.த.கா., தங்களுடன் நிபந்தனையின்றி இணையவேண்டும்; இல்லையேல் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தி.த.கா., விற்கு ஒரு தனி பி.சி.சி., அந்தஸ்து கேட்டார்கள்.
கடைசியில் ஒரு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி அந்தஸ்தாவது கிடைக்குமா என்று கூடப் பார்த்தார்கள்.
ஒன்றும் பயனில்லை.
தங்களை வெளியேற்ற திரைமறைவில் பல சூழ்ச்சிகள் நடந்துவந்தன என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது.
உடனே அவர்கள் மானமாகப் பதவியை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்தார்கள்; சட்டசபையும் கலைக்கப்பட்டது.
அடுத்த தேர்தலும் நடந்தது.
ஆனால், ஒரு ஆச்சரியம். . .
காங்கிரஸ் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்தது.
117 பேர் கொண்ட சட்டசபையில் 45 பேர்தான் வந்தார்கள்.
தி.த.கா.,விற்குப் பெரும் வெற்றி கிடைத்தது.
எட்டாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
மக்களின் ஆட்சியில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அரசியல் குரோதங்களை எடுத்துக்காட்டவே இங்ஙனம் பழைய சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
இவை இத்தோடு நிற்கட்டும் .
மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சி, தூங்கியவன் கதை போல சப்பென்று இருந்தபோது, பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணமும், அதைத் தொடர்ந்து ஆந்திர ராஜ்ஜியம் அமைந்ததும் இந்தியாவுக்கே புது உத்வேகத்தை ஊட்டியது.
நேருஜியைக் கூடப் பலமாக உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அந்த உத்வேகத்தை எப்படியாவது தணிக்க வேண்டும் என்பதற்காக, மூவர் கொண்ட ஒரு ராஜ்ஜிய புனர் அமைப்புக் கமிஷனை நேருஜி நிறுவினார்.
கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டுவதையும், அவர்கள் குறிப்பிடும் எல்லைகளையும் நினைக்கும் போது நமக்கு வருத்தம் ஏற்படுவதோடு சிரிப்பே அதிகம் ஏற்படுகிறது.
கேரளத்தில் இருந்து ஒருவர் சொல்கிறார்,
‘இது மேற்குக் கரை ராஜ்ஜியமாக இருக்க வேண்டும்’
அதாவது, குமரி முனை முதல் பம்பாய் வரை அவருக்குத்தானாம்.
இன்னொருவர் சொல்கிறார்,
‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையிலும் கேரளம்’.
ஆனால், நீலகரி, கோயம்புத்தூர், குடகு இந்த மூன்றும் இந்த ராஜ்ஜியத்தில் சேர்ந்தால்தான் கேரள ராஜ்ஜியம் சிறப்பாக அமைய முடியுமாம்.
அவர்களில் யோக்கியமானர்கள், இரண்டு மாவட்டங் களைக் கொண்ட மலபாரையும், திரு - கொச்சியையும் சேர்ந்த ஒரு கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஏனைய்யா . . . தெற்கு கிழக்கு பாகங்களிலும், மலைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்,
‘பரசுராமன் கோடரி எறிந்து உண்டாக்கிய எல்லையில் யாருக்குமே தலை போட உரிமை இல்லை’ என்று சொல்கிறார்கள்.
கன்னியா குமரியில் சென்னை கவர்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
கன்னியாகுமரியில் ரோட்டரி கிளப்பினர் கொடுத்த விருந்து ஒன்றில் கவர்னர் பேசுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்,
அசாம் மக்களும் உங்கள் திரு - கொச்சியைப் போல் பரசுராமன்தான் அவர்களது நாட்டைச் சிருஷ்டித்ததாகக் கூறுகிறார்களாம்.
நல்லவேளை, இந்தத் தாமோதர மேனன் ஒருவரும் அங்கு இல்லையே என்று மகிழ்ந்தேன்.
அவர் இதைக் கேட்டால் அசாமையும், கேரளத்தோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி ஆரம்பித்து விடுவார்களே! அப்பொழுது நம்மைப் பிடித்து இருக்கும் தலைவலி அவர்களையும் பிடிக்குமே என்று நினைத்தேன்.
பரசுராமர் கதையை இழுத்து அர்த்தமற்ற விவாதத்தைக் கேரளியர்கள் கிளப்புகிறார்கள் என்பதை நாம் சொல்லவில்லை.
சென்னை கவர்னர் சொல்கிறார் என்பதற்காகவே மேற்கண்ட பிரசங்கத்தை எடுத்துக்காட்டினோம்.
திரு - தமிழ்பிரதேசம் பிரியக்கூடாது என்பதற்குக் கேரளியர்கள் கூறும் பல விதண்டாவாதங்களை நாளை சொல்வோம்.
(ஜூலை 24, 1954 ‘தினமலர்’ தலையங்கம்.)
------------------------
ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 3
திரு - கொச்சி தமிழ்ப் பிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று கேரளியர்கள் கூறுவதற்குரிய காரணங்களைப் பார்ப்போம்.
1) பரசு ராமன் சிருஷ்டித்தது.
2) இயற்கையான சகியமலைத் தொடருக்குள் இந்தப் பகுதி இருப்பது.
3) தமிழ்ப் பிரதேசங்களைப் பிரித்துவிட்டால் நெல், ரப்பர், தேயிலை, ஏலம், மின்சார நிலையங்கள் உற்பத்திகளை இழக்கவேண்டி வருவதால் பட்ஜெட்டைச் சரிக்கட்ட முடியாது.
4) அப்படியே தமிழர்கள் தங்களுடன் இருக்க இஷ்டப்படாவிட்டால் இந்தப் பகுதியை விட்டுப் போய் விடட்டும். அவர்கள் இங்குப்பிழைக்க வந்தவர்கள்தான்.
5) இனி ஒரு விசித்திரமான காரணத்தையும் கேளுங்கள்.
"நீங்கள் அங்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இதுபோல பள்ளிக்கூடம் உண்டா?
ஆஸ் பத்திரி கள் உண்டா?
போலீஸ் பாதுகாப்பு உண்டா?
அடிப்படைத் தீர்வை உண்டா?
இவ்வளவு சாலைகள் உண்டா?
இவையெல்லாம் இதுபோல் உங்களுக்கு அங்கு ஏற்பட வேண்டுமானால் இன்னும் நூறு வருடம் ஆகுமே?!"
இதையெல்லாம் நாம் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
1) பரசுராமர் காலத்தைப் பார்ப்போம்:
இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானம், பாரதத்திலுள்ள காந்தார ராஜ்ஜியம்.
காந்தார ராஜனின் மகள்தான் காந்தாரி.
ஆகையினால், எந்த வகையிலும் ஆப்கானிஸ்தானத்தை நாம் விடக்கூடாது.
அதேபோல் இப்பொழுது இருக்கும் மேற்குப் பாகிஸ்தான் புராதன பாரதத்தின் ஹிருதயஸ்தானம்.
ஆதலால், அதையும் நாம் திரும்ப அடைய வேண்டும்.
அசாமும், பரசுராமனுடைய சிருஷ்டி ராஜ்ஜியமானதால் அதையும் கேரளத் துடன் சேர்க்கவேண்டும்.
இதெல்லாம் சரிதான் என்றும் நடக்கக்கூடியதென்றும் கருதுவதாயிருந்தால் கேரளமும் சரிதான்.
2) மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே அமைந்திருக்கும் இடம் என்றால், மலைத் தொடருக்குக் கிழக்கே அமைந்திருக்கும் இடம் அத்தனையும் ஒருங்கே சேர்க்கவேண்டாமா?
அப்படியானால் ஆந்திரம் எப்படி சாத்தியம்?
இன்னும் மேற்கு மலைத் தொடருக்குள் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றனவே அவற்றையும் சேர்க்கவேண்டாமா
இது என்ன அபத்த வாதம்.
3) ஒரு மக்களைக் கூட்டாகக் கொண்ட ஒரு பகுதிக்குச் சவுகரியங்கள் வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு பகுதி என்ன பழி செய்தது.
ஒருவருக்கு வீடில்லை என்பதற்காக இன்னொருவருடைய வீட்டை பறித்துக் கொடுப்பார்களா?
பயிருக்காகத் தந்த தண்ணீரிலே கொஞ்சம் மின்சாரம் எடுக்கிறேன் என்றால் விடுகிறார்களா பாருங்கள்.
‘கிருஷ்ணா நதியில் தண்ணீர் பாழாய்ப் போகிறது.
எங்கள் ஆற்காட்டிற்குக் கொஞ்சம் கொடு ஐயா’ என்று ஆந்திரர்களைக் கேட்டுப்பாருங்கள்; அப்போது தெரியும்.
இன்னொரு பகுதி செழிப்பாய் இருக்கவேண்டும் என்பதற்காக யாராவது தன்னிடத்தை விட்டுக்கொடுப்பார்களா?
4) ‘கூலிகள் . . . பிழைக்க வந்தவர்கள்’ என்று அற்பத்தனமாய், ‘மனோரமா’ போன்ற பத்திரிகைகள் எழுதுவது வெட்கக்கேடானது.
இங்கு வாழும் தமிழர்கள், மலையாளிகளையும் விடப் பூர்வகுடிகள்.
மேலும், உண்மையிலேயே கூலிகளாய் இலங்கைக்குப் போன இந்தியர்களை நாம் திரும்ப அழைக்கத் தயாரா?
‘எந்த நியாயத்தில் கூடாது?’ என்பதை நாம் பல பத்திரிகைகளிலும் சர்ச்சை செய்ததை அறிவோம்.
5) நாங்கள் கேட்கிறோம் . . . ‘நீங்கள் மலபார் மக்களோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா?
அங்குப் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, சாலை, பாலம், போலீஸ் , அடிப்படைத் தீர்வை எல்லாம் உண்டா?’
அது மலேரியா நிறைந்த காடாச்சே!
திரு - கொச்சித் தமிழர்களும் இதுநாள்வரை சும்மாதான் இருந்தார்கள்.
எவ்வளவோ அவமதித்தும் கூட, உங்களுக்கு மலபார் பைத்தியம் பிடித்தவுடன்தான் எங்களுக்கும் தமிழ்நாடு பித்துப் பிடித்தது!
ஒன்றுமே இல்லாத மலபாரை நீங்கள் விருத்தி செய்யலாம் என்று நினைக்கிறீர்களல்லவா?
அதுபோல் தரிசாய்க் கிடக்கும் தமிழ்நாட்டையும் பொன் விளையும் பூமி ஆக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
கடைசியாக ஒரு வார்த்தை...
‘மற்ற ஏழு தாலுகாக்களையும் கூட விடலாம்;
தேவிகுளம், பீர்மேடு என்ற இடத்தை எப்படி விடுவது?’ என்கிறது ஒரு குரல்.
ஒரு விஷயத்தை மக்கள் நன்றாகப் பதிய வைக்கவேண்டும்.
அதவாது, பள்ளிவாசல் என்ற இடத்தைத் தமிழர்கள் கேட்கவில்லை.
அதைத் தவிர உள்ள இடத்தைத்தான் கேட்கிறார்கள்.
எனவே, மின்சாரத் திட்டம் போய்விடும் என்று மக்கள் மனத்தைக் குழப்பவேண்டாம்.
மேலும், திவான் வாட்ஸ் காலத்திற்கு முன் திருவிதாங்கூர்காரருக்கு இப்படி ஓர் இடம் இருப்பதாகவே தெரியாது.
நேரியமங்கலம் பாலம் வந்தபிறகுதான் திருவிதாங்கூர் மக்கள் அந்த இடத்தைப் பற்றி அறியத் தொடங்கினார்கள்.
அங்கு இன்னும் பெரும்பான்மைத் தோட்ட முதலாளிகள் தமிழர்களும், வெள்ளையர்களும்தான்.
கண்ணன்தேவன் மலைத் தோட்டத்தில் ஆரம்ப காலந்தொட்டு,
அதாவது கடந்த நூறு வருடமாய் நூற்றுக்கு நூறு தமிழர்கள்தான் தொழிலாளர்கள்.
ஆதலால், தமிழர்கள் அதைக் கேட்பதில் ஒரு தவறும் இல்லை.
எந்தக் குருடனும் அதற்குச் சம்மதிப்பான்.
ஆகையால், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று என்ன முறையில் கேட்கிறார்களோ, அதே நியாயம் ஐக்கிய தமிழகத்துக்கும் பொருந்தும்.
‘நீங்கள் ஐக்கிய கேரளம் என்ற பூதத்தைக் கிளப்பி விட்டீர்கள்;
அதற்குரிய பலியைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களை விடாது.
(ஜூலை 25, 1954 ‘தினமலர்’ தலையங்கம்)