Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Saturday, 4 April 2020

தொடரும் வன ஆக்கிரமிப்பு

தொடரும் வன ஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

Monday, 4 December 2017

கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)

கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)

மார்சல் நேசமணி தலைமையில் நடந்த மண்மீட்பு போராட்டத்தில் அன்று டி.வி.ஆர் தலைமையில் இயங்கிய தினமலர் நாளிதழ் தமிழர்களுக்கு பல்வேறு தடைகளையும் மீறி முழு ஆதரவை வழங்கியது.

1954 இல் தினமலர் வெளியிட்ட வரைபடம் மற்றும் கட்டுரைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
---------------

ஐக்கிய கேரளமும் ஐக்கிய தமிழகமும் - 1

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரை திருவிதாங்கூரில் மலையாளிகளும், தமிழர்களும் அண்ணன், தம்பி முறையில் சகோதரர் களாக வாழ்ந்து வந்தார்கள். எந்தவித இன வேறுபாடுகளும் கிளம்பியதே இல்லை. தென்திருவிதாங்கூரிலுள்ள தமிழர்களில் சிலர் ஒரு காலத்தில், தங்கள் பள்ளிக்கூடங்களில் மலையாளம்தான் போதிக்கப்பட வேண்டும், அப்படியானால்தான் ராஜ்ஜிய நிர்வாகப் பதவிகளில் கூடுதல் பங்கு கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு உயர்தரப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப் பண்டிதர் இருந்தால், நான்கு மலையாளப் பண்டிதர்கள் இருப்பார்கள்.
விளவங்கோடு, நெய்யாற்றங்கரை மக்களில் இன்று கூட அநேகருக்கு மலையாளம்தான் தெரியும்.
அவர்களில் சிலர் மலையாள நடையுடை பாவனைகளையே அனுஷ்டித்தும் வந்தார்கள்.
பெண்கள்கூட தங்கள் தமிழ் மரபுச் சேலைகளைக் கைவிட்டுவிட்டு, வெள்ளை ‘முண்டு’ அணிந்து பெருமை கொண்டாடினர்கள்.
இன்னும் ஒருபடி போனால் மாவேலிக்கரை, மூணாறு, தொடுபுழை, வைக்கம் முதலான இடங்களில் வசிக்கும் பெருவாரியான தமிழர்கள், நடையுடை பாவனைகளில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் மலையாளிகளாகவே காட்சியளித்து வந்தார்கள்.
ஆனால், கல்யாணம் போன்ற சடங்குகளில் மட்டும் தமிழ் மரபைக் கடைப்பிடித்து வந்தார்கள்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
இரும்பு உள்ளம் படைத்த நமது ஒப்பற்ற தலைவர் வல்லபாய் படேல், திருவிதாங்கூரையும், கொச்சியையும் ஒன்றாக இணைத்தார்.
இந்த இரு சுதேச ராஜ்ஜியங்களும் அப்படியே இருந்தால், பிற்காலத்தில் அவை மூலம் நாட்டிற்கு ஏதாவது கேடுகள் சம்பவிக்கலாம் என்பதும் இணைப்பிற்கு ஒரு காரணமாகும்.
அது மட்டுமல்ல, கிரமமாக சுதேச ராஜ்ஜியங்களை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நெடுநாளைய கனவு.
அக்கனவுதான் வல்லபாயை அவ்வாறு செய்யத் துண்டியது.
இந்த இரண்டு இராஜ்ஜியங்களும் சேர்ந்த பிறகும் தமிழர் - மலையாளி உறவு பாதிக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

இன்று திரு - கொச்சியில் இருக்கும் 90 லட்சம் ஜனத்தொகையில் தமிழர் 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறார்கள்.
இந்தக் கணக்கிற்கு, ‘சென்சஸ் ’ ஆதாரம் கிடையாது.
ஏனெனில் மலையாளம் பேசும் தமிழர்களை எல்லாம் மலையாளிகளாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.
தோவாளை, அகஸ் தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஏழு தாலுகாக்களிலும் முழுக்க முழுக்கத் தமிழர்களே இருக்கிறார்கள்.
நெய்யாற்றங்கரையில் நூற்றுக்கு அறுபது தமிழர்கள்.
சித்தூரிலும் அப்படியே.
இதுதவிர நெடுமங்காடு, பத்மனாபபுரம் தொடங்கி மலையிலுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் முக்காலே மூணு வீசம் பேர் தமிழர்கள். திருவனந்தபுரத்தில் பாதிப்பேர் தமிழர்கள்.
மற்றும் கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கொச்சி முதலான நகரங்களிலும், நிறையத் தமிழர்கள் குடியிருந்து வருகிறார்கள்.
சிறு சிறு ஊர்களிலும் தமிழர்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் சரியாகக் கணக்கு எடுத்துப் பார்ப்பதாக இருந்தால், இந்நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் தமிழர்கள் என்பது புலனாகும்.
15 இலட்சம் தமிழர்கள் என்று சொல்வது நமக்கே நம்முடைய கணக்கு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழர் கணக்கு இவ்வாறு இருக்கிறது என்பதை மனத்தில் கொள்வோம்.

மக்களாட்சி ஏற்பட்டதிலிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் கவனிப் போம்.
முதலாவதாகப் பட்டம் தாணுப்பிள்ளை மந்திரி சபை அமைத்தார்.
அதில் ஒரு நாயர், ஈழவர் (சி.கேசவன்), ஒரு கிறிஸ் துவர் (டி.எம்.வர்கீஸ் ) ஆகிய மூவரும் மந்திரிசபையில் அங்கம் வகித்தார்கள்.
தமிழருக்குப் பிரதிநிதியாகப் பி.எஸ் . நடராஜபிள்ளையை எடுத்தார்கள்.
ஆனால், அவருக்கு அன்று ஒரு தினம் மட்டுமே மந்திரியாக இருக்க முடிந்தது.
பின் வெவ்வேறு பதவிகளைக் கொடுத்தார்களே தவிர, மந்திரி பதவி கொடுக்கவில்லை.
இந்த இடத்தை நேயர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
பட்டத்தின் சகாக்களுக்குப் பி.எஸ் .நடராஜபிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு தமிழனை எடுத்தால் என்ன?
அப்படியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் ஜாதி வாரியில்தான் மந்திரிகள் வந்தார்களே ஒழிய, காங்கிரசின் அடிப்படை இலட்சியங் களுக்கு ஒப்ப மந்திரிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஒரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
அல்லது இரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
இல்லை, திரு - கொச்சி அரசியலில் அப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத பேதமற்ற ஆட்சியை ஸ்தாபிக்க முடியவில்லை.
ஜாதி வாரியாகத்தான் எடுக்க முடிந்தது.
அப்படியானால், நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை உள்ள தமிழனுக்கு இடம் ஏன் கொடுக்கவில்லை?
மலையாளிகளை விட, பழைய காங்கிரசில் தமிழனே கணக்கரிய தியாகங்களைத் திருவிதாங்கூரில் புரிந்திருக்கிறான் என்பது வெள்ளிடைமலை.
அப்படிப்பட்ட தமிழர்களை அலட்சியம் செய்வது, மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்தில் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் அடியாகும்.
அந்த முதல் அடி விவேகமுள்ள தமிழர்களை எவ்வளவு தூரத்திற்குப் புண்படுத்தி இருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை.
அதற்குப் பின் உள்ள அரசியல் சூழ்நிலைகளையும், சம்பவங்களையும் நாளைய தலையங்கத்தில் தொடர்ந்து ஆராய்வோமாக.
(ஜூலை 23, 1954 ‘தினமலர்’ தலையங்கம்).
--------------------------
ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 2

மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்திலேயே பட்டம் மந்திரி சபையினர் தமிழர்களுக்குத் தந்த, ‘முதல் அடியை’ நேற்று விளக்கியிருந்தோம்.
அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களைப் பார்ப்போம்.
பட்டம் மந்திரி சபை குடைசாய்ந்ததும், டி.கே.நாராயணப்பிள்ளை அதிகாரத்திற்கு வந்தார்.
அவரது மந்திரி சபையிலும் தமிழனைக் கவனிக்கவில்லை.
அடுத்தபடியாக, சி.கேசவன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
அவரது பதவிக் காலத்திலும் பழைய சொக்கன் சொக்கனே. இந்த மூன்று மந்திரி சபைகளிலும் தமிழர்களது நியாயமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன.
சட்டசபைத் தலைமைப் பதவி என்ற இரண்டாம் வகுப்பு மார்க்கம் கூட தமிழருக்குக் கொடுக்கப்படவில்லை.
அதற்கெல்லாம் கூடத் தமிழர்கள் தங்கள் பிறப்புரிமையை வற்புறுத்தாமல் வாய்பேசாப் பிராணிகளாகவே இருந்தார்கள்.

இரண்டாவது பொதுத் தேர்தல் வந்தது.
திருவிதாங்கூர் தமிழ் நாட்டுக் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானங்கள் கிடைத்தன.
அப்பொழுதும் அவர்கள் கவனிக்கப்படவில்லை.
இதற்கிடையில் காங்கிரசாருக்குள்ளே சண்டை வந்தது.
காங்கிரஸ் மந்திரி சபையே திவாலாகி விடும் என்று பயப்படும்படியான நிலை ஏற்பட்டது.
அதைத் தவிர்க்க, வேண்டாவெறுப்புடன் தமிழர்களின் பிரதிநிதியாக, ஏ.சிதம்பரநாத நாடாரை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார்கள்.

பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது. அத்தேர்தலில் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானம் கிடைத்தது.
கம்யூனிஸ்டுகள் கை வெகுவாகத் தாழ்ந்தது.
உடனே காங்கிரசில் உள்ள மலையாளிகளின் மனம் மாற ஆரம்பித்து விட்டது.
சிதம்பரநாதன் அவசியம் இல்லாமலேயே காங்கிரசின் சொந்த பலத்தால், ‘அடியந்திரம்’ நடத்தி விடலாம் என்று மலையாளிகள் நம்பினர்.
எனவே, மற்றொரு தேர்தல் நடத்தவேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டிக்கவேண்டும் என்பதற்காகக் காங்கிரசார் தங்களுக்குள்ளேயே ஒரு சண்டையைக் கிளப்பிக்கொண்டனர்.
தி.த.கா., தங்களுடன் நிபந்தனையின்றி இணையவேண்டும்; இல்லையேல் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தி.த.கா., விற்கு ஒரு தனி பி.சி.சி., அந்தஸ்து கேட்டார்கள்.
கடைசியில் ஒரு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி அந்தஸ்தாவது கிடைக்குமா என்று கூடப் பார்த்தார்கள்.
ஒன்றும் பயனில்லை.
தங்களை வெளியேற்ற திரைமறைவில் பல சூழ்ச்சிகள் நடந்துவந்தன என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது.
உடனே அவர்கள் மானமாகப் பதவியை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்தார்கள்; சட்டசபையும் கலைக்கப்பட்டது.
அடுத்த தேர்தலும் நடந்தது.

ஆனால், ஒரு ஆச்சரியம். . .
காங்கிரஸ் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்தது.
117 பேர் கொண்ட சட்டசபையில் 45 பேர்தான் வந்தார்கள்.
தி.த.கா.,விற்குப் பெரும் வெற்றி கிடைத்தது.
எட்டாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
மக்களின் ஆட்சியில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அரசியல் குரோதங்களை எடுத்துக்காட்டவே இங்ஙனம் பழைய சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
இவை இத்தோடு நிற்கட்டும் .

மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சி, தூங்கியவன் கதை போல சப்பென்று இருந்தபோது, பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணமும், அதைத் தொடர்ந்து ஆந்திர ராஜ்ஜியம் அமைந்ததும் இந்தியாவுக்கே புது உத்வேகத்தை ஊட்டியது.
நேருஜியைக் கூடப் பலமாக உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அந்த உத்வேகத்தை எப்படியாவது தணிக்க வேண்டும் என்பதற்காக, மூவர் கொண்ட ஒரு ராஜ்ஜிய புனர் அமைப்புக் கமிஷனை நேருஜி நிறுவினார்.

கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டுவதையும், அவர்கள் குறிப்பிடும் எல்லைகளையும் நினைக்கும் போது நமக்கு வருத்தம் ஏற்படுவதோடு சிரிப்பே அதிகம் ஏற்படுகிறது.
கேரளத்தில் இருந்து ஒருவர் சொல்கிறார்,
‘இது மேற்குக் கரை ராஜ்ஜியமாக இருக்க வேண்டும்’
அதாவது, குமரி முனை முதல் பம்பாய் வரை அவருக்குத்தானாம்.
இன்னொருவர் சொல்கிறார்,
‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையிலும் கேரளம்’.
ஆனால், நீலகரி, கோயம்புத்தூர், குடகு இந்த மூன்றும் இந்த ராஜ்ஜியத்தில் சேர்ந்தால்தான் கேரள ராஜ்ஜியம் சிறப்பாக அமைய முடியுமாம்.
அவர்களில் யோக்கியமானர்கள், இரண்டு மாவட்டங் களைக் கொண்ட மலபாரையும், திரு - கொச்சியையும் சேர்ந்த ஒரு கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஏனைய்யா . . . தெற்கு கிழக்கு பாகங்களிலும், மலைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்,
‘பரசுராமன் கோடரி எறிந்து உண்டாக்கிய எல்லையில் யாருக்குமே தலை போட உரிமை இல்லை’ என்று சொல்கிறார்கள்.
கன்னியா குமரியில் சென்னை கவர்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
கன்னியாகுமரியில் ரோட்டரி கிளப்பினர் கொடுத்த விருந்து ஒன்றில் கவர்னர் பேசுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்,
அசாம் மக்களும் உங்கள் திரு - கொச்சியைப் போல் பரசுராமன்தான் அவர்களது நாட்டைச் சிருஷ்டித்ததாகக் கூறுகிறார்களாம்.
நல்லவேளை, இந்தத் தாமோதர மேனன் ஒருவரும் அங்கு இல்லையே என்று மகிழ்ந்தேன்.
அவர் இதைக் கேட்டால் அசாமையும், கேரளத்தோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி ஆரம்பித்து விடுவார்களே! அப்பொழுது நம்மைப் பிடித்து இருக்கும் தலைவலி அவர்களையும் பிடிக்குமே என்று நினைத்தேன்.

பரசுராமர் கதையை இழுத்து அர்த்தமற்ற விவாதத்தைக் கேரளியர்கள் கிளப்புகிறார்கள் என்பதை நாம் சொல்லவில்லை.
சென்னை கவர்னர் சொல்கிறார் என்பதற்காகவே மேற்கண்ட பிரசங்கத்தை எடுத்துக்காட்டினோம்.
திரு - தமிழ்பிரதேசம் பிரியக்கூடாது என்பதற்குக் கேரளியர்கள் கூறும் பல விதண்டாவாதங்களை நாளை சொல்வோம்.
(ஜூலை 24, 1954 ‘தினமலர்’ தலையங்கம்.)
------------------------

ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 3

திரு - கொச்சி தமிழ்ப் பிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று கேரளியர்கள் கூறுவதற்குரிய காரணங்களைப் பார்ப்போம்.
1) பரசு ராமன் சிருஷ்டித்தது.
2) இயற்கையான சகியமலைத் தொடருக்குள் இந்தப் பகுதி இருப்பது.
3) தமிழ்ப் பிரதேசங்களைப் பிரித்துவிட்டால் நெல், ரப்பர், தேயிலை, ஏலம், மின்சார நிலையங்கள் உற்பத்திகளை இழக்கவேண்டி வருவதால் பட்ஜெட்டைச் சரிக்கட்ட முடியாது.
4) அப்படியே தமிழர்கள் தங்களுடன் இருக்க இஷ்டப்படாவிட்டால் இந்தப் பகுதியை விட்டுப் போய் விடட்டும். அவர்கள் இங்குப்பிழைக்க வந்தவர்கள்தான்.
5) இனி ஒரு விசித்திரமான காரணத்தையும் கேளுங்கள்.
"நீங்கள் அங்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இதுபோல பள்ளிக்கூடம் உண்டா?
ஆஸ் பத்திரி கள் உண்டா?
போலீஸ் பாதுகாப்பு உண்டா?
அடிப்படைத் தீர்வை உண்டா?
இவ்வளவு சாலைகள் உண்டா?
இவையெல்லாம் இதுபோல் உங்களுக்கு அங்கு ஏற்பட வேண்டுமானால் இன்னும் நூறு வருடம் ஆகுமே?!"

இதையெல்லாம் நாம் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1) பரசுராமர் காலத்தைப் பார்ப்போம்:
இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானம், பாரதத்திலுள்ள காந்தார ராஜ்ஜியம்.
காந்தார ராஜனின் மகள்தான் காந்தாரி.
ஆகையினால், எந்த வகையிலும் ஆப்கானிஸ்தானத்தை நாம் விடக்கூடாது.
அதேபோல் இப்பொழுது இருக்கும் மேற்குப் பாகிஸ்தான் புராதன பாரதத்தின் ஹிருதயஸ்தானம்.
ஆதலால், அதையும் நாம் திரும்ப அடைய வேண்டும்.
அசாமும், பரசுராமனுடைய சிருஷ்டி ராஜ்ஜியமானதால் அதையும் கேரளத் துடன் சேர்க்கவேண்டும்.
இதெல்லாம் சரிதான் என்றும் நடக்கக்கூடியதென்றும் கருதுவதாயிருந்தால் கேரளமும் சரிதான்.

2) மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே அமைந்திருக்கும் இடம் என்றால், மலைத் தொடருக்குக் கிழக்கே அமைந்திருக்கும் இடம் அத்தனையும் ஒருங்கே சேர்க்கவேண்டாமா?
அப்படியானால் ஆந்திரம் எப்படி சாத்தியம்?
இன்னும் மேற்கு மலைத் தொடருக்குள் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றனவே அவற்றையும் சேர்க்கவேண்டாமா
இது என்ன அபத்த வாதம்.

3) ஒரு மக்களைக் கூட்டாகக் கொண்ட ஒரு பகுதிக்குச் சவுகரியங்கள் வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு பகுதி என்ன பழி செய்தது.
ஒருவருக்கு வீடில்லை என்பதற்காக இன்னொருவருடைய வீட்டை பறித்துக் கொடுப்பார்களா?
பயிருக்காகத் தந்த தண்ணீரிலே கொஞ்சம் மின்சாரம் எடுக்கிறேன் என்றால் விடுகிறார்களா பாருங்கள்.
‘கிருஷ்ணா நதியில் தண்ணீர் பாழாய்ப் போகிறது.
எங்கள் ஆற்காட்டிற்குக் கொஞ்சம் கொடு ஐயா’ என்று ஆந்திரர்களைக் கேட்டுப்பாருங்கள்; அப்போது தெரியும்.
இன்னொரு பகுதி செழிப்பாய் இருக்கவேண்டும் என்பதற்காக யாராவது தன்னிடத்தை விட்டுக்கொடுப்பார்களா?

4) ‘கூலிகள் . . . பிழைக்க வந்தவர்கள்’ என்று அற்பத்தனமாய், ‘மனோரமா’ போன்ற பத்திரிகைகள் எழுதுவது வெட்கக்கேடானது.
இங்கு வாழும் தமிழர்கள், மலையாளிகளையும் விடப் பூர்வகுடிகள்.
மேலும், உண்மையிலேயே கூலிகளாய் இலங்கைக்குப் போன இந்தியர்களை நாம் திரும்ப அழைக்கத் தயாரா?
‘எந்த நியாயத்தில் கூடாது?’ என்பதை நாம் பல பத்திரிகைகளிலும் சர்ச்சை செய்ததை அறிவோம்.

5) நாங்கள் கேட்கிறோம் . . . ‘நீங்கள் மலபார் மக்களோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா?
அங்குப் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, சாலை, பாலம், போலீஸ் , அடிப்படைத் தீர்வை எல்லாம் உண்டா?’
அது மலேரியா நிறைந்த காடாச்சே!
திரு - கொச்சித் தமிழர்களும் இதுநாள்வரை சும்மாதான் இருந்தார்கள்.
எவ்வளவோ அவமதித்தும் கூட, உங்களுக்கு மலபார் பைத்தியம் பிடித்தவுடன்தான் எங்களுக்கும் தமிழ்நாடு பித்துப் பிடித்தது!
ஒன்றுமே இல்லாத மலபாரை நீங்கள் விருத்தி செய்யலாம் என்று நினைக்கிறீர்களல்லவா?
அதுபோல் தரிசாய்க் கிடக்கும் தமிழ்நாட்டையும் பொன் விளையும் பூமி ஆக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை...
‘மற்ற ஏழு தாலுகாக்களையும் கூட விடலாம்;
தேவிகுளம், பீர்மேடு என்ற இடத்தை எப்படி விடுவது?’ என்கிறது ஒரு குரல்.
ஒரு விஷயத்தை மக்கள் நன்றாகப் பதிய வைக்கவேண்டும்.
அதவாது, பள்ளிவாசல் என்ற இடத்தைத் தமிழர்கள் கேட்கவில்லை.
அதைத் தவிர உள்ள இடத்தைத்தான் கேட்கிறார்கள்.
எனவே, மின்சாரத் திட்டம் போய்விடும் என்று மக்கள் மனத்தைக் குழப்பவேண்டாம்.
மேலும், திவான் வாட்ஸ் காலத்திற்கு முன் திருவிதாங்கூர்காரருக்கு இப்படி ஓர் இடம் இருப்பதாகவே தெரியாது.
நேரியமங்கலம் பாலம் வந்தபிறகுதான் திருவிதாங்கூர் மக்கள் அந்த இடத்தைப் பற்றி அறியத் தொடங்கினார்கள்.
அங்கு இன்னும் பெரும்பான்மைத் தோட்ட முதலாளிகள் தமிழர்களும், வெள்ளையர்களும்தான்.
கண்ணன்தேவன் மலைத் தோட்டத்தில் ஆரம்ப காலந்தொட்டு,
அதாவது கடந்த நூறு வருடமாய் நூற்றுக்கு நூறு தமிழர்கள்தான் தொழிலாளர்கள்.
ஆதலால், தமிழர்கள் அதைக் கேட்பதில் ஒரு தவறும் இல்லை.
எந்தக் குருடனும் அதற்குச் சம்மதிப்பான்.
ஆகையால், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று என்ன முறையில் கேட்கிறார்களோ, அதே நியாயம் ஐக்கிய தமிழகத்துக்கும் பொருந்தும்.

‘நீங்கள் ஐக்கிய கேரளம் என்ற பூதத்தைக் கிளப்பி விட்டீர்கள்;
அதற்குரிய பலியைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களை விடாது.
(ஜூலை 25, 1954 ‘தினமலர்’ தலையங்கம்)

Friday, 8 January 2016

குருதியில் நனைந்த குமரி -10

குருதியில் நனைந்த குமரி -10

1954 ஆகஸ்ட்
தமிழர் பகுதிகளில் இருந்த ஆயுத முகாமில் மலையாள காவலர்கள் பேசிக்கொண்டனர்.

"நானும் பார்க்கிறேன் தமிழன் ஒருத்தனாவது ஒரு மலையாளியை அடிப்பானா என்று.
இவ்வளவு நடந்தும் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சொந்த தகராறில் அடித்தால் கூட இங்கே கலவரம் மூட்டிவிடலாம்"

"எல்லாம் அந்த நேசமணி வேலை.
அவர்தான் தென்னாட்டு காந்தியாம்
தென்னாட்டு நேருதான் அப்துல் ரசாக்காம்"

"யார் சொன்னது?!"

"தேர்தல் பிரச்சாரத்திற்கு நேசமணி பயன்படுத்திய புது உத்தி தெரியும்தானே?!
தோப்பூர் சுப்பிரமணியம் வில்லிசைக் குழு.
அதில் பாடுவார்கள்"

"உனக்கு தமிழ் புரியுமா?"

"நான் தமிழ் புரியாததுபோல நடிக்க நீங்கள் என்ன தமிழரா?"

"வேறு என்னவெல்லாம் பாடுவார்கள்?"

"முதலில் தாம் வாங்கிய அடி உதைகளைப் பாடிவிட்டு
பிறகு மலையாளிகளை திட்டி பாடுவார்கள்
கஞ்சியைக் கண்ட மலையாளி சோற்றைக் கண்டால் போவானா?
சுரண்டி தின்ன மலையாளி சும்மா போவானா?
என்றெல்லாம் வரும்.
பட்டம் ஐயாவை பாதகன் என்பார்கள்
நம்மை பாவிகள் என்பார்கள்.
பிறகு நேசமணியைப் புகழ்ந்துவிட்டு
தமிழர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பாட்டு முடியும்"

"ஆமாம். நேசமணியே எழுதிக்கொடுத்திருப்பார் போல.
அவர் பேச்சு எல்லாமே இப்படித்தான்.
முதலில் ஒப்பாரி, பிறகு மலையாளிகளைத் திட்டுவார், பிறகு ஒற்றுமையை வலியுறுத்தி பேச்சு முடியும்"

"இதை இப்படியே விட்டால் காசர்கோடு துளுவருக்கும் கண்ணூர் கோடகருக்கும்
வயநாடு கன்னடர்க்கும்
கொடுக்கவேண்டிவரும் போலிருக்கிறதே
நமக்கு கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம், கோட்டயம், பத்தனந்திட்டா என 8 வட்டங்கள்தான் தேறுமோ?
பெரிய பெரிய மாநிலங்கள் நடுவே நாம் சின்னஞ்சிறியதாக எப்படி வாழ்வது?"

"விடு நம் பட்டம் ஐயா பார்த்துக்கொள்வார்"

"இவர்கள் சிலோன் வரை குடைச்சல் கொடுப்பவர்கள்.
அங்கே பண்டாரநாயகா என்றொருவர் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.
கலவரம் வரும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
பாரேன் இவர்கள் என்னபாடு படுவார்கள் என்று"

"ஆமாம் சிங்களவர்கள் மோசமானவர்கள்
50 ஆண்டுகள் முன்பு மலையாளிகளை அடித்துவிரட்டினர்.
இனி தமிழர்களை அடித்துவிரட்டுவார்கள்"
------------------------------------------
தினமலர் உரிமையாளர் டி.வி.ஆர் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டியிருந்தார்.

"என் அருமை நண்பர்களே
தென் திருவிதாங்கூரில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி நாம் போட்ட செய்திக்கு பரிசாக மிரட்டல் வந்தது.
யாரும் பயப்படவேண்டாம்.
உங்கள் முதல்வேலை இனி மலையாள அரசு நடத்தும் கொடூரங்களை செய்தியாக்குவதுதான்.
தமிழக எல்லையில் நேசமணி ஆட்களிடம் கொடுத்துவிடுங்கள்.
மக்களுக்கு இரகசியமாக அது போய்ச்சேர்ந்துவிடும்.
அவர்களால் தரமுடிந்த பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
அவர்கள் தரும் செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.
செய்தி சேகரிக்கும் ஆட்கள் களத்திற்கு செல்லுங்கள்.
போராட்டம் அங்கே உச்சகட்டத்தை அடைந்துவிட்டது.
மற்ற பத்திரிக்கைகளை விட நம் தினமலர் குழு அவர்களுக்கு ஆதரவாக களத்தில் முழுமூச்சாக இறங்கவுள்ளோம்"
-----------------------------------
1954 ஆகஸ்ட் 14

"தாணுப்பிள்ளை நாடார் கைதாகிவிட்டார்"

"இதோடு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகிவிட்டனர்"

"பிணை மனுக்கள் அத்தனையும் தள்ளுபடி,
நீதிபதிகள் கூட இனவெறி பிடித்து அலைகிறார்கள்"

"ஆரல்வாய்மொழி எல்லையைத் தாண்டி தமிழகம் புகுந்த அகதிகள் எண்ணிக்கை 4000 என்கிறார்கள்.
ஆனால் காணாமல் போனோர் அதைவிட அதிகம்.
பலர் காட்டிலேயே தங்கிவிட்டனராம்"

"ஐயா துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு வீட்டில் எவருக்கும் தெரியாமல் நாட்டுவைத்தியம் பெற்றுவந்த முத்துக்கண்ணு நாடார் இறந்துவிட்டார்"

"மக்கள் பசியால் வாடுகின்றனர் ஐயா
எந்த பொருட்களையும் காவல்துறை கிடைக்கவிடுவதில்லை.
பொய்வழக்குகள் போட்டுக்கொண்டே போகிறார்கள்"

அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகள் நேசமணியின் காதில் விழுந்தது.

இரவு தொலைபேசி அழைத்தது

"ஐயா நான் ரசாக் பேசுகிறேன்"

"அப்பாடா எல்லையைக் கடந்துவிட்டீரா?
ஆமாம் எப்படி கடந்தீர்கள்?"

"நண்பரின் காரில் மறைந்துகொண்டு ஆரல்வாய்மொழி வழியே கடந்தேன்"

"அகதி முகாமைப் பார்த்தீரா"

"பார்வையிட முடியவில்லை ஐயா,
திருநெல்வேலி மக்கள் முடிந்த அளவு ஆதரவு தருவதாகக் கேள்விப்பட்டேன்"

"தற்போது எங்கே இருக்கிறீர்?"

"நீங்கள் சொன்னபடி திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறேன்"

"இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
ஐயா ரசாக்!
இனி போராட்டம் உமது கையில்.
உங்களை மட்டுமே நம்பி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
எப்படியாவது தமிழகத்தையும் மத்தியில் காங்கிரசு தலைவர்களையும் நமது பக்கம் திருப்பிவிடவேண்டும்.
இனி நீங்கள்தான் எல்லாமே"

"ஐயா நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்.
இந்த ரசாக் இருக்கிறான்.
தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
தைரியமாக இருங்கள்"

(தொடரும்)
----------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -9
https://m.facebook.com/photo.php?fbid=646376952132628&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56