Friday 8 January 2016

குருதியில் நனைந்த குமரி -10

குருதியில் நனைந்த குமரி -10

1954 ஆகஸ்ட்
தமிழர் பகுதிகளில் இருந்த ஆயுத முகாமில் மலையாள காவலர்கள் பேசிக்கொண்டனர்.

"நானும் பார்க்கிறேன் தமிழன் ஒருத்தனாவது ஒரு மலையாளியை அடிப்பானா என்று.
இவ்வளவு நடந்தும் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சொந்த தகராறில் அடித்தால் கூட இங்கே கலவரம் மூட்டிவிடலாம்"

"எல்லாம் அந்த நேசமணி வேலை.
அவர்தான் தென்னாட்டு காந்தியாம்
தென்னாட்டு நேருதான் அப்துல் ரசாக்காம்"

"யார் சொன்னது?!"

"தேர்தல் பிரச்சாரத்திற்கு நேசமணி பயன்படுத்திய புது உத்தி தெரியும்தானே?!
தோப்பூர் சுப்பிரமணியம் வில்லிசைக் குழு.
அதில் பாடுவார்கள்"

"உனக்கு தமிழ் புரியுமா?"

"நான் தமிழ் புரியாததுபோல நடிக்க நீங்கள் என்ன தமிழரா?"

"வேறு என்னவெல்லாம் பாடுவார்கள்?"

"முதலில் தாம் வாங்கிய அடி உதைகளைப் பாடிவிட்டு
பிறகு மலையாளிகளை திட்டி பாடுவார்கள்
கஞ்சியைக் கண்ட மலையாளி சோற்றைக் கண்டால் போவானா?
சுரண்டி தின்ன மலையாளி சும்மா போவானா?
என்றெல்லாம் வரும்.
பட்டம் ஐயாவை பாதகன் என்பார்கள்
நம்மை பாவிகள் என்பார்கள்.
பிறகு நேசமணியைப் புகழ்ந்துவிட்டு
தமிழர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பாட்டு முடியும்"

"ஆமாம். நேசமணியே எழுதிக்கொடுத்திருப்பார் போல.
அவர் பேச்சு எல்லாமே இப்படித்தான்.
முதலில் ஒப்பாரி, பிறகு மலையாளிகளைத் திட்டுவார், பிறகு ஒற்றுமையை வலியுறுத்தி பேச்சு முடியும்"

"இதை இப்படியே விட்டால் காசர்கோடு துளுவருக்கும் கண்ணூர் கோடகருக்கும்
வயநாடு கன்னடர்க்கும்
கொடுக்கவேண்டிவரும் போலிருக்கிறதே
நமக்கு கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம், கோட்டயம், பத்தனந்திட்டா என 8 வட்டங்கள்தான் தேறுமோ?
பெரிய பெரிய மாநிலங்கள் நடுவே நாம் சின்னஞ்சிறியதாக எப்படி வாழ்வது?"

"விடு நம் பட்டம் ஐயா பார்த்துக்கொள்வார்"

"இவர்கள் சிலோன் வரை குடைச்சல் கொடுப்பவர்கள்.
அங்கே பண்டாரநாயகா என்றொருவர் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.
கலவரம் வரும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
பாரேன் இவர்கள் என்னபாடு படுவார்கள் என்று"

"ஆமாம் சிங்களவர்கள் மோசமானவர்கள்
50 ஆண்டுகள் முன்பு மலையாளிகளை அடித்துவிரட்டினர்.
இனி தமிழர்களை அடித்துவிரட்டுவார்கள்"
------------------------------------------
தினமலர் உரிமையாளர் டி.வி.ஆர் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டியிருந்தார்.

"என் அருமை நண்பர்களே
தென் திருவிதாங்கூரில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி நாம் போட்ட செய்திக்கு பரிசாக மிரட்டல் வந்தது.
யாரும் பயப்படவேண்டாம்.
உங்கள் முதல்வேலை இனி மலையாள அரசு நடத்தும் கொடூரங்களை செய்தியாக்குவதுதான்.
தமிழக எல்லையில் நேசமணி ஆட்களிடம் கொடுத்துவிடுங்கள்.
மக்களுக்கு இரகசியமாக அது போய்ச்சேர்ந்துவிடும்.
அவர்களால் தரமுடிந்த பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
அவர்கள் தரும் செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.
செய்தி சேகரிக்கும் ஆட்கள் களத்திற்கு செல்லுங்கள்.
போராட்டம் அங்கே உச்சகட்டத்தை அடைந்துவிட்டது.
மற்ற பத்திரிக்கைகளை விட நம் தினமலர் குழு அவர்களுக்கு ஆதரவாக களத்தில் முழுமூச்சாக இறங்கவுள்ளோம்"
-----------------------------------
1954 ஆகஸ்ட் 14

"தாணுப்பிள்ளை நாடார் கைதாகிவிட்டார்"

"இதோடு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகிவிட்டனர்"

"பிணை மனுக்கள் அத்தனையும் தள்ளுபடி,
நீதிபதிகள் கூட இனவெறி பிடித்து அலைகிறார்கள்"

"ஆரல்வாய்மொழி எல்லையைத் தாண்டி தமிழகம் புகுந்த அகதிகள் எண்ணிக்கை 4000 என்கிறார்கள்.
ஆனால் காணாமல் போனோர் அதைவிட அதிகம்.
பலர் காட்டிலேயே தங்கிவிட்டனராம்"

"ஐயா துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு வீட்டில் எவருக்கும் தெரியாமல் நாட்டுவைத்தியம் பெற்றுவந்த முத்துக்கண்ணு நாடார் இறந்துவிட்டார்"

"மக்கள் பசியால் வாடுகின்றனர் ஐயா
எந்த பொருட்களையும் காவல்துறை கிடைக்கவிடுவதில்லை.
பொய்வழக்குகள் போட்டுக்கொண்டே போகிறார்கள்"

அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகள் நேசமணியின் காதில் விழுந்தது.

இரவு தொலைபேசி அழைத்தது

"ஐயா நான் ரசாக் பேசுகிறேன்"

"அப்பாடா எல்லையைக் கடந்துவிட்டீரா?
ஆமாம் எப்படி கடந்தீர்கள்?"

"நண்பரின் காரில் மறைந்துகொண்டு ஆரல்வாய்மொழி வழியே கடந்தேன்"

"அகதி முகாமைப் பார்த்தீரா"

"பார்வையிட முடியவில்லை ஐயா,
திருநெல்வேலி மக்கள் முடிந்த அளவு ஆதரவு தருவதாகக் கேள்விப்பட்டேன்"

"தற்போது எங்கே இருக்கிறீர்?"

"நீங்கள் சொன்னபடி திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறேன்"

"இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
ஐயா ரசாக்!
இனி போராட்டம் உமது கையில்.
உங்களை மட்டுமே நம்பி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
எப்படியாவது தமிழகத்தையும் மத்தியில் காங்கிரசு தலைவர்களையும் நமது பக்கம் திருப்பிவிடவேண்டும்.
இனி நீங்கள்தான் எல்லாமே"

"ஐயா நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்.
இந்த ரசாக் இருக்கிறான்.
தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
தைரியமாக இருங்கள்"

(தொடரும்)
----------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -9
https://m.facebook.com/photo.php?fbid=646376952132628&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment