Saturday, 16 January 2016

குருதியில் நனைந்த குமரி -12

குருதியில் நனைந்த குமரி -12

1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.

"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"

"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"

"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"

"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"

வண்டி கிளம்பியது.

மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.

அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்

"ஐயா வணக்கம்"

"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"

"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"

"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"

"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"

"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"

"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:

"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"

"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"

"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"

"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"

"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"

"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"

"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.

இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.

ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.

"ஹலோ, ராஜா"

"சொல்லு மேகநாதா"

"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு  இருக்கிறீர்கள்?"

"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"

"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"

"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"

"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"

"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"

கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.

சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.

காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.

"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"

"ஐயா அதுவந்து..."

"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"

அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.

ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.

(தொடரும்)
--------------------------------------
குருதியில் நனைந்த குமரி -11
https://m.facebook.com/photo.php?fbid=648488261921497&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment