Sunday, 31 January 2016

குருதியில் நனைந்த குமரி -13

குருதியில் நனைந்த குமரி -13

16 நவம்பர் 1954

இராஜாஜியின் நண்பர் மேகநாதன் நாகர்கோவிலுக்கு வந்து வீட்டுக்காவலில் இருந்த நேசமணியைச் சந்திக்கவந்தார்.

நேசமணி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
ஆங்காங்கே இருந்து வந்த மக்கள் நேசமணியிடம் தமக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தனர்.

"ஐயா வணக்கம், நான் மேகநாதன்"

"வணக்கம் வணக்கம், வாருங்கள்.
துப்பாக்கி சத்தம் கேட்டபிறகும் தமிழகத்திலிருந்து யாரும் வரவில்லையே என்று கவலையில் இருந்தேன்.
நீங்களாவது வந்தீர்களே?!"

"தமிழகத்தின் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்.
தமிழக மக்களுக்கு செய்திகள் முழுமையாகத் தெரியவில்லை"

"ஆமாம். எங்களுக்கேகூட இழப்பு இவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது"

"ராஜாஜிதான் என்னை இங்கே அனுப்பினார்.
விபரங்களை அறிந்துவரச் சொன்னார்"

"ரசாக் அதற்குள் ராஜாஜியை சந்தித்துவிட்டாரா?"

"இல்லையே, ரசாக் தமிழகத்திலா இருக்கிறார்?!"

"என்றால் நீங்கள் இங்கே வந்தது ரசாக் தூண்டுதலினால் இல்லையா?"

"இல்லை, அவர் வந்து கூறித்தான் எங்களுக்கு நிலைமை தெரியவேண்டுமா?
எங்களுக்கு உங்கள்மேல் அக்கறை கிடையாதா?
நாங்கள் உங்கள் போராட்டங்களை ஆரம்பம் முதலே கூர்ந்து கவனித்து வருகிறோம்:

"மிக்க மகிழ்ச்சி, இராஜாஜி எங்கள் மேல் அக்கறையுடன் இருப்பது வியப்பளிக்கிறது"

"அவர் தமிழ்ப் பார்ப்பனர், நம்பூதிரிகள் போன்று அவரைப் பார்க்கவேண்டாம்.
பிராமணர் அனைவரையும் ஒரே பார்வையில் பார்ப்பது எவ்வளவு அறிவீனம்"

"உண்மைதான், மபொசி கூட அடிக்கடி இதைக் கூறுவார்"

"தங்கள் பிரச்சனைகள் அனைத்தும் ராஜாஜிக்குத் தெரியும்.
தற்போதைய நிலையை மட்டும் விளக்கிக்கூறினால் போதும்"

நேசமணி சுருக்கமாகத் தமிழர்கள் மீது நடக்கும் அடக்குமுறையைக் கூறினார்.
மூணாறு தொழிலாளர் பிரச்சனை,
அதற்கு குமரித் தமிழர்கள் குரல்கொடுத்தது,
அதற்காக கைதானது,
அந்த விடுதலையைக் கொண்டாட முடிவு செய்தது,
அதில் 30 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது,
ஊரடங்கு உத்தரவு,
ராணுவ மயமாக்கல்,
3000 மக்கள் அகதிகளாக தமிழகத்தில் நுழைந்தமை,
தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவது என அனைத்தையும் கூறினார்.

"கேட்கவே பொறுக்கவில்லை ஐயா,
நான் உடனடியாக ராஜாவைப் பார்த்து எல்லாவற்றையும் கூறுகிறேன்"

"நன்றி, அவரிடம் கூறுங்கள். 25 லட்சம் தமிழர்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது"
________________________________

அதே 16ஆம் தேதி

காமராசரைச் சந்தித்தார் ரசாக்.

"ஐயா வணக்கம்"

"வணக்கம், ஆமாம் தற்போது அங்கே என்ன நிலவரம்?"

"திருநெல்வேலி காங்கிரஸ் குழு அங்கே போகவிருப்பதால் அடக்குமுறை குறைந்துள்ளது"

"நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"

"நேசமணி ஐயா கடிதம் ஒன்று கொடுக்கச் சொன்னார்.
இதோ இதில் எங்கள் எதிர்பார்ப்புகள் அடங்கியுள்ளன"

வாங்கி படித்தார்.

"இதில் கேரளாவில் இருக்கும் பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற புள்ளிவிபரத்தை நானே வெளியிடவேண்டும் என்று எழுதியிருக்கிறது.
அகதியாக வந்தோருக்கு உதவி செய்யவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவுதானா?"

"ஆமாம். இதை நீங்கள் செய்தால் போதும்"

"சரி செய்கிறேன். நீங்கள் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?"

"நேருவைச் சந்திக்கச் செல்கிறேன்"

"ஓகோ, என்றால் நீங்களே இந்த பிரச்சனையைக் கையாளப்போகிறீர்கள்.
நான் தேவையில்லை அப்படித்தானே?"

மார்சல் நேசமணி நேரில் வந்து ஆதரவு கேட்டபோது காமராசர் மறுத்த காட்சி ரசாக் மனதில் வந்துபோனது.

"ஐயா, நான் நேரில் சென்றால் பிரச்சனையின் தீவிரத்தை சரியாக விளக்கமுடியும்"

"நான் ஒரு கடிதம் தருகிறேன்.
என் பிரதிநிதியாக நீங்கள் நேருவைச் சந்தியுங்கள்"

"இல்லை. நான் நேசமணி ஐயாவின் பிரதிநிதியாகவே சந்தித்துக்கொள்கிறேன்"

காமராஜருக்கு ரசாக்கின் கோபம் புரிந்தது.
அவர் சிறிதுநேரம் யோசித்தார்.
சரி, என்னோடு வாருங்கள்.
எச்.டி.ராஜா (எம்.பி) என்பவரையும் அழைத்துக்கொண்டு மூவரும் காரில் கிளம்பினர்.

கார் சென்று நின்ற இடம் இராஜாஜியின் வீடு
______________________________
எல்லைப் போராட்டத்தில் ஆதரவாக நிற்பவர் இராஜாஜி.
அவருடன் இந்த பிரச்சனையைப் பற்றி பேச தன் தனிப்பட்ட வெறுப்பையும் மீறி முதலமைச்சரான காமராசர் நேரில் சென்றார்.

வாசலில் இராஜாஜியின் மகன் அமர்ந்திருந்தார்.

"வாருங்கள் வாருங்கள், அப்பா உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"

வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர்.
நாம் வரப்போவது இராஜாஜிக்கு எப்படித் தெரியும் என்று.

அனைவரும் அமர்ந்தனர்.

ரசாக் "ஐயா, எங்கள் நிலை பற்றி..."

ராஜாஜி "எனக்கு தெரியும்"

காமராசர் "நாம் என்னசெய்ய வேண்டும்?
தமிழகத்தில் போராட்டம் நடத்துவது இதற்கு தீர்வு தருமா?"

இராஜாஜி "இல்லை, அதை முதலிலேயே செய்திருக்கவேண்டும்.
இப்போது சட்டபடி செய்யவேண்டும்"

இரசாக் "நீதிமன்றங்கள் மலையாள வெறியுடன் நடந்துகொள்கின்றன.
மேல்முறையீடு செய்வது அங்கே பலன் தராது"

இராஜாஜி "நீங்கள் திருவாங்கூர் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள்.
அவை தள்ளுபடியாகும்.
அதன்பிறகு என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறேன்.
என் நண்பர் புகழ்பெற்ற வழக்கறிஞர் பாஷ்யமையங்கார் இருக்கிறார்.
அவரை அனுப்புகிறேன்"

காமராசர் "இவர் நேருவைச் சந்திக்கப்போவதாகக் கூறுகிறார்.
தமிழகத்தில் பெருகிவரும் திராவிட ஆதரவு நேருவின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளது"

இராஜாஜி "ஆமாம், திராவிட நாட்டை தனியாக பிரிக்க ராமசாமி நாயக்கர் ஜின்னாவை சந்தித்தில் இருந்தே அவருக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
இருந்தாலும் அவரைச் சந்தித்துவிடுதல் நலம்.
நேசமணி திராவிட ஆதரவாளர் கிடையாது என்பதை நேரு புரிந்துகொண்டால் அவர் மனம் மாறலாம்"

ரசாக் "நாங்கள் நேருவின் உத்தரவை மீறிதான் போராட்டம் நடத்தினோம்.
அதனாலும் அவருக்கு எங்கள்மேல் கோபம்"

இராஜாஜி "ம். குமரி தமிழகத்துடன் இணைவது கடினம்தான்.
இந்தி எதிர்ப்பினாலும் அவர் தமிழ்நாட்டை வெறுக்கிறார்.
சரி, நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்"

ராஜா "மாநில புனரமைப்புக் குழுவில் கே.எம்.பணிக்கர் என்றொரு மலையாளி இருக்கிறார்.
அவர் மலையாள இனவெறியராம்.
இது தமிழர்களுக்கு நடக்கும் அநியாயம்"

ரசாக் "அவர் மூணாறு பகுதியை கேரளாவுடன் சேர்ப்பதற்காக வெறிபிடித்து அலைகிறார்.
மூணாறை ஆண்ட பூஞ்சார் ராஜாவையே மலையாளி என்று ஆக்கப்பார்த்தார்.
நேசமணி ஐயாதான் கண்ணன்தேவன் தேயிலைக் கம்பெனி பூஞ்சார் அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை காட்டி முல்லைப் பெரியாறு ஓடும் பகுதி முழுக்க தமிழருடையது என்பதையும் அந்த அணைக்காகப் போடப்பட்டுள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் தவறுதலாக அப்பகுதிக்கு உரிமையே இல்லாத திருவாங்கூர் அரசுடன் போடப்பட்டதையும் நிறுவினார்.
பூஞ்சார் அரசர்கள் ஆவணங்கள் தமிழிலும் மீனாட்சியம்மன் துணை என்றே ஆரம்பிப்பதையும் வைத்து அவர்கள் பாண்டிய வம்சாவழி என்பதையும் நிறுவினார்.
இதனால் மூக்கறுபட்ட பணிக்கர் எப்பாடு பட்டேனும் முல்லைப்பெரியாறை கேரளத்துக்கு பெற்றுத்தர சூளுரைத்துள்ளாராம்"

காமராசர் "இந்த குழு முன்வைக்கும் எல்லை வரையறை சரியில்லை என்றால் நாம் அதை நிராகரிக்க முடியும்.
இன்னொரு குழுவை அமைக்கக் கோரமுடியும்"

இராஜாஜி "போன உயிர்களை மீட்க முடியுமா?"

காமராசர் வாயடைத்துப்போனார்.

காமராசர் "என்ன இருந்தாலும் தமிழர்களைக் கொல்லும் அளவுக்கு சென்றிருக்கூடாது.
இதற்கு அவர் பதில் சொல்லிதான் ஆகவேண்டும்"

ராஜாஜி "பட்டம் தாணுப்பிள்ளையின் கட்சியான பி.எஸ்.பி யின் தரப்பிலிருந்து ஒரு குரல் வரவுள்ளது.
பொறுத்திருந்து பாருங்கள்"

இராஜாஜி கூறியது அப்போது யாருக்கும் புரியவில்லை.
ஆனால் அவர் பெரிதாக எதோ செய்யவுள்ளார் என்பது மட்டும் புரிந்தது.
-------------------------------------
அதன் பிறகு அப்துல் ரசாக் எஸ்.எஸ்.கரையாளர், திரு.சிதம்பரநாதன், நூர்முகமது ஆகியோரை அதே நாளில் சந்தித்தார்.

மறுநாள் 17ம் தேதி இந்நால்வரும் காமராசரைப் போய் மீண்டும் பார்த்தார்கள்.
தமிழக அரசின் சார்பில் இவர்கள் நல்லெண்ணக்குழு என்ற பெயரில் நேரில் செல்வதாக முடிவானது.

25.08.1954 இந்த நல்லெண்ண குழு செல்வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்குள் இதே 17ம் தேதி திருநெல்வேலி காங்கிரஸ் குழு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவிட்டிருந்தது.
பி.டி.தாணுப்பிள்ளை, கே.டி.கோசல்ராம், சங்கர் ரெட்டியார் ஆகியோர் நிலைமையை நேரில் விசாரித்து நேருவுக்கு ஒரு அறிக்கையை அனுப்பினார்கள்.

எம்.பி நரசிம்மன் என்பவர் ஆலோசனைப்படி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த காந்தியின் மகன்  தேவதாஸ் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டார்.
ரசாக் தங்களது  பிரச்சனையை பற்றிய ஒரு கையெழுத்து ஆவணத்தைக் கொடுத்தார்.

இதை 22.08.1954 இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் தேவதாஸ் காந்தி வெளியிடச் செய்தார்.

டெல்லியில் மலையாளிகளுக்கு நெருக்கடி முற்றியது.

இந்த நேரத்தில் நடந்தது ஒரு பெரிய திருப்புமுனை.

அதன்பிறகு பட்டம் அரசு ஆட்டங்கண்டது.

(தொடரும்)
_______________________
குருதியில் நனைந்த குமரி -12
https://m.facebook.com/photo.php?fbid=649731501797173&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment