Showing posts with label திராவிட எதிர்ப்பு. Show all posts
Showing posts with label திராவிட எதிர்ப்பு. Show all posts

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Saturday, 21 July 2018

திராவிடம் தீது - பாவாணர்

திராவிடம் தீது - பாவாணர்

பாவாணர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு "தமிழியற் கட்டுரைகள்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அதில் "திரவிடம் என்பதே தீது" என்ற தலைப்பில் பக்கம் 27 மற்றும் 28 இல் ஒரு கட்டுரை உள்ளது.

அதன் முக்கிய வரிகள் கீழே,

* தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்.
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

* தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

* பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல்,
வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.

* தமிழ் தூய்மையான தென்மொழியென்றும் திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

* தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

* தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

* திரவிடம் முக்கால் ஆரியமாதலால், அதனொடு தமிழையும் இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

* வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

* தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

* தமிழ் வேறு திரவிடம் வேறு

* வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.

---------------------
முழு கட்டுரை அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.

'திரவிடம்' என்பதே தீது

நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழி யடிப்படையிலேயே அமைந்திருப்பதனாலும்,
அதன் வழியாகவே முன்னேறுவதாலும்,
தமிழர் யாவரும் தமிழ்ப் பற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.

எந்நாட்டாராயினும், தமிழ்ப்பற்றுடையார் தமிழரே.
இந்நாட்டாராயினும், அஃதில்லார் அயலாரே.

தமிழ்ப் பெயரே தாங்குதலும்,
இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும்,
திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும்,
மக்கள் உலகத்தில் 'தேவமொழி'யில்லையென நம்புதலும்,
இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ்நாட்டில் அடியோடொழித்தலும்,
தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடென்ற பெயரிடுதலும்,
தமிழன் என்பதற்கு அடையாளமாம்.

தமிழிற்கு இடைக்காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென்சொற்கள் வழக்கற்றுப் போயின.
அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

  கால்டுவெல் கண்காணியார் முதன்முறையாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும்,
அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மையாலும்,
தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக்காட்டத் தேவையில்லா திருந்தது.

இக்காலத்திலோ,
ஆராய்ச்சி மிகுந்துவிட்டதனாலும்,  வடமொழியும் இந்தியும்பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழியாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும்,
தமிழென்றும், பிறஇனமொழிகளையே திரவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம்.

  தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்,
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழியென்றும் வேறுபாடறிதல் வேண்டும்.

பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல், வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழாகாது.

வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.

ஆதலால், வடசொல் சேரச் சேரத் திரவிடத்திற்கு உயர்வு;
அது தீரத்தீரத் தமிழிற்கு உயர்வு.

திரவிடம் என்ற மொழி நிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது.
அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும்.

தமிழ் தனித்தியங்கும்; திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

இங்ஙனம், வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம். திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமு மாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் கெட்டுப் போம்.

பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்,
இந்தியா முழுதும் ஆரியமாய் விடும்.

தமிழ், திரவிட மொழிகளைப்போல ஆரியச்சார்பு கொள்ளாமை யாலும்,
வட மொழியையும் இந்தியையும் ஏற்காததாலும்,
தமிழ் நாட்டிற்கு மொழியியல் தன்னாட்சி (Lingusitic autonomy) பெறுதல் வேண்டும்.

போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு ஆகிய முத்துறையிலும், இந்தியக் கூட்டரசு அடங்கியிருக்கலாம்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னுங்கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தும்,
தமக்குத் தாமே முட்டுக்கட்டையிட்டுக் கொண்டது.

இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை.

தமிழ் என்னுஞ் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும், திராவிடம் என்னுஞ் சொல்லில் இல்லை.

திராவிடம் பனிமலை (இமயம்)வரை பரவியுள்ளது.
தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது.

தமிழ் வேறு, திராவிடம் வேறு.

தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.

தமிழ்நாடு பிரிந்தபின், குறைந்தபட்சம் தென்னாட்டுத் திரவிடரெல்லாம் தமிழரொடு கூடி மிகப் பரந்த புலனங்களில் (விஷயங்களில்) ஒரு கூட்டொப்பந்தம் செய்யும்போதே தி.மு.க. சொல்லும் திரவிடம் தோன்றும்.

அதற்கு இன்று தமிழர் மட்டுமே முயல்வது, வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையேயாம்.

இதுகாறுங் கூறியவற்றால்,
உண்மை நிலையை உள்ளவாறுணர்ந்து,
நடைமுறைக் கொவ்வாத வீண் கொள்கைகளையும் வீறாப்புக்களையும் விட்டுவிட்டு,
எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றிபெறுதற் பொருட்டு,
பொதுநலத்தை முன்வைத்து ஒற்றுமையாகப் போராடி,
முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க.

('தமிழ்' இதழில் வெளியான கட்டுரையிலிருந்து)

http://www.tamilvu. org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=28

Friday, 16 March 2018

திராவிடநாடு அமைந்தால்...

திராவிடநாடு அமைந்தால்...

  அதில் தமிழோ தமிழினமோ இருக்காது.

எப்படி நமக்கு வடயிந்தியன் எதிரியோ அதற்கு சமமான எதிரிகள் நமது அண்டை இனங்கள்.

பரம எதிரி சிங்கள இனம் என்றால் பிற இனங்களும் அதற்கு சளைத்தவை அல்ல.

நமக்கு நம்மைத் தவிர இந்த உலகில் யாருமில்லை என்பதுதான் உண்மை.

நூறாண்டு முன்பே திராவிடம் என்ற பெயரில் தெற்கை ஓரணியில் திரட்ட முயன்றோம்.
அதனால் நாம் உள்ளதையும் இழந்தோம்.

நம்பி நம்பி ஏமாந்தது போதும்!

எனவே நாம் நேரடியாக தமிழர் நாடு அமைப்போம்!

Sunday, 6 November 2016

தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்

தமிழரல்லாதார் ஆட்சி
அம்பலப்படுத்திய பாரதியார்

1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி
மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது,

  "புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்த
பிராமணரும்-பஞ்சமரும்-ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,
தமிழரும் அல்லாதார் என்று
ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்! இந்த பாஷை சரிப்படாது.

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.

தமிழ் வேளாளர் ஒருவர்,
இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும்
ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்கள் என்றும்
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும்
என்னிடம் வந்து முறையிட்டார்"

(பாரதி தமிழ்: பக்.403)

Friday, 19 August 2016

ஈ.வே.ரா நேர்மையான இறைமறுப்பாளரா?

ஈ.வே.ரா நேர்மையான இறைமறுப்பாளரா?

"நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன்.
சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன்..."
- ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 )

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கியபோது வயது 46.
அந்த முதல் இதழில்,
"இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக."
என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கிவைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

".....இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.
இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்..."

அதாவது 46 வயது வரை இறைநம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

(நன்றி:-
முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்)

Saturday, 19 March 2016

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

"பல திராவிட இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின்,
தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின்,
அது தமிழுக்கும் உலை வைப்பதாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சியாட்சியிலாவது
காங்கிரசு ஆட்சியிலாவது
*பார்ப்பனத் தமிழனும்* எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை.

தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின்,
தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து
தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியதுதான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால்
அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின்,
எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆயின், பெரும்பான்மை பற்றியுமே
பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும்.

இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை.
ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது.
ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே."

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
15.5.1951)

நன்றி: kathir nilavan
==========================

பார்ப்பனர் தமிழரே என்று சொல்லிப்பார்!
திராவிடத்தின் ஆணிவேரே நடுங்கும் பார்!

Thursday, 10 March 2016

இந்து, இந்தியா, திராவிடம் யாவும் கற்பனையே -பாவலேறு பெருஞ்சித்திரனார்

இந்து, இந்தியா, திராவிடம் யாவும் கற்பனையே
-பாவலேறு பெருஞ்சித்திரனார்

திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.
இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ,
அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது.

இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி,
அத்திராவிட மொழியாசிரியர்களும்,
புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும்மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ,
அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல.

இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே.
வரலாற்றுப் பெயரே அன்று.

(நன்றி: தென்மொழி 1988 நூல்,
வேண்டும் விடுதலை,
பக்.294, 295.)

Thursday, 18 February 2016

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

ஈ.வே.ரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்று சிலர் கூறுகிறார்கள்.

அவர் பறைச்சி ரவிக்கை போட ஆரம்பித்தது துணிவிலை ஏறக் காரணம் என்று பேசியது பலராலும் அன்று கண்டிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசினாரா?
தாழ்த்தப்பட்ட மக்களை அவர் எவ்வாறு நோக்கினார் என்று இங்கே அலசுவோம்.

இந்த பேச்சை கருணாநிதி தனது முரசொலியில் 1962 ம் ஆண்டின் பொங்கல் சிறப்பு இதழில் கோட்டோவியம் (கார்ட்டூன்) போட்டு வெளியிட்டார்.
(அப்போது திமுக வும் ஈவேராவும் எதிரிகள்.
1968ல் சேர்ந்துகொண்டார்கள்.
இவர்கள் சேர்ந்துகொண்ட பிறகு ஆறாண்டுகள் கழித்து ஈவேரா பேசிய சப்பையான விளக்கத்தைதான் பதிலாகத் தந்து பலரும் அவர் நல்லவர் என்று காட்ட முயல்கிறார்கள்)

அன்பு பொன்னோவியம் என்பவர் 2.3.1963 அன்றைய "நாத்திகம்" வார இதழுக்கு 'ஆசிரியர் அவர்களுக்கு' பகுதியில் "ஆதி திராவிடர்களும் பெரியாரும்" என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார்.

அந்த கடிதம் ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசியதையும் அதன்பிறகு அதற்கு சரியான விளக்கமோ மன்னிப்போ கூறாதிருந்ததையும் வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.
ஈவேரா ஆரம்பித்திலிருந்தே இப்படி பேசிவந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீழே படியுங்கள்

** "துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்!
வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்"
என்று பெரியார் கூறியதாகச் செய்திகள் வந்த போது மலைத்து விட்டவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் தாங்கள் குறிப்பிட்டதைப் போன்று நான் அப்பாவி அல்ல.
ஏனெனில், 1939ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெரியாரை கூர்ந்து கவனித்து வரும் பல பேர்களில் நானுமொருவன்.

எங்களது நினைப்பிற்கு காரணம் பெரியார் அவர்களோ, அன்றி அவரது பத்திரிகையோ,

அது பற்றிய விளக்கத்தை தராமையாலும்,
பொதுக் கூட்டங்களிலும் கூட அதைப்பற்றி பேச்சு எழாததாலும்,
குறிப்பாக சமீபத்தில் நடந்த மாநாட்டின் போது அதைப் பற்றிய தகவல் எதையும் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் எங்களுக்கு மலைப்பு ஏற்பட்டதில் தவறில்லை.
பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களைச் சாடி பழித்துப் பேசியிருக்கிறார்.**

சென்னையில் அம்பேத்கரிஸ்ட்கள் நடத்திய 'அம்பேத்கர்' இதழின் சூட்டுகோல் பகுதியில் (1963 நவம்பர் & டிசம்பர்)

"ஒரு முறை ஈ.வெ.ரா.
துணி விலை ஏறி விட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டதுதான் என்று கூறினார்.
அன்று மறுப்பு கூறினோம்."
என்று வெளியானது.

கே.எஸ். சீதாராமன் அவர்கள் தான் எழுதிய
"கோலார் தங்கவயல் வரலாறு" எனும் (1989. பக்.193) நூலிலும் பெரியாரின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி திராவிடர் வேறு, ஆதி திராவிடர் வேறு என்றே பெரியார் கருதியதாக குறிப்பிடுகிறார்.

இனி தாழ்த்தப்பட்டவரை ஈவேரா எப்படி பார்த்தார் என்று அலசுவோம்

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
(குடியரசு 16.6.1926.)

இங்கே நாங்கள் என்பது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதியினரை
நீங்கள் என்பது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவோரை
(அதாவது தாழ்த்தப்பட்டவரை)

"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதி திராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)

இதன்பொருளும் மேற்கண்டதை ஒத்ததே.

அதாவது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதிகளின் தளபதியாகத்தான் ஈவேரா தன்னை முன்னிறுத்தியுள்ளார்.

அவர் தாழ்த்தப்பட்டோரை மட்டுமன்றி கிறித்துவ இசுலாமியரையும் கேவலமாகக் கருதினார்.
ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

// 1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன.//

அதாவது தாழ்த்தப்பட்டோர் கீழ்த்தரமானவர்களாம்.
பார்ப்பனர்களைப்போல பிறமதத்தினரும் தாழ்த்தப்பட்டோரும் பிராமணரல்லாத சாதியாருக்கு எதிரிகளாம்.

மேலும் கூறுவதைப் பாருங்கள்.

// நம்மில் கீழ்த்தர மக்கள் என்பவர்கள் தங்களுடைய இழிநிலை பற்றி கவலை இல்லாதவர்கள்.

சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள்//

ஆக தனது 85 வயது வரை ஈவேரா தாழ்ப்பட்டோரை இழிவாகத்தான் கருதியுள்ளார்.

பறையர்களைக் கேவலமாகப் பேசிய அதே ஆண்டு அவர் சிறுபான்மையினரையும் இசுலாமியரையும் கேவலமாக எழுதியுள்ளார்.

"நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.

மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,
தனி நீதி போன்ற காரணத்தினாலும்,
மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,

நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி,
ரோட்டில் கல் உடைத்து,
வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)

ஈவேரா பார்ப்பனரை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை ஆதிக்கசாதிகள் பிடிக்க உழைத்தவரே அன்றி அவர் தாழ்த்தப்பட்டோருக்காகச் சிறுதுரும்பையும் அசைத்ததில்லை.

ஏற்கனவே டி.கே.மாதவன் என்பவர் நடத்திவந்த வைக்கம் போராட்டத்தில் ஈவேரா கடைசியாக பத்தோடு பதினொன்றாகத்தான் போய் கைதானார்.

நாடார் ஆலையநுழைவுப் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டதும் இவ்வாறே.

ஆக கடைசிக்கட்டத்தில் போய் பங்குகொண்டு ஏதோ தானே முதலில் இருந்து முன்னின்று நடத்தியதைப் போலப் பீற்றிக்கொள்வது அவர் பாணி.
அவரது சீடர்களும் அந்த போராட்ட வரலாற்றை அப்படியே ஈவேராவுக்கு எழுதிவைப்பார்கள்.

பெரியாரால்தான் இதெல்லாம் நடந்தது என்பதைப்போல திரித்து எழுதுவார்கள்.

இனியும் இப்பொய்யர்களை நம்பவேண்டாம்.