Showing posts with label ஈவேரா. Show all posts
Showing posts with label ஈவேரா. Show all posts

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு 

Friday, 10 January 2025

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

 1929 இலிருந்து ஈவேரா சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டு நீதிக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
 நீதிக் கட்சி ஆட்சியில் 1931 இல் பொப்பிலி ராஜா வட்டமேசை மாநாடு லண்டன் இல் நடந்தபோது அங்கே சென்றுவிட்டார். இந்த இரண்டு மாத இடைவெளிக்காக தற்காலிக பிரிமீயர் (அன்றைய முதலமைச்சருக்கு நிகரான பதவி) ஆக பி.டி.ராசன் எனும் தமிழர் பொறுப்பேற்கிறார். 
 இதைக்கூட பொறுக்க முடியாத தெலுங்கர்கள் அவரை எதிர்க்கிறார்கள். நீதிக் கட்சியில் இருந்த தமிழருக்கும் தெலுங்கருக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

 அதே நேரம் பொப்பிலி ராஜா லண்டனில் வட்டமேசை மாநாட்டிலேயே தெலுங்கருக்கு தனி மாநிலம் கேட்டு கோரிக்கை வைத்தார். பொப்பிலி ராஜாவை ஈவேரா எதிர்க்கவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் தமிழர்கள் தமக்கான அரசியல் நலன்களைப் பேசியபோது 16.12.1934 பகுத்தறிவு இதழில் "ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப் பார்ப்பதா" என்று கட்டுரை எழுதினார் ஈ.வெ.ரா. 
 அதில் "ஜஸ்டிஸ் கட்சியில் தமிழர்களை விட ஆந்திரர்கள் அதிகமாக சாதித்துக்கொண்டதாக சொல்லமுடியாது. உதாரணமாக ஒரு ஆந்திரர் பனகல் ராஜா முதல்மந்திரி ஆனார் என்றால் தமிழர் சுப்பராயன் முதல்மந்திரி ஆகியுள்ளார்"
 இதில் கவனிக்க வேண்டியது சுப்பராயன் நீதிக் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக வென்று சுதந்திரா கட்சியிலிருந்து சுப்பையா முதலியார் ஆதரவுடன்தான் முதல்வர் ஆனார் (இந்த சுப்பையா முதலியார்தான் நீதிக் கட்சி வெறும் பெயருக்கு வடிவமைத்து கிடப்பில் போட்டிருந்த இடவொதுக்கீடு திட்டத்தை அரசாணை இட்டு நடைமுறைக்கு கொண்டுவந்தவர். இடவொதுக்கீடு நீதிக்கட்சி கொண்டுவந்தது அல்ல).

மேலும் ஈவேரா எழுதுவது "மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த பனகால், சர்.பந்த்ரோ, முனுசாமி நாயுடு, சர்.கே.வி.ரெட்டி, பொப்பிலி ஆகிய 5 பேர் மந்திரி ஆகியுள்ளனர். தமிழர்களில் சுப்புராயலு ரெட்டியார், சிவஞானம்பிள்ளை, டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார், சேதுரத்தினம் ஐயர், பி.டி.ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகிய 7 பேர் மந்திரி ஆகி இருக்கிறார்கள்"
இங்கே கவனிக்க வேண்டியது இந்த 7 பேரில் சிவஞானம்பிள்ளை நீதிக் கட்சியைச் சேர்ந்தவரே கிடையாது. இருவர் ரெட்டியார்கள்.
ஒருவர் ஐயர் அதாவது பார்ப்பனர் தமிழரே கிடையாது அவர்கள் ஆரியர் என்று கூறிவந்த ஈவேரா இப்போது மட்டும் ஒரு பார்ப்பனர் தமிழர் என்கிறார்.

 மேலும் அவர் "நிர்வாக கவுன்சில் மெம்பர்களில் ஆந்திரர் கே.வி.ரெட்டியார் இருந்தார் என்றால் தமிழர்களில் சீனிவாச ஐயங்கார், சர்.உஸ்மான், சர்.சி.பி.ராமசாமி ஐயர், கே.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர், பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர்"
 இப்போதும் ஒரு ஐயங்கார், ஐயர் ஆகிய பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று தம் கொள்கை மாறிப் பேசுகிறார். 
 உஸ்மான், வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர் ஆகியோர் தமிழர் கிடையாது. அவர்களையும் தமிழர் என்கிறார் ஈவேரா.

 அதாவது பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நீதிக் கட்சியில் பிராமணரல்லாதோர் பெறவேண்டிய பதவிகளில் தெலுங்கர் உட்கார்ந்துகொண்டு பதவி பங்கீட்டு கணக்கு காட்டும்போது பிராமணரில் இருக்கும் தமிழரையும் கணக்கு காட்டுகின்றனர்.

 1930 களில் நீதிக் கட்சிக்கு ஆதரவளித்த காலகட்டத்தில் தெலுங்கருக்காக இவ்வாறு பரிந்து பேசிய ஈவேரா தெலுங்கர் தனி மாநிலமே கேட்டபோது பிரிவினை என்று கண்டிக்கவில்லை.

 ஆனால் 1950 களில் தமிழர் தனிமாநிலம் கேட்டு போராடிய போதும் எல்லை மாவட்டங்களை இழக்க நேரிட்ட சூழலில் அதை தடுக்க முற்பட்டபோதும் மிகக் கடுமையாக எதிர்த்தார் ஈ.வெ.ரா.

 தகவல்களுக்கு நன்றி:-  ராவணா வலையொளி மகிழன் அவர்களது பேட்டி 

Tuesday, 17 December 2024

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்


ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்

"நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு,
என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது."
- ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர்மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்கவைத்தார்.

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பாலசுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

13.11.2016 
திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்
என்ற பதிவின் ஒரு பகுதி

Sunday, 2 June 2024

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள்

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள் 

பதிவின் சுருக்கம்:-
 ஈவேரா எழுதிய பெண்ணுரிமைப் புத்தகம் நோபல் பரிசு பெற்ற புத்தகத்தின் அப்பட்டமான காப்பி.
 
 பொதுவுடைமை கருத்தியல் உலகம் முழுவதும் பரவத் தொடங்குகிறது. அதில் முக்கியமாகப் பெண்களின் பங்கு இருக்கிறது.
 அன்று காலனியவாத நாடுகள் இதை எதிர்கொள்ள இந்த வர்க்கப் போராட்டத்தை பாலினப் போராட்டமாகக் குழப்ப பெண் விடுதலை என்று ஆரம்பித்தார்கள்.
George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமானவர்களை விலைக்கு வாங்கி பெண்களைத் தூண்டிவிட்டு ஆண்களுக்கு எதிராக தனித்து தற்குறித்தனமாக இயங்கவைக்கும் கருத்துகளைப் பரப்பினர்.
 இதை எவ்வாறு செய்தோம் என்று பிரிட்டன் உளவுத்துறை (MI6) காலம்கடந்து விட்டதாக எண்ணி தற்போது வெளியிட்டுள்ளது.
 இதில் Bertrand Russell என்பவர் புரட்சிகர சிந்தனையாளராக தம்மைக் காட்டிக்கொண்டு எழுதிய புத்தகம் Marriage and Morals. இது எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏகாதிபத்திய அரசுகள் இதற்கு நோபல் கிடைக்க வழிசெய்தன.
 இதை அப்படியே நகலெடுத்து 'பெண் ஏன் அடிமையானாள்' என்று ஈவேரா எழுதியுள்ளார்.
 இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்கள் கூட ஒத்துப் போகின்றன.
1)கற்பு - Sexual ethic 
2)காதல் - Romantic Love 
3)விபச்சாரம் - Prostituition 
4) கல்யாண விடுதலை - Divorce 
5) ஆண்மை அழிய வேண்டும் - Fatherhood dominion and Fatherhood Unknown.
 மேலும் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்களை மொழிபெயர்க்க இயலாமல் அவற்றை தவிர்த்துவிட்டார்.
 அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ  என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்.
 இன்னமும் வேடிக்கை என்னவென்றால் வீரமணி இந்த நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் ஈவேரா சிந்தனைகள் ரஸ்ஸல் சிந்தனையுடன் ஒத்துப்போவதாக எழுதியிருப்பது தான்.

Кришна Кумар (முனைவர். கிருஷ்ணா) அவர்களின் முழுமையான பதிவு:-

'பெண் ஏன் அடிமையானாள்' எனும் முழு 'யுனெஸ்கோ' பித்தலாட்டம். 


காலனிய கைக்கூலிகளின் எதிர்ப்புரட்சி -வழமையான வரலாறு. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் குறித்தான விழிப்புணர்வை திரு ஈ வெ ராமசாமி அவர்கள் தான் ஏற்படுத்தியதாக, தொடர்ந்து ஊடகங்கள்,  அரசியல்வாதிகள், அரசு செய்திக் குறிப்புகள், பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் அரசு பாட நூல் நிறுவனங்கள் வழியாக மக்கள் மனதில் தொடரந்து திணிப்பதை உணரலாம். பல்லாயிரம் கோடி நிதியுடன் இயங்கும் திராவிட அரசியல் நிறுவனங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் ஆண்டு தோறும் 'பெண்ணிய போராளி விருது, பெண் சாதனையாளர் விருது' என்றெல்லாம் திரு ஈ வெ ராமசாமி பெயரிலும், சர்ச்சைக்குரிய அவரது கடைசி மனைவி மணியம்மை பெயரிலும் வழங்குவதையும் அறியலாம்.
குறிப்பாக, திராவிட அரசியல் கட்சிகளின்,  நிறுவனங்களின், அக்கட்சி தலைவர்களின் குடும்பங்களின் ஊது குழல்களாக இருக்கும் பல பெண்களும் ஆண்டு தோறும் இவ்விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப் படுகின்றனர்.
மேலும் அவர்கள் அதற்கு முன்னரும், அதற்கு பின்னர் மிக வீரியமாகவும் மேற்சொன்ன அரசியலுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் விசுவாசமாக இருப்பதோடு, பெண்மை, பெண் விடுதலை, பெண்ணியம் போன்றவற்றை உலகுக்கு கண்டுபிடித்து உணர்த்தியதே திரு ஈ வெ ராமசாமி அவர்கள்தான் என்பார்கள்.
மிக குறிப்பாக, இப்படியான விருதுகளை பெற்றவர்கள் திராவிடத்தாரின் ஆங்கிலத்தில் வரும் lapdog எனும் பதம் போல, செல்ல வளர்ப்பு நாய்களாக மாறி திராவிட அரசியலுக்கு எதிரான தமிழர்களை பிராண்டி குதறுவதும் உண்டு. தமிழகத்தில் பெண்ணிய அரிதாரம் பூசி, அவதாரம் எடுத்து பவனி வரும் இப்படிப்பட்ட பெண்களை கணக்கில் எடுத்து பார்த்தால் திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூல்தான் தங்களுக்கு அறிவூட்டி, செறிவூட்டி தங்களை பெண்கள் என்றே உணர வைத்ததாக பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருவார்கள். அப்படிப்பட்ட திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' நூல் குறித்து இளந்தலைமுறை தமிழர்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.
நிற்க. முதல் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவின் பல பகுதிகளிலும் ஐரோப்பியர்களின் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வ குடிகளின் கிளர்ச்சி வலுப்பெற்ற அதே சமகாலத்தில், (மறுபுறம்) புரட்சிகர இடதுசாரி தத்துவம் உலகெங்கும் வலுப்பெற துவங்கியது. பல நிலப்பரப்புக்களில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான உள்ளூர் இளைஞர்களின் சிந்தனையை தூண்டியதே இடதுசாரி தத்துவமாகத்தான் இருந்தது. அதே காலத்தில் ரஷ்யாவிலும், மற்றும் உலகெங்கும் புரட்சிகர செங்கொடி ஓங்கி உயரே பறக்க துவங்கியது. சோவியத் பள்ளியின் அரசியல் தாக்கமும் உலகை துளைத்து, காலனிய எதிர்ப்பு சிந்தனையை செறிவூட்டியது. அந்த 'புதிய அரசியல் சமநிலையின்மையை' சரிகட்ட காலனியவாதம் தனது ஆட்களை, தனது காலனியம் பரவியிருந்த பல்வேறு நிலப்பரப்புக்களில் இறக்கி, முடுக்கிவிட்டது. காலனிய வல்லாதிக்க நிறவெறி ஆங்கிலேயே அரசின் ரகசிய உளவு அமைப்பான MI6ம், அதன் வெளியுறவுத்துறை propaganda நிறுவனமான Information Research Department (IRD)ம் பல பிரபலங்களை ரகசியமாக பணியில் அமர்த்தி செங்கொடிக்கும், சோவியத்தை மையமாக வைத்து தூசி கிளப்பி பூமியின் நாற்புறத்தையும் சூறாவளியாய் தாக்கிய அதன் புரட்சிகர சித்தாந்தத்திற்கும் எதிரான வேலைப்பாடுகளை துவங்கியது. George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமாக பவனிவந்த பலரும் ஆங்கிலேய காலனிய நிறவெறி அரசின் Payroll'க்குள் வந்தார்கள். இந்த ரகசியங்களை காலாவதியான கோப்புக்கள் என்கிற முறையில் பிரித்தானிய உளவு நிறுவனமே சமீபத்தில் வெளியிட்டு இருந்தது அவர்கள் வெறும் பணத்திற்கு வீழ்ந்தார்களா அல்லது தங்களுக்குள் ஒளிந்திருந்த காலனிய ஆதிக்கவாத நிறவெறியை வாழவைக்க இணங்கினார்களா என்பதை விவாதிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இந்த லிஸ்டில் George Orwell'ம், Bertrand Russell'ம் மிக முக்கியமானவர்கள். இருவரும் தங்களை இடதுசாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, முழுநேரமும் இடதுசாரிகளை வீழ்த்தும் எதிர்ப்புரட்சி வேலையை செய்தவர்கள். இதில் George Orwellன் 'Animal Farm' பற்றி பலரும் அறிவீர்கள். சோசலிஸ்ட் வேடமிட்டு, உளவுபார்த்து சோவியத்துகளுடன் நெருக்கமாக இருந்த முக்கியமான தலைவர்கள் 38 பேரின் பெயர்களை MI6க்கு அவர் வழங்கியது 'Orwell's List' என்று இப்போதும் இழிவாக நையாண்டி செய்யப்படுகிறது அடுத்து, இந்த கட்டுரைக்கு மிக முக்கியமான நபரான 'Bertrand Russell'. இவரும் காலனிய நிறவெறி அரசின் மிக முக்கியமான உளவாளி. ஆசிய தொடர்பான அஜெண்டாவில் வேலை செய்தவர். இந்திய யூனியனின் விடுதலைக்கு முன்னர் இங்கே இருந்த பல தலைவர்களுடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர். இந்திய யூனியன் உருவாக்கத்திற்கு பிறகும் ஆங்கிலேயே காலனிய அரசின் தாக்கம் இந்திய யூனியனில் இருக்குமாறு விடுதலை ஏற்பாட்டை செய்தவர். அவர் எழுதிய நூல் 'Marriage and Morals'. தன்னை ஒரு சோஷலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்டு இடதுசாரி தத்துவத்தை வீழ்த்த Russell எடுத்த வழிதான் பெண் விடுதலை. அடிப்படையில், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய உலகில் பெண்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லாத காலத்திலேயே, சமூகத்தின் சரி பாதியான பெண்களை மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாது அவர்களை வீட்டிற்குள் முடக்கி வைப்பது, மானுட சமூகத்தின் பாய்ச்சலை சரிபாதியாக குறைக்கிறது என்று சொல்லி லெனின் அவர்களை உற்பத்தியிலும், சமூக மற்றும் சோவியத் உருவாக்கத்திலும் பயன்படுத்த துவங்கிய காலம் அது. இப்போதும் ரஷ்ய தெருக்களில் லெனின் தவிர்த்து எங்கெல்லாம் தலைவர்கள் சிலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சமமாக பெண்களின் சிலைகளும் இருக்கும். இங்கே சில படங்கள் கமெண்டில். போருக்கு செல்லும் இளைஞன் கைகளில் துப்பாக்கி இருப்பதைப்போல, பெண்களின் தோள்களில் ராக்கெட் லாஞ்சர்கள் இருக்கும்; போருக்கு செல்ல அழைப்பு வந்திருக்கிறது என்பதை காதலிக்கு சொல்ல செல்லும் காதலனிடம் தனக்கும் வேறு ஒரு எல்லைக்கு செல்ல அழைப்பு வந்திருப்பதாக காட்டும் காதலி சிலைகள் ரஷ்ய பூங்காக்கள் தோறும் ஏராளம். இதுதான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான பெண் விடுதலை. ஆனால் அப்படிப்பட்ட இடதுசாரி தத்துவ எழுச்சியை தடுக்க, பெண்ணிய குதர்க்கவாதம் பேசி, அதை பிளவுபடுத்த முதலாளித்துவ காலனிய வல்லாதிக்கம் Bertrand Russellகளை பயன்படுத்தியது. அதற்கு கூலியாக ஐரோப்பிய காலனிய வல்லாதிக்கம் அவரின் இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது. ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு சமூக, வர்க்க, மற்றும் மானுட விடுதலை அடைவதை தடுக்க பெண் விடுதலை எனும் பெயரில் அவர்களை பிரித்து தடுத்து எதிர்ப்புரட்சி செய்தது காலனியவாதம். பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்டமாக மாற்றி, அவர்களை வெறும் நுகர்வோர்களாக திரித்து, விளம்பர போதை ஏற்றி, சுதந்திரம் என்கிற பெயரில் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கியது இப்படியான நூல்கள். காலனிய உளவாளி Bertrand Russell எழுதிய அந்த 'Marriage and Morals' என்கிற நூலின் அச்சு அசல் பிசகாத மொழிமாற்ற நூல்தான் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற ஈவெ ராமசாமியின் நூல். பொருளடக்கம், உள்ளடக்கம் என யாவற்றையும் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற அந்த நூலில் 100% மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியாக, Bertrand Russell என்கிற காலனிய உளவாளி எழுதிய நூலை ஈவெரா எழுதியதாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் நாட்டில் விளம்பரம் செய்திருப்பது வழக்கமான திராவிட பித்தலாட்டம்தான்.


தங்களை பெண் விடுதலை சேம்பியன்கள் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அறிவீலிகளுக்கு அது ஒரு மொழிமாற்ற என்கிற அடிப்படை அறிவு கூட கிடையாது. அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இப்படியான சமூக கழிசடைகளை தமிழக இளையோர் பின்தொடர்ந்து சமூக விடுதலைக்கு துரோகம் இழைக்க கூடாது. அடுத்தவனின் சிந்தனையை திருடி அதில் தன் பெயரை எழுதும் கேவலத்தையும் தாண்டி.. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூலில் ஒரு மிக இழிவான வேலையை செய்திருக்கிறார்கள். அந்த நூலின் முன்னுரையில் திரு வீரமணி அவர்கள் உலகின் முக்கியமான ஆளுமைகள் ஒரேபோல சிந்திப்பார்கள் என்பார்கள். அதைப்போல ஈவெராவும் பெட்ராண்ட் ரசலும் ஒரேபோல சிந்தித்து இருக்கிறார்கள் என்று எழுதி் இருக்கிறார். (படம் கமெண்ட்டில்) ஒரு நூலின் அத்துணை வரியையும் ஒரேபோல சிந்திப்பது உலக அதிசயமல்லவா? 'யுனெஸ்கோ விருது' பெற்றது போல் இந்த அதிசயத்திற்குமல்லவா 'கின்னஸ் விருது' பெற்றிருக்க வேண்டும்? இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்களை பாருங்கள்: 1)கற்பு Vs Sexual ethic 2)காதல் Vs Romantic Love 3)விபச்சாரம் Vs Prostituition 4) கல்யாண விடுதலை Vs Divorce 5) ஆண்மை அழிய வேண்டும் Vs Fatherhood dominion and Fatherhood Unknown 6)கர்ப்பத்தடை Vs The Liberation of Women. மொத்தமாக 'பெண் ஏன் அடிமையானாள்'இல் 10 தலைப்புக்களும் அதன் கருத்துக்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. Marriage and Moralsஇல் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்கள் வருகின்றன, அறிவியலை மொழிமாற்றம் செய்ய அறிவற்ற திராவிட அறிவிலிகள் அத்தலைப்புக்களை தவிர்த்து விட்டார்கள். இந்த நூலில் அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ, கிறிஸ்டியன் பிலாசபி என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்கள். உலகில் இவ்வளவு கேவலமான, இழிவான வேலையை இவர்களை விட வேறு எவராலும் முடியாது. ஒரு நோபல் பரிசு பெற்ற நூலையே திருடி, அதில் தங்கள் பெயரை எழுதிக் கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பது விளங்கும். அது மட்டுமல்ல, இவர்களின் செயலை பகுப்பாய்வு செய்யும்போது 'இழிவு' என்கிற வார்த்தையே எவ்வளவு வீரியமற்றதாக இருக்கிறது என்பதை உணரலாம். தமிழர் இனம் ஈன்றெடுத்த சமரசமற்ற போராளி 'தோழர் ஜீவா'. அவர் தனது நூலான 'ஈரோட்டுப்பாதை சரியா' என ஈவெ ராமசாமியின் சித்தாந்தங்கள், குதர்க்கவாதங்கள் குறித்து எழுதி இருப்பார். அந்த நூலின் அட்டைக்கு ஒரு மிகச் சிறந்த வர்ணத்தை தேர்ந்தெடுத்து இருப்பார். அது காலனியவாத ஆங்கிலேய அரசின் கொடியான 'யூனியன் ஜாக்' ஆகும். தோழர் ஜீவா எவ்வளவு நேர்த்தியாக திரு ஈவெ ராமசாமியை 'காலனியவாத கிழக்கிந்திய கம்பெனியின் கைக்கூலி' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் உருவாக்கிவிட்டு சென்ற கம்யூனிச இயக்கங்களில் உடல் வளர்க்கும் சாதிய-இனவெறி போலிகள் இன்று அதே 'பெண் ஏன் அடிமையானாளுக்கு' செங்கொடி பாதுகாப்பு தருகிறார்கள். இந்த குறிப்பிட்ட நூல் திருட்டு குறித்து பல பக்கங்கள் ஆதாரங்களுடன் விளக்கலாம். ஆனால் மேலும் ஒரே ஒரு சுவாரசியமான தகவலை மட்டும் இங்கே பகிர வேண்டும். காலனிய வல்லாதிக்கத்தின் கைக்கூலிகளான ஆர்வெல் குறித்தும், ரபெட்ராண்ட் ரஸ்ஸல் குறித்தும் பத்தாண்டுகளுக்கு முன்பே பிராமணிய மருதையனின் 'வினவு' கட்டுரை வரைந்திருக்கிறது. ஆனால் அதை திருடி தனது பெயரில் வெளியிட்டுக்கொண்ட ஈவெரா குறித்து தெரிந்தும் மருதையன் வாய் திறக்கவில்லை. அதைத்தான் தென்னிந்திய பிராமணர்கள்தான் திராவிடர்கள் என்கிறது மனுஸ்மிரிதி. இனப்பற்று!

Thursday, 30 May 2024

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

 25.09.1928 ரெங்கசாமி ரெட்டியார் என்கிற தெலுங்கர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
 பார்ப்பனர் அல்லாமல் ஈவேரா முன்னிலையில் எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடந்த இதுவே முதல் முற்போக்குத் திருமணம் என்று ஈவேரா பக்தர்கள் இன்றுவரை பிரச்சாரம் செய்கின்றனர்.

 ஆனால் இதற்கு 39 ஆண்டுகள் முன்பே காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான தஞ்சாவூர்
திரு.ஜி.சுப்பிரமணியம் 1889 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு மேடையில் இளம் வயதில் கணவனை இழந்த தன் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்து மறுமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 அதை ஒப்பிடும்போது இந்த ரெட்டியார் ரெண்டு தாலி கட்டி மூவராக முதலிரவு அறைக்குள் சென்ற சுயமரியாதை திருமணம் ஒரு கேலி கூத்து.

 சட்டப்படி செல்லாது என்றாலும் இப்படியே திருமணம் செய்யுமாறு ஈவேரா வலியுறுத்த அதை பின்பற்றி 1930 களில் பல ஈவேரா தொண்டர்கள் இதே போல சட்டப்படி செல்லாத திருமணம் செய்து கொண்டனர்.
 திமுக 1967 இல் ஆட்சிக்கு வரும் வரை அதாவது ஏறத்தாழ 40 ஆண்டு காலம் இவர்கள் சட்டப்படி திருமணம் ஆகாதவர்கள் என்கிற வகையில் இவர்களுக்கு குடும்ப அட்டை கூட கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகள் சட்டப்படி தாய் தகப்பன் இல்லாத அனாதைகளாக இருந்தனர். 

 இப்படி பலர்  உரிய சான்றிதழ்கள் இல்லாமல் அல்லாடிய நிலையில் 1948 இல் ஈவேரா மணியம்மை திருமணம் சட்டப்படி செல்லும் திருமணமாக நடந்தது.
 ஈ.வே.ரா தம் வளர்ப்பு மகள் மணியம்மையை சுயமரியாதை திருமணம் செய்யவில்லை ஏனென்றால் அப்போதுதான் சொத்து மணியம்மை பெயருக்கு மாறும்.

 இவர்கள் செய்யாத ஏமாற்றே இல்லை!

சில தகவல்களுக்கு நன்றி: விசுவநாதன் கரிகாலன்

Monday, 19 June 2023

மதராஸ் ஐ மட்டுமாவது பிரிட்டிஷ் ஆளவேண்டும் என்ற ஈவேரா

பிரிட்டிஷ் அரசர் மரணத்திற்கு ஈ.வே.ரா அஞ்சலி

சவர்க்கர் கூட பிறகுதான் ஆங்கிலேய அடிமையாக மாறினார் ஈ.வே.ரா எப்போதுமே ஆங்கிலேயர் அடிமைதான்.
மன்னர் ஜார்ஜ் இறந்தபோது ராஜ விசுவாசத்துடன் ஈ.வே.ரா எழுதிய உருக்கமான இரங்கல்.
இதில் 'ஆங்கில ஆட்சியின் குறைகளுக்கு மன்னரை குறை சொல்லக்கூடாது' எனும் கருத்து கவனிக்கத்தக்கது.
மேலும், இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெறும் காலம் கனிந்தபோது கூட 'தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேயர் தொடர்ந்து ஆள வேண்டும்' என்று ஈ.வே.ரா வலியுறுத்தியதையும் காணலாம்.
27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும்,
நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான
ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)
9 செப்., 2022

Saturday, 10 June 2023

பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற்றது யாரால்

பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற்றது யாரால்?

இந்த ராமசாமி பக்தர்கள் எத்தனை ஸ்டிக்கர்தான் கைவசம் வைத்துக்கொண்டு திரிகின்றனர் என்று தெரியவில்லை.
பச்சையப்பன் கல்லூரியில் ஈ.வே.ரா தான் பறையர்களுக்கு இடம் வாங்கிக் கொடுத்தாராம்!
ஆனால் பாருங்கள் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் எழுதிய சுயசரிதையான 'ஜீவிய சரிதம்' நூலில்
‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’ என்று தன்னைப் பற்றி கூறியுள்ளார்.

அதாவது பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் தொடர்முயற்சியால் 21.11.1927ல் அனுமதி கிடைத்தது.
உடனே ஈ.வே.ரா அனுமதி கிடைத்த செய்தி தனக்கு தெரியாதது போல பச்சையப்பன் கல்லூரியைக் கண்டித்து தன் விபச்சார எழுத்து நடையில் கடுமையாக எழுதி அது ஆறு நாட்கள் கழித்து  27.11.1927 குடி அரசு இதழில் வெளியிடப்பட்டது.
அது வருமாறு,
"தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்."
(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)

இந்த ஒன்றை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற காரணமே ஈவேரா அதைக் கையில் எடுத்ததுதான் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டனர்.

இதற்கு 18 ஆண்டுகள் முன்பே அயோத்திதாசர் 1909 இல் முதன்முதலாக இது பற்றி எழுதியுள்ளார். அது வருமாறு,
"மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி, 'சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்."
(தமிழன், சனவரி 6, 1909)

அதன்பிறகு எம்.சி.ராஜா மற்றும் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரின் தொடர்ச்சியான முயற்சியால் பச்சையப்பன் கல்லூரியில் அனைவருக்கும் இடம் தரப்பட்டது.

ஆட்சியில் இருந்த நீதிக் கட்சி வெற்று கடிதங்களையும் அலங்கார அறிக்கைகளையும் விடுத்ததைத் தவிர எதுவும் செய்யவில்லை.

நன்றி: நீதிக் கட்சியின் மறுபக்கம், ம.வெங்கடேசன்

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Tuesday, 21 January 2020

கற்பு கூடாது என இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் கூறிய ஈ.வே.ரா












கற்பு கூடாது - இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈ.வே.ரா
24.01.1971 தினமணி செய்தி படத்தில் உள்ளது.
அதில் "மத உணர்வை அவமதிக்கும் விதத்தில் தி.க ஊர்வலம்" என்ற தலைப்பில் சேலத்தில் ஈ.வே.ரா தலைமையில் நடந்த "மூடநம்பிக்கைகள் ஒழிப்பு மாநாடு" பற்றிய தகவல்கள் உள்ளன.
அதில் முருகர் பிறப்பு பற்றி ஆபாசமாக வரைந்து எடுத்துவந்தது பற்றியும் ராமர் சிலையை செருப்பால் அடித்தது பற்றியும் உள்ளது.
இதற்கு கருணாநிதி அரசாங்கம் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானம்தான் முத்தாய்ப்பு!
பிறன் மனைவியை அபகரிப்பது இந்தியன் பீனல் கோட்டின் கீழ் ஒரு குற்றமல்ல வென்று விதிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு சர்க்காரை கேட்டுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
புகைப்படத்திற்கு நன்றி:
செங்கோட்டை ஸ்ரீராம்்
(dhinasari .com)

Wednesday, 31 July 2019

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------

"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்

30.7.1886

முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...

1.சத்திய மூர்த்தி ஐயர்
2.ஈ.வெ.ராமசாமி
-------
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர்.

இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் என்று கூறப்படுபவர் சத்திய மூர்த்தி ஐயர்.

இவர் "இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது" என்று சொன்னதாகவும்,
அதற்குப் பதிலடியாக முத்துலெட்சுமி அம்மையார் "உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன்" என்று கூறி அவரின் வாயடைத்தார் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

குறிப்பாக, ஈ.வெ.ராமசாமிதான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது பற்றி ஆராய்வோம்!

முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்  சுயசரிதை நூல் எழுதியுள்ளார்.
அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது.

அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை,
(ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்று மட்டும் குறித்துள்ளார் ).

அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் எழுதி தொடர்ந்து குரல் கொடுத்ததாக கூறப்படும் ஈ.வெ.ரா. குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
---------
ஆம்.

முதலில் அவரைத் தூண்டியதாக அவர் கூறும் இருவரும் பார்ப்பனர்!

லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும்,
பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் செயல்படத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
--------
அவர் வழிகாட்டியாக சுட்டுவது காந்தியை!

அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும்,
அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று  புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார்.
'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
--------

முன்னோடிகளாக அவர் சுட்டியோர் திராவிடவாதிகள் அல்லர்!

1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரையே குறிப்பிட்டு பேசுகிறார்.
-------
ஈ.வே.ரா பற்றி பத்தோடு பதினொன்றாக கூட குறிப்பிடவில்லை!

  திராவிடவாதிகளில் நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை ஓரிடத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு திராவிடவாதியான நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான்  தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார்.

1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

ஒருவேளை யாரையும் விமர்சிக்க மனமில்லாமல் சத்தியமூர்த்தி ஐயரை விட்டிருக்கலாமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.

அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி.
1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.

பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

ஈ.வெ.ரா எந்த இடத்திலும் அம்மையாரின் நினைவுக்கு வரவில்லை.

  என்றால் ஈ.வெ.ரா குரல்கொடுக்கவே இல்லையா?!
அல்லது முத்துலட்சுமி அம்மையார் குறிப்பிடும் அளவுக்கு அது வலுவாக இல்லையா?!

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.

"பெரியாரின் ஆலோசனையின்படியே, சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேள்விகள் கேட்டார்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!

(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)

தகவல்களுக்கு நன்றி:-
Tamilthesiyan.wordpress.com

Thursday, 1 November 2018

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

'உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன.
கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியுமில்லை; கொள்கையுமில்லை.
‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா?
தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு,
அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவர் ஆதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார்.

தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.
ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜனநாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச்சண்டை நின்றிருக்காதென்பது உறுதி.

அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண்டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர்.(இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம்.
இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா?
இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா?
இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது.
இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.
போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள்,
மாதா கோயிலுக்குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது.
இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது.
ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம்.
குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக்குழுவினர்.
இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- ஈ.வே.ரா (விடுதலை 08.10.1957)

search in google கூலி உயர்வு கேட்டதால் கீழ்வெண்மணிப் படுகொலை நடந்தது - ஈ.வெ.ரா

search in google முதுகுளத்தூர் கலவரம் மறைக்கப்பட்ட உண்மைகள் வேட்டொலி

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

'உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன.
கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியுமில்லை; கொள்கையுமில்லை.
‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா?
தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு,
அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவர் ஆதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார்.

தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.
ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜனநாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச்சண்டை நின்றிருக்காதென்பது உறுதி.

அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண்டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர்.(இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம்.
இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா?
இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா?
இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது.
இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.
போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள்,
மாதா கோயிலுக்குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது.
இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது.
ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம்.
குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக்குழுவினர்.
இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- ஈ.வே.ரா (விடுதலை 08.10.1957)

search in google கூலி உயர்வு கேட்டதால் கீழ்வெண்மணிப் படுகொலை நடந்தது - ஈ.வெ.ரா