Sunday, 28 December 2025
பாரதியார் கொண்டிருந்த தமிழினப்பற்று
Friday, 12 December 2025
தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்
தமிழரல்லாதார் ஆட்சிஅம்பலப்படுத்திய பாரதியார்
Thursday, 24 January 2019
இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்
இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்
சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே– இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
- பாரதியார்
Sunday, 6 November 2016
தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே! பாரதியார் வேதனை!
தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே...!
பாரதியார் வேதனை!
சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீவெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது.
ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்.
பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ?
தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன.
நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன.
பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு.
நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள்.
நமது விவாக காலங்களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம் தெலுங்கு முறை.
நமது பாஷையில் "கவனம்", (ஆழ்ந்து நோக்குதல்) "ஜொகுஸு", "எச்சரிக்கை", "துரை", "வாடிக்கை", "கொஞ்சம்" முதலிய பதிற்றுக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன.
இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள்.
ஆனால் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை.
உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது.
இந்தியாவில் கொஞ்சம் தீவ்ரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது.
இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் (உலகப்போர்) இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும்.
இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள்.
தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிறார்கள்.
சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்கு கூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை.
சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது.
கொஞ்ச காலத்துக்கு முன்பு கூட நெல்லூரில் கூடிய மாஹானசபையில் 'வந்தே மாதரம்' பாட்டுக் கூடப்பாடவில்லையென்று கேள்விப்பட்டேன்.
தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது.
இது நிற்க, மேற்படி சபையில் ஸ்ரீ வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தையின் ஸாரம் பின் வருமாறு:
1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.
2. இந்தியாவுக்குத் தன்னாட்சி கொடுக்க வேண்டும்.
3. இயன்ற வரை, இந்தியா முழுவதையும் பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும்.
அதாவது மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றி
தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்கநாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.
4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும்.
ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.
மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி;
இரண்டாவது மற்றொரு பகுதி.
இரண்டாவது தாய்ப்பகுதி;
மற்றவை கிளைப் பகுதிகளாகும்.
என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கொண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது.
மேலும், தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை.
தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.
பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக்கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.
தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி.
தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை.
மேற்படி கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917இல் 'தெலுங்க மஹா சபை' எனும் தலைப்பில் 'சக்தி தாஸன்' எனும் புனைப்பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.
சேர,சோழ, பாண்டிய மூவேந்தரின் தமிழர் ஆட்சிக்கு பிறகு விசய நகரப் பேரரசு தமிழகத்தில் நிலை கொண்டது. பிரித்தானியர் ஆட்சியிலும் கூட தெலுங்கரின் ஆதிக்கம் தமிழகத்தில் ஓங்கி வளர்ச்சி பெற்றது. அதன் மூலம் தமிழர் பண்பாட்டிலும், மொழியிலும் சில கலப்புகள் நிகழ்ந்தது. அதுமட்டுமின்றி, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழர்களுக்கு இன உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே 1912இல் தெலுங்கர்கள் 'ஆந்திர மகாசபை' அமைத்து தெலுங்கு இன உணர்ச்சி வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியதோடு மொழிவழி அடிப்படையில் மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால் மிகத் தாமதமாகவே இக்கோரிக்கையானது 1938இல் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. அதுவும் கூட 1939க்குப் பிறகு 'திராவிட நாடு' பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்
டது. தற்போது தமிழர்கள் முகத்தில் திராவிட, இந்திய முகமூடிகள் மாட்டப்பட்டு விட்டது. இவ்விரண்டையும் கழற்றி எறியாத வரை தமிழர்களுக்கு எப்போதும் வாழ்வில்லை என்பதைத்தான் சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று வழியில் தவறாக புரிந்து கொண்ட இந்து மதக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி விட்டு அவரின் மொழிவழி தேசிய இனங்களின் சமத்துவ சிந்தனையை ஒவ்வொரு தமிழரும் ஏற்றிப் போற்றிடுவோம்!)
'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் 11.12.1882.
நன்றி: Kathir Nilavan
தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்
தமிழரல்லாதார் ஆட்சி
அம்பலப்படுத்திய பாரதியார்
1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி
மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது,
"புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்த
பிராமணரும்-பஞ்சமரும்-ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,
தமிழரும் அல்லாதார் என்று
ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.
ஹும்! இந்த பாஷை சரிப்படாது.
நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.
தமிழ் வேளாளர் ஒருவர்,
இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும்
ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்கள் என்றும்
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும்
என்னிடம் வந்து முறையிட்டார்"
(பாரதி தமிழ்: பக்.403)
Thursday, 18 September 2014
இராவணனைப் புகழும் பார்ப்பனர்
இராவணனைப் புகழும் பார்ப்பனர்
பல சாதியாருக்கு பூணூல் போட்டு பார்ப்பனராக்கிய பாரதியர் என்ற தமிழ்ப் பார்ப்பனர், இன்றைய பிராமணர்களைப் போல (வடயிந்தியச் சத்திரியனான) ராமனைப் போற்றவில்லை (தமிழ்ப் பார்ப்பனன்) இராவணனைத் தான் புகழ்ந்துள்ளார்.
அவர் 1935ல் எழுதிய 'குதிரைக் கொம்பு' கதையிலிருந்து சில வரிகள்.
அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங்கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான்.
அங்கிருந்து அவர்கள் மிதிலை.நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள்.//
ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்//
சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக் குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்//
அப்படியே ராமலக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர்//
சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள்//
ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான்//
அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன்//
சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான்//
வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம். இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள்//
வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான்//
"கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்."//
சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்//
அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தனர்//
ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்துவிட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள்.
இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது.
உடனே ராவணன் "ஹா, ஹா, ஹா, நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா, ஹா, ஹா!" எனறு பேரிரைச்சல் போட்டான். அந்த.ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள். மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான ராமாயணக் கதை //
முழுதும் படிக்க
http://kichu.cyberbrahma.com/குதிரைக்-கொம்பு/