Saturday, 24 October 2026

ஹபீபி விமர்சனம்

ஹபீபி விமர்சனம் முதலில் இந்த படத்தின் தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை தமிழக அதிலும் குறிப்பாக திருநெல்வேலி இசுலாமியர்கள் தொடர்பான தனித்துவமான எத்தனையோ தமிழ்ச் சொற்கள் உள்ளன! இப்படத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளன! அதில் ஒன்றை தலைப்பாக வைத்திருக்கலாம்! அப்படி வைத்திருந்தால் இந்த படம் மக்களிடமிருந்து அந்நியப் பட்டிருக்காது! சரி! இந்த திரைப்படத்தை மூன்று கண்ணோட்டங்களில் பார்க்கலாம்! முதலில் தன் வாழ்வாதாரத்துக்காக புலம்பெயரும் ஒரு மனிதனின் பார்வையில், வட மாநிலங்களில் 9 ஆண்டுகள் இருந்தவன் என்ற அடிப்படையில் இந்த படத்தை பார்க்கும்போது பல தடவை உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்பட்டது! பல ஆண்டு கழித்து ஊர் திரும்பும் ஒருவன் எப்படி தாய்நிலக் காற்றை உள்ளிழுத்து மகிழ்வான், எப்படி தாய்நிலத் தண்ணீரில் ஆனந்தமாக குளிப்பான் என்பதை நுட்பமாகக் காட்டிருக்கிறார் இயக்குநர்! ஒருமுறை சம்பாதிக்க ஊரை விட்டு செல்லும் ஒருவர் கடைசிவரை அதில் சிக்கிக்கொண்டு தவிப்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். விடுமுறையில் தன் வீட்டிலேயே விருந்தாளியாக தன் குழந்தைகளுக்கே அந்நியனாக வாழும் ஒருவர் மனநிலையையும் ரத்த உறவுகள் இறப்புக்கு கூட வரமுடியாமல் கதறும் சோகத்தையும் கணவனை அனுப்பிவிட்டு பெண்கள் தனிமையைத் தாங்கிக்கொண்டு வாழ்வதையும் ஆழமாகக் காட்டியிருக்கிறார். ஒரு சமூகம் பொருளாதார உயர்வுக்காக கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் எந்த நன்மைகளையும் பாதிப்புகளையும் அடைகிறது என்பதை விரிவாகவே காட்டியுள்ளார். வழக்கமான வில்லன் ஹீரோ கதைப்போக்கு இல்லை! சமூகத்துக்கு அறிவுரை சொல்கிற மேதாவித்தன எண்ணம் இல்லை! இருப்பதை இருப்பது படி அப்படியே காட்டியிருக்கிறார்! சுருக்கமாக இன்னொரு மெய்யழகன் என்று சொல்லலாம்! இரண்டாவது சினிமா ரசிகன் என்கிற கண்ணோட்டத்தில், இந்த படத்தை எடுத்தவர் கைகளைப் பற்றி முத்தம் கொடுக்க வேண்டும்! அப்படியே கடையநல்லூர் இசுலாமியத் தெரு ஒன்றில் 40 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு வந்தது போல இருக்கிறது! கதாநாயகியின் அம்மா தவிர அத்தனை பேருமே நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள்! படத்தில் வரும் பெண்கள் இயல்பான அழகால் நெஞ்சை அள்ளுகிறார்கள்! கடையநல்லூர் ஊரின் அழகை பத்து மடங்கு பெருக்கி வளைத்து வளைத்து காட்டியிருக்கிறார்கள்! மக்களின் பேச்சு வழக்கு, உடை, கால கட்டத்துக்கு சூழல், மக்களின் பழக்க வழக்கங்கள் மிக நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளன! மூன்றாவது தமிழ்தேசியவாதி யாக, ஒரு மதம் ஒரு இனத்தின் அடையாளத்தை பாதிவரை அழித்துவிடும் என்பது கண்கூடாகவே தெரிகிறது! இன்று இசுலாமியத் தமிழருக்கும் பிற தமிழருக்கும் இருக்கும் தொடர்பு மொழி மட்டுமே ! அதிலும் 10% மத ரீதியான சொற்கள் கலந்துவிட்டன! பிறப்பு, வழிபாடு, திருமணம், இறப்பு, தொடர்பான சடங்குகள் மத ரீதியான சொற்களால் குறிக்கப்படுவது கூட அந்நியமாகத் தோன்றவில்லை! ஆனால் இயல்பான சொற்களான மனம், உலகம், பொறுமை, உறவுமுறை போன்றவற்றிலும் அரேபிய பாரசீக சொற்களை இசுலாமியர் பயன்படுத்துவது அந்நியமாகத் தோன்றுகிறது! ஒரு வேளை இசுலாமியர் என்போர் 700 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் இருந்து இங்கு வந்து குடியேறியிருந்தால் இன்று இப்படித்தான் இருந்திருப்பார்கள்! நான் பலமுறை கூறியபடி கொத்துத்தாடி வைக்காமல், பர்தா போட்டு முகத்தை மூடாமல், தூய தமிழில் பெயர்வைத்துக் கொண்டு, தமிழில் தொழுது வழிபட்டு, சுன்னத் அதாவது கத்னா செய்யாமல், ரமலான் நோன்பு இருக்காமல் கூட ஒருவர் 100% குரான் வழியிலான இசுலாமியராக வாழமுடியும்! இன்று இசுலாமியர் வலிந்து தம் மீது திணித்துக் கொள்கிற அடையாள மாற்றம் பெரும்பாலும் இசுலாத் சொல்லாத அல்லது கட்டாயமாக வலியுறுத்தாத விடயங்கள்! சக மக்களிடமிருந்து வேறுபட்டு காட்டிக்கொள்வதை தீவிரமாக செய்யும் அதேநேரத்தில் இசுலாத் கண்டிப்புடன் வழியுறுத்தும் பல விடயங்களை இசுலாமியர் செய்வதே இல்லை! இன அடையாளங்களான தோற்றம், பண்பாடு, தாய்நிலப் பற்று போன்றவை மதத்தின் பெயரால் பாதி அரிக்கப்பட்டு தமிழின இசுலாமியர் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் அல்லாடும் நிலையில் உள்ளனர்! இந்த இடத்தில் கிறித்தவத் தமிழரை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை! இந்த படத்திலே கூட 1980 களில் ஓரளவு இயல்பாக தெரிந்த இசுலாமியர் தற்காலத்தில் இசுலாமிய அடையாளங்களை அதிகம் வெளிக்காட்டுவதை காட்டியுள்ளனர். ஒரு கிறித்தவ நாட்டுக்கு குடிபெயர்ந்த ஒரு இந்து குடும்பம் எப்படியான கலாச்சார மாற்றத்தை அடையுமோ அந்த மாற்றத்தை இங்கே தாய்நிலத்தில் வாழும் ஒரு இசுலாமியக் குடும்பம் அடைகிறது! ஹபீபி படம் பாதி அடையாளத்தை தொலைத்தாலும் இன்னமும் நாங்கள் தமிழர்கள்தான் என்று எஞ்சியிருக்கும் ஒரு பாதியை எடுத்துக் காட்டுவதாகவே நான் பார்க்கிறேன்! எல்லா இசுலாமிய குழந்தைகளும் அரபி படிப்பது போல காட்டப்படுவதும் தமிழ் இசுலாமிய பெண் மலையாள இசுலாமியரைத் திருமணம் செய்து வீட்டில் மலையாளம் பேசுவது போலக் காட்டப்படுவதும் உண்மையில் பரவலாக நடக்கிறதா அல்லது மிகைப்படுத்தப் பட்டதா என்று தெரியவில்லை! பரம்பரை தொழிலையும் வீட்டையும் கைவிட மறுக்கும் ஒரு மனிதன் தன் சொந்த ஊருக்கு திரும்பி எப்படியாவது காலூன்றி நின்றிட வேண்டும் என்று வைராக்கியமாக இருக்கும் கதாநாயகன் இவர்களைப் போலவே மதம் மட்டுமே மாறிய என்னின இசுலாமிய ரத்த சொந்தங்களை எப்படியாவது மீண்டும் இன அடையாளத்திற்குள் முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை! அதே போல படம் முழுக்க இந்துக்களே காட்டப்படவில்லை கதாநாயகனின் அப்பாவின் நண்பர் மட்டுமே வருகிறார். நிஜத்தில் இசுலாமியரின் அன்றாட வாழ்வில் தினமும் பத்து இந்துக்களையாவது சந்திப்பது இயல்பு! வெளிநாடுகளில் போய் கஸ்டப்படும் இந்துக்களையும் கூட காட்டியிருக்கலாம்! இசுலாமியர் பற்றிய படம் என்றால் இந்து கிறித்தவர் வரக்கூடாதா என்ன?! ஒப்பீட்டுக்காக gangs of wasseypur ஐ சொல்ல முடியும்! மேலும்... வெளிநாடு செல்வது பற்றிய படம் என்றால் வெளிநாடுகளில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ஒரு பத்து நிமிடங்கள் ஒதுக்கி காட்டியிருக்கலாம்! அதுபோல வெளிநாடு என்றாலே அரபுநாடுகள் மட்டும்தானா? கடையநல்லூர் மக்கள் சிங்கப்பூரிலும் அதிகம் உள்ளனர்! அங்கே கடையநல்லூர் தெரு என்றே ஒரு வீதி உண்டு! கடையநல்லூர் தங்க வணிகம் இசுலாமியர் உயிர்நாடி அதுபற்றியும் காட்டியிருக்கலாம்! கடைசியில் விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு மறுமண உரிமை உண்டு என்பதை சுட்டிக் காட்டியிருக்கலாம்! சிற்சில குறைகள் இருந்தாலும் தன் சமூகத்தை பற்றி உண்மைக்கு மிக நெருக்கமாக காட்டிய இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுக்கு வாழ்த்துகள்! தமிழக இசுலாமியர் பற்றி அறிந்துகொள்ள இந்த படத்தை விட சிறந்த ஆவணம் வேறில்லை என்று சொல்லலாம்! மசாலா படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதிய பரிமாணத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அனைவரும் ott யில் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்!

No comments:

Post a Comment