Monday 11 January 2016

குருதியில் நனைந்த குமரி -11

குருதியில் நனைந்த குமரி -11

1954 ஆகஸ்ட் 14
மாலை 7 மணி

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளையும் ரசாக்கும் புறப்பட்டு அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.கோசல்ராம் என்பவரை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்.

"கேட்கவே வருத்தமாயுள்ளது ஐயா,
மனம் பொறுக்கவில்லை.
ஆமாம் எத்தனை பேர் இறந்தனர் உறுதிபடத் தெரிந்ததா?"

"உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் 30 பேர் வரை இருக்கலாம்"

"பதினோரு பேர் என்றல்லவா கேள்விப்பட்டேன்"

"பதினோரு பேரின் அடையாளம் தெரிந்துள்ளது.
காணாமல் போனோர் பலர்.
எத்தனை பேர் மரணமடைந்தனர் என்பது இனிதான் தெரியும்.
ஆறாண்டு முன்பே இருவரை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
நேற்றுதான் தகவல் வந்தது சிறையில் பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி என்ற இரு தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பல கொலைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அவை காணாமல் போனோர் பட்டியலில்தான் சேர்க்கப்படும்"

"இந்த தகவல்கள் எப்படி கிடைக்கின்றன?"

"அரசு பணிகளில் அடிமட்ட ஊழியர்களாக சில தமிழர்கள் உண்டு.
அவர்கள் உளவு பார்த்து கூறுவார்கள்.
சில தாழ்த்தப்பட்ட மலையாளிகள் உண்டு. அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள்தான்.
அவர்கள் உயர்சாதி மலையாளிகளை வெறுப்பவர்கள்.
அவர்களும் ஓரளவு உதவுவார்கள்.
ஆனால் ஆதரங்கள் எதையும் திரட்டமுடியவில்லை.
முதலில் பட்டம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடக்குமுறையை களையவேண்டும்.
அதன்பிறகு விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவேண்டும்"

"உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். நான் செய்ய தயாராக இருக்கிறேன்"

"இதற்கு காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தோன்றுகிறதா தாணு அவர்களே?"

"நிச்சயம் கிடைக்கும்"

"நேரு சொன்னதையும் மீறி நாங்கள் போராட்டம் நடத்தியதால் அவர் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை"

"காமராசரிடம் உதவி கேட்கலாமே?!"

"அவர் எங்கள் உடன்பிறந்தவர் போன்றவர்தான்.
ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம்.
காங்கிரஸை நாங்கள் படுதோல்வி அடையச் செய்ததில் இருந்து அவர் எங்களை வெறுக்கிறார்.
காமராசர் உம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எங்கள் குறிக்கோள் மறுநொடியில் நிறைவேறிவிடாதா?"

"ஆமாம். நீங்கள் காங்கிரஸின் தமிழ்நாடு கிளையில் சேரக் கேட்டபோதே அவர் சம்மதித்திருக்க வேண்டும்.
நீங்கள் தனிக் கட்சி தொடங்கியிருக்க வேண்டியது வந்திருக்காது"

"நாங்கள் குமரி மாவட்டம் அடைந்தபிறகு தமிழக காங்கிரசில்தான் சேர்வோம்"

"ஏன் திராவிடக் கட்சியில் சேரப்போவதில்லையா?"

"அதிலே அனைவரும் தெலுங்கர் என்று பேசிக்கொள்கின்றனர்.
திராவிட கட்சிகள் தென்னிந்திய மக்கள் அனைவருக்குமானது.
தமிழருக்கான முக்கியத்துவம் அதன் கொள்கைகளில் இல்லை"

"காங்கிரஸ் மட்டும் தமிழர் முக்கியத்துவம் கொடுக்குமா"

"கொடுக்காதுதான் ஆனால் திராவிடத்தை விட அதுமேல்.
பலதரப்பட்ட இனங்கள் ஒன்றிணைவதால் ஓரளவு இனவழி முக்கியத்துவம் கிடைக்கும்.
அதன் தலைவர்கள் தமிழர்கள்.
எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று தோன்றுகிறது"

"காமராசரை ஒருமுறை சந்தித்து பேசித்தான் பாருங்களேன்"

"அவர் ரொம்ப நல்லவர்.
ஆனால் அதுதான் பிரச்சனையே.
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
இந்திய மாநிலங்களில் மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து இருக்கவேண்டும், இனங்கள் ஒன்றுபட்டு ஒரே இந்திய இனமாக மாறவேண்டும் என்று நினைப்பவர்.
பெற்ற தாய்க்கு கூட சலுகைகள் எதுவும் செய்துதருவதில்லை.
நல்லபெயர் கெட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்.
எங்களுக்கு உதவினால் இனவாதி என்றோ சாதியவாதி என்றோ பெயர் வந்துவிடும் என்று அஞ்சுகிறார்.
அவரது நோக்கங்கள் மிக உயர்ந்தவை.
ஏடுகளில் எழுதினால் சிறப்பாயிருக்கும்.
ஆனால் நடைமுறையில் அது எதிர்மறைத் தாக்கத்தைதான் உருவாக்குகிறது"

"அவர்தானே பதவியில் இருக்கிறார்"

"அவரைப் பார்க்கத்தான் வேண்டும்.
நேசமணி ஐயாவின் கடிதத்தைக் கொடுக்கவேண்டும்.
அவர் உதவுவார் என்றால் நான் டெல்லிவரை போகவேண்டிய அவசியமிருக்காது.
ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை"

"இப்படியே போனால் காங்கிரசு தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படத்தான் போகிறது.
அதன்பிறகு காமராசரை இந்தியர்கள் மறந்துவிடுவார்கள் என்று அடித்துச்சொல்லலாம்.
ஏதேது காங்கிரசு இன்னும் 20 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காது என்று முத்துராமலிங்கத்தேவர் கூறவது நடந்துவிடுமோ?"

"ஆம். அவரையும் சந்திக்கவேண்டும்.
தொகுதிக்கே போகாமல் வெல்வாராமே?!
காங்கிரஸ் உதவவில்லை என்றால் அவரிடம்தான் போகவேண்டும்"

"அவர் கட்டாயம் உதவுவார்"

"நாம் சந்திக்கப்போகும் கோசல்ராம் தமிழர் போல் தெரியவில்லையே"

"ஆமாம். இவர் தமிழர் கிடையாது.
திருநெல்வேலியில் எல்லாமே தெலுங்கர்கள்தான் குறிப்பாக பெரிய ஜமீன்தார்களாக இருக்கும் ரெட்டியார்கள்.
இவர் தெலுங்கு கலிங்க குலத்தவர்.
நீங்கள் பிரச்சனையை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.
மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்"
-----------------------------------------
இருவரும் கோசல்ராமைச் சந்தித்து பிரச்சனையை விளக்கிக் கூறினர்.

"கவலைப்படாதீர்கள் காங்கிரஸ் தலைவரிடம் இது பற்றி பேசுகிறோம்"

"ஐயா விரைவாக முடிவெடுத்தால் நலமாக இருக்கும்.
அங்கே மக்கள் படாதபாடு படுகிறார்கள்.
அதனால்தான் வந்தை இறங்கிய உடனேயே இரவென்றும் பார்க்காமல் கிளம்பிவந்தேன்"

"நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"

"நீங்கள் அங்கே நேரில் செல்லவேண்டும்"

கோசல்ராம் சிறிது தயங்கினார்.

தாணுப்பிள்ளை உடனடியாக,
"நான் நேரில் செல்கிறேன்.
நீங்கள் காங்கிரஸ் சார்பாக பார்வையிட வருவதாக அறிவித்தால் போதும்.
அங்கே அடக்குமுறை குறையும்"

கோசல்ராம் திருநெல்வேலி எம்.எல்.ஏ சங்கர்(ரெட்டியார்) என்பவரைத் தொலைபேசியில் அழைத்தார்.
இருவரும் தெலுங்கில் பேசிக்கொண்டனர்.

"அவர்களிடம் ஆதரவளிப்பதாகக் கூறுங்கள்.
அகதிகள் கூடிக்கொண்டே போகிறார்கள்.
நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் திருநெல்வேலி மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டும்"

"மலையாளிகள் எதிர்ப்பார்களே"

"அவர்கள் என்ன நமக்கு வேண்டியவர்களா?
எதிர்த்தால் எதிர்க்கட்டும்"

"என்ன இப்படி கூறிவிட்டீர்கள்?
அவர்களை பகைத்துக்கொள்வது நேருவையே பகைத்துக்கொள்வதாகுமே?"

"இப்போதைக்கு அவர்கள் கேட்கும் ஆதரவை வழங்குங்கள்.
பகுதிகளைப் பிரிக்கும்போது மலையாளிகளுடன் இணக்கமாகப் போய்விடலாம்"

பேசிவிட்டு கோசல்ராம் வந்தார்.

"சரி தாணு அவர்களே,
நாம் மூன்றுபேர் ஒரு குழுவாக போய் நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம்"

"நல்லது ஐயா நன்றி"
---------------------------------------
"தாணு அவர்களே, நான் நாளையே டில்லி கிளம்பவேண்டும்.
பயணச்சீட்டு ஏற்பாடு செய்யவேண்டும்"

"அதைச் செய்துவிடலாம்.
ரசாக் அவர்களே ஒரு வேண்டுகோள்"

"என்ன?"

"நானும் வரலாமா?"

"ஐயா உங்களுக்கு நேரமுண்டா?
10,15 நாட்கள் ஆகும்.
பலரை சந்திக்கவேண்டும்"

"ஓய்வுகூட எடுக்காமல் நீங்கள் செயல்படுகிறீர்கள்.
நான் கூட இருந்து என்னால் முடிந்த உதவி செய்கிறேனே?!"

"சரி ஐயா, தங்களின் ஆலோசனையும் உதவியும் தேவைதான்"

"யாரையெல்லாம் சந்திக்க திட்டமிட்டுள்ளீர்கள்?"

"திட்டமெல்லாம் போடவில்லை இனிதான் போடவேண்டும்"

"சரி நீங்கள் சென்னை புறப்படுங்கள்.
நான் இப்போதே கிளம்பினால் கோசல்ராம் நேரில் சென்று பார்வையிடுவதில் அக்கறைகாட்ட மாட்டார்.
காங்கிரஸ் குழு அங்கே செல்வதை உடனடியாகச் செய்துவிட்டு அடுத்த நொடி உங்களுடன் வந்து இணைகிறேன்"

"சரி ஐயா, உங்கள் இனப்பாசம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
நெல்லை மண்ணின் மைந்தர்கள் செய்யும் உதவியை குமரித் தமிழர்கள் நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்"

(தொடரும்)
-----------------------------------
குருதியில் நனைந்த குமரி -10
https://m.facebook.com/photo.php?fbid=647412802029043&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment