Sunday 3 January 2016

குருதியில் நனைந்த குமரி -8

குருதியில் நனைந்த குமரி -8

நேசமணி இரவெல்லாம் தூங்கவில்லை.

அவரது மனைவியான கரோலின் அருகே இருந்தார்

"என்னவாயிற்று? குஞ்சனையாவை காவல்துறை  தூக்கிச்சென்றதை நினைத்து வருத்தமா?"

"ஆமாம், ஏற்கனவே தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக பட்டம் ஆட்களிடம் கத்திக்குத்து வாங்கியவர்.
இப்போது கால்களையும் உடைத்துவிட்டனர்.
முக்கியமான மற்றவர்களை தலைமறைவாகச் சொல்லிவிட்டேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?"

"நீங்கள் கவலைப்படுவதால் என்ன நடக்கப்போகிறது?
விடிந்ததும் ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
இப்போது உறங்குங்கள்"

"நான் கவலைப்படாமல் வேறுயார் கவலைப்படுவார்கள்?
ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றவன் நான்,
அந்த ஒரு லட்சம் பேருக்கும் நான் என்ன பதில் சொல்வேன்?
நாட்டைக் காக்க வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள் என்று சொன்னவன் நான்தானே?!
தமிழகத்துடன் இணையவேண்டி சிறை சென்ற இளைஞனுக்குதான் பெண்கொடுக்கவேண்டும் என்று கூறியவன் நான்தானே?!
அதை அப்படியே செய்த மக்கள் அல்லவா இவர்கள்?!
சிறைவாசலில் நிச்சயமான திருமணங்கள்தான் எத்தனை?!
நிச்சயமான மாப்பிள்ளைகள் வேண்டுமென்றே சிறை சென்றுவந்து திருமணம் செய்த நிகழ்வுகள்கூட உண்டே?!"

"எல்லாம் சரியாகிவிடும்"

"தேர்தலில் வென்றால் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை.
எத்தனை வன்முறைகளைச் சமாளித்து இந்த தேர்தலில் வென்றோம்?!
எந்த பலனும் இல்லை.
போன தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது அதைவிட அதிகமான உயிர்ச்சேதம்"

கதவு தட்டப்பட்டது.
கரோலின் கதவைத் திறந்தார்.
இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந்தனர்.

"என்னம்மா?!"

"அப்பச்சியை பார்க்கவேண்டும்"

நேசமணி வாசலுக்கு வந்தார்.

அவரைப் பார்த்ததும் அப்பெண்கள் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினர்.

"ஐயா என் மகன் அழைத்துச் சென்ற காவல்துறை மண்டையில் பலமாக அடித்து போட்டுவிட்டது.
நினைவில்லாமல் கிடக்கிறான் ஐயா"

"ஐயா என் அண்ணனை செல்லப்பனை அழைத்துக்கொண்டுபோய் வலதுகாலை உடைத்து ஊனமாக்கி
தவழ்ந்தபடி வீட்டுக்கு போகச் சொல்லி விரட்டியுள்ளனர்.
குருதி ஒழுக தவழ்ந்தபடி வந்துகிடக்கிறார் ஐயா"

"எப்போது? எங்கே?"

"குழித்துறையில் ஐயா, நேற்று"

"அங்கேயிருந்து கால்நடையாகவா வந்தீர்கள்?"

"ஆமாம் ஐயா எங்களுக்கு உங்களை விட்டால் வேறு யார்?"

விடிய விடிய இன்னும் பல பெண்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு முழுவதும் கால்நடையாக நடந்து நேசமணி வீடுதேடி வந்து கொடுமைகளைச் சொல்லி கண்ணீர் விட்டனர்.

மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் நேசமணியின் மன உறுதியைக் குலைப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் திட்டம்.

"இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ளுங்கள் அம்மா
கூடிய விரைவில் நமக்கு விடிவுகாலம் பிறந்துவிடும்"
நேசமணி அனைவருக்கும் இதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் சொல்லி அனுப்பினார்.
______________________

மறுநாள் துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைப் பார்வையிட 600 ஆயுதக்காவலர்கள் புடைசூழ பட்டம் தாணுப்பிள்ளை பார்வையிட வந்தார்.

அவரும் காவல்துறை உயரதிகாரியும் மலையாளத்தில் பேசிக்கொண்டனர்

"என்ன இது வெறிச்சோடிக் கிடக்கிறதே?!"

"இவர்கள் வெளியே வந்தால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடாதா?
அதனால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறேன்.
வெளியே வருபவர்களை நன்கு கவனித்து அனுப்பிவிடுகிறோம்"

"ம். இனி இவர்கள் கூட்டம் கூடுவதை நினைத்தும் பார்க்கக்கூடாது.
ஆமாம், நேசமணி கட்சித் தலைவர்களை என்ன செய்தீர்கள்?"

"அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லைக் காவலை பலப்படுத்தியிருக்கிறேன்.
அதற்கு இரவோடு இரவாக  பலர் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டனர்"

"பேடிகள், எத்தனை பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பார்கள்?"

"தோராயமாக 3000 பேர்"

"இவ்வளவுதானா?"

"நேசமணி இருக்கும் தைரியம்.
இல்லையென்றால் திருநெல்வேலி முழுக்க அகதிகளால் நிறைந்திருக்கும்"
_____________________

காவல்துறையினரும் ஆயுதக் காவலரும் ஒரு திடலில் கூட்டப்பட்டனர்.

நடுவில் நின்று பட்டம் தாணுப்பிள்ளை பேசினார்.

"எனதருமை காவல்துறை நண்பர்களே!
உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்துள்ளீர்கள்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நம் பெருமையை நிலைநிறுத்திவிட்டீர்கள்.
உங்களுக்கு எனது பாராட்டு.
சூழ்நிலையை சமாளிக்க என்னோடு வந்த 1600 ஆயுத காவலர்களும் இங்கே விட்டுச் செல்கிறேன்.
கேரள அரசிற்காக உங்களது பணியை சிறப்பாக தொடருங்கள்"

பிறகு அந்த 1600 ஆயுதம் தாங்கிய காவலர்களை 200, 300 ஆக தமிழர் பகுதி முழுக்க ஆங்காங்கே நிறுத்திவிட்டு திரும்பினார்.

அதன்பிறகு அந்த ஏவல் கூட்டத்தின் வெறியாட்டம் தொடங்கியது.
அவர்களைத் தட்டிக்கேட்க யாருமேயில்லை.
-----------------------------------------------
படம்: சுவரில் குண்டு பாய்ந்த அடையாளத்தைக் காண்கிறார் நேசமணி ஐயா (இடமிருந்து இரண்டாவது)
----------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -7
https://m.facebook.com/photo.php?fbid=644283149008675&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment