Showing posts with label ராசாசி. Show all posts
Showing posts with label ராசாசி. Show all posts

Sunday, 1 May 2016

இந்தியை வென்ற ஈழத்தமிழர்

இந்தியை வென்ற ஈழத்தமிழர்

%€%€%€%€%€%€%€%€%€%€%€

நூலின் பெயர்:
"இந்தி எதிர்ப்பு: அன்றும் -இன்றும்".

ஆசிரியர்:
"ஈழத்தடிகள்".

1938ஆம் ஆண்டு இராசாசி அரசின் பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து காவியுடை தரித்த சிவானந்த அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள் எனும் மூன்று சாமியார்கள் போர்க்கோலம் பூண்டனர்.

கையிலே கமண்டலம், உடையிலே காவி நிறம், கழுத்திலே உத்திராட்சம் எனும் தோற்றத்தோடு தமிழ் மொழி காக்கும் போரில் ஈடுபட்ட மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவானந்த அடிகள்.

இவர் ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஈழத்தடிகள் எனும் பெயருமுண்டு.
கரூரில் அறிவுதயக் கழகம் நிறுவி தமிழ்த்தொண்டு புரிந்து வந்தார்.

இராசாசி பதவிக்கு வருமுன்னே இந்தி கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது அதனைக் கண்டித்து 12.2.1937இல் இராசாசிக்கு எதிராக அறிக்கை விடுத்த முதல் ஆள் ஈழத்தடிகள்.

இராசாசி முதல்வரான பிறகு அவருக்கு முதல் தந்தி அடித்து இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவரும் அவர் தான்.

இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியாக சிறைக்களம் சென்றவராகிய ஈழத்தடிகள் தான்
மேற்படி நூலில் ஈ.வே.ரா மீதும், அண்ணா மீதும் கடும் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.

இந்தி எதிர்ப்பு மாநாடுகள், கூட்டங்கள் நடத்தியும் இராசாசி அரசு பணிய மறுத்த காரணத்தால்
அடுத்த கட்டமாக 1.6.1938 அன்று சட்டமன்றம், இராசாசி இல்லம் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு ஈழத்தடிகள் முடிவு செய்தார்.
அதற்கான அறிக்கையொன்றை தயார் செய்து ஈ.வே.ரா விடம் கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து அந்நூலில் பின் வருமாறு கூறுகிறார்:
" அங்கே பெரியார் இராமசாமி அவர்களிடம் இந்த அறிக்கையைக் காட்டி இதனை விடுதலை, குடியரசு ஆகிய இதழ்களில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.
இந்த அறிக்கையை பார்த்து விட்டு,
'இது காங்கிரசார் கையாளும் சண்டித்தனம்.
சத்தியாக்கிரகம் மறியல் என்பதெல்லாம் வெறுங் கேலிக்கூத்து'
என்று கூறி அந்த அறிக்கையை வெளியிட மறுத்து விட்டார்."

அதன் பிறகு ஈழத்தடிகள் தனது ஈரோடு நண்பர் சண்முக வேலாயுதம் என்பவரின் உதவி மூலம் அறிக்கையை அச்சிட்டு,
தமிழ்நாடெங்கும் தமிழ்அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
ஈழத்தடிகள் வேண்டுகோளுக்கிணங்க,
சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லம் முன்பு மறியல் செய்வதற்காக அதன் அருகிலேயே சி.டி.நாயகம் என்பவர் தனது சொந்த இடத்தில் மறியல் வீரர்களுக்கான பந்தல் அமைத்து கொடுத்தார்.

மறியல் நாள் நெருங்கிடவே விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளிலிருந்து 120க்கும் மேற்பட்டோர் வந்து குவிந்தனர்.
அப்போது மறியல் நடந்து கொண்டிருந்த நாளில் மறியல் பந்தலுக்கு ஈ.வே.ரா வந்து பேசியது என்ன என்று நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
"மறியல் தொடங்கிய மூன்றாம் நாள் 60 பேர் வரை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற பின்,
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தாமாகவே இந்தி எதிர்ப்பு நிலையத்துக்கு வந்து,
மறியல் செய்வதற்காக வந்திருந்த தொண்டர்களை நோக்கி,
'இப்படி மறியல் செய்வது காங்கிரசார் மேற்கொள்ளும் பயன் தராத முறையாகும்- சண்டித்தனமாகும்.
இதில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை'
என்ற பழைய பல்லவியை மீண்டும் கூறியதோடு,
வந்தவர்கள் தங்கள் தங்கள் ஊருக்குப் போவதற்கு வழிச் செலவும் தருவதாகக் கூறினார்.

அந்தச் சமயத்தில், நானும் மற்றவர்களும் அவரை அனுகி,
'ஐயா, இதில் நீங்கள் தலையிடாமல் இருப்பது, தமிழ் மொழியைக் காப்பாற்றச் செய்யும் ஒரு பேருதவியாகும்' என்று கூறவே,
அவரும் மறுமொழி ஒன்றும் கூறாமல், திரு.சி.டி. நாயகம் அவர்கள் இல்லத்திற்குச் சென்று விட்டார்."

அங்கு ஈ.வே.ராவிடம் உண்மை நிலையை சி.டி.நாயகம் விளக்கிக் கூறிய பிறகே இந்தி எதிர்ப்பு பணியில் ஈ.வே.ரா ஈடுபடத் தொடங்கியதாக ஈழத்தடிகள் குறிப்பிட்டு விட்டு,

மேலும் கூறுகிறார்:
"இந்த நிலையில் இந்தி எதிர்ப்பைத் தோற்றுவித்த நானும் மற்ற இரு துறவிகளான அருணகிரி அடிகளும், சண்முகானந்த அடிகளும் சிறை சென்று விடவே, படிப்படியாக இந்தி எதிர்ப்பு அறப்போரைப் பெரியார் இராமசாமி அவர்களே ஏற்று நடத்தும் நிலை உருவாகியது,
எல்லாம் அவருடைய விருப்பப்படி நடைபெற்று வந்தது.
இதன் விளைவு,
பிறகு, இந்தி எதிர்ப்புக்குப் பெரியார் இராமசாமி அவர்கள் தான் முதல்வர் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இது ஒரு பித்தலாட்டமும் கொடுமையுமாகும்.
வரலாற்றுண்மை வாய்ந்ததும், தந்நலமற்றதுமான இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சி,
பெரியார் இராமசாமி அவர்களின் தலையீட்டால்-
கறையான் புற்றெடுக்கப் பாம்புகுடி கொண்ட கதையாகி விட்டது.
செயலுக்கு ஒருவனும், அந்தச் செயலால் புகழ் பெற இன்னொருவனும் என்ற நிலை ஏற்படுவதென்றால்,
அது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்டாக்கப்படும் ஒரு மறைக்க முடியாத களங்கமாகும்"
என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்.

இராசாசி ஹிந்தி திணிப்பை கைவிடாத நிலையில் பதவி விலகிய போது,
ஈ.வே.ராவும் இந்தி எதிர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி விடுகிறார்.

அது குறித்து பெரியார் தந்த பதிலை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:

"நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, காங்கிரசு மந்திரிகளுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அது போல் பயன் படுத்திக் கொண்டேனே யொழிய,
உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப் படுவதைப் பற்றியோ, அதனால் தமிழ் அழிந்து விடும் என்பது பற்றியோ கவலையில்லை என்று கூறினார்."

பெரியாருக்கு இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை நிறுத்த உரிமையில்லை என்றும்,
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போர் தொடங்கப்படும் என்று ஈழத்தடிகள் 4.11.39ல் அறிக்கை விடுத்த பிறகே கட்டாய இந்தி ஆணை நீக்கப்பட்டது.
இதுவே உண்மை வரலாறாகும்.

சிலர் இந்தி எதிர்ப்பில்  முதன்முதலாக சிறைசென்றவர் சி.டி.நாயகம் என்று கூறுகின்றனர்.
அதை மறுக்க மேலும் சான்றுகள் தரமுடியும்.

அண்ணா பரிமளம் தொகுத்த 'அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு' பகுதி 16இல் "சாமியார் ஆசாமியானார்" தலைப்பில் பின்வருமாறு:

1938இல் இந்தியை கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிக்கைவிட்டபோது அதனை எதிர்த்து ஆச்சாரியாருக்கு முதல் தந்தி அடித்தவர் ஈழத்து சிவானந்த அடிகளேயாவார்கள்.
இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அவர் தான் துவக்கினார்.
பிறகு தான் நாவலர் பாரதியார், பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஈழத்து சிவானந்த அடிகள் இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரியாக சிறை புகுந்தார். (மன்றம் 1.5.1955).

சி.டி.நாயகம் முதல் சர்வாதிகாரியாக 20.11.38 வரை இல்லை என்பதை பெரியாரின் குடியரசு தெரிவிக்கிறது.
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.38 அன்று ஒற்றை வாடை கொட்டகையில் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்றது.
அந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் 10வது தீர்மானம்:
இந்தியை எதிர்த்து சிறை சென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.அண்ணாதுரை எம்.ஏ. உள்ளிட்ட பெரியார்களையும் தொண்டர்களையும் பாராட்டுகிறது.

12வது தீர்மானம்: தோழர்கள் சண்முகானந்த அடிகளும், சி.டி.நாயகமும் சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.
(குடியரசு 20.11.1938)

மேற்கண்ட தீர்மானங்களின் படி ஈழத்தடிகள் சிறையில் இருப்பதையும்,
சி.டி.நாயகம் சிறைக்கு செல்லவிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இதன்படி பார்த்தால் முதல் சிறைசென்ற சர்வாதிகாரி ஈழத்தடிகளே ஆவார்கள்.

நன்றி: கதிர்நிலவன்

Saturday, 16 January 2016

குருதியில் நனைந்த குமரி -12

குருதியில் நனைந்த குமரி -12

1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.

"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"

"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"

"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"

"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"

வண்டி கிளம்பியது.

மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.

அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்

"ஐயா வணக்கம்"

"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"

"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"

"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"

"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"

"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"

"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:

"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"

"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"

"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"

"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"

"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"

"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"

"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.

இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.

ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.

"ஹலோ, ராஜா"

"சொல்லு மேகநாதா"

"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு  இருக்கிறீர்கள்?"

"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"

"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"

"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"

"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"

"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"

கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.

சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.

காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.

"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"

"ஐயா அதுவந்து..."

"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"

அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.

ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.

(தொடரும்)
--------------------------------------
குருதியில் நனைந்த குமரி -11
https://m.facebook.com/photo.php?fbid=648488261921497&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56