காத்திருக்கும் தங்கம் -1
-------
காலம்: கி.பி. 1790
"நமது 33 வது ரெஜிமண்ட் திப்பு சுல்தானோடு போரிட நேரும் என்று நினைக்கிறாயா?"
"ஆம். நிச்சயம். அதோ அங்கே பார்.
இவர்கள்தான் அதற்கு காரணம்"
"என்ன?! ஆற்று மணலை அள்ளி வாணாலியில் போட்டு சலித்துக் கொண்டிருக்கும் இவர்களா இதற்கு காரணம்?!"
"ஆம் இவர்களுக்கு அரிப்பறையர் என்று பெயர்.
இவர்கள் ஆற்று மணலைப் பார்த்தே அதில் தங்கத் துகள்கள் இருக்குமா என்று கணித்து அதை சலித்து எடுக்கும் திறமை உள்ளவர்கள்.
இவர்களைப் பார்த்துதான் நம் தளபதி இந்த பகுதியில் தங்கம் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இங்கிலாத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
கட்டாயம் திப்புவை வீழ்த்தி தங்கத்தை தோண்டி எடுக்காமல் விடமாட்டார்கள்"
--------------
காலம்: கி.பி. 1802
"இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு திப்பு சுல்தானை தோற்கடித்தோம்.
மகாராஜா நீங்கள் ராஜாவாகவே இருக்க வேண்டுமானால் கோலார் தங்க வயல் எங்களுக்கு வேண்டும்.
உங்களுக்கு 5% கமிசன் கொடுத்து விடுகிறோம்"
"சரி சரி 7% கொடுத்துவிடலாம்.
நாங்கள் ஆங்கிலேயர்.
வாக்கு தவறமாட்டோம்.
உங்கள் மைசூர் ராஜ்யத்தின் மொத்த வருவாயில் இது மூன்றில் ஒரு பங்காக இருக்கும்"
-----------
காலம்: 1860
"கிடைத்துவிட்டது! ஆகா கிடைத்துவிட்டது"
"என்ன கேப்டன் பிளம்மர் என்ன கிடைத்துவிட்டது"
"மைசூர் சுரங்கத்திற்கு மேற்கே 173 அடி ஆழத்தில் தங்க மலையே இருக்கிறது.
ஏற்கனவே சோழர்கள் காலத்தில் வெட்டி எடுத்த தடத்தை வைத்து கண்டுபிடித்து விட்டேன்"
"அப்படியா?! அது என்ன தடம்"
"ஆம். வட ஆற்காடு மாவட்டத்தின் ஜவ்வாது மலை மீது இருந்து பார்த்தேன்.
கோலாரிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பாதை மலைகளுக்கு நடுவே தமிழ் பகுதி வரை வருவது தெரிகிறது"
"எனதருமை பிளம்மர்!
உன் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
இனி இந்த தற்காலிகச் சுரங்கம் உலகமே அறியும் இடமாக ஆகப்போகிறது"
--------
காலம்: கி.பி. 1880
"பூமிக்கடியில இந்த தங்க மலைத் தொடர் (lode) வடக்கு நோக்கி நீள்கிறது.
வெட்டி எடுத்தால் உலகத்தின் மொத்த தங்க தேவையையே பூர்த்தி செய்யலாம்"
"நல்லது மிஸ்டர் ஆர்.பி.பூட்!
நம் நாட்டிலிருந்து வல்லுநர்களை வரவழைத்து முழுவீச்சில் சுரங்கம் தோண்டிவிட வேண்டியதுதான்.
நீ என்ன சொல்கிறார் ஹெய்டன்?!"
"நாம் முதலில் மதராஸ் மாகாணத்தில் இருந்து தமிழர்களை வரவழைக்கலாம்.
அவர்கள்தான் உலோக தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடி.
இப்போது கடும் பஞ்சம் நிலவுவதால் குறைந்த கூலிக்கு அழைத்து வரலாம்.
இங்கே ஏற்கனவே கால்வாசி தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
குறிப்பாக சேலத்தில் கட்டிப் பறையர் என்றொரு சாதி உண்டு.
அவர்கள் செய்த தனித்துவமான எஃகு மூலம் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாளைத்தான் அலெக்சாண்டர் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?!"
---------
காலம்: கி.பி. 1905
"இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சார உற்பத்தி செய்த சாதனைக்குப் பிறகு
இந்த ஆண்டு நாம் 27 டன் தங்கத்தை எடுத்துள்ளோம்.
இப்போது கோலார் உலகிலேயே பெரிய தங்கச் சுரங்கம் என்ற பெயர்பெற்றுள்ளது.
இது பின்னாட்களில் மாறலாம்.
ஆனால் ஓராண்டில் இவ்வளவு டன் தங்கம் வேறு எங்கும் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறவேண்டும்.
நமது கம்பனியான ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் அதன் பொற்காலத்தில் இருக்கிறது"
"இனி நம் திட்டங்கள் என்ன?"
"பத்தாண்டுகள் முன்பு மைசூர் அரசிடம் பேசி சுரங்கங்களுக்கு தனி இரயில் பாதை போட்டு மெட்ராஸ் பெங்களூர் ரயில் பாதையுடன் இணைத்தோம்.
அதிலிருந்து நமக்கு அமோக வளர்ச்சிதான்!
இதுவரை இங்கே ஆண்கள் மட்டும் இருந்த காரணாத்தால் கிளப், விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு திடல் என கட்டினோம்.
ஆனால் தற்போது 100 ஆங்கிலேயக் குடும்பங்கள் குடியேறியுள்ளன.
எனவே நமது பிள்ளைகளுக்கு ஒரு சிறிய ஆங்கில பள்ளியும்
வேலைசெய்யும் தொழிலாளர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டவுள்ளோம்"
"இது எத்தனை ஆண்டுகள் தொடரும்?!"
"கணிப்புப்படி இன்னும் 50 ஆண்டுகள் வரை இதில் தங்கம் கிடைக்கும்.
ஆனாலும் விரிவாக்க ஆய்வுகள் நடந்துவருகின்றன."
------
காலம்: 1920
"கோலாரின் மக்கட்தொகை ஒரு லட்சத்தை நெருங்கவுள்ளது.
இருபத்தி நாலாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
கோலார் சுரங்கம் 1200 அடி ஆழம் வரை சென்றுவிட்டது.
இதுவே உலகின் முதலாவது ஆழமான சுரங்கம்.
உலகப் போர் காரணமாக தங்கத்தின் விலை மேன்மேலும் கூட்டிக்கொண்டே போகுமாம்.
இதெல்லாம் தெரியுமா உனக்கு?!"
"இதில் என்ன பெருமை முருகேசா?!
இங்கே 400 ஆங்கிலேயர்கள் 600 ஆங்கிலோ இந்தியன்கள் பதவியில் இருக்கிறார்கள்.
இதுபோக 23000 பேர் தொழிலாளர்கள்.
பெரும்பாலும் தமிழர்கள்.
அதிலும் குறிப்பாக நம் போன்ற பறையர்கள்.
நமக்கு மிஞ்சியது என்ன?!
கூரைவேய்ந்த லைன் வீடுகளில்தான் வசிக்கிறோம்.
15 மணிநேரம் வேலை.
நாட்டிலேயே முதன்முதலாக மின்சாரம் இங்கே வந்தது.
30 ஆண்டுகள் தாண்டியும் நம் வீடுகளில் இன்னமும் மின்சாரம் வரவில்லையே!"
-------
காலம்: 1953
"கோலாரில் காலம் முடிந்துவிட்டது.
முதன்முதலாக உரிகையம் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
இனி படிப்படியாக எல்லாவற்றையும் மூடிவிடுவார்களாம்.
டெய்லர் கம்பனி வெளியேறவுள்ளது.
இந்த சுரங்கத்தை நாட்டுடைமை ஆக்கி அரசே எடுத்துக் கொள்ளுமாம்"
"ஆம். இந்திய அரசு எடுத்துக் கொள்ளுமாம்.
ஆங்கிலேயர் மைசூர் அரசுக்கு கமிசனாவது கொடுத்தனர்.
இனி கர்நாடக அரசுக்கு சல்லிக்காசு கொடுக்காது மத்திய அரசு என்று கூறுகிறார்கள்".
"என்றால் மத்திய அரசும் மாநில அரசும் சுரங்கத்தை நம்பி வாழும் ஒரு லட்சம் பேரை கதியில்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்று சொல்"
--------
காலம்: 1983
"கன்னடத்தை கட்டாயமாக்கும் கோகாக் அறிக்கைக்கு கோலார் தமிழர்கள் எதிர்ப்பா?!
"ஓகோ! அவ்வளவு திமிராகி விட்டதா?!"
"அதற்கு தக்க பாடம் கற்றுக்கொண்டனர்.
தமிழில் கல்வி வேண்டி நடந்த போராடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரைக் கொலை செய்தாயிற்று"
"ஹா! ஹா! ஹா!"
"மாரிக்குப்பம் பகுதியில் தமிழர்கள் ரயில் நிலையத்தையும் அஞ்சல் அலுவலகத்தையும் கொளுத்திவிட்டனர்"
"என்ன?!"
"இனி அவர்கள் அஞ்சலகமே இல்லாமல் அல்லாட வேண்டியதுதான்"
"தங்கவயலை விரைவில் மூடிவிட்டால் இவர்கள் கொட்டம் அடங்கிவிடும்"
-------------
காலம்: 1989
" என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் நடராஜன் ஐயர்?!
கோலாரில் ஒரு கிராம் தங்கம் எடுக்க 668 ரூபாய் ஆகிறதா?!
பம்பாயில் ஒரு கிராம் தங்கமே 350 ரூபாய்தானே?!"
"ஆம். 1960 இல் உற்பத்தி செலவு கிராமுக்கு 12 ரூபாய்தான்.
1972 இல் 33 ரூபாய்.
தற்போது தங்கம் கிடைப்பது சிக்கலாகவும் அப்படியே கிடைத்தாலும் தரம் குறைந்ததாகவும் இருக்கிறது.
அதாவது நாம் வெட்டிவரும் தங்கமலை ஆழத்தை நோக்கி செல்கிறது"
"என்றால் இதை மூடிவிடலாமா?!"
"மூடிவிடலாம்தான். ஆனால் இதை நம்பியிருக்கும் பத்தாயிரம் தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்வது?
நூறு ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் அவர்களை எங்கே போகச் சொல்வது?
ஆழ்சுரங்கம் வெட்டுதல் மற்றும் குடைந்து வழி அமைத்தல் ஆகியவற்றில் இவர்கள் திறமை வேறு எவருக்கும் வராது"
"அதெல்லாம் கவலை இல்லை.
அவர்கள் வந்தேறிகள்.
இதை நடத்தி லாபம் வந்தாலும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
அதனால்தான் இவர்களுக்கு மாநில மின்துறை கூட சலுகை விலையில் மின்சாரம் வழங்குவது கிடையாது.
தொழிற்சங்க தலைவரை கூப்பிட்டு இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று எழுதித் தரச்சொல்லி
ஏதோ பெயருக்கு மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தி சிலபேருக்கு மாற்று வேலை வழங்கிவிட்டு அப்படியே கைகழுவி விடலாம்"
"ஐயா! என்னால் அப்படி முறைகேடாக செயல்பட முடியாது"
"நீங்கள் செய்துதான் தீரவேண்டும்"
"என்னை வற்புறுத்தினால் எனது சுரங்க தொழில்நுட்ப இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வேன்"
"நீங்கள் இப்படி பலமுறை மிரட்டி காரியத்தை சாதிக்கிறீர்கள்.
உங்களைப் போன்ற சிலர்தான் எப்போதோ மூடியிருக்க வேண்டிய தங்கவயலை மூடவிடாமல் பெரும் தடையாக இருக்கிறீர்கள்.
ஓ! நீங்களும் அந்த இனம்தானே!?"
"ஐயா நான் நியாயத்தைப் பேசுகிறேன்.
சென்ற 4 ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வுப்படி இதன் அருகிலேயே இன்னொரு தங்க மலை புதைந்து இருக்கிறது.
அங்கே சுரங்கம் தோண்டினால் 6000 பேருக்காவது வேலை கொடுக்கலாம்.
15 ஆண்டுகள் மூடுவது பற்றி யோசிக்க வேண்டாம்"
"சரி! இது இறுதி வாய்ப்பு! தங்கம் இருந்தால் மட்டும் போதாது குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்பதுதான் முக்கியம்"
----------
காலம்: 1990
இடம்: அசோகா விடுதி, பெங்களூர்.
"கனிம வளத்துறை செயலர் பி.கே. லாஹிரி அவர்களே!
கோலார் சுரங்க தலைவர் ஐ.எம். ஆகா அவர்களே!
மேலாண்மை இயக்குநர் பி.ஏ.கே. ஷெட்டிகர் அவர்களே!
மற்றும் அதிகாரிகளே!
நாம் இங்கு கூடியிருப்பது தங்கவயல் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத்தான்"
"அது பற்றி மேற்கொண்டு விவாதிக்க என்ன இருக்கிறது மிஸ்டர் ஐயர்?!"
"நாம் வெட்டியெடுத்து தீர்ந்துபோன சாம்பியன் படிவத் தொடர்க்கு கீழே 3000 அடி ஆழத்தில் 200 கிலோ தங்கம் தரவல்ல மேலும் ஒரு தங்க மலை இருப்பது பற்றி நான் கூறியபோது ஆழம் அதிகம் என்று காரணம் காட்டி நீங்கள் மறுத்துவிட்டீர்கள்.
அதனால் தற்போது ஆழம் குறைந்த இடத்தில் மேலும் இரண்டு தங்க படிவங்களை நான் கண்டறிந்துள்ளேன்.
இங்கே Shallow depth mining செய்யலாம்"
"குறைந்த ஆழம் என்றால் செலவு குறைவு எனவே யோசிக்கலாம்.
கூறுங்கள் பார்ப்போம்"
"மைசூர் சுரங்கப் பகுதியில் இருந்து நந்திதுர்க்க சுரங்கப் பகுதிவரை குறைந்த ஆழத்தில் தங்க படிவத்தொடரின் கிளைகள் உள்ளன"
"குறைந்த செலவு என்கிற நமது கொள்கை அதற்கு பொருந்துமா?!"
"இதற்குப் பொருத்தமாக இருப்பது மைசூர் சுரங்கத்தில் உள்ள பல தங்கப் படிவத் தொடர்களில் ஒன்றான பிரவுன் படிவத்தொடர்.
இது அங்கு புதைந்துள்ள தங்கமலையின் அடிப்பரப்பு வரை செல்கிறது.
diamond drilling செய்து ஆராய்ந்தால் இதை உறுதிசெய்யலாம்"
"சரி இரண்டாவது?"
"இரண்டாவதுதான் மிக முக்கியமானது.
தற்போது வெட்டியெடுத்த அதே தங்கமலைத் தொடருக்கு இணையாக 400 அடி ஆழத்தில் தங்கம் இருக்கிறது.
இது 5000 அடி வரை நீள்கிறது.
இங்கே ஒரு டன் தங்க கனிமம் எடுத்தால் அதில் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் அதிகபட்சம் 35 கிராம் வரை தங்கம் கிடைக்கும்.
சுருக்கமாகக் கூறினால் 1934 இல் கோலார் இருந்த அதே நிலையை எட்டலாம்"
"முதல் இடத்திற்கு அருகிலேயே என்றால் இதுபற்றி முதலில் யோசிக்கலாம்.
எங்கே என்று தெளிவாக சொல்லமுடியுமா?"
"McTaggart's Inclined shaft இருக்குமிடம் தொடங்கி அதாவது பாரத மண்வாரித் தொழிலகம் அமையப்போகிற இடத்தில் இருந்து கோல்கொண்டா Shaft இருக்கும் இடம்வரை ஏற்கனவே வெட்டியெடுத்த சாம்பியன் தங்கப்படிவ ஓட்டத்திற்கு இணையான போக்கில் இது இருக்கிறது.
இதை வெட்டியெடுத்தால் 6000 பேருக்கு 15 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும்"
"வேலைவாய்ப்பு பற்றி பிறகு பேசலாம்.
இவை இரண்டுதானா?! மேலும் உண்டா?!"
"குறைந்த ஆழத்தில் என்றால் மூன்றாவது ஒன்று உண்டு.
ஆனால் அதை முழுமையாக ஆராயவில்லை.
நந்திதுர்க்க சுரங்கத்தின் தலைப்பகுதி Oriental Lode எனும் படிவத்தொடர்.
இதன் அடிப்பரப்பு கிளை அதாவது foot- wall தான் அந்த மூன்றாவது இடம்"
"சரி. மிஸ்டர் லாகிரி!
இவர் கூறுவதை செய்யலாமா?"
"அது வந்து...
எனக்கு இவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை"
"என்னது புரியவில்லையா?! நியாயப்படி நீங்கள்தான் இந்த இடத்தில் நின்று இதையெல்லாம் விளக்கவேண்டும்!
மிஸ்டர் ஐயர் இதை எழுத்துப் பூர்வமாக விரிவாக சமர்ப்பிக்க முடியுமா?"
"ஏன் அதை ஒரு வல்லுநர் குழு நியமித்து ஆராயப் போகிறீர்களா?"
"சரியாகச் சொன்னீர்கள்"
"ஆக இங்கிருக்கும் யாருக்குமே நான் சொன்னது புரியவில்லை"
-------
(தொடரும்)