Saturday, 31 October 2015

இமானுவேல் சேகரனாருடன் முத்துராமலிங்கனார் பேச மறுத்தது ஏன்?

இமானுவேல் சேகரனாருடன்  பேச மறுத்தது ஏன்?

"சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாக பேசவந்திருப்பவர் திரு.இமானுவேல்,

ஆனால் முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டப்பூர்வமாக மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ வேறொருவர் இருக்கிறார்.

அதனால் இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு இத்தொகுதி எம்.எல்.ஏ தான் அதிகாரப்பூர்வமானவர் என்று நான் சொன்னேன்.

இதைத்தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சரிசமமாகப் பேசுவதால் என் கௌரவம் குறைந்துவிட்டதென்று நான் கூறவேயில்லை.

எனது தொகுதியில் திரு.பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்கவைத்த நான்,
சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்குமுன் பேசியதைக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமும் ஆகும்".

( சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன்பு
கொலைக் குற்றச்சாட்டை மறுத்து திரு.முத்துராமலிங்கனார் அளித்த விரிவான சாட்சியத்தில் இருந்து )

நன்றி: pasumponayya.blogspot.com.es/2011/07/blog-post.html?m=1

Friday, 30 October 2015

யாழ் இடப்பெயர்வும் ஆயூதச் சந்தையும்

யாழ் இடப்பெயர்வும் ஆயூதச் சந்தையும்

தமிழன்பன் இல்லம்
மாசற்ற மதியூக வீரன் !

கல்லில் இருந்துஆயுதங்கள் தோன்றியகாலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும்ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டையபாடல்கள் கூறுகின்றன.
இன்று உயர்ந்த நிலையில் உள்ள
இனங்கள் போர்க் கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில்சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு.
இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை.

இன்றுள்ள எல்லா நாட்டு போர்க்கலை அறிஞர்களும்ஒருவருடைய பெயரைக் கேட்டால் ஒரு கணம்நின்று பெருமூச்செறிந்து, அவருக்கு இணையானஒருவர் இன்றய உலகில் இல்லையென்று மனதில் எண்ணிச்செல்வார்கள்.
அப்படி உலகால் மதிக்கப்படும் ஒருவர்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன்.
நவீன ஆயுதங்கள், உலகத்தின் புதிய போர் வியூகங்கள் என்று எத்தனை திட்டங்களைப் போட்டாலும் ஒரே நொடியில் அத்தனையையும் புரிந்து தவிடு பொடியாக்கிவிடும் திறமை வாய்ந்தது அவர் மதியூகம்.

இப்படி சொல்லி விட்டால் மட்டும் அது போதியதாகி விடாது.
அதற்குரிய காரணங்களையும் தருதல் அவசியம்.
இதற்கு எத்தனையோ உதாரணங்களைத் தரலாம்.
இருந்தாலும் மேலை நாடுகளின் இன்றைய போர்த் திட்டங்களுடன் அவருடைய மதியூகத்தை நாம் ஒப்பு நோக்கி உணர்ந்து கொள்வது சற்று வித்தியாசமாக இருக்கும்.

ஆயுத விற்பனையை அதிகரிப்பதற்கு மேலை நாடுகள் அறிமுகம் செய்துள்ள இன்றைய போர் உத்தியை வாரோட்டப் போர் முறைமை என்று எளிமையாகக் கூறலாம்.
போரில் ஒரு முறை ஒரு அணியை முன்னேறச் செய்வது, மறுமுறை எதிரணியை முன்னேறச் செய்வது என்று இரு தரப்பும் வாரோட்டம் போல ஓய்வின்றி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருப்பதை வாரோட்டப் போர் முறை என்று கூறலாம்.
ஆயுத விற்பனை சீராக நடைபெற மேலைநாடுகள் கண்டு பிடித்துள்ள புதிய போர்க்கள வியூகங்களில் இது முக்கியமானது.

இதை பல நாடுகளில் அறிமுகப்படுத்தி மேலை நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளன.
சில மேலை நாடுகளின் ஆயுத விற்பனை வருமானம் கடந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியமாக உயர்ந்து சென்றமைக்கு உலகில் பல வளரும் நாடுகள் வாரோட்டப் போர் முறைக்குள் சிக்குண்டது முக்கிய காரணமாகும்.

இதற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ, மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் வாரோட்டப் போர்கள் சிறந்த உதாரணங்களாகும்.
பல நாடுகளில் வெற்றி கண்ட இந்த வாரோட்டப் போர் முறை ஒரேயொரு இடத்தில் மட்டும் தோல்வியடைந்து போனது அதுவே தமிழீழம்.

சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் இலங்கையிலும் ஓர் வாரோட்டப் போர்முறையை ஏற்படுத்த எண்ணி சிறிலங்கா அரசுக்கு சிலர் சூரியக்கதிர் என்னும் போர் வியூகத்தை வகுத்துக் கொடுத்தனர்.
பெரும் ஆயுத தளவாடங்களுடன் கிளர்ந்து வந்தது சிங்கள இராணுவம்.
இவர்கள் ஏன் இப்படி வருகிறார்கள் ? இவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை எவரும் கண்டுபிடிக்காத நேரத்தில் கண்டு பிடித்ததுதான் தலைவர் பிரபாகரனுடைய மதியூகம்.
ஒரே உத்தரவு போராளிகளையும் மக்களையும் இழப்பில்லாமல் பின்வாங்கும்படி கூறினார்.

இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்து இலட்சம் மக்களும் போராளிகளும் யாழ். குடாநாட்டையே விட்டு வெளியேறி எதிரியின் எண்ணத்தையே ஈடேற விடாது முறியடித்தனர்.
இத்தருணத்தில் மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒன்றைப் புரிந்திருக்கலாம்.
அங்கு ஓர் போர் நடக்க வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பது அவர்களின் செய்திகளில் வெளிப்படையாகவே தெரிந்தது.
உண்மையில் சூரியக்கதிர் இப்படியாகும் என்பதை எவரும் எதிர் பார்த்திருக்க முடியாது.
திட்டம் வகுத்த எல்லோர் எண்ணங்களும் ஒட்டு மொத்தமாகத் தவிடு பொடியானது.
எதிரிகள் கறுவிக் கொண்டனர்.
தமது பருப்பு முதல் தடவையாக தமிழீழத்தில் வேகாமல் போய்விட்டதை உணர்ந்தனர்.
இருந்தாலும் மனதை ஆற்றிக் கொண்டனர்.
வாரோட்டப் போர் முறையை வெற்றி கொள்வதானால் மறுபடியும் ஓர் வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் இறங்கினால்தான் சாத்தியமாகும்.
எனவே வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் சிக்குண்டுபோவது தவிர்க்க முடியாதது என்று சூரியக்கதிர் வியூகத்தை வகுத்தவர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால் உலகத்தவர் எவரும் எதிர் பாராதபடி அங்கு வேறு காரியங்கள் நடைபெற்றன.

ஓயாத அலைகள் மூன்று வவுனியா வீதியில் மோதலை நடாத்தி, ஆனையிறவு முகாமிற்குரிய உணவு, நீர் ,மின்சாரம் என்பவற்றின் வழங்கலைத் தடை செய்து அதை பெரும் போரின்றி வீழ்த்தியது.
பின்னர் சாவகச்சேரியைத் தாக்கி, ஊரெழு வழியாக உள்ளே புகுந்து பலாலியில் இருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தொண்டைக் குழியையும் நெரித்தது.

இடி விழுந்ததைப் போல ஓர் பேரோசை !
திருடன் கையில் தேள் கொட்டியதைப் போல உலக நாடுகள் எல்லாமே விழித்து நின்றன.
சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற வேண்டுமென்று துடித்துப் பதைபதைத்தன.
இவர்கள் ஏன் இப்படித் துடிக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கியோர் அவர்களிடம் ஏதோ ஓர் உள்நோக்கம் இல்லாமல் இப்படித் துடிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கலாம்.
இதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர்.
ஜே.வி.பி காலத்தில் அறுபதாயிரம் வரையான சிங்கள மக்களையே சிறிலங்கா இராணுவம் கொன்றதாக கூறுகிறார்கள்.
அப்பொழுதெல்லாம் சிங்கள மக்களுக்காக கண்ணீர் விடாத நாடுகள் எல்லாம் இப்போது மட்டும் ஏன் துடி துடிக்கின்றன? இதுதான் முக்கிய கேள்வியாகும்.

அழுது துடித்தவர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் அத்தனை பேரும் சிறிலங்கா அரசுக்கு பெருந் தொகையான ஆயுதங்களை விற்பனை செய்து அந்தப் போரினால் கணிசமான வருமானம் பெற்று வந்தவர்களே என்பது தெரியவரும்.

இத்தனை ஆயிரம் கோடி செலவழித்து தயாரித்த சூரியக்கதிரை இழப்புக்கள் இல்லாமல் சொற்ப செலவுடன் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டார்கள் என்றால் எதிரிகள் துடிக்காமல் இருப்பார்களா ?
சூரியக்கதிர் வியூகத்தை வகுத்து, சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களையும் வழங்கிய நாடுகள் துடித்த துடிப்பில் தங்களை அறியாமலே தங்களை இனம் காட்டிக் கொண்டன.
போர்க் கலையிலும், போரியல் அறிவிலும் தமக்கு இணையானோர் எவரும் இல்லையென மார் தட்டியோர் கட்டிய அத்தனை மனக் கோட்டைகளையும் இடித்து தகர்த்ததுதான் ஓயாத அலைகள் மூன்று.
அந்த போர்த் திட்டத்தை வகுத்த மதியூக மூளையே தலைவர் பிரபாகரனின் வெற்றியின் இரகசியம்.

இந்த மதியூகம்தான் உலகத்தின் அதிசிறந்த ஆயுதம். 
மதியூகத் தலைவனே உலகத்தின் மாபெரும் படையணி.
எத்தனையாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் ஒரு பிரபாகரனுக்கு இணையாக உலகில் எதுவும் வரப்போவதில்லை என்று உணர்த்தியது ஓயாத அலைகள் மூன்று.

Tuesday, 27 October 2015

பணமில்லாத நாடு

பணமில்லாமல் ஒரு நாடு இயங்கமுடியுமா என்று பலரும் கேட்கின்றனர்?

முடியும்.
இது prepaid மற்றும் post paid க்கும் இடையேயான வேறுபாடு போன்றதுதான்.

ஏன். தமிழகத்திலேயே பணமில்லாமல் 'ஆரோவில்' (Auroville) என்ற நகரம் 50,000 மக்களுடன் நலலபடியாக இயங்கிவருகிறது.

இதை அறிந்ததும் என்னுடைய 'பணமில்லாத நாடு' சிந்தனை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது.

Monday, 26 October 2015

முதல் காத்தான்குடி படுகொலை

முதல் காத்தான்குடி படுகொலை

ஏற்கனவே 1984ல் காத்தான்குடியில் இலங்கை அரசு படுகொலை நிகழ்த்தியுள்ளது.

இசுரேலியருடன் சிங்களப் படை சேர்ந்தியங்குவதைக் கண்டித்து "தமிழ்-இசுலாமியர் ஐக்கிய முன்னணி" காத்தான்குடியில் ஏற்பாடு செய்த போராட்டம் நடந்தபோது,
இசுரேல்-சிங்களக் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி 30ற்கும் மேற்பட்ட தமிழ் இசுலாமியர்களைக் கொன்றனர்.

இதற்கு PLOT அமைப்பு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை படத்தில்.

இதை அனைவரும் மறந்துவிட்டனரா?

1990ல் மீண்டும் சிங்களப்படை இதே காத்தான்குடியில் தாக்குதல் நடத்தியபோது அதை புலிகள் செய்ததாக மாற்றிவிட்டது யார்?

நன்றி: padippakam.com/index.php?option=com_content&view=article&id=4340:muslims-massacred-in-sri-lanka&catid=37:plote&Itemid=53

Sunday, 25 October 2015

வெறிபிடித்த நாயன்மார்கள்

வெறிபிடித்த நாயன்மார்கள்

எல்லா சாதிகளிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியுள்ளனர்.

இதை பெருமையாகக் கூறுவோரும்
சில நாயன்மார்கள் நடத்திக்காட்டிய அற்புதங்களையும்
அவர்கள் இயற்றிய தமிழ்ப் பாடல்களையும் போற்றுவோரும்
நாயன்மார்களின் தீச்செயல்களையும் கூறவதே இல்லையே ஏன்?
மக்களுக்கு ஒரு நல்லதும் செய்யாத
ஒரு நல்ல அறிவுரையும் கூறாத நாயன்கள் மதிப்பிற்குரியோர் ஆனது எப்படி நடந்தது?

சிவன் மீது பற்று முற்றிப்போய் பைத்தியக்காரத்தனமாக நயன்மார் செய்த கொடுஞ்செயல்கள்

*இயற்பகையார்- சிவனடியார் வந்து கேட்க தன் மனைவியை அவனோடு அனுப்பிவைத்தார்.

*சண்டேஸ்வர நாயனார்- சிவனுக்கு முழுக்கு நடத்த வைத்திருந்த பாலைத் தட்டிவிட்டதால் தந்தையின் காலை வெட்டினார்.

*செருத்துணை நாயனார்- சிவனுக்கு வைத்திருந்த பூவை முகர்ந்து பார்த்ததால் அரசியின் மூக்கை அறுத்தார்

*கழற்சிங்க நாயனார்- பூவை முகர்ந்த அவ்வரசியின் கணவர், கைதானே அப்பூவை முதலில் தீண்டியது என்று மூக்கறுபட்ட அவ்வரசியின் கையை வெட்டினார்

*கலிய நாயனார்- சிவனுக்கு விளக்கு வைக்க பணமில்லாததால் நடுத்தெருவில் மனைவியை நிறுத்தி விற்க முயன்றார்

*அமர்நீதி நாயனார்- சிவனடியாரின் கோவணத்துக்கு ஈடுதர தராசில் தன் சொத்துகளோடு மனைவி மக்களையும் வைத்து தானும் அமர்ந்தார்

*சிறுதொண்ட நாயனார் -அடியார் கறி கேட்க பெற்ற மகனை வெட்டி கறி செய்து பிள்ளைக்கறி விருந்துவைத்தார்

*சத்தி நாயனார் -சிவனடியாரை யாராவது இகழ்ந்து பேசினால் நாக்கை அறுப்பார்

*எறிபத்த நாயனார்- சிவனுக்கான மலர்கூடையை பிடுங்கி எறிந்த யானையையும் அதன் பாகர்கள் ஐந்துபேரையும் வெட்டிக் கொன்றார்

*கலிக்கம்ப நாயனார்- சிவனடியார் பாதம் கழுவ தயங்கிய மனைவியின் கையை வெட்டினார்

*கோட்புலி நாயனார்
சிவனுக்காக வைத்திருந்த நெல்லை பஞ்சத்தின் காரணமாக எடுத்து உண்ட மக்களை (தாய், தந்தை, உடன்பிறந்தோர் உட்பட) பரிசு தருவதாக அழைத்து கண்டந்துண்டமாக வெட்டினான்

***செய்த ஈகங்கள்(தியாகம்) பட்டியல்:-

*அப்பூதியடிகள்- திருநாவுக்கரசர் வீட்டுக்கு வந்திருந்தபோது மகன் பாம்பு தீண்டி இறக்க அவனை அப்படியே போட்டுவிட்டு விருந்துவைக்க முயன்றார்

* அரிவாட்டாய நாயனார்- சிவனுக்கு எடுத்துச் சென்ற உணவு தரையில் சிந்தியதால் கழுத்தை அறுதாதுக்கொள்ளப் பார்த்தார்

*இடங்கழி நாயனார்- சோழ அரசரான இவர் சிவனுக்கு அமுது படைக்க நெல்லைத் திருடியதாக திருடன் கூற தன் அரசின் மொத்த நெல்லையும் நிதியையும் சிவனடியார்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்

*கண்ணப்ப நாயனார்- சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வழிந்ததால் தன் கண்ணை நோண்டி ஒட்டவைத்தார்

*ஏனாதி நாத நாயனார்- எதிரி வாள்சண்டையின் போது திருநீறு அணிந்திருந்ததால் வேண்டுமென்றே உயிரைவிட்டார்

*கணம்புல்ல நாயனார் - சிவனுக்கு விளக்கேற்ற தலைமுடியில் தீவைத்துக்கொண்டார்

*குங்கிலிக்கலய நாயனார்- வறுமையால் பசிபொறுக்காத தம் குடும்பத்திற்காக அரிசி வாங்க மனைவியின் தாலியைக் கொண்டு சென்றபோது சிவனுக்கு விருப்பமான குங்கிலியம் கண்ணில் பட அதை வாங்கி கோயிலில் சேமித்தார்

*திருக்குறிப்புத் தொண்ட நாயனார்- சிவனடியார் ஒருவரின் உடையைத் துவைக்கும்போது மழை விடாது பெய்யவே துவைக்கும் பாறையிலேயே தலையை மோதிக்கொண்டார்

*புகழ்ச்சோழ நாயனார் -எறிபத்த நாயனார் தன் யானையையும் பாகரையும் வெட்டியபோது அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தன்னையும் கொல்லும்படி வேண்டினார்.
போரில் வெட்டுண்ட ஆயிரக்கணக்கான தலைகளில் ஒரு சிவனடியார் தலை இருந்ததைக் கண்டு தன் மகனுக்கு பட்டம் கட்டிவிட்டு நெருப்பில் குதித்தார்

*மூர்க்கநாயனார்- சூதாடி சம்பாதித்து பூசை செய்தார். சூதில் ஏமாற்றினால் சூரியால் குத்துவார்.

*மெய்ப்பொருள் நாயனார் - சிவனடியார் வேடமிட்டு வந்து தன்னை வாளால் வெட்டிய பகைவனை உயிர்போகும் நிலையிலும் உயிரோடு பாதுகாப்பாக விட்டுவிடச் சொன்னான்

நாயன்மார் கதைகள் கூறுவது சிவபக்திக்காகவும் சிவனடியார்களுக்காகவும் தற்கொலை செய்யவும் எவரையும் கொல்லவும் தயங்கக்கூடாது என்பது மட்டும்தான்.

ஆக சைவம் என்பது தமிழருக்கான நெறிவழி ஆகுதல் கூடாது என்பது என் கருத்து.

Saturday, 24 October 2015

1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு

1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு

"தமிழ்மன்னர்களாம் எல்லாளன் முதல் சங்கிலியன் வரை செங்கோலோச்சிய தமிழ்ஈழம் என்னும் திருநாடு கொடுங்கோலர்களாம் அன்னியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையினைத் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழராட்சி நிறுவிட இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு க் குழுவினர் 31-08-80 அன்று இலண்டன் மாநகரில் கூடி 1982ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளன்று தமிழ்ஈழ அரசு நிறுவுவதென்றும் விடுதலைப் பிரகடனம் செய்வதென்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த இலண்டன் தீர்மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்று இம்மக்கள் மாமன்றம் முடிவெடுக்கிறது.

1982ல் அமையவிருக்கும் தமிழ் ஈழ அரசிற்கு இந்திய பேரரசு முதல் முதலில் அங்கீகாரம் வழங்கிட வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை இம்மாமன்றம் வேண்டிக்கொள்கிறது."

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்
இந்தியக் கிளை
12-10-80
இடம்:மதுரை.

Sunday, 18 October 2015

பூண்+நூல்=பூணூல்

பூண்+நூல் என்பதே பூணூல்

அதாவது வில்லின் இருமுனைகளிலும் பொருத்தப்படும் உலோகம் (கவசம்) பூண் எனப்படும்.
(துவக்கின் கைப்பிடியையும் கூட பூண் என்பர்)

அக்கால வில்வீரர்கள் சற்று வளைந்த ஒரு தடியை கையில் வைத்திருப்பர்.
பூணூல் மார்பில் தரித்திருப்பர்.

தாக்குதல் நடத்த வேண்டிவந்தால் தடியில் இருபக்கமும் பூணூலை மாட்டி வில்லாக்கிவிடுவர்.

விற்கள் அனைத்தும் ஒரே அளவில் இருந்திருக்கவேண்டும்.
ஆக இந்த நூலின் நீளம் குறிப்பிட்ட அளவாக இருந்திருக்கவேண்டும்.
எனவே இந்நூல் அளவைக்காகவும் பயன்பட்டது.
(மங்கோலியர் வண்டிச் சக்கரங்களை குறித்த அளவினதாக்கி அதை பயன்படுத்தியது போல).

இலக்கியங்களில் பார்ப்போம்.

பசும்பூண்:-
இது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண்.
இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது.
இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம்.

*பசும்பூண் வேந்தர்
[ நற்றிணை 349 ]
*பசும்பூண் சோழர்
[ நற்றிணை 227 ]
*பசும்பூண் கிள்ளிவளவன்
[ புறம் 69 ]
*பசும்பூண் ஆதன்ஓரி
[ புறம் 153 ]
*பசும்பூண் செழியன்
[ புறம் 76 ]
*பசும்பூண் பாண்டியன்
[குறுந்தொகை 393 ]
*பசும்பூண் பொறையன்
[ அகம் 303 ]

பொலம்பூண்
இது பொன்னால் செய்யப்பட்ட பூண் கவச அணி,
இந்த அணிகலனை அணிந்திருந்தவர் என்று சங்கநூல்களில் குறிப்பிடப்படுவோர் பின்வருமாறு.

*பொலம்பூண் வேந்தர்
[ பதிற்றுப்பத்து 64-2]

*பொலம்பூண் ஐவரும் மற்றும் பல குறுநில மன்னர்களும் கூடியிருந்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுச்செழியனை வாழ்த்தினர்.
[ பரிபாடல் 13-10 ]

*பொலம்பூண் எவ்வி -
நீழல் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட கொடையாளி அரசன்
[ மதுரைக்காஞ்சி 775 ]

*பொலம்பூண் எழினி
-ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியனைத் தாக்கிய எழுவர் கூட்டணியில் ஒருவன்
[ அகநானூறு 366-12 ]

*பொலம்பூண் கிள்ளி
- காவிரிப்பூம்பட்டினத்து அரசன் கோசர் படையைத் துகளாக்கியவன்.
[ அகநானூறு 36-16 ]

*பொலம்பூண் திரையன்.
- பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட அரசன்
[ அகநானூறு 205-10 ]

*பொலம்பூண் நன்னன்
-புன்னாட்டைக் கவர்ந்துகொண்டதால் அதனை ஆண்ட அரசன் ஆண்ட அரசன் ஆஅய்-எயினன் நன்னின் படைத்தலைவனான மிஞிலியொடு பொருது மாண்டான்
[ அகநானூறு 340-6 ]

*பொலம்பூண் நன்னன்
-களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலொடு பொருது தன் நாட்டை இழந்தான்
[ அகநானூறு 396-2 ]

*பொலம்பூண் வளவன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
[ அகநானூறு 199-20 ] 

*வாய்வாள் வலம்படு தீவின் பொலம்பூண் வளவன்
[புறம் 397-22 ]

Saturday, 17 October 2015

பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

ஆசாரிகள் பிராமணர் இல்லாமல் தங்கள் பெரியவர்களை வைத்தே திருமணம் செய்துகொள்வதில் வழக்காடி வெற்றிபெற்ற கதை தெரியுமா?

பழைய சித்தூர் ஜில்லாவில் சதுப்பேரி என்ற ஊரில் 1814 ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று வரலாற்றில் மிகமுக்கியமானது.

அங்கே பண்டிதர் மார்க்கசகாயம் ஆசாரி என்பவர்தான் திருமணங்களை நடத்திவந்தார்.
ஒருமுறை திருமணக்கால் நடுதல் விழா நடக்கும்போது (விவாதஸ்தம்ப பிரதிஷ்டை)
அங்கே பஞ்சாங்க குண்டையன் என்பவர் ஒரு கூட்டத்துடன் வந்து பிராமணர்கள்தான் திருமணம் நடத்திவைக்கவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார்.

வேத இதிகாசங்களை நன்கு கற்றவரான மார்க்க சகாயனார் அவரை விவாதத்தில் வென்றார்.
அதாவது புராணங்களில் முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றில் எதுவுமே சரியில்லை என்று நிறுவியுள்ளார்.
( mannaivishwakarma.blogspot.in/2015/06/blog-post_13.html )
இந்த விவாதம் ஒரு பஞ்சாயத்து முன்னிலையில் நடந்தது.
தீர்ப்பு ஆசாரிகள் பக்கம் வழங்கப்பட்டது.
ஆனாலும் குண்டையன் ஒத்துக்கொள்ளாமல் தகராறு செய்யவே மார்க்கசகாயனார் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்தார்.

மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பில் குண்டையன் கூட்டத்தாருக்கு தண்டப்பணம் விதித்து திருமண நிகழ்வுக்கான இழப்பீடைப் பெற சிவில் கோர்ட்டில் வழக்குபோட ஆசாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1814ல் மார்க்கசகாயனார் முதலியோர் 'சித்தூர் ஜில்லா அதாலத்' கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

வாதிகள்:
வெள்ளை ஆசாரியார்
மார்க்கசகாயம் ஆசாரியார்
ருத்திர ஆசாரியார்
வெங்கிடாசல ஆசாரியார்
நல்லா ஆசாரியார்
குழந்தை ஆசாரியார்
சின்னக்கண்ணு ஆசாரி
அருணாசல ஆசாரியார்
மகாதேவ ஸ்தபதியார்
தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதியார்
வரத ஆச்சாரியார்

வக்கீல்- அப்துல் சாயபு

இவர்கள் முன்வைத்த ஆவணங்கள் a) எசுர் வேதம்
b) புருஷசூக்தம்
c) மூலஸ்தம்பம்
d) வச்சிரசூசி
e) வேமநபத்யம்
f) கபிலரகவல்
g) ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.

பிரதிவாதிகள்:
பஞ்சாங்கக் குண்டையன்
அருணாசல ஐயன்
வெங்கடசப்பு சாஸ்திரி
விஸ்வதி சாஸ்தரி
தொட்டாசாரி
எக்கிய தீட்சிதர்
வியாச பட்டர்
சூரிய நாராயண சாஸ்திரி
ஜோசி சாஸ்திரி
வந்தவாசி சிரஸ்தாரய்யர்

வக்கீல் – அருணாசல முதலி

விசாரணை சாட்சிகள்:
ஆண்டியப்ப முதலி
சங்கரநாராயண செட்டி
கோபி செட்டி
அப்பாசாமி பிள்ளை
வெங்கடசுப்பு நாயக்கன்

(பெயர்களை வைத்து பார்த்தால் குண்டையன் தரப்பும் அவர்களுக்கு எதிரான ஆசாரிகளின் சாட்சிகளும் தமிழ் மொழி பேசுவோர் இல்லை என்பது என் யூகம்)

1818 டிசம்பர் 15 அன்று தீர்ப்பு வந்தது.
தீர்ப்பு ஆவணத்தில் நடந்த விவாதமும் உள்ளது.
(அவ்வாவணம் vishwakarmaviswass.com/?page_id=360
200 ஆண்டுகள் முந்தைய தமிழ் அதிகப்படியான சமக்கிருதம் கலந்துள்ளது.
என்னால் முடிந்த அளவு எளிமைப்படுத்தியுள்ளேன்.

வாதிகள்=ஆசாரிகள்
பிரதிவாதிகள்=பிராமணர்கள்
இதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்)

பஞ்சமுக பிரம்மா ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய முனிகளின்(ரிஷிகள்)வழி வந்தவரே விஸ்வகர்மாக்களே பிராமணர்கள் என்றும் வாதிகள் கூறினர்.

வாதிகள் பஞ்சமர் வழிவந்தோர் என்றும், ரிஷிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் தொழிலும் பூஜைசெய்வது அல்ல என்றும், தாங்களே அந்த தொழிலைக்குரிய சுத்த பிராமணர் என்றும் பிரதிவாதிகள் கூறினர்.

வெவ்வேறு ரிஷிகளின் பிரம்மரூபங்கள், அவர்களுக்கான உலோகத் தொழில்கள் பற்றியும், தாங்கள் யாகம் செய்து தொழில் தொடங்குவதையும், பஞ்சாங்கத்தில் பிரம்மாக்கள் அருளியவற்றையும், அதனால் பஞ்சாங்கம் சொல்லிக்கொண்டு தாங்கள் சடங்குகளைச் செய்யலாமென்றும்
தங்கள் பிறப்பிலேயே பிராமணத்துவம் இருப்பதாகவும்

மேலும் பிரதிவாதிகள் பறையர், சக்கிலி முதலான நீசசாதியுடன் பிறந்தவர்கள் என்று மனுதர்மம் கூறுவதாகவும்,
கீழ்சாதி வயிற்றிலும் விலங்குகள் வயிற்றிலும் உயிரற்ற பொருட்களின் வயிற்றும் பிறந்த(??!) பல்வேறு ரிசிகள் பெயரைச் சொல்லி அவர்கள் வழிவந்தோரே குண்டையன் தரப்பினர் என்றும் ஆசாரிகள் வாதடினார்கள்.

நீதிமன்றத்தின் முடிவு:
வாதிகள் தாங்களே விஸ்வகர்ம பிராமணர்கள் பிரதிவாதிகளை சங்கர ஜாதி என்றும் கூறி புராண ஆவணங்களைக் காட்டுகின்றனர்.
பிரதிவாதிகளால் வாதிகள் பஞ்சமர்கள் என்று நிறுவமுடியவில்லை.
வாதிகள் கூறும் ரிஷிகள் தங்கள் மூதாதையர் அல்லர் என்றும் பிரதிவாதிகள் மறுக்கவும் இல்லை.
ரிஷிமூலத்தை சொல்லக்கூடாதென்று புராணக்கட்டுப்பாடு உள்ளது.
இந்த ரிசிகள் நால்வர்ணம் உருவான பிறகு தோன்றியவர்கள் அதனால்தான் அவர்களுக்கென்று தொழில்கள் இல்லை.
அதனால்தான் யாசகம் செய்து பிழைக்க விதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் பலகாலமாக சடங்குகளைச் செய்வித்துவந்தவர்கள் ஆனாலும் சாஸ்திரங்களில் அத்தொழில் அவர்களுக்கு உரியது என்று இல்லை.
ஆக இவர்கள் துரைகளையும் மூடத்தனமான மக்களையும் ஏமாற்றி ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

வாதிகள் கூறும் பஞ்சமுக பிரம்மாக்களில் ஐந்தொழிலும் வாதிகளின் ஐந்தொழிலும் ஒத்துப்போகின்றன.
இந்த தொழில்கள் கடவுள் போல உலகம் முழுவதும் பரவியுள்ளன பலருக்கும் நன்மை பயப்பதாக உள்ளன.
விதிக்கப்பட்ட தொழில்களை இவர்கள் செய்தும் வருகின்றனர்.
அதனால் இவர்களை பிராமணர் என்று நம்பலாம்.(?!)
மகாபாரதம் போன்ற கற்பனை புராணங்கள் விஸ்வபிரம்மாவை சிறிது தாழ்த்திக்கூறினாலும் புராணங்களுக்கு மூலமான ஆதிவேதங்கள் அவ்வாறு கூறவில்லை.

பிரதிவாதிகள் கல்யாண சடங்கில் தடங்கல் விளைவித்தது வாதிகள் அழைத்துவந்த சாட்சிகளான நாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் ஆகியோர் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
பிரதிவாதிகள் ரூ.550 இழப்பீடு வாதிகளுக்கு வழங்குவதோடு அவர்கள் சடங்குகளைச் செய்துகொள்வதில் தலையிடக்கூடாது.

அதாவது ஆசாரிகள் புராண இதிகாசங்களில் வரும் உலோகத் தொழிலுக்கான கடவுளரை தங்களின் முன்னோர் என்று கூறியுள்ளனர்.
பிராமணர்கள் புராணங்களில் வரும் ரிஷிமுனிகளின் வழிவந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.
ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களில் விஸ்வகர்ம கடவுளரை இழிவுபடுத்தி எந்த குறிப்பும் இல்லை.
ஆனால் ரிஷிமுனிகளைப் பற்றி பல புளுகுப் புராணங்கள் உள்ளன.
தவிர ரிஷிமுனிகளின் தொழில் பிச்சையெடுப்பதுதான் யாகம் செய்விப்பது கிடையாது.
மனுதர்மம் கூறுவது இதற்கு முரணானது.

செய்துவரும் தொழில் அடிப்படையில் உருவான சாதியை புளுகுப் புராணங்களுடன் தொடர்புபடுத்தி மாந்தருக்குள் ஏற்றத்தாழ்வை செய்யும் அரசியல் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

'சாதி அரசியல் அதிகாரம்' என்ற நூல் கௌதம சித்தார்த்தனால் எழுதப்பட்ட நூலும் இந்த தீர்ப்பு இடம்பெற்றுள்ளது.

பிராமணர்கள் உயர்ந்தவர்கள் அதற்கு வேதமே சான்று என பரப்புரை செய்துவந்தோருக்கு ஆசாரிகள் அப்புராணத்தைக் கொண்டே கொடுத்த பதிலடி இது.

மற்றபடி அப்போது ஆசாரிகள் தமது உரிமைக்காகப் போராடினரேயன்றி சமத்துவத்திற்காகப் போராடவில்லை என்பதையும் அறியமுடிகிறது.

இதன் மூலம் மேலும் அறியமுடிவது,

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் நீதிமன்றம் தமிழில் இயங்கியுள்ளது. சித்தூர் தமிழர் மண்ணே.

200 ஆண்டுகளில் தமிழ் எழுத்துமுறை நன்கு மேம்பட்டுள்ளது.

பிராமணர்களை அழைத்து வேதமந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தும் முறை பரவலாக இருந்திருக்கவில்லை.
பெரியவர்கள்தான் அதற்கான சில சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

ஆசாரிகள் உட்பட பல சாதியினரும் சமஸ்கிருத வேதங்களைக் கற்றிருந்தனர்.

மேலும் பல.