Sunday 4 October 2015

தெலுங்கனாக ஆக்கப்பட்டேன்

தெலுங்கனாக ஆக்கப்பட்டேன்

நான் தெலுங்கனாக ஆக்கப்பட்டேன்.
சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம் உண்மையில் பல மொழியினர் கூடிவாழும் மாவட்டம் ஆகும்.
தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர்.
ஆனாலும், தாலுகா அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1908ல் இருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதன் விளைவாக அங்கு வாழும் தமிழருக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன்.
ஆனாலும், தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்.
மாவட்ட கழக ஆட்சியின்போது தமிழ் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டு விட்டன.
தெலுங்கு பள்ளிக்கூடங்களில் படிக்கவேண்டிய கட்டாயம் தமிழர் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது.
ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கராவே இருந்தனர்.
பனகல் ராஜா, பி. முனுசாமி நாயுடு, சர்.கே.வி.ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது (அவர்களில் இருவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ் வன்னியர்கள் ரெட்டிகள் என்ற பட்டம் பூண்டனர்.
நானே கூட ரெட்டி என்று அழைக்கப்படுகிறேன்.
ஆனால், நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே.
ஆனால் ரெட்டிகள் என்ற பட்டப்பெயரை நாங்கள் பூண்டதால் எங்களைத் தெலுங்கர்களாகப் பதிவு செய்தார்கள்.
அதைப்போலவே ஆதிதிராவிடர்களான தமிழர்கள் மாவார், மாதிகள் என்ற தெலுங்கு தாழ்த்தப்பட்டவர்களாகக் குறிக்கப்பட்டனர்.
இவ்வாறு தமிழர்களையும் தெலுங்கர்களாக கணக்கிட்டதன் விளைவாகத் தெலுங்கர்களின் எண்ணிக்கை கூட்டிக்காண்பிக்கப்பட்டது.
1931ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் திருந்தணி தாலுக்காவில் தமிழர்களின் எண்ணிக்கை 75% இருந்தது.
1941ல் 51% ஆகவும்
1951ல் 49% ஆகவும் குறைந்தது.

திருத்தணித் தாலுக்காவில் 75% இருந்த தமிழர் 49% ஆகக் குறைக்கப்பட்டனர்.
தமிழர்களின் இனப்பெருக்கம் குறைந்துவிட்டதா என்றால் நிச்சயம் இல்லை.
அங்கு வாழ்ந்த தமிழர்களையும் தெலுங்கர்கள் என்று திட்டமிட்டு பதிவு செய்ததின் விளைவாகவே தெலுங்கர்களின் எண்ணிக்கை கூடிற்று தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது.

திருப்பதி நகரத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
திருப்பதி நகரசபை உறுப்பினர்களாக உள்ள 10 பேரில் 9பேர் தமிழர்.
அதைப்போல திருத்தணி பஞ்சாயத்து மன்றத்தில் பெரும்பான்மையினர் தமிழர்கள்.
   
-(தளபதி கே.விநாயகம்.,
சட்டமன்றம் 27.4.59)

ஆதாரம்: தமிழன் இழந்த மண் (நூல்)
தரவிறக்கம்: http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7594%3A2012-08-22-14-31-42&catid=508%3A2012-07-29-15-40-17&Itemid=1

1959 லேயே இந்த நிலை என்றால்
இப்போது 50வருடங்களாகத் தெலுங்கர் ஆக்கிரமித்து ஆண்டுவரும் தமிழ்மண்ணில்(ஆந்திர மாநிலத்தில் மூன்றில் ஒரு பகுதி) ஒரு தமிழன் கூட எஞ்சியிருக்கமாட்டான் போலிருக்கிறது.
நாமெல்லாம் பழம்பெருமை பேசத்தான் முடியும்.
அந்நிய மண்ணில் நம் உடன்பிறந்தோரைக் காக்க நமக்கு துப்பு இருந்ததில்லை.

படம்- தமிழன் இழந்த மண் (பழ.நெடுமாறனின் நூல்)

No comments:

Post a Comment