Wednesday 29 March 2017

இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...

இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...

பழந்தமிழர் வாழ்வியலில் தாழ்ந்தோர் என்று யாருமில்லை

இலக்கியங்களில் சில இடங்களில் இழிசின, இழிபிறப்பு என்று வருகிறது.

உடனே திராவிடம் பொய்ப்பிரச்சாரத்தை ஆரம்பித்தது "பார்த்தீர்களா! சங்ககாலத்திலேயே சாதிக்கொடுமை சாதிக்கொடுமை" என்று.

அவர்கள் முழுப்பாட்டில் ஒரு பகுதியை கத்தரித்து அதை மட்டும்தான் போடுவார்கள்.

இழிசினர் என்பது கீழ்த்தரமான பொருள் கொண்டிருக்கவில்லை.
எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

இழிசினர்:-

துடி எறியும் 'புலைய'
எறிகோல் கொள்ளும் 'இழிசின'
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
(புறநானூறு 287 : 1)

இதில் முதல் இரண்டு வரிகளை மட்டும் கத்தரித்து ஒட்டி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் பொருள்,
"துடிப் பறை கொட்டும் புலையனே,
குறுந்தடியைக் கையில் கொண்டு பறையை முழக்குபவனே!
கார் காலத்து மழைபோல் அம்புகள் உடலில் வந்து தைத்தாலும் வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போன்ற வேல்கள் வந்து பாயினும், பொன்னால் ஆக்கப்பட்டு முகபடாம் போர்த்தப்பட்ட பெருமைமிக்க யானைத் தன் வெண்மையான கூரிய கொம்புகளைக் கொண்டு குத்தினாலும் அஞ்சிப் புறங்கொடுத்து ஓடாத பெருமை மிக்கவர்கள் நீங்கள்" என்று புகழும்படியே அமைந்துள்ளது.

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.
(புறநானூறு : 82)

இதிலே 'கட்டில் நிணக்கும் இழிசினன்' என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டில் செய்வோர் கீழ்சாதி என்று கூறுவதாக திரித்து பொய் பரப்புரை செய்தனர்.

இதன் பொருள்,
தன் மனைவி பிள்ளை பெற இருக்கிறாள் என்ற நிலையில் கட்டில் வாரினைப் பிணைப்பதற்காக வேகவேகமாக வாரூசியைச் செலுத்தும் தொழிலாளியைப் போல மிக விரைவில் பொருநனை வீழ்த்தி வெற்றி கண்டான் மன்னன்.

இப்பாடல் அத்தொழிலாளியை மன்னனுக்கு இணையாக வைத்து ஒப்பிட்டுள்ளது.
( இதேபோல புறநானூறு - 32 ல் சோழமன்னன் நலங்கிள்ளி திறமையான குயவருடன் ஒப்பிடப்பட்டுள்ளான்)

இழிதல்:-

இழிவது என்ற சொல் இறங்குவது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.

வலவ நெடுந்தேர் தாங்குமதி என்று இழிந்தனன் (அகநானூறு 66.13)
அதாவது, தேரிலிருந்து இறங்கியதைக் கூறுகிறது.

வெண்மதியம் விசும்பிழுக்கி
நீலமா சுணத்தோடு
நிலத்திழிந்த தொத்தனவே
(சீவகசிந்தாமணி 2238)
அதாவது, நிலவை விழுங்கிய மாசுணம்(பெரும்பாம்பு) நிலத்தில் வீழ்ந்தது போல என்று உவமை சொல்கிறது.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
(குறள் 964)
தலையிலிருந்து விழுந்தால் முடிக்கு மதிப்பில்லை அது போல தன் நிலையிலிருந்து இறங்கினால் மாந்தருக்கு மதிப்பில்லை என்று கூறுகிறது.

அருவி இழிதரும் பெரு வரை
(நற்றிணை 347)
பெரிய மலையில் அருவி(நீர்) கீழே இறங்குவதை (பொழிவதை)க் கூறுகிறது.

இழிபிறப்பினர்:-

இழிபிறப்பினர் என்பது பிறப்பால் இழிவானவர் என்ற பொருளில் கூறப்படவில்லை.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்
(குறள் 133)
ஒழுக்கம் இல்லாவிட்டால் பிறவி இழிபிறப்பு ஆகிவிடும் என்று கூறுகிறது.

சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும்
(பரிபாடல் 5:19-21)
நல்வினையால் சிறப்புடைய உயர்பிறப்பினர் ஆவது மற்றும் தீவினையால் இழிபிறப்பினர் ஆவது பற்றிக் கூறுகிறது.

அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்
(சிலப்பதிகாரம் 10:241)
அறியாமையால் இழிபிறப்பாக ஆகிவிட்டனர் என்று கூறுகிறது.

இழிபிறப்பு என்பது மானிடராகப் பிறந்த பிறவி உயர்வை இறங்கச்செய்வது,
அதாவது பிறந்த பின்னர் நடத்தையால் ஏற்படும் தாழ்வைக் கூறுகிறது.
பிறப்பாலேயே இழிந்தவராக யாரையும் கூறவில்லை.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

நன்றி: thiru-padaippugal
நன்றி: mytamil-rasikai

No comments:

Post a Comment