Wednesday, 22 March 2017

கோடியில் ஒருவன் இறைமறுப்பாளன்

கோடியில் ஒருவன்
இறைமறுப்பாளன்

!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!

ஒரு இடர்(விபத்து) நடந்தது.
ஒரு சரக்குந்தும்(லாரி) மகிழுந்தும்(கார்) நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

தவறு என்னவோ சரக்குந்து ஓட்டுனர் மீதுதான்.
மகிழுந்தில் பயணம் செய்தோர் நான்குபேர்.
ஒருவர் நிகழ்விடத்திலேயே
உயிரிழந்தார்,
ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர முயற்சிக்குப்
பிறகு உயிர்பிழைத்தார்.
ஒருவர் இருகைகளையும் இழந்தார்.
ஒருவருக்கு சிறிய
காயம் மட்டும் பட்டது.

சிறிய காயம் அடைந்தவரைக் கேட்டால் 'கடவுள் காப்பாற்றினார்' என்றார்.
இருகைகளையும் இழந்தவர் 'என் உயிரைக் கடவுள் காப்பாற்றினார்' என்றார்.
படுகாயமடைந்து பிழைத்தவர் 'கடவுள் அருளால் பிழைத்தேன்' என்றார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் 'அவரைக் கடவுள் அழைத்துக்கொண்டார்'
என்றனர்.
சரக்குந்து எண் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டு சரக்குந்தின் உரிமையாளர்
மீதும் ஓட்டுநர் மீதும் வழக்குபோடப்பட்டது.

இப்போது சிந்தியுங்கள்.
பிழைத்தவனைக் காப்பாற்றியது கடவுள் என்றால் உயிரிழந்தவனை சாகடித்தது யார்?
இடரிலிருந்து பிழைக்கவைத்தது கடவுள் என்றால் இந்த இடரை நிகழ்த்தியது யார்?
உயிர்பிழைத்தவர் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது சரி என்றால்
கைகளை இழந்தவன் கடவுளைத்தானே குற்றம்சாட்டவேண்டும்?
சரக்குந்து ஓட்டுநர் மீது ஏன் வழக்கு போடுகிறான்?
நல்லது நடந்தால் அதற்கு கடவுள் காரணம், கெட்டது நடந்தால் அதற்கு மட்டும்
மானிடனே காரணமா?

*எல்லா சமயக்காரர்களும் இதையே பின்பற்றுகிறார்கள்.
கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்தார் என்று நன்றி சொல்வார்கள்.
உங்களுக்கு வாழ்க்கை கிடைத்ததற்காக நன்றி செலுத்தும் நீங்கள் எதுவுமே
கிடைக்காத மற்றவனுக்காக கடவுளைக் குற்றம்சாட்டியது உண்டா?
இது தன்னலமன்றி வேறென்ன?

*அது நடக்கவேண்டும் இது நடக்கவேண்டும் என்று வேண்டுகிறீர்கள்.
வேண்டுதலால் என்ன பயன்?
நடப்பது எல்லாம் ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்கிறீர்கள்.
அப்புறம் எப்படி உங்கள்
வேண்டுதல்கள் அதை மாற்றும்?

*கடவுள் என்று ஒருவர் இல்லை என்று சொன்னால் அதை மறுக்க இரண்டு செயல்களை
செய்வார்கள்.
ஒன்று தொடர்பே இல்லாத ஒன்றை கொண்டுவந்து அதை நிறுவச்சொல்வார்கள்,
அல்லது
எங்கேயோ எப்போதோ நடந்த அரியநிகழ்வை சான்றாகக் காட்டுவார்கள்.
அதையும் தீர்த்துவிட்டால் மேலும் எதிர்கேள்வி கேட்பார்களேயன்றி சிந்திக்க
மட்டும் செய்யமாட்டார்கள்.
ஒருவர் கூறுகிறார், "நீங்கள் புத்தரைப் பார்த்ததேயில்லை; ஆனாலும் அவர்
இருப்பதாக நம்புகிறீர்களே அதேபோல நானும் கடவுளைப் பார்க்காமலேயே
நம்புகிறேன்" என்றார்;
எனது பதில் "நான் புத்தர் 'இருந்தார்' என்றுதான் நம்புகிறேன்
'இருக்கிறார்' என்று நம்பவில்லை.
என் வாழ்க்கையில் நடக்கும் எந்த
நிகழ்வையும் நான் புத்தருடன் தொடர்புபடுத்துவதில்லை.
சரி நான் அவரை
நம்புவதை விட்டுவிடுகிறேன்.
நீங்களும் கடவுளை நம்புவதை விட்டுவீர்களா?".

*கடவுளை வேண்டியதால் நோய் சரியானது என்கிறீர்கள்.
சரி தீராத
நோயாளிகளையெல்லாம் உங்களிடம் அழைத்துவந்தால் வேண்டுதல் செய்து அதைச்
சரிசெய்துவிடுவீர்களா?

*ஒரு சமயத்தைப் பின்பற்றுபவன் பிற சமயத்தின் கடவுள்களையும் சடங்குகளையும்
நம்பிக்கைகளையும் நம்புவது கிடையாது.
அப்படிப் பார்த்தால் ஒரு
சமயத்தானைப் பொறுத்தவரை மற்ற சமயத்தவன் இறைமறுப்பாளன்.
மற்ற சமயத்தானைப்
பொறுத்தவரை இவன் இறைமறுப்பாளன்.

*எல்லா சமயத்தானும் அவன் சமயம் உலகம் முழுவதும் வாழ்பவருக்கானது
என்கிறார்.
எந்த ஒரு சமயத்தின் நூல்களும் உலகம் முழுவதும் தொட்டு
எழுதப்படவில்லை.
எந்த ஒரு சமய நூலிலும் பனிக்கரடியும் எஸ்கிமோ மக்களும்
வருவதில்லை.
கங்காருவும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளும் வருவதில்லை.
சனிக்
கோளைச் சுற்றியிருக்கும் வளையம் பற்றியோ
ஆழ்கடலில் வாழும் ஜெல்லி மீன்கள்
பற்றியோ உலகின் வேறொரு மூலையில் இருக்கும் மக்கள் பேசும் மொழிபற்றியோ
வருவதில்லை.
சமயநூல்களில் வரும் மானிடரும், மரங்களும், விலங்குகளும், இடங்களும் ஒரு
குறிப்பிட்ட பகுதியில் உள்ளவையே.
அந்த நூல் எப்படி உலக மக்கள்
அனைவருக்குமான சமயநூல் ஆகும்?

*சமயம்(மதம்) என்பது ஏன் ஏற்படுத்தப்பட்டது தெரியுமா?
கண்ணெதிரே நடக்கும் கொடுமையை மானிடனின் உள்ளம் சகித்துக்கொள்ளாது.
அது
தவிக்கும்.
அந்த தவிப்பை உதறித்தள்ள ஏற்படுத்தப்பட்டதே சமயம்.
'அவன் சாகிறானா அது அவன் தலைவிதி அவன் செய்த தீமைகளுக்காகவே அவன்
துன்படுகிறான்
நீ அதைப் பற்றிக் கவலைப் படாமல் கடவுளை நினைத்துக்கொண்டு
பத்திரமாக மேலுலகம் சென்றுவிடு' என்று கற்றுத்தருகிறது.

*அவரவர் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பத்தான் கூலி கிடைக்கிறது என்றால்
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கொல்லப்பட்ட
மக்கள் அனைவருமே தீவினை செய்தவர்களா?
இன்னொன்று 'நல்லது இறுதியில் வெல்லும்' என்பது,
அமெரிக்க நாடுகளிலும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் மற்றும் பல தீவுகளிலும்
ஐரோப்பியர் பூர்விகமாக வாழும் மக்களைப் பூண்டோடு கொலைசெய்துவிட்டு
குடியேறி இன்றும் வாழ்வாங்கு வாழ்ந்துவருகின்றனர்.
அமெரிக்காவில்
1500லிருந்து 1900வரை ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு
காலம் முழுக்க ஊதியமே இல்லாமல் இருவேளை மட்டும் உணவு கொடுக்கப்பட்டு ஒரு
நாளைக்கு 20மணிநேரம் உழைத்து உழைத்தே செத்தவர்கள் மட்டும் ஏறத்தாழ
5கோடிபேர்.
இன்றும்கூட உலகில் பத்துநொடிக்கு ஒரு குழந்தை பசியால் சாவதாக ஐநா தெரிவிக்கிறது.
போரினாலும் குற்றங்களாலும் பட்டினியாலும் கொல்லப்படுவோர் ஒரு நாளைக்குச்
சராசரியாக 20,000பேர்.
இவர்கள் எல்லோரும் தீவினை செய்தவர்களா?
அப்படி செய்தார்கள் என்றால் செய்வித்தது யார்?
உங்களை ஒருவன் துன்புறுத்தினால் அதை எதிர்க்காமல் 'என் விதி' என்றா இருப்பீர்கள்?
தீவினை செய்தால் மேலுலகத்தில் தண்டனை கிடைக்கும் என்று எதை வைத்து நம்புவது?
இதுவும்கூட மானிட மனத்தின் தவிப்பை உதறித்தள்ள கூறப்பட்டதன்றோ?!

*உடல்வேறு ஆன்மாவேறு என்பது, ஆன்மாதான் மறுபடி மறுபடி பிறக்கிறது என்றால்
மக்கள்தொகை ஏன் பெருகுகிறது?
இந்த கொள்கையின் அடிப்படையில்தான் பேய், பிசாசு கதைகள் பிறக்கின்றன.
பேய் என்பது உண்மையானால் ஒரு கொலைகாரன்கூட உயிருடன் இருக்கமுடியாது.
பல்லாயிரம் உயிர்களைக் கொன்றவன் எல்லாம் கவலையில்லாமல் திரிகிறான்.
அப்பாவி மக்களுக்குத்தான் பேய்பிடிக்கிறது, சாமி வருகிறது.

*நடக்கும் அத்தனைக்கும் மானிடரே பொறுப்பு,
மேலே எவனும் இருந்து
கணக்குவைத்துக்கொண்டு இருப்பதில்லை.
நம் பிரச்சனைகளை நாமே
தீர்க்கவேண்டும் என்று எல்லோரும் முடிவுகட்டிவிட்டால் இத்தனை கொடுமைகள்
நடக்குமா?
கெட்டவர்களையும் விட வேடிக்கை பார்ப்பவர்களாலேயே கொடுமைகள் பெருகுகின்றன.

*எல்லா சமயநூல்களும் பெண்களை ஆண்களுக்குக் கீழேதான் வைக்கின்றன.
மாதவிலக்கில் பெண்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்றால் கோயில்களில்
இருக்கும் பெண்தெய்வங்களுக்கு மாதவிலக்கு வராதா? என்று கேட்க ஒரு
இறைமறுப்பாளனால்தான் முடியும்.
கல்லால் செய்த சிலைக்கு பால்முழுக்கு ஏன்?
பழம் சாத்துவது ஏன்?
தங்கம்
எதற்கு?
ஐந்துமுறை ஏன் தொழவேண்டும்?
உண்ணாமல் ஏன் இருக்கவேண்டும்?
சமயத்தலைவர் பிறந்தநாளை ஏன் கொண்டாடவேண்டும்?
குழந்தை வளர்ப்பிலும்
திருமண நிகழ்விலும் ஈமச்சடங்குகளிலும் ஏன் சமயத்தின் தலையீடு?
ஏன்
சமயநூல்களை மனனம் செய்யவேண்டும்?
ஏன் தொலைதூரத்திற்கு புனிதப்பயணம்?
ஏன்
நன்கொடை?
ஏன் திருவிழாக்கள்?
என்று இறைமறுப்பாளன்தான் கேட்கிறான்.
மற்றவர்கள் தாங்கள் செய்வது ஏன் என்று சிந்திப்பதுகூட இல்லை.
கடவுள் இல்லை என்ற புத்தனைக் கடவுளாக்கினர்.
ஒருவரே கடவுள் என்ற
சாய்பாபாவையும் கடவுளாக்கினர்.
வாழும் காலத்தில் பல நல்ல கருத்துகளையும்
(சில மோசமான கருத்துகளையும்) கூறிய ஏசுவையும் நபிகளையும் ராமரையும்
அவர்கள் இறந்தபிறகு இறைவனின் தூதர்கள் என்று கதைகட்டி சமயநூல்களைப்
படைத்து கடவுளுக்கு ஈடான இடத்தில் வைத்தார்கள்.
கன்னிக்குக் குழந்தை பிறப்பதும்,
கடவுளிடமிருந்து ஒருவருக்கு மட்டும்
தூதுவர் வருவதும்,
விலங்குகள் தலையுடனும் மானிட உடலுடனும் உயிரினங்கள்
பேசுவதும்,
இறந்தவர் உயிருடன் வருவதும்,
கடல் பிரிந்து வழிவிடுவதும்,
ஒற்றையாளாக மலையைத் தூக்குவதும்
என கேட்கும்போதே பொய் என்று தோன்றும்
கதைகளை உண்மை என்று நம்பிவருபவர்களை முட்டாள்கள் என்று சொல்லாமல் வேறு
என்ன சொல்வது?
சமய ஆசான்கள் (மதகுரு) இந்த உலகத்திற்கு செய்ததுதான் என்ன?
கிறித்தவராக மாறிய பிலிப்பைன்ஸ் மக்களும் தென்னாப்பிரிக்க மக்களும்
பௌத்தராக மாறிய சிறிலங்காவினரும் ஜப்பானியர்களும் 
இசுலாமியராக மாறிய
இந்தோனேசியரும் மலாயா மக்களும் அடைந்த நன்மைதான் என்ன?
சில இடர்ப்பாடுகள்(பிரச்சனைகள்) போய் சில இடர்ப்பாடுகள் வந்தன அவ்வளவுதான்.

*உலகம் முழுவதும் பரவியுள்ளது என்றால் அது சிறந்ததாகிவிடுமா?
அல்லது
நீடித்திருக்குமா?
கங்னம் ஸ்டைல் பாடல்கூடத்தான் உலகம் முழுவதும் பரவியது அது என்ன சிறந்தபாடலா?
செஸ் விளையாட்டும், சீட்டு விளையாட்டும்கூட உலகம் முழுவதும் பரவியுள்ளன.
ஆங்கில பேரரசு கூடத்தான் உலகம் முழுவதும் பரவியது?
நீடித்து நிற்கமுடிந்ததா?

*எல்லா சமயத்தானும் தனது சமயத்தை ஒரு சமயம் அல்ல என்றும் அது வாழும்
நெறி என்றும் கூறுகிறான்.
நீங்கள் வாழ்வதுதான் நெறியான வாழ்க்கை என்றால்
மற்ற சமயத்தார் வாழும் வாழ்க்கைக்குப் பெயர் என்ன?
உங்கள் சமயம் பிறக்கும் முன்பு மக்கள் வாழவில்லையா?
அதில் நெறி இல்லையா?
நீங்கள் அப்படி என்ன நெறியைத்தான் கற்றுத்தந்தீர்கள்?
உதவி செய் தீங்கு செய்யாதே
என்று ஒரு சமயம் வந்துதான் கூறவேண்டுமா?
அது உங்களுக்கே தெரியாதா?
வெளியாட்கள் புகாத தீவில் வாழும் ஒரு மானிடனுக்கேகூட இது தெரியுமே?!
காட்டில் வாழும் விலங்குகள்கூட பசிக்காமல் வேட்டையாடுவதில்லை, வன்புணர்வு
செய்வதில்லை, தன் இனத்தை தானே அழிப்பதில்லையே!

*எதையும் மிகையாக இட்டுக்கட்டுவது,
சமயநூலில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு
வார்த்தை இருக்கும் அல்லது ஒரு நிகழ்வு இருக்கும் அதை அப்படியே
நீட்டிமுழக்கி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புடன் ஒப்பிட்டு பேசுவது.
சமயவுணர்வை தள்ளிவைத்துவிட்டு அதைப் படித்தாலே அதுவொரு உளறல் என்று
புரியும்.
ஆனால் சமயவுணர்வில் மூழ்கியிருப்போருக்கு அது உணர்வுடன்
ஒத்துப்போவதால் சரியென்றேபடும்.

*தொடர்பேயில்லாத விடயங்களை பின்பற்றுவது,
786 என்பதற்கும் இசுலாமுக்கும்
எந்த தொடர்பும் கிடையாது.
திருநீறு பூசுவதற்கும் சைவத்துக்கும் எந்த
தொடர்பும் கிடையாது.
புத்தருக்கு அறிவு பிறந்ததற்கும் போதி மரத்துக்கும்
எந்த தொடர்பும் கிடையாது.
திருமுழுக்கு(ஞானஸ்நானம்) செய்வதற்கும்
கிறித்துவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
பல்லே பல்லே
(பாங்ரா)நடனத்திற்கும் சீக்கிய சமயத்திற்கும் தொடர்பே கிடையாது.
கேள்வி கேட்காமல் பின்பற்றுபவர்கள் என்பதால் கண்டவையும் தொடர்புபடுத்தப்படுகின்றன.

*மானிடனைக் கடவுள் படைத்தான் என்பது,
இன்றைய முன்னேறிய அறிவியல் இதற்கான பொருத்தமான விடையைத் தந்துவிட்டது.
அந்த விடையில் குறைகளைக் கண்டுபிடிக்க முற்படுவார்களேயன்றி தமது
சமயக்கருத்தைப் பற்றி சிந்திப்பது இல்லை.

*அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவதாகக் கூறுவது,
அமெரிக்காவின் மிகப்பெரிய
விடுதலை தேவி சிலையைக் காணாமல் போகச் செய்தவரும், சீனப் பெருஞ்சுவர்
வழியே ஊடுறுவி மறுபக்கம் வந்தவரும், பலர் முன்னிலையில் பல்வேறு
மாயங்களைச் செய்துகாட்டியவர்களும் உண்டு.
அவர்களெல்லாம் கடவுளா?
குருடனுக்கு கண்கொடுப்பது கடவுள்த்தன்மை என்றால் குருடாகப் படைத்தது
எந்தத்தன்மை?

*சமயவழி பிரச்சனைகளை சமயத்தின் பிரச்சனைகளாக திரிப்பது,
உலகில் போரால் செத்த மக்களுக்கு இணையாக சமயத்தால் செத்த மக்கள்தொகை வருகிறது.
ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறும்போது அவர்களுக்காகக்
குரல்கொடுப்பதில் தவறில்லை.
உன் சமயத்தாருக்குத் துன்பமெனில் போராடு.
வீணாக சமயத்திற்காகப் போராடி
உயிரை விடாதே.

சரி, சமயம் என்பதுதான் என்ன ?
சமயம் என்பது ஒரு இனத்தின் 'எழுச்சிக்குக் காரணமானக் கொள்கை'.
ஒரு கொள்கை
ஒரு குறிப்பிட்ட மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி எழுச்சியைத்
தோற்றுவித்து அந்த இனத்தின் ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கிறது.
பிறகு
படைவலிமையுடனும் பணவலிமையுடனும் அது மற்ற இனங்களுக்கும்
திணிக்கப்படுகிறது.
எழுச்சி பெற்ற இனத்தின் பழக்கவழக்கங்களும்
அடையாளங்களும் மொழியும் மற்ற இனத்தில் நுழைந்து அவ்வினத்தைக்
கூறுபோடுகின்றன.
மற்ற இன மக்கள் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் தமது
இன அடையாளத்தை துறக்கவும்முடியாமல் இனம்கடந்து ஒரே  சமயமாகவும் இணையவும்
முடியாமல் அல்லாடுகிறார்கள்.
சிறிதுகாலத்தில் எழுச்சிபெற்ற இனத்தின்
வலிமை வீழ்கிறது.
சமயக்குழப்பங்கள் மற்ற இனங்களில் சிறிது காலம்
நீடிக்கின்றன.
சில காலம் கழித்து இனத்தில் சமயம் தோற்றுவித்த வேறுபாடுகள்
மறைந்துவிடுகின்றன.
இனம் என்பது சமயத்தை (பெரும்பாலும்)வெற்றிகொள்கிறது.
எனவேதான் கூறுகிறேன்.
மானிடக்குழந்தை மானிடனாகத்தான் பிறக்கிறது.
அது
சிந்தித்து அறியும் முன்னரே அதன் மனதில் சமயம் என்கிற நஞ்சு
ஏற்றப்படுகிறது.
அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனாக ஆனதும் 'கடவுள் இல்லை'
என்று எவ்வளவு ஆணித்தரமாக நிறுவினாலும் அந்த இளைஞன் அதை
ஒத்துக்கொள்ளமாட்டான்.
காரணம், அவன் ஒத்துக்கொண்டால் இத்தனை நாட்களாக
முட்டாளாக இருந்தோம் என்று ஒத்துக்கொள்ளவேண்டிவரும்.
தம்
தாய், தந்தை, ஆசான், சமயமக்கள், மதிப்பிற்குரியோர் என பலரும் முட்டாள்கள்
என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.
அதற்கு எவனுக்கும் 'துணிச்சல்' இல்லை.
அவன் எப்படியாவது எதையாவது என்னத்தையாவது செய்து கடவுள் இருக்கிறார்
என்று நிறுவவே முயல்வான்.
அல்லது ஆத்திரப்படுவான்.
அல்லது ஓடியேவிடுவான்.
கடவுள் என்ற ஆற்றல் இல்லாமல் அவனால் வாழமுடியாது.
தன்னை மட்டும் நம்பி அவனால் வாழமுடியாது.
தான் தீவிரமாக நம்பிவரும் கொள்கை எந்தத் தடைவந்தாலும் கைவிடாதவன்
அக்கொள்கை தவறு என்று தெரிந்ததும் நன்கு ஆராய்ந்து பார்த்து அந்தக்
கொள்கையைக் கைவிடுவானேயானால் அவன்தான் துணிச்சல்காரன்.
கோடியில் ஒரு துணிச்சல்காரன் இறைமறுப்பாளன் ஆகிறான்.
பெற்றோரையும், உறவினரையும், சுற்றத்தையும், எல்லா சமயத்தாரையும் என
உலகின் 99.99% பேரை எதிர்க்கத் துணிகிறான்.

மண்ணை தெய்வமாக வணங்கியபோது அதை கீறிஉழுது வேளாண்மை செய்தவன் ஒரு இறைமறுப்பாளன்.
மூடநம்பிக்கைகள் பலவற்றைக் காணாமல் போகச்செய்தவன் இறைமறுப்பாளன்.
உலகம்
உருண்டை என்றும்,
மானிடன் குரங்கிலிருந்து வந்தான் என்றும்,
அரசன்
தெய்வவாரிசு இல்லை என்றும்,
மழை பெய்வதுபற்றியும் நம்பிக்கைகளை மீறி
சிந்தித்து உலகிற்கு அறிவித்தவன் இறைமறுப்பாளன்.
அவன் கோடிக்கணக்கானோரை பயனடைச் செய்கிறான்.

நான் கோடியில் ஒருவன்,
துணிச்சல்காரன்.
இறைமறுப்பாளன்.

(முகநூலில் இட்ட நாள்: 22 ஆகஸ்ட் 2014)

No comments:

Post a Comment