குருதியில் நனைந்த குமரி -15
நாள் 23.08.1954
டெல்லி
ரசாக் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சரைப் பார்க்கப்போனார்.
மீண்டும் தமிழர்கள் மலையாளிகளால் படும் பாட்டை விவரித்தார்.
கைலாஸ்நாத் கட்ஜூ இடைமறித்து "போதும், இதெல்லாம் ஒரு பிரச்சனையா? நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன.
நான் நேற்றே நேருவிடம் பேசிவிட்டேன்.
நேரு நிலைமையை முன்பே கணித்து உங்களை போராடாமல் இருக்கச் சொல்லியுள்ளார்.
அதையும் மீறி போராட்டம் நடத்தி கலவரமாக்கிவிட்டு இப்போது வந்து பேசுவதில் எந்த பலனும் இல்லை"
ரசாக் "ஐயா, இது இன்று வெடித்த போராட்டம் இல்லை, 200 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மலையாளிகள் கைக்குப் போனது.
அன்றிலிருந்து எங்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
எங்களை போராடவேண்டாம் என்று சொல்ல நேரு யார்?
ஒன்று நேரு தலையிடாமல் இருந்திருக்கவேண்டும்.
அல்லது பிரச்சனையை முடித்துத் தரவேண்டும்.
இது 25 லட்சம் திருவாங்கூர் தமிழர்களின் பிரச்சனை.
நீங்கள் நேருவை நான் சந்திக்க ஏற்பாடு மட்டும் செய்யுங்கள்.
இல்லையென்றால் முழு தமிழினமும் இந்த போராட்டத்தில் குதிக்கும்.
பிறகு நேரு வந்து எங்களைச் சந்திக்கும் நிலை வரும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்"
அப்துல் ரசாக்கின் உறுதியான குரலைக் கேட்ட கட்ஜூ வெலவெலத்துப் போனார்.
பிறகு பொறுமையாகக் கேட்டார் "அப்படி என்னதான் பிரச்சனை இப்போது?"
ரசாக் "நாங்கள் தமிழர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானமும் அதை ஆட்டுவிக்கும் நம்பூதிரிகளும் 200 ஆண்டுகளாக எங்களை இரண்டாம் தரக் குடிகளாக நடத்தி வருகின்றனர்.
எங்கள் பெண்கள் மேலாடை கூட போடமுடியாதவாறு செய்தனர்.
தமிழர்களின் பாண்டிய அரசின் சிற்றறரசான வேணாடு 1750களில் நம்பூதிரிகளால் வஞ்சகமாகக் கைப்பற்றப்பட்டு அரச குடும்பம் மலையாள மயமாக்கப்பட்டது"
கட்ஜூ "திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர்களுக்கு சொந்தம் என்கிறீர்களா?"
ரசாக் "ஆம், வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் தெரியும்.
திருவாங்கூர் மன்னர் பெயர்கள் திருவடி என்று முடிந்தால் அவர் தமிழர்.
திருநாள் என்று முடிந்தால் அவர் மலையாளி.
பத்மநாபசாமி கோயிலைக் கட்டிய பால மார்த்தண்ட வர்மன் காலம் வரை அது தமிழ் அரசாகத்தான் இருந்தது.
அப்போது கூட குமரியோ, முல்லைபெரியாறு பகுதியோ வேணாட்டு பகுதியாக இல்லை.
வரை படத்தைப் பாருங்கள்.
நாங்கள் வரலாற்று சான்றுகளை முன்வைத்து முழு திருவிதாங்கூரையும் கேட்க முடியும்.
ஆனால் நாங்கள் முடிந்த அளவு விட்டுக்கொடுத்து தற்போது தமிழ்பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தமிழ்மாநிலத்துடன் இணைக்க கோருகிறோம்"
கட்ஜூ "சரி, அப்படி என்றால் நிகழ்கால பிரச்சனைகளைக் கூறுங்கள்"
ரசாக் "நேரு சொல்லியும் நாங்கள் போராடினோம்.
ஏனென்றால் போராடியே ஆகவேண்டிய சூழலில் எல்லா ஏற்பாடுகளும் ஆன பின்னர் கடைசி நேரத்தில் நேருவின் கடிதம் வந்தது.
பெரிய போராட்டமெல்லாம் நடத்தவில்லை.
அமைதியாக ஊர்வலம் நடத்திய எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 30பேர் வரை உயிரிழந்து விட்டனர்"
கட்ஜூ "11 பேர் என்றுதானே செய்திகள் கூறுகின்றன"
ரசாக் "அடையாளம் தெரிந்தோர் 11 பேர். மீதி பிணங்களை மலையாள காவல்துறை அள்ளிக்கொண்டுபோய் எரித்துவிட்டனர்.
மேலும் 100 பேர் வரை படுகாயம் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எந்த சிகிச்சையும் கிடைக்கமுடியாத படி ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே கிடக்கின்றனர்.
தமிழர்கள் வெளியே தலைகாட்டமுடியாத நிலை உள்ளது"
கட்ஜூ "கேட்பதற்கு ராணுவ அடக்குமுறை போல உள்ளதே?!
திருவாங்கூர் சமஸ்தானத்திடம் அத்தனை படைபலம் உள்ளதா?"
ரசாக் "ஆம், மலையாள அரசு முன்பே திட்டமிட்டு ஆயுதம் வாங்கி காவல்துறையை பலப்படுத்தி தயாராக இருந்தது.
முன்பு 5 காவலர்கள் நின்ற செக்போஸ்ட்டில் இன்று 60 ஆயுதக்காவலர்கள் உள்ளனர்.
இன்று திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையத்திலும் 100 பேருக்குக் குறையாமல் போலீஸ் உள்ளது.
அத்தனை பேரும் மலையாளிகள்.
அத்தனை பேருக்கும் ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.
வட்டாரத்திற்கொரு நிலையான போலீஸ்முகாமும் அதில் 300 ஆயுதக்காவலரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
5,6 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை.
இதுபோக கலவரத்தை உருவாக்க உள்ளூர் மலையாளிகள் சிலர் அரசின் ஏவல் குண்டர்களாக செயல்படுகின்றனர்"
கட்ஜூ "இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் போலிருக்கிறது.
இருக்கின்றன பிரச்சனையில் இன்னொன்று வேண்டாம்.
நீங்கள் நேருவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்"
ரசாக் "என் மக்கள் அங்கே படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
முடிந்தால் நாளையே சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்"
கட்ஜூ "பார்க்கலாம்"
---------------------------------
24.08.1954
காலை
மெட்ராஸ் காங்கிரஸ் தலைமைச் செயலகம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மேசைத் தொலைபேசி அழைத்தது.
எடுத்தார்.
"வணக்கம், நான் நேரு பேசுகிறேன்.
நலம்தானே?"
கரையாளர் "வணக்கம் ஜவஹர் அவர்களே! நலம்தான். நீங்கள் நலம்தானே? என்ன திடீர் அழைப்பு?"
நேரு "இன்று அப்துல் ரசாக் திருவாங்கூர் பிரச்சனை தொடர்பாக என்னை சந்திக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் காங்கிரசில் பலரும் திருவாங்கூருக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது.
எனக்கு குழப்பமாக இருக்கிறது.
உங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்று தோன்றியது"
கரையாளர் "தமிழக மக்கள் நேசமணிக்கு ஆதரவாக உள்ளனர்.
திருவிதாங்கூரை உடைத்து மலையாளப் பகுதிகளை மலையாள மாநிலத்தோடும் தமிழ்ப் பகுதிகளை மதராஸோடும் இணைப்பதுதான் சரி"
நேரு "இப்படியே போனால் எல்லா சமஸ்தானங்களிலும் பிரச்சனை வரும்.
ஐதராபாத்தில் தெலுங்கானா பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.
ஒரே மொழிபேசும் தெலுங்கு மக்கள் பிரிந்து தனித்தனி மாநிலம் கேட்கின்றனர்.
இங்கே ஒரே மொழியினர் ஒரே மாநிலமாக சேர்க்கவேண்டும் என்று போராட்டம்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நீங்கள் திருவிதாங்கூர் போகவுள்ளீர்கள்தானே?"
கரையாளர் "ஆம், நான் நாளை மறுநாள் திருவிதாங்கூருக்கு காங்கிரஸ் நல்லெண்ணக் குழுவை அழைத்துச் சென்று நேரில் பார்வையிட உள்ளேன்.
நிலவரங்களை அறிந்து உங்களுக்கு கூறுகிறேன்"
நேரு "சரி நாளை மறுநாள் உங்களிடம் பேசிவிட்டு பிறகு ரசாக்கை சந்திக்கிறேன்"
----------------------------
(தொடரும்)
Friday 24 March 2017
குருதியில் நனைந்த குமரி - 15
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment