Saturday, 11 March 2017

மண்ணைக் காக்க ஜப்பானைப் பகைத்துக்கொண்ட புலிகள்

இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராகப் புலிகள் உள்ளூர் வன்னி மரம் கடத்தல் பொருளாதார ரௌடிகளுக்கு மட்டுமன்றி பொருளாதார வல்லரசு என்றும் பார்க்காமல் ஜப்பானுக்கு சுளுக்கெடுத்த நிகழ்வும் உண்டு.

இது குறித்து புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் தராகி சிவராம் எழுதிய கட்டுரை,
6–12 ஜூன் 2003 ஈழநாடு பத்திரிக்கை.

ஜப்பானுக்கு ஏன் இந்த அக்கறை?

புலிகள் டோக்கியோ போவார்களா இல்லையா என்பதே இலங்கையின் அண்மைக்கால அரசியலின் முக்கிய கேள்வியாக இருந்தது.
‘அவர்கள் ஜப்பானின் தலைநகரத்திற்குச் செல்வதிலேயே தமிழரின் எதிர்காலம் தங்கியுள்ளது' என்ற வகையில் செய்திகளும் ஆய்வுகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.
புலிகள் டோக்கியோவிற்கு எப்படியாவது போய்விட வேண்டுமென்று உள்ளார்ந்த எதிர்பார்ப்போடு பலர் ஆரூடம் கூறவும் தலைப்பட்டனர்.

டோக்கியோ.. ஜப்பானுக்கு எங்கள் சிக்கலைத் தீர்த்து வைப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை..?
1983 இல் இருந்து இலங்கையில் தமிழர் சிக்கல் ஒரு பெரும் போராக உருமாறி நடைபெற்று வருகின்றது.
இதிலோ 1990 இலும் 1995 இலும் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுகளிலோ எந்த ஒரு வெளிப்படையான ஈடுபாடுமின்றி வாழாவிருந்த ஜப்பான் இன்று எமது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வலுவுள்ள ஒரு நாடாக கிளம்ப முனைவது ஏன்?

கொக்குத் தொடுவாய்க்கும் புல்மோட்டைக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியிலேயே உலகில் அதிகூடிய டைட்டேனியம் செறிவுள்ள தாதுப் பொருள்களான இல்மனைட், றூட்டைல் என்பன காணப்படுகின்றன.
இன்றைய உலகின் இயக்கத்துக்கு இன்றியமையாத ஒரு உலோகம் டைட்டேனியமாகும்.
உலகில் உற்பத்தியாக்கப்படும் அனைத்து வானூர்திகள், விண்வெளிக் கலங்கள் ,செயற்கை விண்கோள்கள் போன்றவற்றை டைட்டேனியம் உலோகமின்றி தயாரிக்க முடியாது.
இது உருக்கைவிட நான்கு மடங்கு உறுதியுள்ளதாகவும் ஆனால் உருக்கினுடைய நிறையைவிட மிகக் குறைந்த நிறையுள்ளதாகவும் காணப்படுகின்றது.
இதனாலேயே இது மேற்படி உற்பத்திகளுக்கும் அடிப்படையாக உள்ளது.
இதுமட்டுமின்றி டைட்டேனியம் ஈரொட்சைட் செயற்கை வண்ணங்களின் தயாரிப்புக்கு மிக இன்றியமையாத இரசாயன மூலமாக உள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் டைட்டேனியம் தாதுக்களான இல்மனைட் மற்றும் றூட்டைல் ஆகியவற்றை கேந்திர மூலப் பொருட்களாக வகைப்படுத்துகின்றது.

இல்மனைட்,றூட்டைல் ஆகிய தாதுக்களில் இருந்து டைட்டேனியம் உலோகத்தையும் டைட்டேனியம் ஈரொட்சையும் உற்பத்தியாக்குகின்ற நவீன விஞ்ஞானமுறை அமெரிக்காவின் இரு நிறுவனங்களிடம் மட்டுமே தனியுரிமையாக உள்ளது.
இத்தனியுரிமை அமெரிக்காவுக்கு உலகப் பொருளாதாரத்தின் மீது ஒரு பிடியைக் கொடுக்கிறது.
இந்தத் தொழில் நுட்பத்தின் தனி உரிமையை ஜப்பானோடு அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது.
இதன் காரணமாகவே ஜப்பான் உலகில் டைட்டேனியம் ஈரொட்சைட் உற்பத்தியில் முன்னிற்கின்றது.

புல்மோட்டையில் உற்பத்தியாகும் இல்மனைட் மற்றும் றூட்டைல் தாதுக்களை ஜப்பானே கொள்வனவு செய்து வருகின்றது.
இக்கொள்வனவுக்கு ஒரு தமிழ் வர்த்தக நிறுவனமே இடைத்தரகராகச் செயற்பட்டுவந்தது.
இந்நிறுவனம் நீண்டகாலமாக சர்வதேச கேள்வி நடைமுறைகள் இல்லாது டைட்டேனியம் தாதுக்களை ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி குறைந்தபட்சம் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையாவது சம்பாதித்திருக்க வேண்டும்.

எம் மண் இவ்வாறு பகல் கொள்ளை அடிக்கப்பட்டதை தமிழ் அரசியலாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
புல்மோட்டையில் நடைபெற்றுவந்த இம்மண் கொள்ளையை ஆராய்ந்தறிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் 1997 இல் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு இல்மனைட் மண் ஏற்றப்பட்டிருந்த கப்பல் ஒன்று புல்மோட்டைக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜப்பானுடைய கவனம் விடுதலைப் புலிகளை நோக்கியும் வடக்குக் கிழக்குப் போர் நிலமைகள் மீதும் குறிப்பாகத் திரும்பலாயிற்று.

நன்றி: நடேசபிள்ளை சிவேந்திரன்

No comments:

Post a Comment