Thursday 31 July 2014

தமிழ் வளரத் தமிழரல்லா

தமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து

மமமமமமமமமமமமமமமம

உல்ரிச் நிக்கோலஸ் (ஜெர்மனி) :-

“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள்.
அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம், என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள்,
தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக
நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன?
தமிழை அழித்தததைத் தவிர!”

சைமன் (நெதர்லாந்து):-

ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே,
இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!”

டிமிடா (ஜெர்மனி):-

தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க்
கல்வி வந்துள்ளதாக அறிகிறேன்.
தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும்
பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல்
மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத்
திணித்து ஊட்டுகிறோமே. அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.

தாம்ஸ் லேமன் (ஜெர்மனி):-

ஆங்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனத்தில்
புதைந்து இருக்கிறது. மிகமோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும்
உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது.
உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில்
ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி.
நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள்.
அதாவது தமிழிலேயே கதையுங்கள்.
ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.

கலையரசி (சீனா):-

இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள்.
பிறகு மறந்து போவீர்கள்தானே?
இங்கேயே பார்த்துவிட்டேன்.
என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல
பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்?
நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க
முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில்
பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள்
சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட
காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன்.
எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெர் (கனடா):-

சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணையில்லாத வலிமை,
கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ்மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை.
காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய
வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும்.
அது சுவையுடன் இருத்தல் அவசியம்.

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):-

பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்’ என்ற
கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது.
இதற்குத் தமிழும் தப்பவில்லை.
உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான்
நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும்
என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
‘உலகமயமாக்கல்
போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின்
நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’
என்பது வெற்று உளறல்.
தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும்
நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா?
எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா):-

உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள்.
தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை.
தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட
ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த
மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன்பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக
இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்):-
இது போன்ற மாநாடுகளை 10ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத்
தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த
ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும்.
இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும்.
இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!”

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா):-

நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன்பிறகுதான் தமிழைப் படித்தவன்.
உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச்
செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப்
பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.
எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும்
வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச்
செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!”
நன்றி:-
விடுதலைமலேசியாஇன்று
( http://thirutamil.blogspot.com/2010/07/blog-post_21.html?m=1 )

//செவுளில் அறைந்தது போல் இருக்கிறதா?
இவ்வறிஞர்களுக்கு தாம் வந்திருக்கும் இச்செம்மொழி மாநாட்டை நடத்துபவனே தமிழன் இல்லை என்பதோ தமிழினம் அழிவைச் சந்திக்கும்போதெல்லாம் தமிழ் மொழிக்கு சில எலும்புத்துண்டுகளை வீசியெறியும் அரசியல்தான் இங்கே நடக்கிறது என்றோ தெரியுமா???

No comments:

Post a Comment