Thursday, 10 July 2014

மாந்தரைக் கொன்று நேயத்தை நிறுவி...



பால்வெளி அண்டத்தில் நாம் கண்டுபிடித்திருக்கும் 'உலகம்' என்ற கோளில் இருந்து நம் உளவாளி நீம்மோ அனுப்பிய செய்தி::::::::::

நண்பர்களுக்கு வணக்கம், நல்லவேளையாக நாம் இந்த கோளுடன் நட்புறவு கொள்ளும் முன் ஒருமுறை உளவு பார்ப்பது என்று முடிவெடுத்தோம்; இங்கே நிலஅமைவு, காலநிலை, பலவகை உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஏற்கனவே அனுப்பிவிட்டேன்; இப்போது முக்கியமான உயிரினமான மாந்தர்கள் பற்றி தற்போது கூறுகிறேன்; நான் இங்கே வந்து 183நாட்கள்(1006 உலகநாட்கள்) ஆகிவிட்டன; பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மாந்தரை சந்தித்துவிட்டேன்; இவர்கள் தோற்றம் சற்றேறக்குறைய நம்மைப்போல இருந்தாலும் இவர்கள் அறவே தெம்பில்லாதவர்கள்; பத்து நிமிடங்கள் தொடர்ந்து நிற்கமுடியாது; ஒரு நாளைக்கு மூன்றில் ஒரு பங்குதான் வேலை செய்யமுடியும்; இவர்கள் சராசரி ஆயுள் 60 ஆண்டுகள்; அதில் 20 ஆண்டுகள் பெற்றோரிடம் வாழ்கிறார்கள்; 20ஆண்டுகள் தானே வாழ்கிறார்கள்; 20ஆண்டுகள் பிள்ளைகள் கவனிப்பில் வாழ்கிறார்கள்; அதாவது பெரும்பாலான பகுதி உழைக்காமல் சோம்பேறியாக வாழ்கிறார்கள்; ஒரு நாளில் செலவளிக்கும் ஆற்றலைவிட அதிகம் உணவை உட்கொண்டு கழிவாக்குகிறார்கள்; மூளையும் திறனில்லாதது; பத்து இலக்க எண்ணைக்கூட நினைவுவைக்க முடியவில்லை(ஆனால், பத்து இலக்க தொடர்பு எண் பயன்படுத்துகின்றனர்); நான்கு இலக்க எண்களை கூட்டவோ பெருக்கவோ கூட முடியாது, கருவியின் உதவியோடுதான் செய்கின்றனர்; இவர்கள் உடலும் அழுக்கானது; இவர்கள் கண்,காது,மூக்கு,வாய்,பிறப்புறுப்புகள்,தோல்,உடலிடுக்குகள் என அனைத்திலிருந்தும் கழிவுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன; முதலில் இவர்கள் உடல் எனக்குத்தான் வீசுகிறது என்று நினைத்தேன்; ஆனால், இவர்கள் உடல் இவர்களுக்கே வீசுகிறது; இந்த அழுக்கு உடலோடு இவர்கள் உடலுறவும் கொள்கின்றனர்; இதை ஆராயப்போய் எனக்கு வாந்தியே வந்துவிட்டது; ஆனால், இவர்கள் அதில் அதிக நாட்டம் உள்ளவர்களாக உள்ளனர்; இதனாலேயே உலகத்தின் உயிர்ச்சங்கிலியில் (இயற்கைக்கு) இவர்களின் தேவையான எண்ணிக்கையைவிட அதிகம் பெருகிவிட்டனர்; அதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அடித்துக்கொள்கின்றனர்; நாடு, இனம், மதம், சாதி, நிறம், பாலினம் என பல காரணங்களால் பல நூறு பிரிவுகளாகப் பிரிந்து தம்மைத்தாமே அழித்துவருகின்றனர்;
சுருக்கமாக, நம் கோளில் யார் கெட்டவனோ அவன்தான் இங்கே நல்லவன்; உலக நிலப்பரப்பை ஒழுங்கற்றவகையில் நாடுகள் என்று பிரித்து வைத்துவைத்துள்ளனர்; வலிமையான நாடு எளிய நாட்டை அடக்கியாள்கிறது, எளிய நாடு அதனினும் வறிய நாட்டை அடக்குகிறது; அதைவிட வேடிக்கை, நிலம் அனைத்தும் பலகோடி துண்டுகளாக்கப்பட்டு ஒவ்வொருவர் பெயரில் காகிதம் எழுதப்பட்டு சொந்தமாக்கப்பட்டுள்ளது; அதாவது உலகத்தில் சில ஆண்டுகள் மட்டும் வாழப்போகும் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காகிதப் படிவம்(பத்திரம் என்கிறார்கள்) இருந்தால் நிலம் சொந்தமாம்; சிலர் பெரிய நிலத்தை வைத்துள்ளனர்; சிலருக்கு நிலமே இல்லை; எதையும் அதிகம் வைத்திருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தருவதில்லை, இது ஏனென்று புரியாதபோது ஆராய்ந்தேன்; 'அதிகம் வைத்திருப்பவர்'களில் சிலர் ஒருகாலத்தில் 'இல்லாதவனாக' திரிந்தவர்கள்;

'இருப்பவன்' என்றாலும் 'இல்லாதவன்' என்றாலும் 'கொடுப்பதற்கு மனமில்லாதவர்கள்'தான் எல்லாரும்.

ஒவ்வொரு நிலத்துண்டும் பெற்றோருக்குப் பிறகு பிள்ளைகள் பெயருக்கு மாற்றப்பட்டு மேலும் துண்டாடப்படுகிறது; அதாவது சிலருக்கு வீடு கட்டிக்கொள்ள இடமேயில்லாமல் தெருவில் வாழ்கிறார்கள் அவர்கள் அருகிலேயே சிலர் 'நூறுபேர் வசிக்கக்கூடிய வீட்டில்' ஓரிருவராக வசிக்கின்றனர்; சிலரிடம் பல வீடுகள் உள்ளன; ஆனால் வீடில்லாதவர்களுக்கு அவ்வீடுகளை கொடுக்கமாட்டார்கள்; அவ்வாறு கொடுத்தாலும் 'வீடில்லாதவர்கள்' 'வீட்டுக் காகிதம் வைத்திருப்பவருக்கு' பணம் கொடுக்கவேண்டும்; ஆம், பணம் என்பது வேடிக்கையான ஒன்று; இது காகிதத்திலோ உலோகத்திலோ செய்யப்பட்டு அதில் எண்கள் எழுதப்பட்டு அந்த எண்ணிற்கு ஏற்ப அதன் மதிப்பு உள்ளது; அதாவது ஒரு மாந்தர் தனக்கு பசிக்கிறது என்றால் பணம் கொடுத்துதான் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்; அது இல்லாவிட்டால் கண்முன் உணவிருந்தாலும் சாகவேண்டியதுதான்; இந்த பணம் மேலே சொன்னேனே நாடு அதைப் பொறுத்து வெவ்வேறு மதிப்பு மாறுபாட்டுடன் உள்ளது; அதாவது ஒரு நாட்டில் ஒருவர் ஒரு காலணி வாங்கக்கொடுக்கும் தொகை இன்னொரு நாட்டில் ஒருவர் ஐம்பது காலணிகள் வாங்கத் தரும் தொகைக்கு நிகரானது; இந்த காரணத்தால் ஏழை நாட்டில் இருப்பவர்கள் தன் உறவினர்கள் அனைவரையும் பிரிந்து பணக்கார நாட்டிற்கு வந்து வேலைசெய்து பணத்தை தன் நாட்டிற்கு அனுப்புகின்றனர்;பணக்கார நாட்டினர் சிறிதளவு பணம் கொடுத்தே ஏழை நாட்டினரிடம் அதிகம் வேலைசெய்விக்கின்றனர்; இதிலிருந்தே இவர்களுக்கு பணம்தான் குறி என்பது புரிகிறது; பலரிடம் ஒருவேளை உணவுக்கு பணமில்லை; சிலர் 'பலநூறுபேருக்கு உணவளிக்கும் அளவு' பணத்தை சும்மா சேர்த்துப் பூட்டிவைத்துள்ளனர்; சிலர் பணமாக, சிலர் தங்கமாக பூட்டி வைத்துள்ளனர்; தங்கம் என்பது இன்னொரு வேடிக்கை; இது மஞ்சள் நிற பளபளப்பான உலோகம்; இதை உருக்கி பல வடிவங்கள் செய்து தன் அழுக்கு உடலில் மாட்டிக்கொள்கின்றனர்; அழகுக்காகவாம்; ஆனால் அது அழகைவிட பகட்டாகத்தான் பார்க்கப்படுகிறது; பலநூறுபேர் சேர்ந்து பல நாட்கள் குழிதோண்டினால் ஒருவர் அணிந்துகொள்ளும் தங்கம் கிடைக்கிறது; 'ஒருவர் அணியும் தங்கம் பலபேருக்கு உணவளிக்கும்' அளவு மதிப்புள்ளது என்று அதை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்; அழகுக்காக ஆயிரம் பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறபோது ஏன் தங்கத்தை எடுக்க மண்ணைத்தோண்டி நிலத்தை பாழாக்கி, நேரத்தையும் உழைப்பையும் வீணாக்குகிறார்களோ தெரியவில்லை; இவர்கள் மண்ணையும் நீரையும் காற்றையும் பாழாக்கிவருகிறார்கள்; நெகிழிப்பை என்ற ஒன்றை நாள்தோறும் பயன் படுத்துகிறார்கள்; இது மண்ணில்போட்டால் மக்கவே மக்காது; ஆனால், அதை பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடுவதில் இவர்களுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை; இவர்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களையும் இவர்கள் தயங்காமல் வெட்டிவிடுகின்றனர்; தமக்குத் தேவையானதை உருவாக்க, ஆற்றலை உற்பத்தி செய்ய கண்டதையும் எரித்து புகையாக்கி காற்றையும் மாசுபடுத்திவிட்டார்கள்; உலகத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் காற்றுமண்டலத்திலேயே ஓட்டை விழுமளவுக்கு சுற்றுசூழலை நாசமாக்கிவிட்டார்கள்; கண்டதையும் கழிவுகளையும் கலந்து நீரை மாசாக்கி, குடிநீரை குடிக்க பயன்படுத்தாமல் பல கேடு ஆலைகளுக்கு பயன்படுத்தி, நிலத்தடி நீரை வரம்பின்றி உறிஞ்சி இவர்கள் செய்யும் அடாவடி கணக்கில்லாதது;
உடன் வாழும் விலங்குகளையும் உணவுக்காக மட்டும் கொல்வதில்லை ஆடம்பரங்களுக்காக கொல்வது, கொடுமைப்படுத்தி வேலைவாங்குவது, அடிமையாக உடன்வைத்துக்கொள்வது, பணத்திற்காக கூடவைத்துக்கொள்வது(வளர்ப்பது என்கின்றனர்) என்று உயிரினங்கள் அனைத்துக்கும் அட்டூழியம் செய்கின்றனர்;
இவர்கள் மடையர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக.இவர்களின் இன்னொரு வேடிக்கையும் உள்ளது; அதுதான் கடவுள் என்பது; பல நாட்களாக எனக்கு இது புரியவில்லை; கடவுள் என்பதே எல்லாவற்றையும் இயக்குவதாகவும் அற்புத ஆற்றல்கள் பெற்றது என்றும் நம்புகிறார்கள்; அதன் உருவத்தை பலவாறு செய்து அதற்கு வீடு கட்டி (கோயில் என்கின்றனர்) பணம், பொருள், உடலுழைப்பு என்று அனைத்தையும் வாரியிரைக்கின்றனர்; இந்த செயல்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு மதம் என்ற ஒன்றை உருவாக்கி அதிலும் பிரிந்துகொண்டு அடித்துக்கொள்கின்றனர்; இத்தனை தீவிரமாக கடவுளை நம்புகிறார்கள் ஆனால் இவர்களில் யாருமே கடவுளைப் பல தலைமுறைகளாகப் பார்த்ததே கிடையாது; நமது கோளைவிட வளமான இந்த உலகத்தில் ஒவ்வொரு பத்துநொடிக்கும் ஒரு குழந்தை பசியால் இறக்கிறது என்றால் எத்தனைக் கேடடைந்துள்ளது இந்த உலகம் என்று புரிந்துகொள்ளுங்கள்;
என்னிடம் கேட்டால் நாம் ஒரு 300பேர் போதும் தொழில்நுட்பத்தில் பலமடங்கு பின்தங்கியுள்ள 'தட்டிக்கேட்க யாருமில்லாத தலைசிறந்த உயிரினம்' என்ற திமிர் பிடித்த இந்த மாந்தரைக் கொன்று நேயத்தை நிறுவிவிடலாம்; மாந்தரில்லா உலகம் பலகோடியாண்டுகள் செழித்து நிலைத்திருக்கும்; இவர்களுடன் பழகியதில் நானும் மடவெறியனாக மாறிவருவது போலத் தெரிகிறது; சிந்தனைககளும் மாறிவருகின்றன; விரைவில் திரும்பிவிடுகிறேன்; இவர்களை நம் கோள்வாழ் மக்களுடன் தொடர்புபடுத்தவேண்டாம்; 'எல்லாமும் எல்லார்க்கும் பொது' என்று எல்லாம்பெற்று வாழும் நம் மக்களும் கெட்டுவிடுவார்கள்; இவர்களை இப்படியே விட்டுவிடலாம் அழகான உலகத்தையும் அழித்து இவர்களும் அழிந்துவிடுவார்கள்; வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், இவர்கள் பற்றி ஒரு கதை எழுதி நம் குழந்தைகளுக்குப் பாடமாக வைக்கலாம்; எப்படி வாழக்கூடாது என்று கற்றுக்கொள்வார்கள்.
https://m.facebook.com/photo.php?fbid=429633653806960&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment