Friday 17 June 2016

வீரப்பன் - மக்களைக்காத்த மகாநாயகன்

வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா....

மக்களைக்காத்த மகாநாயகன்.

1993ம் ஆண்டு மே மாதம்.

வீரப்பனாரை ஒழித்துக் கட்டியே தீருவது என்ற முடிவுடன் தமிழக- கன்னட கூட்டு அதிரடிப்படை வீரப்பனார் கட்டுப்பாட்டுப்பகுதியை ஒட்டிய தமிழ்ச் சிற்றூர்களில் கொலைவெறித் தாண்டவம் ஆடினர்.

வீரப்பனும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.

அவர்களும் வீரப்பனாருடனான மோதலில் ஒரு படைஉறுப்பினர் இறத்தால் பதிலுக்குப் பத்துத் தமிழரைக் கொண்டுபோய் சுட்டுக் கொன்றனர்.

வீரப்பனாரின் படையில் எத்தனைபேரைப் பிடித்தாலும் மக்களை என்னதான் கொடுமைப்படுத்தி தகவல்களை சேகரித்தாலும் வீரப்பனாரை நெருங்கக்கூட முடியவில்லை.

வீரப்பனார் தமது மக்கள் படும் துன்பத்திற்கு தானும் ஒரு காரணம் என்று மிகவும் வேதனையடைந்தார்.

தனது ஆட்களை அனுப்பி அதிரடிப் படையினரால் வாழ்விழந்த மக்கள் யார்யாரென்று விசாரித்து அவர்களை தம்மிடம் அழைத்துவரும்படியும் தாமே அவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும் கூறி அனுப்பினார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூரே வீரப்பனாரின் வனக்கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டது.

கத்தரி மலை அடிவாரத்தில் ஐந்து கிணறுகள் தோண்டப்பட்டன.

இருநூறு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பில் உணவு, உடை, என அனைத்தும் குறைவின்றி வழங்கப்பட்டது.

ஒரு மாதம் இவ்வாறு கழிந்தது.
ஒருநாள் அதிரடிப்படையினர் தேவாரம் என்பவர் உத்தரவுப்படி கத்தரி மலையடிவாரத்தில் தேடுதல்வேட்டை நடத்தியபோது வீரப்பனார் பாசறைப் பார்த்துவிட்டார்கள்.
ஒரு ஊரே அங்கு இருந்தது.

இருந்தாலும், அவர்கள் தாக்குதல் நடத்த வீரப்பனார் பக்கத்திலிருந்து எதிர்தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்களை ஒருநொடி எண்ணிப்பார்த்த வீரப்பனார் சரவெடியைக் கொழுத்திப் போடச் சொல்லி அந்த இரைச்சலும் துப்பாக்கி வேட்டுச் சத்தமும் எதிர்நிற்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி அந்த நேரத்தில் மக்களை மலைக்குகைகளுக்குள் பத்திரமாக கொண்டுசென்றார்.

இதன்பிறகு சில நாட்கள் கழித்து கன்னட-தமிழக அதிரடிப்படையினர் கர்நாடக டி.ஜி.பி பர்மன் மற்றும் தமிழக எஸ்.பி சஞ்சய் அரோரா தலைமையில் வீரப்பனார் பாசறையை மோப்பம் பிடித்து நாலாப்புறமும் சுற்றிவளைத்துத் தாக்கினர்.

அப்போது அங்கே ஒரு நிறைமாத சூலிக்கு பிள்ளைப்பேறு நடக்கவிருந்த நேரம்.

இந்த தாக்குதலை எதிர்பார்த்திராத வீரப்பன்படை எதிர்த்தாக்குதல் நடத்தினாலும், அவ்வளவு மக்களை வைத்துக்கொண்டு அவர்களால் முழுமையாக எதிர்த்தாக்குதல் நடத்தமுடியவில்லை.

நிலைமை மோசமானதும் மக்கள் மீது குண்டுகள் பாயவே அவர்கள் சிதறி ஓடினர்.

வீரப்பனார் தளபதிகள் ஏழுபேர் பிடிபட்டனர்.
ஆனால், வீரப்பனார் அப்போதும் சிக்கவில்லை.
முப்பதுபேருக்கு மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வீரப்பனாரின் மனைவி, அன்று பிள்ளயீன்று மோதலில் அப்பிஞ்சை பறிகொடுத்த தாய் என சில பெண்கள் பிடிக்கப்பட்டு பன்னாரி எனும் இடத்திலுள்ள முகாமில் அடைத்துவைக்கப்பட்டனர்.

வீரப்பனாரின் பெண் தளபதி மேரி என்பவரும் உயிரிழந்தார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூருக்கே சோறு போட்டுக் காப்பாற்றும் அளவுக்கு பணபலமும் ஆள்பலமும் வைத்திருந்தவர் வீரப்பன்.

கடத்தல்காரனாக இருந்தபோதும் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மக்களைப் பற்றி சிந்தித்தவர்தான் வீரப்பன்.

வீரப்பனார் தமிழ்ப்போராளியாக மாறியது 1997க்குப் பிறகுதான்.
ஆனால், அதற்கு முன்பே, அவர் தம் இனத்தின் மீது வைத்திருந்த பற்றும் இனத்திற்காகச் செய்த செயல்களும் பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ளன.

படம்: வீரப்பனாரைக் கொல்ல அலைந்த அதிரடிப்படை (special task force) செய்த கொடுமைகள்,

*சட்டவிரோதமாக பிடித்துவைக்கப்பட்டு ஊனமாகவும் பைத்தியமாகவும் ஆனவர்கள் 270பேர்,
*அதிரடிப் படை சித்தரவதை செய்தும் சுட்டும் கொன்றது 89 பேரை,
*பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோர் 57 பேர்,
*தடா சட்டத்தில் அடைக்கப்பட்டோர் 123 பேர்,
*உடைமைகளை இழந்து ஊரை விட்டு ஓடியவர்கள் 200பேர்,
(தகவல்: பீப்பிள்ஸ் வாட்ச், மதுரை)

No comments:

Post a Comment