Tuesday, 21 June 2016

ஈழத்து முகாமிலிருந்து மருமகளை அழைத்துவந்த தமிழகம்

எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக இருக்கப் போகிறார்கள்?
தமிழகத்திற்கு மருமகளாக வந்திருக்கும் வவுனியா விமலினியின் சோகம்!
23 08 12

மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர் என்று இங்கு வந்துவிட்டேன்.
ஆனாலும் ஆதரவற்ற நிலையில் என் தங்கையும் தம்பிகளும் அங்கு இருக்கிறார்கள்.
அவர்களை நினைத்தால்தான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.

தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமலினி.

ஆகஸ்ட் 25-ம் தேதி இவருக்கும் பாலகுருவின் மூத்த மகனான பாண்டியனுக்கும் சென்னையில் திருமணம்!

2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்தபோது முள்ளிவாய்க்கால் அருகே வட்டுவாகலில் பங்கர் ஒன்றில் பதுங்கியிருந்த விமலினியின் குடும்பத்தை பங்கரைத் துளைத்துக்கொண்டு வெடித்த குண்டொன்று சின்னாபின்னமாக்கியது.

விமலினியின் தாய் சரோஜாமலர், தந்தை இருதயராஜ் அங்கேயே இறந்துவிட...

தங்கை சரோஜினி, தம்பிகள் சதீவகாந்த், ஜீவகாந்த் ஆகியோருடன் உயிர்பிழைத்தார் விமலினி.

விமலினிக்குத் தலை, நெஞ்சு, இடுப்பு, கால் பகுதியில் கூரிய உலோகங்கள் துளைத்து இருந்தன.

''எங்களை இலங்கை இராணுவம் பம்பைமடு முகாமில் கொண்டுவந்து வைத்திருந்தது.
என் அண்ணன் கமலகாந்த் புலி போராளி என்பதால், மற்றவர்களைவிட எங்களுக்குச் சித்திரவதைகள் அதிகம்.

அந்த முகாமில் வைத்துதான் மாமாவை (பாலகுரு) முதல்முறையாகப் பார்த்தேன்.
(அவர் உறவுக்கார மாமா இல்லை)

அவர் தமிழகத்தில் இருந்து மக்களனைவருக்கும் ஆறுதல் சொல்ல வந்திருந்தார்.
எங்களுக்கு ஆறுதல் கூறியவர், மறுநாள் என்னிடம் வந்து, தமிழ்நாட்டு மருமகளாக வரச் சம்மதமா?
என் மகனைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’
என்று கேட்டார்.
பதில் சொல்லும் சூழலில் நான் அப்போது இல்லை.

அப்போது என் பின்னங்காலில் நுழைந்த குண்டின் பாகங்களை அகற்றி சதையை வெட்டி எடுத்து இருந்தார்கள்.
எதிர்காலத்தில் என்னால் நடக்க இயலுமா என்று கூடத் தெரியாமல் இருந்தேன்.

சிகிச்சை அளித்த செவிலியர்களோ தலையிலும் நெஞ்சிலும் இருக்கும் உலோகத் துண்டுகளை அகற்றும் வசதி அங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

நான் உயிரோடு இருப்பேனா என்றுகூட எனக்குத் தெரியாது.

அந்தச் சூழலில் மாமா இப்படிக் கேட்டால், என்ன பதில் சொல்லுவேன்?
நானும் சென்றுவிட்டால் என் தம்பிகளையும் தங்கையையும் யார் பார்த்துக்கொள்வார்கள்?

அதனால் மாமாவிடம் நான் மறுக்கவும் இல்லை, சம்மதிக்கவும் இல்லை.
மாமா கிளம்பிச் சென்றுவிட்டார்.
என் தம்பிகளும் தங்கையும், ஏன் அக்கா, பேசாமல் சென்னை சென்று இருக்கலாம் அல்லவா?

அங்குதான் சண்டை இல்லை;
சித்திரவதை இல்லை;
யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். தினமும் நிம்மதியாகக் குளிக்கலாம்.
உணவு உண்ணலாம்...’
என்று சொன்னார்கள்.
கண்ணீரைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை.

இடையில் ஓர் ஆண்டு ஓடிவிட்டது.
அதற்குள் நாங்கள் முகாமில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சம் அல்ல.
இராணுவத்தினர் தலையில் முகமூடி அணிவித்த ஆட்களை அடிக்கடி அழைத்து வருவார்கள்.

எங்களில் கொஞ்சம் களையாக இருக்கும் பெண்களை வரிசையாக நிற்கவைத்து, அவர்களிடம் அடையாள அணிவகுப்பு நடத்துவார்கள்.

முகமூடி நபர், தலையை 'ஆம்’ என்று ஆட்டினால் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அவள் அவ்வளவுதான்.
இப்படிச் சென்ற யாரும் திரும்பி வந்ததே இல்லை.
நமக்கும் இப்படி ஒருநாள் நடக்கும் என்றுதான் நினைத்து இருந்தேன்.
அங்கு விடியும் ஒவ்வொரு விடியலும் எமக்குச் சொந்தம் இல்லை.

இராணுவத்தினர் சொல்லும் நேரத்தில்தான் குளிக்க வேண்டும்.
20, 30 பேராகச் சேர்ந்து குளிக்க
வேண்டும்.
சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து மூடி இருந்தாலும் மேலே திறந்தவெளியாகத்தான் இருக்கும்.
பக்கத்தில் உயரமான பகுதியில் இருந்து நாங்கள் குளிப்பதைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கதைத்துக் கொண்டும்தான் இருப்பார்கள்.
சிறு கற்களை எங்கள் மீது எறிவார்கள்.
நாங்கள் சோப்பு போட்ட பின்பு பாதியில் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும்.

2011-ல் மாமா மீண்டும் வந்து என்னிடம் அதே கேள்வியைக் கேட்டார்.
தம்பிகளும் தங்கையும் என்னிடம், அக்கா போய்விடு அக்கா.
சென்னை நல்ல ஊர்.
நம் மக்கள் அவர்கள்.
நம் சகோதர, சகோதரிகள்.
உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்’
என்று அன்று இரவு முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

மறுநாள் மாமா வந்தபோது தம்பிகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள்.
தங்கையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.
அவளுக்குப்
பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்தால் வருகிறேன் என்றேன்.
தாராளமாகச் செய்கிறேன் என்றார்.
அதன் பின்பே திருமணத்துக்குச் சம்மதித்தேன்.
விடயம் தெரிந்தால் அவ்வளவுதான்.
இராணுவத்தினர் சும்மா விட மாட்டார்கள்.
அதனால், இரகசியமாக வைத்து இருந்தோம்.
ஒரு ஆண்டாக முகாமில் இருந்து என்னை அழைத்துச் செல்ல ஏதேதோ காரணங்களைச் சொல்லியும் இலங்கை அரசு விசா கொடுக்கவில்லை.

மாமா ஏதேதோ முயற்சிகள் எடுத்து ஜூலை மாதம் எனக்கு சுற்றுலா விசா வாங்கினார்.

ஜூலை 15-ம் தேதி அத்தான் வந்து என்னை அழைத்து வந்தார்.
கிளம்பும்போதுகூட மனம் இல்லை.

இந்த மண்ணுக்காகத்தானே அத்தனை பேரும் போராடினார்கள்!
பல ஆயிரம் பேர் உயிர்கொடுத்தார்கள்.
இந்த மண்ணைவிட்டுக் கிளம்பிவருகிறோமே என்று வருத்தமாக இருந்தது.
சென்னைக்கு இப்போதுதான் முதல்முறையாக வந்து இருக்கிறேன்.
இங்கு இருக்கும் சூழலே அமைதியாக இருக்கிறது.
அத்தான் என்னை மெரினா பீச்சுக்கு அழைத்துப்போனார்.
மகாபலிபுரம் கூட்டிச் சென்று சிற்பங்களைக் காட்டினார்.
ஊரை எல்லாம் சுற்றிக் காட்டினார்.
இந்த ஊரில் நீங்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக...
எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறீர்கள்?
எங்கள் ஊரில் மட்டும் ஏன் அப்படி?
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்?’
என்று அத்தானிடம் கேட்டேன்.

அத்தானிடம் பதில் இல்லை!

நன்றி:-
ஆனந்த விகடன்
ஈழ மகான் தமிழ்

No comments:

Post a Comment